Showing posts with label RAMAYANAM. Show all posts
Showing posts with label RAMAYANAM. Show all posts

Saturday, January 20, 2024

RAMAYANAM PART 173

 இராமாயணம் தொடர்....173

அனுமனின் வரம்...! இராமரின் ஆட்சி...! 

🌟 இராமர் தன் கழுத்தில் இருந்த முத்துமாலையை எடுத்து, சீதா! என் பரிசளிப்பு முடிந்துவிட்டது. இந்த முத்துமாலையை நீ விரும்பியவருக்கு பரிசாக அளிக்கலாம் எனக் கூறி சீதையின் கையில் கொடுத்தார். முத்துமாலையை கையில் வாங்கிய சீதை முதலில் பார்த்தது அனுமனை தான். அனுமனை பார்த்து, சுந்தரா! என அன்போடு அழைத்தாள். அனுமன் சீதையின் அருகில் வந்து நின்றான். சீதை, முத்துமாலையை அனுமனின் கழுத்தில் அணிவித்தாள். எனக்கு தக்க சமயத்தில் உதவி செய்த உனக்கு என் பரிசு என்றாள். இராமர், சீதா! நீ நான் நினைத்ததை தான் செய்துள்ளாய். பிறகு இராமர் அனுமனை பார்த்து, அனுமனே! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். 

🌟 அனுமன், பெருமானே! நான் வேண்டுவதை தாங்கள் தவறாமல் கொடுக்க வேண்டும் எனக் கூறிவிட்டு, நான் உங்களின் அடிமையாக இருக்க வேண்டும். என்னை வேண்டுபவர்களுக்கு முதலில் உங்கள் நாமமே நினைவுக்கு வர வேண்டும் எனக் கேட்டான். பிறகு இராமர் புன்னகைத்து விட்டு, உனக்கு அவ்வரமே தருகிறேன் எனக் கூறினார். அனுமனின் இவ்வரத்தை கேட்டு மக்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர். இராமரின் முடிசூட்டும் விழா அறுபது நாள் கோலாகலமாக நடந்தது. குகன், சுக்ரீவன், அங்கதன், விபீஷணன், அனுமன் முதலியவர்கள் இராமரின் பட்டாபிஷேகத்தை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். 

🌟 இராமர், குகன், சுக்ரீவன், அங்கதன், விபீஷணன், அனுமன் முதலியவர்களை அழைத்து, அரசன் இல்லாத நாடு வெறுமையாகிவிடும். ஆதலால் தாங்கள் அவரவர் இருப்பிடத்திற்கு சென்று, உங்களது நாட்டை மேன்மையுடன் நல்லாட்சி புரியுங்கள் என்று கூறி விடை கொடுத்தார். இராமரிடம், விடைபெற்ற அவர்கள் இராமரையும், சீதையும். தம்பியர்களையும், வசிஷ்ட முனிவரையும், தாய்மார்களையும் வணங்கி விடை பெற்றனர். அனைவரும் புஷ்பக விமானத்தில் ஏறி, குகன் சிருங்கிபேரத்திலும், சுக்ரீவன் கிஷ்கிந்தையிலும் இறங்கினார்கள். பிறகு விபீஷணன் இலங்கைக்குச் சென்றான். அனைவரும் இராமரின் திருநாமத்தை சொல்லிக் கொண்டு நல்லாட்சி புரிந்தனர்.

🌟 இராமர், தன் தம்பிகளுடன் அயோத்தியை நீதி நெறியுடன், அரசாட்சி புரிந்தார். இராமரின் அருளால் மண்ணுலகம் செழித்து விளங்கியது.

முற்றும்...!

RAMAYANAM PART 172

 இராமாயணம் தொடர்....172

இராமரின் பட்டாபிஷேகம் - அயோத்தி மக்கள் மகிழ்ச்சி!

🍀 அயோத்தி மக்கள் அனைவரும் தங்களுக்கே முடிசூட்டு விழா என்பது போல் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். வசிஷ்டர் முதலான முனிவர்கள் வேதங்கள் ஓதினர். அனுமன் இராமரின் பக்கத்தில் பணிவாக நின்று கொண்டிருந்தான். கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்தங்களால் இராமருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேக நீர் இராமரின் தலை முதல் பாதம் வரை தொட்டுச் சென்றது. அதேபோல் அபிஷேக நீர் அனுமனின் தலையில் பட்டு அனுமனை கௌரவிப்பது போல் இருந்தது. இதைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். கௌசலை, சுமித்திரை, கைகேயி கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிந்தது.

🍀 வசிஷ்டர் முதலான முனிவர்கள் மந்திரங்கள் பாடி வாழ்த்த, திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் குலத்து முன்னோர்கள் மகுடத்தை எடுத்துக் கொடுக்க, அதனை வாங்கி வசிஷ்ட முனிவர் ஸ்ரீராமருக்கு சூட்டினார். சுபமுகூர்த்த நன்னாளில், முனிவர்கள் வேதங்கள் ஓத இராமரின் பட்டாபிஷேகம் இனிதாக நடைப்பெற்றது. அப்பொழுது இராமர், திருமால் போல் அனைவருக்கும் காட்சி அளித்தார். தன் பட்டாபிஷேகம் முடிந்த பின் இராமர், பரதனுக்கு இளவரசர் பட்டம் சூட்டி தனது ஆட்சியை நீதிநெறி தவறாமல் செங்கோலுடன் ஆட்சி புரியுமாறு கட்டளையிட்டார். இதைப் பார்த்து முனிவர்களும், தேவர்களும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து மலர்மழை தூவினர். பட்டாபிஷேகம் முடிந்த பிறகு இராமர் ஏழை, எளியவர்களுக்கு பொன், பொருள், ஆடை, அணிகலன் கொடுத்து மகிழ்ந்தார்.

🍀 அதன் பின் இராமர் தனக்கு துணை நின்றவர்களுக்கு பரிசளிக்க விரும்பினார். முதலில் இராமர் சுக்ரீவனை அழைத்து, தன் தந்தை தசரதர் இந்திரனிடம் இருந்து வென்ற இரத்தின கடகத்துடன் யானைகளையும், குதிரைகளையும் பரிசாக கொடுத்து, கிரீடம் அணிவித்து தன் நன்றியை தெரிவித்தார். சுக்ரீவன் இராமரின் கைகளை பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டான். அங்கதனை அழைத்து, இந்திரன் கொடுத்த மணிக்கடகத்தையும், விலை மதிப்பற்ற முத்தாரங்களையும், குதிரைகளையும், யானைகளையும் பரிசாக கொடுத்தார். பிறகு விபீஷணனை அழைத்து, தேவர்கள் கொடுத்த இரத்தின கடகத்தையும், பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்து வாழ்த்தினார். அதன் பிறகு நீலன், ஜாம்பவான் முதலிய வானர படைத் தலைவர்களுக்கு இரத்தின மாலைகளையும், யானைகளும், குதிரைகளும், பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்தார்.

🍀 பிறகு இராமர் அனுமனை அழைத்து, அனுமனே! நீ எனக்கு தக்க சமயத்தில் உதவி செய்துள்ளாய். உனக்கு ஆயிரமாயிரம் பொருட்கள் பரிசாக கொடுத்தாலும் ஈடாகாது. உன்னுடைய வலிமையும், தியாக உதவியும் மேன்மையானது. உனக்கு என்ன பரிசு கொடுப்பது என்று தெரியவில்லை. அதனால் என்னையே உனக்கு கொடுக்கிறேன் எனக் கூறி அனுமனை அன்போடு தழுவிக் கொண்டார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

Thursday, January 18, 2024

RAMAYANAM PART 171

 இராமாயணம் தொடர்....171

இராமரின் பட்டாபிஷேகம்...!

அனைவரும் அயோத்தி நகரை அடைந்தனர். அயோத்தி மக்கள் அனைவரும் தாயை பிரிந்த குழந்தை போல் இராமரை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் அரண்மனை அடைந்தனர். இராமர் பரதனிடம், தம்பி! அனுமன், சுக்ரீவன், விபீஷணனுக்கு தேவையான வசதிகளைக் செய்துக் கொடுத்து அரண்மனையை சுற்றி காண்பிப்பாயாக என்றார். பிறகு பரதன் அவர்களுக்கு அரண்மனையை சுற்றி காண்பித்தான். அப்போது சுக்ரீவன் பரதனிடம், பரதரே! முடிசூட்டும் விழாவிற்கு ஏன் தாமதமாகிறது எனக் கேட்டான். பரதன், ஐயனே! பட்டாபிஷேகத்திற்காக நாடு முழுவதும் உள்ள புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வர தான் தாமதத்திற்கு காரணம் என்றான். உடனே சுக்ரீவன், அனுமனை நோக்கினான். சுக்ரீவனின் நோக்கத்தை அறிந்த அனுமன் புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வர புறப்பட்டான்.

அதன் பிறகு பரதன், வசிஷ்ட முனிவரிடம் சென்று, குருவே! அண்ணல் இராமருக்கு விரைவில் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும். ஆதலால் பட்டாபிஷேகம் செய்ய உகந்த நாளை தாங்கள் கணிந்து கூறுங்கள் என்றான். வசிஷ்ட முனிவர், நல்ல நாட்களை கணித்து பார்த்து, பரதரே! நாளையே நாம் இராமருக்கான முடிசூட்டும் விழாவை வைத்துக் கொள்வோம் என்றார். இதைக் கேட்டு பரதர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். இச்செய்தி தாய்மார்களுக்கும், அனுமன், சுக்ரீவன், விபீஷணனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இச்செய்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மக்கள் இச்செய்தியைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடக்க தொடங்கியது.

ஸ்ரீராமருக்கு நாளை முடிசூட்டும் விழா என்ற செய்தியை ஓலை மூலம் மன்னர்களுக்கும், சிற்றரசர்களுக்கும் அனுப்பப்பட்டது. குகனுக்கும் இராமரின் முடிசூட்டும் விழாவிற்கு வரும்படி அழைப்பு விடப்பட்டிருந்தது. அயோத்தி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை அலங்கரித்தனர். மறுநாள் பட்டாபிஷேகத்திற்கான மண்டபத்தை பொன்னாலும், மலர்களாலும் அலங்கரித்தனர். அப்பொழுது அனுமன், பல நாடுகளிலிருந்து புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வந்தான்.

இராமரின் பட்டாபிஷேகத்தை காண பல நாட்டிலிருந்து மன்னர்களும், சிற்றரசர்களும் குவிந்த வண்ணம் இருந்தனர். குகனும் இராமரின் பட்டாபிஷேகத்தை காண வந்து சேர்ந்தான். பட்டாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் எல்லாம் அமைச்சர் சுமந்திரர் தலைமையில் கொண்டு வரப்பட்டது. வசிஷ்டர் முதலான முனிவர்கள் வேள்விகளை ஆரம்பித்தனர். இராமரும் சீதையும் அரியணையில் அமர்திருக்க, பரதன் வெண்கொற்ற குடையை பிடித்தான். இலட்சுமணனும், சத்ருக்கனும் இருப்புறங்களில் நின்றுக் கொண்டு வெண்சாமரை வீசினர்.

தொடரும்...!



RAMAYANAM PART 170

 இராமாயணம் தொடர்....170

இராமரின் வருகை - அயோத்தியின் மகிழ்ச்சி...!

புஷ்பக விமானம் தரையில் இறங்கியது. இராமர், புஷ்பக விமானத்தில் இருந்து இறங்க முற்பட்டார். உடனே பரதர், தான் தலையில் வைத்திருந்த பாதுகைகளை இராமரின் திருவடிக்கு கொண்டு சேர்த்தார். இராமர், பரதரின் பாசத்தை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். பிறகு இராமர் பரதரை அன்போடு தழுவிக் கொண்டார். அதன் பின் குல குருவான வசிஷ்டரை பார்த்து இராமர் வணங்கினார். வசிஷ்டரின் கண்களில் கண்ணீர் பெருக இராமரை வாழ்த்தி, தழுவிக் கொண்டார். சத்ருக்கன், இராம இலட்சுமணரை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தான். இராம இலட்சுமணர், சத்ருக்கனை அன்போடு தழுவிக் கொண்டனர். சத்ருக்கன் ஆனந்த கண்ணீர் வடித்தான். பிறகு இராமரின் தாய்மார்கள் இராமர் சீதை மற்றும் இலட்சுமணனை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். கௌசலை, இராமரைப் பார்த்து, இராமா! உன்னை நான் இத்தனை காலம் பார்க்காமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

இன்று உன்னை கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன் என்றாள். இராமரும், தன் தாய் கௌசலையை அன்போடு பார்த்தார். பிறகு இராமர், சீதை மற்றும் இலட்சுமணர் கௌசலையின் திருவடிகளில் விழுந்து ஆசியைப் பெற்றுக் கொண்டனர். அப்பொழுது சுமித்திரை, இராமா! நீ வந்துவிட்டாயே! இனி எனக்கு கவலைவில்லை. உன்னை காணாமல் நாங்கள் மிகவும் துன்பம் அடைந்தோம் எனக் கூறி அன்போடு தழுவிக் கொண்டார். அதன்பின் இலட்சுமணனை பார்த்து, இலட்சுமணா! என் அருமை மகனே! நீ எவ்வாறு இருக்கின்றாய்? எனக் கூறி அன்போடு தழுவிக் கொண்டாள். இலட்சுமணனும் தன் தாய் சுமித்திரையைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். அதன்பின் இராமர், சீதை மற்றும் இலட்சுமணர் சுமித்தரையின் திருவடிகளில் விழுந்து ஆசியைப் பெற்றுக் கொண்டனர்.

அப்பொழுது இராமர் தன் தாய் கைகேயியை தேடினார். கைகேயி, ஓரமாக நின்றுக் கொண்டு இருந்தாள். இதைப் பார்த்த இராமர், கைகேயிடம் ஓடிச் சென்று திருவடிகளில் விழுந்து வணங்கினார். கைகேயின் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. பிறகு இராமர் கைகேயிடம், அம்மா! தாங்கள் ஏன் ஓரமாக நின்று கொண்டு உள்ளீர்கள் எனக் கேட்டார். கைகேயி, என் அன்பு மகனே! நான் உனக்கு செய்த செயல் தான் நான் ஓரமாக நிற்பதற்கு காரணம் என்றாள். இராமர், அம்மா! தாங்கள் இவ்வாறு பேசுதல் கூடாது. என்ன அன்போடு வளர்த்தவர் நீங்கள். தங்களால் தான் எனக்கு இந்த பதினான்கு வருட வனவாச காலத்தில், பல முனிவர்களின் ஆசிகளையும், பல ரிஷிகளின் சாப விமோச்சனைத்தையும், பலரது நட்புகளையும் பெற்று தந்தது.

அது மட்டுமல்லாமல் பல அரக்கர்களின் பாவச் செயல்களும் அழிந்து போனது. இது எல்லாம் தங்களால் தான் நடந்தது. இதை நினைத்து தாங்கள் வருந்துதல் கூடாது என்றார். இராமரின் இந்த பணிவான சொற்களை கேட்டப்பின் கைகேயி இராமரை அன்போடு ஆசிர்வதித்தாள். இதைப் பார்த்து அயோத்தி மக்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். அதன்பின் இலட்சுமணரும், சீதையும் கைகேயின் திருவடிகளில் விழுந்து ஆசியைப் பெற்றுக் கொண்டானர். பிறகு சுமந்திரர் முதலான அமைச்சர்கள் இராமரை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். அயோத்தி மக்களும் இராமரைக் கண்டு தரிசித்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன் பிறகு இராமர், சுக்ரீவன், அங்கதன் மற்றும் விபீஷணன் முதலானவர்களை தன் தாய்மார்களுக்கும், பரதன் மற்றும் சத்ருக்கனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் இராவணாதி அரக்கர்களால் ஏற்பட்ட துன்பங்களையும் எடுத்துக் கூறினார். இதைக்கேட்டு அவர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இராமரால் இராவணாதி அரக்கர்கள அழிந்ததை நினைத்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அனைவரும் அயோத்தி செல்ல முற்பட்டனர். இராமர், நாம் அனைவரும் இந்த புஷ்பக விமானத்தில் பரதன் தங்கிருந்த நந்தி கிரமத்திற்கு சென்று அதன்பின் அயோத்தி செல்லலாம் என்றார். இராமரின் சொற்படியே அனைவரும் புஷ்பக விமானத்தில் நந்தி கிராமத்திற்கு புறப்பட்டனர்.

சிறிது நேரத்தில் அனைவரும் நந்தி கிராமத்தை அடைந்தனர். இராமர் சீதையை காண்பதற்காக அயோத்தி மக்கள் கூட்டமாக கூடியிருந்தனர். புஷ்பக விமானம் நந்தி கிராமத்தில் இறங்கியது. இராமருக்காக அங்கு வெண் குதிரைகளால் பூட்டப்பட்ட பொன்னால் ஆன சிறந்த தேர் காத்துக் கொண்டிருந்தது. நந்திகிராமத்தை அடைந்த இராமர் தம்பிகளுடன் சடாமுடி போக்கி, வன வாச கோலத்தை நீங்கி சரயு நதியிலே நீராடினர். பிறகு இராமரை அழகாக ஒப்பனை செய்தனர். பிறகு இராமர் அயோத்திக்குச் செல்ல, வெண் குதிரைகள் பூட்டப்பட்ட அழகிய தேரிலே ஏறினார்.

இலட்சுமணர், இராமருக்கு குடை பிடித்தார், சத்ருக்கன், இராமருக்கு வெண்சாமரம் வீசினார். பரதர், அத்தேருக்கு சாரதியாக இருந்து தேரை செலுத்தினார். விபீஷணன் மற்றும் சுக்ரீவன் இருவரும் தேரின் இருபுறமும் யானைகள் மீது சென்றனர். அங்கதனும், அனுமனும் அத்தேருக்கு முன்னும் பின்னும் சென்றனர். பொன்னாலான தேரில் சீதை சென்றாள். மனித உருவம் கொண்ட வானர பெண்கள் சீதையுடன் குதிரைகளின் மேலும், பல்லக்கிலும் அமர்ந்துச் சென்றனர். சிறிது தேரிலேயே அனைவரும் அயோத்தி நகரை அடைந்தனர்.

தொடரும்....!

RAMAYANAM PART 168

 இராமாயணம் தொடர்....168

நந்தி கிராமத்திற்கு செல்லும் அனுமன்...!

🍀 இராமர், முன்பு கோதாவரி ஆற்றின் பக்கத்தில் தங்கிருந்த இடத்தை காண்பித்து, இந்த இடத்தில் நாம் இருவரும் பிரிந்து மிகுந்த துன்பத்திற்கு உள்ளானோம் எனக் கூறினார். அதன்பின் விமானம் தண்டக வனத்தின் மேல் சென்றது. இராமர் சீதையிடம், இந்த இடம் பல முனிவர்கள் யாகம் செய்து பலன் பெற்ற இடம் என்றார். அதற்குள் விமானம் சித்ரகூட மலை மேல் சென்றது. அங்கு பரத்வாஜ முனிவர், இராமர் இங்கு இறங்க வேண்டும் என மனமுருக வேண்டிக் கொண்டார். பரத்வாஜ முனிவர் வேண்டுகோளின்படி இராமர் சித்ரகூட மலையில் இறங்கினார். இராமர் பரத்வாஜ முனிவரிடம் சென்று அவரை வணங்கினார். பரத்வாஜ முனிவர் இராமரை அன்புடன் ஆசிர்வதித்தார். அதன் பின் இலட்சுமணரும், சீதையும் பரத்வாஜ முனிவரின் திருவடியில் விழுந்து ஆசியை பெற்றனர்.

🍀 பரத்வாஜ முனிவர் இராமரை பார்த்து, இராமா! நீ என்னை விட்டு பிரிந்த பின்பு நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் நான் இங்கிருந்தே கண்டு மகிழ்ந்தேன். தாங்கள் இன்று உணவருந்தி எங்களுடன் தங்க வேண்டும் என்றார். பரதன் அங்கு உயிர் துறக்கும் நிலையில் இருக்கும்போது, இராமர், பரத்வாஜ முனிவரிடம், உணவருந்த ஒப்புக் கொண்டார். பரத்வாஜ முனிவர் இராமரிடம், இராமா! தம்பி பரதன்! தன் உடலை வருத்திக் கொண்டு, மனதில் கலக்கத்தை கொண்டு, தினமும் காய், கனிகளை உண்டு, உன் பாதுகைகளுக்கு முப்பொழுதும் மலர்களால் அர்ச்சித்து வருகிறான். இன்றுடன் உன் வனவாசம் முடிவடைவதால் உன் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறான் என்றார். இராமர் இதைக் கேட்டு மிகவும் துயரம் அடைந்தார். இராமர், பரத்வாஜ முனிவரின் உபசரிப்பை ஏற்றார்.

🍀 தனக்கு உதவிய அனுமனை கௌரவிக்கும் வகையில், தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி கூறினார். பிறகு இராமர் அனுமனிடம், அனுமனே! நீ விரைந்துச் சென்று என் கணையாழியை பரதனிடம் காண்பித்து அண்ணன் வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிவிப்பாயாக எனக் கூறினார். பிறகு இராமர் தன் கணையாழியை அனுமனிடம் கொடுத்தார். அதன் பின் அனுமன் இராமரிடன் இருந்து விடைப்பெற்று வான்வெளி நோக்கிச் பறந்தான். வான்வெளியில் அனுமன் மிக வேகமாக பறந்துச் சென்றான். பரதர், அயோத்தி மாநகரையும், அரண்மனையையும் துறந்து அயோத்திக்கு அருகிலுள்ள நந்திக் கிராமத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இராமரின் பாதுகைகளை வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தார்.

🍀 இராமரின் பாதுகைகளை காலை, மதியம், இரவு என முப்பொழுதும் மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து, வழிபாடு செய்து கொண்டிருந்தார். இன்றும் இராமரின் பாதுகைகளுக்கு பூஜை செய்து மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்தான். அப்பொழுது பரதன், அண்ணன் இராமர் அயோத்திக்கு திரும்பி வரும் நாளை பற்றி சிந்தித்தான். உடனே ஜோதிடர்களை வரவழைத்து இராமர் திரும்பி வரும் நாள் என்று எனக் கேட்டார். ஜோதிடர்கள், இராமரின் பதினான்கு ஆண்டு வனவாச காலம் இன்றுடன் முடிவடைகிறது என்றனர். இதைக் கேட்டு பரதர் மகிழ்ச்சி அடைந்தார். பரதர் இராமரை நோக்கி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.

தொடரும்...!

RAMAYANAM PART 169

 இராமாயணம் தொடர்....169

கௌசலை பரதனை காண ஓடி வருதல்...!

🌸 இராமர் குறித்த காலத்திற்குள் வர கால தாமதமானதால் பரதர், அண்ணன் இராமரை இன்னும் காணவில்லையே! அவருக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்துவிட்டதோ! என எண்ணினார். இல்லை பகைவர்களால் ஏதேனும் துன்பம் நேர்ந்ததோ! ஆனால் அண்ணனுடன் இலட்சுமணன் இருக்கிறாரே அதனால் அவருக்கு ஏதும் நேராது மன அமைதி அடைந்தார். இல்லை பரதனே அயோத்தியை ஆளட்டும் என நினைத்து வராமல் இருக்கிறாரோ! அண்ணன் இராமர் வரவில்லையெனில் நான் உயிர் வாழ மாட்டேன். இனி நான் உயிர் வாழ்வது சிறந்தது அல்ல. நான் உயிர் துறக்க வேண்டும் என எண்ணி பரதர் உயிர் விடத் துணிந்தார். அதன்பின் தன் ஏவலாட்களை அழைத்து சத்துருக்கனை அழைத்து வர கட்டளையிட்டார். அவ்வாறே சத்ருக்கனும் அங்கு வந்து பரதரை பணிந்து நின்றான்.

🌸 பிறகு பரதன் சத்ருக்கனை பார்த்து, தம்பி! பதினான்கு ஆண்டு வனவாச காலம் முடிந்த பின்பும் அண்ணன் இராமர் குறிப்பிட்டப்படி நாடு திரும்பவில்லை. அதனால் நான் உயிர் திறக்க போகிறேன். நீ எனக்கு தீ வார்த்திக் கொடு எனக் கேட்டார். சத்ருக்கன், பரதர் இவ்வாறு கூறியதைக் கேட்டு துடிதுடித்து போனான். சத்ருக்கனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அண்ணா! தாங்கள் இல்லா இவ்வுலகில் நான் மட்டும் இருந்து என்ன பயன்? நானும் தங்களுடன் வருகிறேன். இருவரும் ஒன்றாக உயிரைத் துறப்போம். நீங்கள் இல்லாத இவ்வுலகில் இந்த இராஜ்ஜியம் மட்டும் எனக்கெதற்கு? தாங்கள் தீயில் விழுந்தால் நானும் தீயில் விழுந்து மாள்வேன் எனக் கூறி அழுதான்.

🌸 பரதன், தம்பி சத்ருக்கனா! நீ இவ்வாறு சொல்லுதல் கூடாது. எனக்காக நீ உயிர் வாழ வேண்டும். என் பொருட்டு தான் இராமர் வனவாசம் சென்றுள்ளார். வனவாச காலம் முடிந்த பின்பும் இராமர் இன்னும் நாடு திரும்பவில்லை. நான் அயோத்தியை ஆட்சி புரிவதால், தம்பி பரதனே ஆட்சி புரியட்டும் என இராமர் வராமல் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை. நான் இறந்துவிட்டால் அயோத்தியை ஆட்சி புரிய எவரும் இருக்க மாட்டார்கள். அப்பொழுது இராமர் அரசு புரிய இங்கு வந்து ஆக வேண்டும். அதனால் தான், நான் என் உயிரை விட துணிந்துள்ளேன் எனக் கூறினான். என் செயலை நீ புரிந்துக் கொள்ள வேண்டும். அதனால் நீ எனக்கு தீ மூட்டி கொடு. இது என் கட்டளை எனக் கூறினான். பரதன் இவ்வாறு கூறியதால் சத்ருக்கனால் எதுவும் செய்ய முடியவில்லை. கண்களில் கண்ணீர் தழும்ப பரதரின் கட்டளைப்படி தீமூட்டினான்.

🌸 பரதன் தீயில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்தி அயோத்தி முழுவதும் பரவியது. மக்கள் அனைவரும் பரதனை காண ஓடி வந்தனர். இச்செய்தி கௌசலைக்கு தெரிவிக்கப்பட்டது. கௌசலை கண்களில் கண்ணீர் தழும்ப பரதனை காண நந்தி கிராமத்திற்கு ஓடி வந்தாள். பரதனை பற்றி கதறி அழுதாள். என் அன்பு மகனே! என்ன காரியம் செய்ய துணிந்துள்ளாய். இராமன் இன்று வரவில்லையென்றால் நாளை வருவான். இராமன் இங்கு வந்து உன்னைப் பற்றி கேட்டால் நாங்கள் என்ன சொல்வது. இச்செய்தியை அறிந்து இராமனும் மாள மாட்டானா? நீ இராமன் மேல் வைத்த அன்புக்கும், உன் பண்புகளுக்கும் ஆயிரம் இராமர்கள் வந்தாலும் உனக்கு ஈடாகா மாட்டார்கள். உன்னைப் போல் ஒருவன் இவ்வுலகில் பிறக்கப் போவதில்லை. உன் அன்பு மேரு மலையைக் காட்டிலும் மிகப் பெரியது. நீ உன் உயிரை தீயிக்கு இரையாக்கி விடாதே எனக் கூறி புலம்பி அழுதாள்.

பரதன், அன்னையே! அண்ணன் இராமர், பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்த பின்பு திரும்பி வருவேன் என உறுதியளித்தார். அப்பொழுது நான் தாங்கள் பதினான்கு ஆண்டு முடிந்து வரவில்லையென்றால் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என சபதம் செய்துக் கொண்டேன். இன்று அண்ணன் இராமரின் பதினான்கு ஆண்டு வனவாசம் காலம் முடிந்துவிட்டது. ஆனால் அவர் இன்னும் இங்கு வரவில்லை. அதனால் நான் ஏற்றுக்கொண்ட சபதத்தின்படி உயிர் விடுவேன். தந்தை, என் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் பொருட்டு சத்தியத்திற்காக உயிரைவிட்டவர். அதுபோல் நானும் என் சபதத்திற்காக உயிரை விடுவேன் என்றான். பரதன் கூறிய சொற்களை கேட்டு கௌசலை துடிதுடித்து போனாள்.

🌸 கௌசலை, பரதனை எவ்வளவோ தடுக்க முயற்சி செய்தும், அத்தனையும் தோல்வியில் முடிந்தன. பரதன் தீயில் இறங்குவதில் உறுதியாக இருந்தான். பரதன், அக்னிக்கு அருகில் சென்று பூஜையை செய்தான். அக்னிக்கு தன் உயிரை காணிக்கையாக கொடுக்க முன்னே வந்தான். அப்பொழுது அனுமன் பரதன் இருக்கும் நந்தி கிராமத்தை அடைந்தான். அனுமன், பரதன் தீயில் இறங்க முன் வந்திருப்பதை கண்டு இவர் தான் பரதர் என்பதை உகித்துக் கொண்டான். அனுமன், இராமர் வந்துவிட்டார், ஸ்ரீ இராம சந்திர மூர்த்து வந்துவிட்டார் எனக் கூறிக் கொண்டு வேகமாக வந்து இறங்கி பரதனை தடுத்தான். அனுமன் வந்து இறங்கிய வேகத்தில் அக்னித்தீயும் அணைந்தது. பரதரே! ஸ்ரீ இராமசந்திர மூர்த்தி வந்துவிட்டார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்துவிடுவார். பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் உபசரிப்பை ஏற்றுக் கொண்டு ஆசிரமத்தில் தங்கியிருக்கின்றார்.

🌸 பிறகு அனுமன், பரதரே! தாங்கள் என்ன காரியம் செய்ய துணிந்துள்ளீர்கள். தாங்கள் உயிர் விட்ட செய்தியை அறிந்து இராமர் மட்டும் மகிழ்ச்சியாக உயிர் வாழ்வாராக என நினைத்தீர்களா? நிச்சயம் இல்லை. அவரும் தங்களுடன் உயிரை மாய்த்துக் கொள்வார். தாங்கள் அவசரப்பட்டு இச்செயலை செய்வது சரியானது அல்ல. ஸ்ரீராமர் பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்து அயோத்திக்கு வருவதற்கு இன்னும் நாற்பது நாழிகை பொழுது மீதம் இருக்கிறது. அதற்குள் இராமர் இங்கு வந்துவிடுவார். தாங்கள் யாரும் வருந்த வேண்டாம். நான் செல்வது அனைத்தும் உண்மை. பரதரே! ஸ்ரீராமர் அவர்கள் அவரின் அடையாளமாக இந்த கணையாழியை தங்களிடம் காண்பிக்க சொன்னார் எனக் கூறிவிட்டு இராமர் கொடுத்த கணையாழியை பரதரிடம் காண்பித்தான்.

🌸 பரதன், அக்கணையாழியை பார்த்து இது என் அண்ணல் இராமரின் கணையாழி தான் எனக் கூறி அக்கணையாழியை வாங்கி கண்ணீரால் அபிஷேகம் செய்தார். பிறகு அக்கணையாழியை அனைவரிடமும் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார். அனைவரும் இராமரின் கணையாழியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பிறகு பரதன் அனுமனை பார்த்து, ஐயனே! எங்களுக்கு உயிரினும் மேலான இத்தகையை இன்பச் செய்தியை கூறிய தாங்கள் யார்? என்று எங்களிடம் கூறவில்லையே! நீங்கள் வந்த வேகத்தில் அக்னித்தீயும் அணைந்துவிட்டது. அப்படியென்றால் நீங்கள் மும்மூர்த்திகளில் ஒருவரா? எனக் கேட்டான்.

தொடரும்...!

RAMAYANAM PART 167

 இராமாயணம் தொடர்....167

இராமர் சீதைக்கு காண்பிக்கும் இடங்கள்...!

இராமரின் வேண்டுகோளுக்கிணங்க புஷ்பக விமானமும் இலங்கையை ஒரு வலம் வந்து சென்றது. புஷ்பக விமான இலங்கை நகரின் கிழக்கு நோக்கி பறக்க தொடங்கியது. இராமர் சீதையிடம், சீதா! இதோ இந்த இடத்தில் வானர படைத்தலைவன் நீலன், பிரகஸ்தன் என்னும் அரக்கனை தன் கைகளால் கொன்றான் என்றார். விமானம் தெற்கு நோக்கி பறக்க தொடங்கியது. இராமர், இதோ இடத்தில் தான் அனுமன், துன்மிகன் என்னும் அரக்கனை கொன்றான் என்றார். அதன் பின் விமானம் மேற்கு நோக்கி பறக்க தொடங்கியது. இராமர், சீதா! இதோ இந்த இடத்தில் தான், இலட்சுமணன், மிக வலிமையான, மாயையில் வல்லவான இந்திரஜித்தை கொன்றான் என்றார். விமானம் வடக்கு நோக்கி பறக்க தொடங்கியது.

இராமர், சீதா! இதோ இந்த இடத்தில் தான் நான் இராவணனை பிரம்மாஸ்திரத்தைக் கொண்டு கொன்றேன் என்றார். அதன்பின் விமானம் கடல் மேல் பறந்துச் சென்றது. இராமர் சீதையிடம், சீதா! இதோ இந்த பாலத்தை வானர வீரர்கள் ஐந்து நாட்களில் கட்டிமுடித்தனர் என பாலத்தை காட்டி மகிழ்ந்தார். இங்கு வந்து தீர்த்தங்களில் மூழ்கிச் செல்பவர்கள் அனைத்துப் பாவங்களும் நீங்கி நற்கதி அடைவர். இந்த சேதுவில் நீராடுபவர்கள், எத்தகைய பாவங்களைச் செய்திருந்தாலும், இந்த கடலில் மூழ்கினால் தேவர் தொழும் பெருமை பெற்றவர் ஆவார்கள் என்றார். அதன்பின் சீதையிடம், வருணன் தன்னிடம் சரணடைந்த இடத்தையும் காட்டினார். பிறகு விமானம் கடலைக் கடந்து, வடக்கு நோக்கி பொதிகை மலை மேல் சென்றது. 

இராமர் சீதையிடம், சீதா! இந்த மலை அகத்திய முனிவர் வாழும் சிறப்புமிகுந்த மலை என்றார். அதன் பின் விமானம் திருமாலிருஞ்சோலைமலை, திருவேங்கடமலை மேல் பறக்கும்போது, இந்த மலையில் முழுமுதற்கடவுளான திருமால் எழுந்தருளும் மலைகளாகும் என்றார். விமானம் ருசியமுக பருவத்தை நெருங்கும் போதும், சீதை இராமரிடம், பெருமானே! தாங்கள் முதன் முதலில் அனுமனை எங்கு பார்த்தீர்கள் எனக் கேட்டாள். இராமர், இதோ இந்த ருசியமுக பருவத்தில் தான் சந்தித்தேன் என்றார். விமானம் ருசியமுக பருவத்தை தாண்டி கிஷ்கிந்தை நோக்கி பறந்துச் சென்றது. இராமர் சீதையிடம், சீதா! இது கிஷ்கிந்தை. இங்கு தான் நான் வாலியை வதம் செய்தேன். சூரிய குமாரரான சுக்ரீவன் நீதிநெறி தவறாது ஆட்சி செய்யும் கிஷ்கிந்தை இது தான் என்றார். 

சீதை இராமரிடம், பெருமானே! பெண்களின் துணையின்றி நான் மட்டும் அயோத்தி நகருக்கு செல்வது சிறப்பல்ல. அதனால் இந்நகரத்தில் வாழும் வானரப் பெண்களை நம்முடன் அழைத்துச் செல்லலாம் என்றார். இராமர் சரி என்று சம்மதிக்கவே, புஷ்பக விமானம் கிஷ்கிந்தையில் இறங்கியது. சுக்ரீவனின் கட்டளைப்படி, அனுமன் விரைந்துச் சென்று வானரப் பெண்களை அழைத்து வந்தான். வானரப் பெண்கள் அனைவரும் மனித உருவங்கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறினர். வானர பெண்கள் சீதைக்காக சில பரிசுப் பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். சீதை அப்பரிசு பொருட்களை ஏற்று அவர்களை வாழ்த்தினார். பிறகு அங்கிருந்து விமானம் வானில் பறந்தது. விமானம் கோதாவரி ஆற்றில் மேல் பறந்துச் சென்றது.

தொடரும்...!

RAMAYANAM PART 166

 இராமாயணம் தொடர்...166

அயோத்திக்குச் செல்லும் இராமர்...!

🌿 இராமர் விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! இன்றுடன் என் பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்துவிட்டது. நான் இன்று அயோத்தி செல்ல வேண்டும். என் வரவைக் காணாமல் பரதன் நிச்சயமாக இறந்து போவான். நான் உடனே அயோத்திக்குச் செல்ல ஏதேனும் வாகனம் உள்ளதா? எனக் கேட்டார். விபீஷணன், எம்பெருமானே! இராவணன் தன் தமையனான குபேரனிடம் இருந்து பறித்த புஷ்பக விமானம் உள்ளது. அதன் வேகமானது, வாயு வேகத்தை விட அதிகம் என்று சொல்லலாம். நாம் அனைவரும் புஷ்பக விமானத்தில் செல்லலாம் என்றான். இராமர், அன்பர்களே! நீங்கள் அனைவரும் உங்கள் இருப்பிடத்திற்கு சென்று, உங்களின் உறவினர்களை சந்தித்து உங்களின் நலத்தை கூறுங்கள். என் பதினான்கு ஆண்டு வனவாச காலம் முடிந்துவிட்டதால், நான் இன்றே அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்றார்.

🌿 அதன்பின் விபீஷணன் மற்றும் வானர வீரர்கள், இராமரிடம் பெருமானே! நாங்கள் எல்லோரும் தங்களின் பட்டாபிஷேகம் காண விரும்புகிறோம். அதற்கு தாங்கள் அனுமதி தர வேண்டும் என வேண்டினர். இராமர், அனைவரும் அவ்வண்ணமே அயோத்திக்கு வாருங்கள் எனக் கூறினார். பிறகு இராமர் புஷ்பக விமானத்தை கொண்டு வரும்படி கூறினார். இராமர், இலட்சுமணர் மற்றும் சீதை மூவரும் புஷ்பக விமானத்தில் ஏறினர். இராமர், விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! உன் மக்களுக்கு நல்லாட்சி புரிந்து, நீதிநெறி விளங்க, தர்மத்தை நிலை நிறுத்துவாயாக என வாழ்த்தி ஆசி கூறினார். பிறகு சுக்ரீவனைப் பார்த்து, சுக்ரீவா! உன் உதவியால் தான், நான் இராவணனை கொன்றேன். நீயும், உன் வானரப்படைகளும் கிஷ்கிந்தைக்கு சென்று எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக எனக் கூறினார்.

🌿 அதன் பின், அங்கதன், அனுமன், நீலன், ஜாம்பவானை அழைத்து நீங்கள் அனைவரும் எல்லாவித நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழ்வீர்களாக எனக் கூறினார். இராமரை பிரிய முடியாமல் அங்குள்ள அனைவரும் கண்கலங்கி நின்றனர். பிறகு அனைவரும் இராமரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, நாங்கள் அனைவரும் தங்களோடு அயோத்திக்கு வந்து, தங்களின் பட்டாபிஷேகத்தை கண்டு களித்து, அதன் பின் நாங்கள் கிஷ்கிந்தை செல்கிறோம் என வேண்டினர். இராமர் அவர்களின் அன்பை மெச்சி, நீங்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். உங்களின் மனக்கருத்தை தெரிந்துக் கொள்ளவே இவ்வாறு செய்தேன். நீங்கள் அனைவரும் அயோத்திக்கு வாருங்கள்.

🌿 நாம் அனைவரும் ஒன்றாக செல்லலாம் என்றார். பிறகு சுக்ரீவன், அங்கதன், அனுமன் முதலிய அனைவரும் மனித உருவம் கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டனர். பிறகு விபீஷணன் இராமரிடம், நாங்களும் தங்களுடன் வந்து பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்க விரும்புகிறோம் என்றனர். இராமர் சம்மதம் தெரிவிக்க விபீஷணனும் அவனின் மனைவி மக்களுடன் புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டனர். இராமர், சீதைக்கு இலங்கையை சுற்றி காண்பிக்க விரும்பினார். அதனால் புஷ்பக விமானத்தை இலங்கையை சுற்றி செல்லுமாறு வேண்டினார். இராமரின் வேண்டுகோளுக்கிணங்க புஷ்பக விமானமும் இலங்கையை ஒரு வலம் வந்து சென்றது.

தொடரும்...!

RAMAYANAM PART 165

 இராமாயணம் தொடர்....165

இராமர் தந்தையிடம் கேட்கும் வரம்!

தசரதர் இராமரை, மகனே! உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேள். முன்பு கைகேயிக்கு கொடுத்த வரத்தினால் தான் இத்தனை துன்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இராமர், தந்தையே! தங்களை தரிசித்ததே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கின்றது. அதனால் எனக்கு எந்த வரமும் வேண்டாம் என்றார். தசரதர், இராமா! நான் உனக்கு வரம் கொடுக்க விரும்புகின்றேன். அதனால் நீ ஏதேனும் ஒரு வரத்தைக் கேள் என்றார். இராமர், தந்தை தசரதர் கொடுக்கும் வரம் தனக்கு பயன்படாமல் பிறருக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். தந்தை கொடுக்கும் வரம் அவர் ஒருவரே கொடுப்பதாக இருக்க வேண்டும் என நினைத்தார். அப்பொழுது இராமருக்கு நினைவு வந்தது அன்னை கைகேயும், தம்பி பரதனும் தான். தான் கானகத்திற்கு செல்லுமாறு அன்னை சொல்லியதும், தந்தை, கைகேயி இனி எனக்கு மனைவி இல்லை, பரதன் எனக்கு மகனும் இல்லை என்று சொன்னது இராமரின் நினைவுக்கு வந்தது.

இராமர் தசரதரிடம், தந்தையே! தாங்கள் அன்னை கைகேயியையும், தம்பி பரதனையும் மன்னித்தருள வேண்டும் என்றார். மகனே! கைகேயி என்னிடம் கேட்ட வரம் கூர்மையான கத்தி போல் என் மார்பில் குத்தியது. அந்த வலி என் மார்பை விட்டு அகலாமல் இருந்தது. இப்பொழுது நான் உன்னை தழுவிக் கொண்டதால் அவ்வலி மறைந்துவிட்டது. இராமா! நான் பரதனை மகனாக ஏற்றுக் கொள்கிறேன். உன்னை கானகத்திற்கு அனுப்ப காரணமாய் இருந்த கைகேயியை நான் மன்னிக்க மாட்டேன் என்றார். இதைக்கேட்ட இராமர், தந்தையே! நான் அயோத்தியில் பிறந்தது கோசலை நாட்டை ஆள்வதற்கு அல்ல. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பத்தை தரும் இராவணாதி அரக்கர்களை கொல்லும் பொருட்டே நான் இராமனாக அவதாரம் எடுத்தேன். இப்படி இருக்கையில் நான் அயோத்தியின் அரசனாக முடிசூட வேண்டும் என்று நினைத்தது என் தவறு.

இதில் அன்னையின் தவறு என்ன உள்ளது. அதனால் தாங்கள் அன்னையை மன்னித்தருள வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதைக்கேட்ட தசரதர், இராவணாதி அரக்கர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது கைகேயியின் செயல் தான் என்பதை புரிந்து கைகேயியை மன்னிதருளினார். பிறகு தசரதர், இராமருக்கும், இலட்சுமணனுக்கும் விடைக் கொடுத்து வானுலகம் சென்றார். அதன் பின் தேவர்கள் இராமரை பார்த்து, பெருமானே! தங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டனர். இராமர் தேவர்களிடம், போர்களத்தில் மாண்ட வானரங்கள் அனைவரும் புத்துயிர் பெற்று எழ வேண்டும். வானரங்கள் வாழும் கானகத்தில், நீர் வளமும், நில வளமும், பழங்கள், காய்கனிகள் வற்றாது இருக்க அருள் செய்ய வேண்டும் என்று கேட்டார். தேவர்களும் இராமர் கேட்டபடியே வரத்தை அருளினர்.

போர்களத்தில் மாண்ட வானரங்கள் அனைவரும் புத்துயிர் பெற்று எழுந்தனர். இதைப் பார்த்த மற்ற வானரங்கள் மகிழ்ச்சியில் ஆடிபாடினர். அப்பொழுது சிவபெருமானும், பிரம்ம தேவனும் தோன்றி, இராமருடைய பதினான்கு ஆண்டு வனவாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஆதலால் தாங்கள் அயோத்திக்கு விரைந்துச் செல்லுங்கள். தங்கள் வரவை நோக்கி பரதன் எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறான். தாங்கள் குறிப்பிட்ட நேரத்தில் போகவில்லையென்றால் பரதன் அக்னியில் வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொள்வான். ஆதலால் காலம் தாழ்த்தாமல் அயோத்திக்குச் செல்லுங்கள் என்று கூறி இராமரை வாழ்த்திவிட்டு சென்றனர்.

RAMAYANAM PART 164

 இராமாயணம் தொடர்....164

அக்னிதேவன் இராமர் முன் தோன்றுதல்...!

சீதையின் கற்பு கனலால் தீ சுடசுடவென சுடப்பட்டது. சீதையின் கற்பு என்னும் வெப்பம் தாங்கமுடியாமல் அக்னிதேவன் சீதையுடன் வெளியே வந்தான். அக்னிதேவன் இராமரை பார்த்து, பெருமானே! நான் என்ன தவறு செய்தேன். என்னை ஏன் கற்பு என்னும் நெருப்பால் சுட வைத்தீர்கள். சீதையின் கற்பு தீ என் வலிமையை அழித்துவிட்டது என்றான். சீதை, தீயினில் விழுவதற்கு முன் எவ்வாறு இருந்தாலோ அப்படியே இருந்தாள். இராமரின் கடுஞ்சொற்களை கேட்டு சீதையின் முகத்தில் ஏற்பட்ட வியர்வைகளும் அப்படியே இருந்தன. சீதை சூடியிருந்த பூக்களும் வாடாமல் அப்படியே இருந்தது. இராமர் அக்னிதேவனை பார்த்து, நீ யார்? யார் சொல்லி நீ சீதையை சுடாதபடி காப்பாற்றினாய் எனக் கேட்டார். அக்னிதேவன், இராமா! நான் தான் அக்னிதேவன். சீதையின் கற்பு தீ என்னை சுட்டெரித்துவிட்டது. அதனால் தான் நான் தங்களை சரணடைந்துள்ளேன்.

இவள் கோபம் கொண்டாள், இந்த உலகமே அழிந்துவிடும். சீதை கற்பு நெறி தவறாதவள். ஆதலால் தாங்கள் சீதையை ஏற்று கொள்ள வேண்டும் என்றார். அப்பொழுது சிவபெருமான், தோன்றி இராமரிடம், எம்பெருமானே! சீதை கற்பின் தெய்வம். இவள் கோபங்கொண்டால் இந்த உலகமே அழிந்துவிடும். அதனால் நீ நெருப்புடன் விளையாடாதே. சீதையை ஏற்றுக்கொள் எனக் கூறினர். இராமர் அதன்பின் சீதையை ஏற்றுக் கொண்டார். பிறகு இராமர் சீதையை கருணையுடன், அன்பாக பார்த்தார். இதைப்பார்த்த தேவர்களும், வானர வீரர்களும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அதன்பின் சிவபெருமான் வைகுந்தப் பதவியை அடைந்த தசரதனிடம் சென்று, இராமனை பிரிந்து தான் அடைந்த துன்பத்தை இராமனை சந்தித்துப் போக்கி கொள்ளுமாறு கூறினார்.

சிவபெருமானுடைய கட்டளைப்படி, தேவர்கள் புடைசூழ விண்ணுலகத்தில் வாழ்ந்த தசரதரை வானுலக விமானத்தில் ஏற்றி அழைத்து வந்தனர். தந்தையை கண்ட இராமர் மகிழ்ச்சி பொங்க அவரின் திருவடியில் விழுந்து வணங்கினார். இராமரை கண்ட தசரதர், இன்பக் கடலில் திழைத்து, ஆனந்த கண்ணீர் அவரின் கண்களில் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. பிறகு இராமரை அன்போடு தழுவிக் கொண்டார். அதன் பின் சீதை, தசரதரின் திருவடியில் விழுந்து ஆசி பெற்றார். தசரதர் இராமரிடம், மகனே! நான் உனக்கு தந்தையாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முன்பு மண்ணுலகத்தில் இருந்த போது நான் வணங்கிய தேவர்கள், இப்பொழுது என்னை வணங்குகிறார்கள். எனக்கு பிரம்மனுக்கு சமமான ஒப்பற்ற பெருமை உண்டாகியிருக்கின்றது என்றார்.

பிறகு தசரதர் சீதையிடம் சென்று, மருமகளே! உன் கற்பின் பெருமையை உலகுக்கு உணர்த்துவதற்காக தான் இராமன் இவ்வாறு செய்தான். அதனால் நீ இராமன் மீது கோபம் கொள்ள வேண்டாம் என்றார். அதன் பின் தசரதர் இலட்சுமணன் அருகில் வந்தார். இலட்சுமணன் தந்தையின் திருவடியில் விழுந்து வணங்கினார். தசரதர், இலட்சுமணனை அன்போடு தழுவிக் கொண்டார். என் அருமை மகனே! உன்னுடைய தமையனுக்காக உண்ணாமலும், உறங்காமலும் சேவை செய்தாயே. தேவர்கள் எவராலும் வெல்ல முடியாத இந்திரஜித்தை வென்று தேவர்களின் துயரை நீக்கினாயே. விண்ணுலகில் எங்கு பார்த்தாலும் உன் புகழ் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். உன் புகழ் என்றென்றும் வாழ்க என வாழ்த்தினார்.

தொடரும்...!

RAMAYANAM PART 163

 இராமாயணம் தொடர்...163

சீதை தீக்குளித்தல்...

இராமர், கற்புடைய பெண்கள் கணவனை பிரிந்த மறுகணமே உயிரை மாய்த்துக் கொள்வார்கள். ஆனால் நீயோ பெண் குலத்திற்கே இழிவை உண்டாக்கியுள்ளாய். நீ புழுவைப் போல் மண்ணிலிருந்து தோன்றியவள் தானே? அதனால் தான் உன்னிடத்தில் நற்குணம் இல்லை. நீ என் கண்முன் நிற்காதே. இங்கிருந்து சென்றுவிடு என மிக கோபமாக கூறினார். இராமர் பேசிய கடுஞ்சொற்கள், எம்பெருமான் தனக்கு தரும் தண்டனை என்பதை சீதை உணர்ந்தாள். இராமரின் கடுஞ்சொற்களை கேட்டு அனுமன் கதறி அழுதான். வானர வீரர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் உருக்குலைத்து போய் கதறி அழுதார்கள். தேவர்களும், முனிவர்களும் இராமரின் கடுஞ்சொற்களைக் கேட்டு துடிதுடித்தனர்.

சீதையின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சீதை இராமரை பார்த்து, எம்பெருமானே அனுமன் அசோகவனம் வந்து, என்னைப் பிரிந்த தங்களின் நிலையையும், பகைவனை வென்று விரைவில் என்னை மீட்பீர்கள் என கூறிச் சென்றதனால், நான் இதுநாள் வரையிலும் தங்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். தங்களின் பேரன்பினை எனக்கு எடுத்துரைத்த அனுமன், தங்களை பிரிந்து நான் வருந்தும் என் நிலைமையையும் தங்களிடம் உள்ளவாறு சொல்லியிருக்க வேண்டுமே? நான் தங்கள் மேல் கொண்ட அன்பினால், ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். தங்களை காண இத்தனை நாள் நற்குணங்களுடன் தவம் செய்து கொண்டிருந்தேன். நான் தங்களை தரிசித்து விட்டேன். தங்களுக்கு என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினாள்.

அதன் பின் இராமரின் அருகில் இருக்கும் இலட்சுமணனைப் பார்த்து, இலட்சுமணா! எம்பெருமான் என்னை தவறாக கூறிவிட்டார். இனியும் நான் உயிர் வாழ விரும்பவில்லை. நான் தீக்குளிக்க தீ வார்த்திக் கொடு எனக் கேட்டாள். அன்று உன்னை நான் வாயினால் சுட்டேன். இன்று தீயினால் சுடப் போகிறேன் என்றாள். இலட்சுமணன் கண்களில் கண்ணீர் நிரம்ப இராமரை பார்த்தார். இராமர் கண்களால் கட்டளையிட்டார். அதன் பின் இலட்சுமணன் பெருந்தீயை வளர்த்தினார். சீதை, அக்னி குண்டத்தையும், இராமரையும் வலம் வந்தாள். பின் இராமரை பார்த்து, எம்பெருமானே! எனக்கு வேண்டுவது தங்களின் திருவருள் மட்டுமே. தாங்கள் என் கற்பின் நிலையறியாமல் பேசிவிட்டீர்கள். இனி நான் உயிர் வாழ விரும்பவில்லை எனக் கூறி விட்டு அக்னி குண்டம் அருகில் சென்றாள். இதைப் பார்த்த அத்தனை உயிர்களும் கதறி அழுதனர்.

இதை வானத்தில் இருந்து பார்த்த இந்திராணி! இத்தகைய கொடுமையை பார்க்க நான் என்ன பாவம் செய்தேன் என்று தெரியவில்லையே! எனக் கதறி அழுதாள். சீதை அக்னி குண்டம் அருகில் சென்று, அக்னி தேவா! உலகில் சிவபெருமானும், பிரம்மாவும், திருமாலும் பெண்களின் நிலைமையை அறியமாட்டார்கள். நீ தான் எனக்கு சாட்சி. உலகில் உள்ள அனைவரும் திருமணத்தின் போது அக்னியை சாட்சியாக வலம் வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் உடலாலும், மனதாலும் ஏதேனும் குற்றம் செய்திருந்தாள் என்னை உன் தீயினால் சுட்டெரிப்பாயாக எனக் கூறி இராமர வணங்கி, கைகூப்பிய கரங்களுடன் தீயில் பாய்ந்தாள்.

தொடரும்...!

RAMAYANAM PART 162

 இராமாயணம் தொடர்....162

சீதையை அழைத்து வரச் செல்லும் விபீஷணன்!

விபீஷணன் இராமரிடம் இருந்து விடைப்பெற்று அசோகவனம் நோக்கிச் சென்றான். விபீஷணன் அசோக வனத்தில் இருக்கும் சீதையை வணங்கி, சீதையின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். அப்பொழுது அருகில் இருந்த திரிசடை சீதையிடம், அம்மா சீதை! இவர் தான் என் தந்தை என அறிமுகம் செய்து வைத்தாள். விபீஷணன் சீதையிடம்! தாயே! எம்பெருமான் இராம சந்திர மூர்த்தி தங்களை காண விரும்புகின்றார். தேவர்களும் தங்களை தொழுவதற்காக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் ஸ்ரீராமர் தங்களுக்கு ஆடை ஆபரணங்கள் கொடுத்து அலங்கரித்து அழைத்து வரச் சொல்லி கட்டளையிட்டுள்ளார் எனக் கூறினான். இதைக்கேட்ட சீதை விபீஷணனிடம், அன்பனே! நான் ஆடை ஆபரணங்கள் இன்றி தவ கோலத்திலேயே வர விரும்புகிறேன்.

நான் இத்தனை நாட்கள் உண்ணாமலும், உறங்காமலும், தவ செய்த கோலத்தை அவர்கள் காண வேண்டாமா? அதனால் நான் தவக் கோலத்திலேயே வருகிறேன் எனக் கூறினாள். விபீஷணன், அன்னையே! இது எம்பெருமான் ஸ்ரீராமனின் கட்டளை. இதை எவ்வாறு மீறுவது? எனக் கேட்டான். பிறகு சீதை, இது எம்பெருமானின் கட்டளை என்பதால் சரி என சம்மதித்தாள். அதன் பின் விபீஷணன் சீதையை அலங்கரித்து வரச் சொல்லி தேவ மாதர்களுக்கு கட்டளையிட்டு அங்கிருந்துச் சென்றான். பிறகு இரம்பை, ஊர்வசி, மேனகை முதலிய தேவ மாதர்கள் சீதையை நறுமண நீரால் குளிர்வித்து, நறுமண தைலங்கள் பூசி, ஆடை ஆபரணங்களால் அழகாய் அலங்கரித்தனர். அதன் பின் சீதையை பல்லக்கில் ஏற்றி இராமர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

சீதையை பார்க்க தேவர்களும் முனிவர்களும் அங்கு வந்த கூடினர். வானர வீரர்கள் சீதையைப் பார்த்து பணிந்து நின்றனர். சீதை இராமரை பார்த்து தரிசித்தாள். சீதை பல்லக்கில் இருந்து இறங்கி இராமரை வணங்கி, கண்களில் கண்ணீர் தழும்ப அவரின் திருவடியில் விழுந்து வணங்கினாள். இராமரும் சீதையை கருணைக்கொண்டு அன்பாக நோக்கினார். ஆனால் சீதையை நோக்கிய மறு நிமிடத்தில் இராமரின் முகத்தில் கருணையும் தென்படவில்லை, அன்பும் தென்படவில்லை. இராமரைப் பொருத்தவரை அவருக்கு சீதை மேல் பரிபூரணமான நம்பிக்கை உண்டு என்றாலும், மாற்றானின் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்றதொரு சந்தேகம் அவருக்கு வரவே, அவர் சீதையை மறுபடியும் மனைவியாக ஏற்றுக்கொள்வதில் ஒரு மனத்தடை ஏற்பட்டது. அதனால் இராமரின் கண்களில் கோபம் சீற்றமாய் நிறைந்திருந்தது.

இராமர் சீதையைப் பார்த்து, ஜானகி! நீ நலமாக இருக்கின்றாயா? நான் உன்னை அரக்கர்களின் சிறையில் இருந்து மீட்கவே இவ்வளவு பெரிய யுத்தத்தை செய்தேன். உன்னை மீட்பதற்காக நான் கடலில் அணை கட்டினேன். ரகு குலத்தில் பிறந்த நான், என் மனைவியை அரக்கர்கள் கவர்ந்து சென்றார்கள் என்னும் பழியை தீர்க்கும் பொருட்டே இத்தகைய மிகப்பெரிய யுத்தத்தை வெற்றிகரமாக முடித்தேன். ஜானகி! நீ இராவணனின் சிறையில் நெடுநாள் இருந்திருக்கிறாய். உனக்கு அங்கு நல்ல உணவுகள் கிடைத்திருக்குமே? அரக்கிகளுடன் சேர்த்து மாமிசம் உண்டாயா? மது அருந்தினாயா? நீதி தவறிய அரக்கனின் நகரில் அவனுக்கு அடங்கி நீ உயிர் வாழ்ந்து இருக்கிறாய்.

தொடரும் ...

RAMAYANAM PART 161

 இராமாயணம் தொடர்...161

அனுமன் கேட்கும் வரம்...!

👉 சீதை அனுமனிடம், மாருதியே! நீ எனக்கு செய்த உதவிக்கு, நான் உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. அன்று என் உயிரை மாய்த்து கொள்ளும் தருவாயில் இருந்த எனக்கு, நீ கொண்டு வந்த கணையாழி என் உயிரை காப்பாற்றியது. இன்று நீ சொன்ன சுபச் செய்தி என் மனதை குளிர வைத்தது. இந்த மூன்று உலகத்தையும் உனக்கு காணிக்கையாக கொடுத்தாலும் நீ செய்த உதவிக்கு ஈடாகாது. ஏனென்றால் உலகங்கள் அழியக்கூடியது. உன்னை என் தலையில் வைத்து தொழுவதே சிறந்தது. மாருதியே! உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள். அவ்வரத்தை நான் உனக்கு தருவேன் என சீதை கூறினாள். அனுமன் சீதையிடம், அன்னையே! நான் திருமணம் ஆகாத பிரம்மச்சாரி. எனக்கு வேண்டுவது உலகத்தில் இல்லை. தாங்கள் எனக்கு வரம் தருகிறேன் என்று கூறியுள்ளீர்கள்.

👉 அன்னையே! தங்களை பத்து மாதங்கள் கத்தியும், கோடாரியும் காட்டி தங்களைப் பயமுறுத்திய இந்த அரக்கிகளை நான் கொல்வேன். தாங்கள் இந்த வரத்தை எனக்கு அருள வேண்டும் எனக் கேட்டான். இதைக்கேட்ட அரக்கியர்கள் அனைவரும் பயத்தில் சீதையை சரணடைந்தனர். சீதை, அரக்கியர்களுக்கு அபயம் அளித்தார். பிறகு சீதை, அனுமனிடம், மாருதியே! இந்த அரக்கியர்கள் எனக்கு தீங்கு செய்யவில்லை. நான் செய்த தவறினால் இந்த துன்பம் ஏற்பட்டது. எனக்கு இத்தனை நாட்கள் ஏற்பட்ட துன்பத்திற்கு இந்த பெண்கள் காரணம் அல்ல. இராவணனின் ஏவலினால் தான் இவர்கள் எனக்கு துன்பத்தை தந்தார்கள். நான் எம்பெருமானுக்கு துணையாக இக்கானகத்திற்கு வந்தேன். கானகம் வந்த நான், ஒரு மானின் மேல் ஆசைப்பட்டது என் தவறு.

👉 நான் அந்த மானை வேண்டும் என்று கேட்காமல் இருந்திருந்தால் இத்தனை துன்பங்கள் நேர்ந்திருக்காது. பதினான்கு ஆண்டுகள் உண்ணாமலும், உறங்காமலும் எம்பெருமானை காவல் புரிந்த இலட்சுமணனின் மனதை புண்படும்படி பேசினேன். நான் அவ்வாறு பேசாமல் இருந்திருந்தால் இத்துன்பம் நேராமல் இருந்திருக்கும். எங்களை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் அனுப்ப காரணமாய் இருந்த கூனியை விடவா இவர்கள் கொடியவர்கள். நயவஞ்சகம் செய்து வனவாசம் அனுப்பிய கூனியை, நான் நினைத்தால் அக்கூனி அன்றே மடிந்திருப்பாள். கூனி செய்த குற்றத்தை பொறுத்த என்னால் இவர்கள் செய்த துன்பங்களை பொறுக்க வேண்டும் அல்லவா? அதனால் நீ இவர்களின் மேல் கருணை காட்டி விட்டுவிடுவாயாக எனக் கூறினார்.

👉 இதைக்கேட்ட பின் அனுமன், அன்னையே நான் தங்களின் வார்த்தைகளுக்கு உட்பட்டு இந்த அரக்க பெண்கள் மேல் கருணை காட்டுகிறேன் எனக் கூறிவிட்டு சீதையிடம் ஆசிப்பெற்று அங்கிருந்து விடைப்பெற்று சென்றான். பிறகு அனுமன் இராமரிடம் வந்து, பெருமானே! தாங்கள் இராவணனை வதம் செய்த செய்தியை நான் அன்னை சீதையிடம் கூறினேன். அவர் அதைக்கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார் எனக் கூறினான். அதன் பின் இராமர் விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! பணிப்பெண்களிடம் சீதைக்கு தேவையான ஆடை ஆபரணங்களை கொடுத்து சீதையை அலங்கரித்து அழைத்து வரச் சொல் எனக் கட்டளையிட்டார். விபீஷணன் இராமரிடம் இருந்து விடைப்பெற்று அசோகவனம் நோக்கிச் சென்றான்.

தொடரும்...!

RAMAYANAM PART 160

 இராமாயணம் தொடர்...160

விபீஷணனின் பட்டாபிஷேகம்...!

❃ விபீஷணன், இராவணனின் ஈமச்சடங்குகளை செய்து முடித்த பின் இராமரிடம் சென்றான். இராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பூண்டு வந்து இருப்பதால் அவர் இலங்கை நகருக்குள் செல்வது என்பது ஏற்றதல்ல. இராமர் இலட்சுமணனிடம், தம்பி இலட்சுமணா! நீ விபீஷணன், சுக்ரீவன், அனுமன் முதலிய வானர வீரர்களை அழைத்து இலங்கை நகருக்குச் சென்று, விபீஷணனுக்கு வேதமுறைகள்படி இலங்கையின் அரசனாக முடிசூட்டி பட்டாபிஷேகம் செய்துவிட்டு வருவாயாக என கட்டளையிட்டார். பிறகு இலட்சுமணன், விபீஷணன், சுக்ரீவன், அனுமன் முதலிய வானர வீரர்கள் புடைசூழ இலங்கை நகருக்குச் சென்று இலங்கை நகரை அலங்கரித்தனர். தேவர்கள், முனிவர்கள் விபீஷணனின் முடிசூட்டு விழாவில் கலந்துக் கொண்டனர்.

❃ புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வரச் செய்து, வேள்வியில் தீ மூட்ட, முனிவர்கள் மந்திரங்கள் சொல்ல, விபீஷணனை அரியணையில் அமர வைத்து, வேத கோஷங்கள் முழங்க, மங்கள ஸ்னானம் செய்வித்து, புத்தாடைகள் அணிந்து, அபிஷேகம் செய்து அனைவரின் முன்னிலையிலும் இலட்சுமணர் விபீஷணனுக்கு இலங்கையின் அரசனாக முடிசூட்டினார். இலங்கையின் அரசனாக முடிசூட்டிக் கொண்ட விபீஷணன், இலட்சுமணனை வணங்கினான். தேவர்களும், முனிவர்களும் விபீஷணனை வாழ்த்தினர். விபீஷணனின் மனைவி சரமை, விபீஷணனின் மகள் திரிசடை பட்டாபிஷேகத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். அரம்பியர்கள் நடனம் ஆட, அரண்மனையில் இசைக்கச்சேரி நடைப்பெற்றது. விபீஷணன் வறியவர்களுக்கு பொன்னும், பொருளும் வழங்கினான். இலங்கை நகரமே விழாக்கோலம் பூண்டது.

❃ பிறகு விபீஷணன் இராமரிடம் ஆசிப் பெற போர்க்களத்திற்கு வந்தடைந்தான். விபீஷணன் இராமரின் திருவடியில் விழுந்து ஆசி பெற்றான். இராமர் விபீஷணனை அன்போடு தழுவிக் கொண்டார். பிறகு இராமர், விபீஷணா! அரசப் பதவியை ஏற்றுக் கொண்ட நீ என்றும் ஏழை மக்களுக்கு உறுதுணையாக தொண்டு செய்ய வேண்டும். உனது ஆட்சியில் அறத்தை நிலை நாட்ட வேண்டும். நான் தான் அரசன் என்று சிறிதும்கூட மனதளவில் ஆணவம் கொள்ளக் கூடாது. மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உனது நாட்டை கண்ணும் கருத்துமாக அறநெறியுடன், நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிய வேண்டும் என வாழ்த்தினார். பிறகு இராமர் அனுமனிடம், அன்பனே! நீ சீதையிடம் சென்று இராவணனின் வதத்தை கூறுவாயாக எனக் கூறினார்.

❃ அனுமன் இராமரிடம் இருந்து விடைபெற்று, மிகவும் மகிழ்ச்சியுடன் அசோகவனத்திற்கு சென்று சீதையின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். பிறகு அனுமன், அன்னையே! நான் தங்களுக்கு ஒரு சுபச் செய்தியை கொண்டு வந்துள்ளேன். ஸ்ரீ இராம மூர்த்தி அவர்களின் இராம பாணத்தால் இராவணன் மாண்டான், அது மட்டுமில்லாமல் இப்பொழுது விபீஷணனுக்கு முடிசூட்டு விழா நடைப்பெற்று முடிந்தது எனக் கூறினான். இச்செய்தியைக் கேட்டு சீதை அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். மகிழ்ச்சியில் சீதை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள். அனுமன் சீதையைப் பார்த்து, அன்னையே! தாங்கள் இந்த சுபச்செய்தியை கேட்டு ஒன்றும் பேசாமல் இருப்பது ஏன்? எனக் கேட்டான். சீதை, மாருதியே! அளவுக்கடந்த மகிழ்ச்சியினால் என்ன சொல்வதென்று தெரியவில்லை என்றாள். 

தொடரும்...!

RAMAYANAM PART 159

 இராமாயணம் தொடர்....159

மண்டோதரியின் துயரம்...!

✥ ஜாம்பவான் விபீஷணனின் இந்த நிலைமையைக் கண்டு அவனின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறினான். மதிநலம் படைத்தவரே! தாங்கள் இவ்வாறு புலம்பி அழுவது அறிவுடைமையாகாது. இவ்வுலகில் விதியை வென்றவர் யார்? விதி இராவணனை வேரோடு அழித்துவிட்டது. நீ அழுவதால் ஒன்றும் நடைபெற போவதில்லை. ஆதலால் நீ உன் தமையனுக்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளை செய்வாயாக எனக் கூறினான். இராவணன் இறந்தச் செய்தி மண்டோதரிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு மண்டோதரி கதறிக் கொண்டு ஓடி வந்தாள். வருகின்ற அவசரத்தில் அவள் கூந்தல் அவிழ்ந்து விழுந்தது. கரிய நீண்ட கூந்தல் அவள் பாதத்தை தொடும் அளவிற்கு கீழே விழுந்தது. மண்டோதரியுடன் ஏனைய மனைவிமார்களும், அரக்கியர்களும் உடன் வந்தனர். 

✥ போர்க்களத்தில் இறந்து கிடக்கும் இராவணன் மேல் விழுந்து புலம்பி அழுதாள். என் ஆருயிரே! பஞ்சணையில் காண வேண்டிய உங்களை இன்று உதிரங்கள்(இரத்தம்) நிறைந்திருக்கும் போர்க்களத்தில் காண நேரிட்டதே. உங்களின் வலிமை மிகுந்த தவம் மற்றும் நீங்கள் பெற்ற வரம் ஒரு சாதாரண மனிதனின் அம்பால் வீழ்த்த முடியுமா? உங்களை இராமனின் பாணம் வீழ்த்தி விட்டதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் கணவனை யாராலும் வீழ்த்த முடியாது என்று எண்ணியிருந்தேனே. சீதையின் பேரழகும், சீதையின் கற்பும், அவள் மேல் கொண்ட காதலும், சூர்ப்பனகை இழந்த மூக்கும், தசரதன் போ என்று இராமனிடம் சொன்ன சொல்லும் எல்லாம் சேர்த்து இந்திரனின் தவத்திற்கு துணை போய் உங்களை கொன்று விட்டதே. 

✥ இராமனுடன் பகை கொள்ள வேண்டாம். சீதையை சிறைப் பிடித்து வந்தது தவறு என்றும், சீதையைக் கவர்ந்து வந்தது அறத்துக்குப் புறம்பானது எனவும் சீதையை இராமனிடம் சேர்த்துவிடுங்கள் என்று எத்தனை முறை சொல்லியிருப்பேன்! நான் சொன்ன சொல்லை நீங்கள் கேட்கவில்லை. நல்லது செய்தவனுக்கு நல்லதே நடக்கும். தீமை செய்பவனுக்கு தீமையே நடக்கும். உன்னுடன் பிறந்த சகோதரன் நன்மை செய்தான். அதனால் இன்று அவன் நலமுடன் இருக்கிறான். தாங்களோ தீமை செய்தீர்கள். அதனால் தான் இன்று இறந்து கிடக்கிறீர்கள். சீதையின் அழகில் வீழ்ந்த நீங்கள், உயிர் பெற்று வருவது என்பது இயலாத ஒன்று. பதிவிரதையின் கண்ணீரானது, பூமியில் விழுந்தால், ஏதேனும் ஒன்று நடந்தே தீரும். அதுதான் தங்களை இன்று பழிவாங்கியது! பெண்ணாசை என்பது அழிவில் தான் முடியும். 

✥ தங்களை இழந்த பின் இனி நான் உயிருடன் இருந்து என்ன செய்யப்போகிறேன் என கூறிக்கொண்டு இராவணனின் மார்பில் விழுந்தாள். அப்பொழுது மண்டோதரி பெருமூச்சுவிட்டாள். அத்துடன் மண்டோதரியின் உயிரும் பிரிந்தது. இதனைப் பார்த்து அனைவரும் மண்டோதரி கற்புக்கரசி எனப் போற்றி வாழ்த்தினர். பிறகு விபீஷணன், இராவணனையும், மண்டோதரியையும் ஒன்றாக வைத்து பன்னீரால் குளிர்வித்து, மலர் மாலை சூட்டி, சந்தனம் முதலிய வாசனை கட்டைகளை அடுக்கி அவர்களுக்கு தீமூட்டி இறுதி சடங்குகளை செய்தான். விபீஷணன், இராவணனின் ஈமச்சடங்குகளை செய்து முடித்த பின் இராமரிடம் சென்றான்.

தொடரும்...!

RAMAYANAM PART 158

 இராமாயணம் தொடர்....158

இராவணனின் மரணம்...! விபீஷணனின் துயரம்...!

🌹 இராமர், கடைசியில் மந்திரங்கள் கூறி பிரம்மாஸ்திரத்தை எடுத்தார். அக்கணையை இராவணன் நோக்கி ஏவினார். இந்த தெய்வீக கணை இராவணனின் மார்பை துளைத்து, அவனின் உயிரை பறித்து, புனித கங்கையில் நீராடி, இராமரின் அம்புறாத் துணியை வந்தடைந்தது. இராவணன் அந்த இடத்திலே மாண்டு கீழே விழுந்தான். இராவணன் பெற்ற வரம், அவன் செய்த தவம், பிரம்மனிடம் இருந்து பெற்ற சாகாவரம், சிவபிரானிடம் இருந்து பெற்ற மூன்றரைக் கோடி ஆயுள் முதலியவை அக்கணையால் அழிந்தது. இராவணனின் கோபம், அவன் மனதில் இருந்த வஞ்சனை செய்யும் எண்ணங்களும், அவனின் வலிமையும் ஒழிந்து அவனின் முகம் பொலிவுடன் காணப்பட்டது. பிறகு இராமர் தேரை விட்டு கீழிறங்கி, மாதலியை வாழ்த்தி அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

🌹 வானரங்கள், விபீஷணன் முதலியவர்கள் அங்கு வந்து இராவணனின் உடலைக் கண்டனர். விபீஷணன், இராவணன் மாண்டு கிடப்பதை கண்டு வருந்தினான். பிறகு இராமர், இராவணனை கருணைக் கண்களால் உற்று நோக்கினார். இராவணனின் முதுகில் இருக்கும் புண்களை பார்த்தார். இந்த புண்கள் போரில் ஏற்பட்ட காயங்களாக இருக்குமோ என நினைத்து ஐயமுற்றார். உடனே இராமர் விபீஷணனை அழைத்து, தம்பி விபீஷணா! உன் தமையனின் முதுகில் புண்கள் இருக்கின்றனவே? இப்புண்களுடன் நான் இராவணனைக் கொன்றது வெற்றியாகாது. இதனால் என் வீரமும் குன்றியது என வருந்திக் கூறினார். விபீஷணன், அண்ணலே! என் தமையன் இராவணன் உடலில் இருப்பது புண்கள் அல்ல, வடுக்கள் தான். ஒருமுறை என் அண்ணன் இராவணன் திக்விஜயம் செய்தபோது யானைகளோடு போர் புரிந்தான்.

🌹 அப்போது யானைகளின் தந்தங்கள், தமையனின் முதுகில் ஆழமாய் குத்தியது. அதை தான் தாங்கள் வடுக்களாக பார்த்து உள்ளீர்கள். இது போரினால் ஏற்பட்ட புண்கள் அல்ல என்றான். இதைக்கேட்ட பின் இராமர் சாந்தமடைந்தார். விபீஷணன், இராவணனை பார்த்து மிகவும் துயரம் அடைந்தான். விபீஷணனின் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. இராவணன் மேல் விழுந்து கதறி அழுதான். அண்ணா! என்னை விட்டு பிரிந்தாயே! எமன் உன்னை பரமலோகத்திற்கு அழைத்து சென்று விட்டானே! நான் சொன்ன அறிவுரைகளை அன்றே கேட்டிருந்தால் இன்று உனக்கு இக்கதி நேர்ந்திருக்காதே! உன்னால் கவர்ந்து வரப்பட்ட சீதை இராமரிடம் ஒப்படைத்துவிடு. சிறை வைக்காதே எனக் கூறினேனே. என் சொல்லை நீ கேட்கவில்லை.

🌹 சீதையின் தவம், கற்பு நெறி, அவளின் நஞ்சுப் பார்வை இன்று உன்னை கொன்றுவிட்டது. பிறரின் மனைவியை விரும்புவது பெரும் பாவமாகும். உன் பெண்ணாசையால் உன் உயிரையே தொலைத்து விட்டாயே. காமம் என்ற ஆசை உன்னை மட்டுமின்றி அசுர குலத்தையே அழித்து விட்டதே. சூர்ப்பனகை, சீதையின் அழகை பற்றி உன்னிடம் கூறி உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டாளே. இனி உன்னை நான் எப்பிறவியில் காணப் போகிறேன். அண்ணா! உனக்கு துணையாக எவரும் இன்றி பரிதாபமாக இறந்து கிடக்கும் உன் நிலையைக் கண்டால் என் நெஞ்சம் நெருப்பு போல் சுடுகிறதே எனக் கூறி புலம்பி அழுதான். ஜாம்பவான் விபீஷணனின் இந்த நிலைமையைக் கண்டு அவனின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறினான். 

தொடரும்...!

Tuesday, January 2, 2024

RAMAYANAM PART 156

 இராமாயணம் தொடர்....156

இராமர் - இராவணன் போர்...!

இராமரும், இராவணனும் போர் புரிய எதிரெதிரே நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது இராவணனின் மந்திர ஆலோசனையின் அமைச்சரான மகோதரன் இராமரை நோக்கி அம்புகளை ஏவினான். இராமர், அந்த அம்புகளை தன் அம்புகளால் தகர்த்தெறிந்தார். பிறகு மகோதரனின் படைகள் இராமரை தாக்க ஓடி வந்தன. இராமர் அந்த அரக்க படைகளை அம்பு மழை பொழிந்து அழித்தார். இப்பொழுது மகோதரன் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தான். இராமர், மகோதரனை நோக்கி ஒரு கணையை ஏவினார். அந்த கணை மகோதரனின் தலையை துண்டித்துச் சென்றது. மகோதரன் அந்த இடத்திலேயே மாண்டொழிந்தான். மகோதரனின் மரணத்தை கண்டு இராவணன் கடுங்கோபம் கொண்டான். அவன் கண்கள் கோபத்தால் சிவந்தது. இராவணனுடைய படைகள் இராமரை சூழ்ந்து ஓடி வந்தன. இராமர் அம்புகளால் அரக்கர்களை அழித்து கொண்டு இருந்தார்.

அப்பொழுது இராவணனுக்கு சில தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. இராவணின் இடது கண்ணும், இடது தோளும் துடித்தன. இராவணன் கழுத்தில் இருந்த மாலை அழுகி நாற்றம் வீசியது. இருப்பினும் இராவணன் இந்த மனிதனா? என்னை வெல்லப் போகிறான். நான் வெள்ளி மலையை அள்ளி எடுத்தவன். இந்திரனை வென்றவன் என்று கூறினான். இராவணன், இந்த இராமனை நான் புழுவை நசுக்குவது போல் நசுக்கி கொல்வேன் என கர்ஜனை செய்தான். உடனே இராவணன், இராமரை நோக்கி ஆயிரமாயிரம் அம்புகளை ஏவினான். அந்த அம்புகள் இராமர் இருந்த இடத்தையே மறைத்துவிட்டது. இதைப்பார்த்து வானரங்கள் அஞ்சி நடுங்கினர். விண்ணுலகத்தவரும் இதைக் கண்டு அஞ்சி நடுங்கினர். இராவணன் தன் தேரை விண்ணிலும், மண்ணிலும் சுழன்று சுழன்று சுத்தினான்.

அதேப் போல் மாதலியும், இராவணன் செல்லும் இடமெல்லாம் அவன் முன் தேரை நிறுத்தி நிலை தடுமாற வைத்தான். இராவணன் அர்த்த சந்திர பாணத்தை ஏவி, இராமரின் தேரில் இருந்த கொடியை அறுத்தெறிந்தான். உடனே இராவணன், இராமரின் தேரில் இருந்த கொடி அறுத்தெறிந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். இதைப்பார்த்த கருட பகவான், இராமரின் தேரில் கொடியாக வந்து நின்றார். பிறகு இராமர் ஒரு சிறந்த கணையை ஏவி இராவணனின் தேரில் இருந்த வீணைக்கொடியை அறுத்தெறிந்தார். இதைப் பார்த்து கோபங்கொண்ட இராவணன், இராமர் மீது தாமதப் படையை ஏவினான். தாமதப்படை புயல், மழை, நெருப்பு என மாறி மாறி சுழன்றுக் கொண்டு இராமரை நோக்கி வந்தது. இராமர், தெய்வப் படைக்கலன்களில் சிறந்த அஸ்திரமான சிவாஸ்திரத்தை தாமதப் படை மீது ஏவினார்.

தாமதப் படை சிதறி வௌ;வேறு திசையில் போய் விழுந்தது. பிறகு இராவணன், இராமரை நோக்கி அசுராஸ்திரத்தை ஏவினான். அந்த அஸ்திரம் கோடிக்கணக்கான அஸ்திரங்களாக பிரிந்து நெருப்பு பொறியாக இராமரை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. இராமர் அசுராஸ்திரத்தை, அக்னி கணையால் நொடிப்பொழுதில் பொடியாக்கினார். இராவணன் மறுபடியும், மண்டோதரியின் தந்தையுமான, இராவணனின் மாமன் மயன் கொடுத்த ஒரு சிறந்த அஸ்திரத்தை இராமர் மீது ஏவினான். இராமர், அந்த அஸ்திரத்தை காந்தர்வக் கணையைக் கொண்டு பொடிப் பொடியாக்கினார்.

தொடரும்...!

RAMAYANAM PART 157

 இராமாயணம் தொடர்....157

இராவணனின் சூலாயுதம்...!

★ இராவணன், இந்த இராமனை சாதாரண அஸ்திரத்தை கொண்டு வீழ்த்த முடியாது. நான் மிகச் சிறந்த அஸ்திரத்தை ஏவி இராமனைக் கொல்லுவேன் என்றான். பிறகு இராவணன், மாயாஸ்திரத்தை எடுத்து அதனை மலர்களால் அர்ச்சனை செய்து, பிறகு சிவபெருமானை வழிபட்டு இராமர் மீது ஏவினான். அந்த அஸ்திரம் மறைந்த அரக்கர்களை அதாவது இந்திரஜித், கும்பகர்ணன், அட்சய குமாரன், அதிகாயன், மூலப்படை முதலிய அரக்கர்கள் எழுந்து ஆரவாரம் செய்வது போல் இருந்தது. இந்த அஸ்திரத்தை பார்த்து தேவர்கள், வானரங்கள் அஞ்சி நடுங்கினர். இராமர், இந்த அஸ்திரத்தை பெரியதாக பொருட்படுத்தாமல் ஞானாயஸ்திரத்தை ஏவினார். இதனால் மாயாஸ்திரம் இருந்த இடம் தெரியாமல் பொடியானது. மறுபடியும் இராவணன் மிகவும் பலம் பொருந்திய சூலாயுதத்தை இராமர் மீது ஏவினான். அந்த சூலாயுதம் இராமரை கொல்ல வந்துக் கொண்டிருந்தது. இராமர், அந்த அஸ்திரத்தை பொடியாக்க பல கணைகளை ஏவினார்.

★ ஆனால் அவை எல்லாமே சூலாயுதத்துக்கு முன்னால் பயனற்று போனது. சூலாயுதம் இராமரின் மார்பை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து வானரங்கள் திகைத்து நின்றனர். தேவர்கள் இனி இராமர் உயிர் பிழைப்பது கடினம் என கண்கலங்கி நின்றனர். பரம்பொருளான இராமர் 'ம்" என்ற ஓங்கார ஒலியை எழுப்பினார். இந்த ஓங்காரத்தால் சூலாயுதம் பொடி பொடியாகி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதைப்பார்த்த இராவணனும் ஆச்சர்யம் அடைந்தான். சக்தி வாய்ந்த சூலாயுதம் ஒரு சாதாரண மனிதனால் அழிந்துவிட்டதை நினைத்து அதிர்ச்சி அடைந்தான்.

★ இவன் என்ன சிவபெருமானா? அப்படி இருந்தால் இவனுக்கு மூன்று கண்களும், நீலமேகம் போன்ற நிறமுடைய மேனியும் இருக்க வேண்டும். அதனால் இவன் சிவன் இல்லை.

★ சிவன் இல்லையென்றால் பிரம்மதேவனா? பிரம்ம தேவனாக இருந்தால் நான்கு முகங்களும், எட்டு கண்களும் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் இவன் பிரம்மதேவன் இல்லை.

★ பிரம்மதேவன் இல்லையென்றால் இவன் திருமாலா? திருமாலாக இருந்தால் இவன் கையில் சங்கு சக்கரம் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் இவன் திருமாலும் இல்லை.

★ நான் பலகாலம் தவமிருந்து முயன்று பெற்ற வரங்களையெல்லாம் அழித்து விட்டான். இவன் தெய்வப்பிறவியாக இல்லாதபோது தவம் செய்யும் முனிவனாக இருப்பானா? அப்படி இவன் தவமுனிவனாக இருந்தால் இந்த இளம் வயதில் இவ்வளவு வலிமைகள் பெற இயலாதே. இந்த உலகத்தையே அழிக்கக்கூடிய இந்த சூலாயுதத்தை ஓங்காரம் ஓசையை கொண்டு அழித்து விட்டான். அப்படியென்றால் விபீஷணன் கூறியது உண்மை தானோ? இவன் பரம்பொருளே தான். விபீஷணன் கூறியவற்றை நான் இப்பொழுது உணர்கிறேன். இவன் யாராக இருந்தால் எனக்கென்ன? அந்த பரம்பொருளாக இருந்தால் தான் எனக்கென்ன? இவனை வெல்லாமல் நான் பின் வாங்க மாட்டேன் என எண்ணினான். பிறகு இராவணன் அரக்கர்கள் நிரம்பிய நிருதிப் படையை ஏவினான். இராமர், நிருதிப் படையை கருடப் படையை கொண்டு அழித்தார். பிறகு இராமர் ஒரு சிறந்த கணையை இராவணன் மீது ஏவினார். அந்தக் கணை இராவணன் கழுத்தை அறுத்துச் சென்றது.

தொடரும்...!

Monday, January 1, 2024

RAMAYANAM PART 155

 இராமாயணம் தொடர்....155

சிவபெருமானின் கட்டளை...!

இராவணன், இரத்தின கவசம் கட்டி, அம்புறாத் துணியை தோளில் கட்டி, வில்லை கையில் ஏந்திக் கொண்டு சூரியனைப் போல் ஒளி வீசும் தேரில், காற்றை விட வேகமாகச் செல்லும் குதிரைகளை பூட்டி, அதில் போருக்கு தேவையான வாள், சூலம் முதலிய ஆயுதங்களை வைத்து, அத்தேருக்கு மலர்களால் பூஜித்து வழிபாடு செய்தான். இராவணனுடைய பத்து தலைகளும் ரத்தினங்களால் அழகுப்பட்டிருந்தன. இராவணன், கணவனை நினைத்து இன்று சீதை அழ வேண்டும். அப்படி இல்லையென்றால் மண்டோதரி அழ வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இன்று நடந்தே ஆகும் எனக் கூறிவிட்டு சிங்கத்தை போல் தேரில் ஏறி போர்களத்திற்குச் சென்றான். இராவணனுடைய கோபத்தைக் கண்டு தேவர்கள் இன்று என்ன நிகழப் போகிறதோ என கதிகலங்கி இருந்தனர்.

இராவணன் போருக்கு வருவதைக் கண்ட விபீஷணன் இராமரிடம் சென்று இராவணன் போருக்கு வந்துக் கொண்டிருக்கிறான் எனக் கூறினான். இதைக்கேட்டு வானரங்கள் பயத்தால் நடுநடுங்கிப் போயினர். இராமர் வானரங்களிடம் கருணையுடன், வீரர்களே! தாங்கள் பயப்பட வேண்டாம். இன்று இராவணனின் வதம் நிகழும். நீங்கள் அனைவரும் துன்பத்தில் இருந்து மீள்வீர்கள் எனக் கூறிவிட்டு போர்க்களம் பூண்டார். விண்ணுலகத்தில் சிவபெருமான் தேவர்களை அழைத்து, இன்று இந்தப் போர் முடிந்துவிடும். இராவணன் இன்று மாள்வான். அதனால் இராமருக்கு, இந்திரனின் தேரை காட்டிலும் நிகரில்லாத வெற்றி பொருந்திய தேரை இராமருக்கு அனுப்புங்கள் என பணித்தார். இந்திரன் உடனே ஒரு தேரை தயார் செய்தார்.

அத்தேரை தேவர்கள் அனைவரும் வணங்கி, இப்போரில் வெற்றியை காண்பாயாக எனக் கூறி வாழ்த்தினர். அத்தேரை இந்திரனின் தேர்பாகனான மாதலியிடம் கொடுத்து இராமருக்கு அனுப்பினர். அத்தேர் இராமரின் முன்வந்து நின்றது. இராமர் அத்தேரை கண்டு திகைத்து நின்றார். இராமர், அத்தேரை பார்த்து இது அரக்கர்களின் மாய வேலையாக இருக்குமோ? என நினைத்தார். இராமர், மாதலியை பார்த்து, நீ யார்? உன் பெயர் என்ன? எனக் கேட்டார். மாதலி, இராமரை வணங்கி, என் பெயர் மாதலி. நான் இந்திரனின் தேர்ப்பாகன். சிவபெருமானும், பிரம்ம தேவனும் கட்டளையிட, இந்திரனால் அனுப்பப்பட்ட தேர் இது. அத்தேரின் தேர்பாகன் நான் என்றான். பிறகு அத்தேரில் பூட்டியிருந்த குதிரைகள், மாதலி கூறிய அனைத்தும் உண்மையே என வேத மொழிகளால் உறுதி செய்தன.

பிறகு விபீஷணன் அங்கு வந்து, அத்தேரை உற்று நோக்கினான். இராமர், இலட்சுமணன், அனுமன், விபீஷணனை பார்த்து இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா? எனக் கேட்டார். அவர்கள் பெருமானே! இதில் சந்தேகப்பட ஒன்றும் இல்லை. இது இந்திரன் அனுப்பிய தேர் தான் என்றனர். பிறகு இராமர் அத்தேரில் ஏறி அமர்ந்தார். தேவர்கள் வாழ்த்து மழை பொழிய, இராமர் போருக்கு புறப்பட்டுச் சென்றார். அத்தேர் இராவணன் முன் வந்து நின்றது. இராவணனும் தேரை விரைந்து செலுத்தி இராமர் முன் வந்து நின்றான். இராமரின் தேர், தேவர்கள் அனைவரும் சேர்ந்து கொடுத்தது என்பதை அறிந்து மிகவும் கோபங்கொண்டான். கோபத்தால் அவன் கண்கள் சிவந்தன. இராமரும், இராவணனும் போர் புரிய எதிரெதிரே நின்று கொண்டிருந்தனர். 

தொடரும்...!

RAMAYANAM PART 154

 இராமாயணம் தொடர்...154

இராவணனின் மகிழ்ச்சி...!

🔸 அனைவரும், இராமரிடம் பெருமானே! அடைக்கலம் புகுந்தவரை காக்கும் பொருட்டு இலட்சுமணன் உயிர் தியாகம் செய்து உயிர்ப் பெற்றுள்ளார் எனக் கூறினர். இதைக் கேட்டு இராமர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். இலட்சுமணனின் புகழ் ஓங்கி நிற்கும் எனக் கூறி வாழ்த்தினார். பிறகு இராமரும், இலட்சுமணரும் ஓய்வு பெற சென்றுவிட்டனர். வானரங்கள் இந்த மூலப்படையை இராமர் எவ்வாறு அழித்திருப்பார் என்பதை போர்க்களத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அரக்கர்களின் பல சேனைகள் வீழ்ந்துக் கிடப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர். பிறகு இராமரை நினைத்து துதித்து போற்றினர். இராவணன், நான் இலட்சுமணனை கொன்று விட்டேன். அங்கு மூலப்படைகள் இராமனை கொன்று இருப்பார்கள் என நினைத்து அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தான். 

🔸 அதனால் அவன் தனக்காக போர் செய்த படைத்தலைவர்களுக்கு விருந்து வைக்க ஏற்பாடு செய்ய நினைத்தான். உடனே ஏவலாட்களை அழைத்து, விருந்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என கட்டளையிட்டான். இராவணனின் கட்டளைக்கிணங்க ஏவலர்கள் சுவையான பண்டங்களும், இனிப்பு வகைகளும், வகை வகையான குளிர் பானங்களும் நிரப்பி வைத்தனர். அரண்மனையில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது தூதர்கள் அங்கு வந்து, அரசே! தாங்கள் அனுப்பிய மூலப்படைகளை இராமர் அழித்து விட்டார் எனக் கூறினர். இதைக்கேட்டு இராவணன் திடுக்கிட்டான். ஒரு மனிதன் மூலப்படையை தனியாக நின்று அழித்து விட்டானா? இது ஆச்சர்யமாக இருக்கிறதே! அப்படி இருப்பினும் நான் இலட்சுமணனை கொன்றுவிட்டேன். 

🔸 இராமன், இலட்சுமணன் மாண்டச் செய்தியை அறிந்து அவனும் வீழ்வான் என நினைத்து மகிழ்ந்தான். அப்போது மற்றொரு தூதர்கள்  அங்கு வந்து, அரசே! தாங்கள் வீழ்த்திவிட்டு வந்த இலட்சுமணன் உயிர் பெற்றான். அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு உயிர்ப்பித்து விட்டான் எனக் கூறினர். இதைக் கேட்டு இராவணன் அதிர்ச்சி அடைந்தான். மிகவும் கோபம் கொண்டான். உடனே அவன் கோபுரத்தின் மேல் நின்று மூலப்படையை அழிந்ததை பார்த்தான். இனி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான். இராவணன் மந்திர ஆலோசனை மண்டபத்திற்கு சென்றான். அங்கு இராவணனின் பாட்டன் மாலியவான் இராவணனை பார்த்து, இராவணா! இப்பொழுதாவது நான் சொல்வதைக் கேள். 

🔸 சீதையை இராமனிடம் கொண்டுச் சென்று ஒப்படைத்துவிடு. இது தான் உனக்கு நலம். உன்னால் இந்த அரக்க குலம் அழியும் படி செய்து விடாதே. இப்பொழுதாவது விபீஷணன் கூறியதை நினைத்துப் பார். அந்த பரம்பொருளே! மண்ணுலகில் இராமனாக அவதரித்துள்ளான். இனியும் அதர்ம செயலை செய்யாதே என அறிவுரைக் கூறினான். இதைக்கேட்டு இராவணன் மாலியவான் மீது கோபம் கொண்டான். பிறகு மகோதரனிடம், மகோதரா! இன்னும் எஞ்சியிருக்கும் அரக்க சேனை படைகளை தயாராக இருக்கும்படி கட்டளையிட்டான். இராவணனின் கட்டளைப்படி அரக்கப் படைகள் போருக்கு தயாராக இருந்தன. இராவணன் நீராடி சிவபூஜை செய்தான். பிறகு தன்னிடமிருந்த விலையுயர்ந்த பொருட்கள், ஆடை ஆபரணங்கள் எல்லாவற்றையும் தான தர்மம் செய்தான்.

தொடரும்...!