Tuesday, January 2, 2024

RAMAYANAM PART 156

 இராமாயணம் தொடர்....156

இராமர் - இராவணன் போர்...!

இராமரும், இராவணனும் போர் புரிய எதிரெதிரே நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது இராவணனின் மந்திர ஆலோசனையின் அமைச்சரான மகோதரன் இராமரை நோக்கி அம்புகளை ஏவினான். இராமர், அந்த அம்புகளை தன் அம்புகளால் தகர்த்தெறிந்தார். பிறகு மகோதரனின் படைகள் இராமரை தாக்க ஓடி வந்தன. இராமர் அந்த அரக்க படைகளை அம்பு மழை பொழிந்து அழித்தார். இப்பொழுது மகோதரன் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தான். இராமர், மகோதரனை நோக்கி ஒரு கணையை ஏவினார். அந்த கணை மகோதரனின் தலையை துண்டித்துச் சென்றது. மகோதரன் அந்த இடத்திலேயே மாண்டொழிந்தான். மகோதரனின் மரணத்தை கண்டு இராவணன் கடுங்கோபம் கொண்டான். அவன் கண்கள் கோபத்தால் சிவந்தது. இராவணனுடைய படைகள் இராமரை சூழ்ந்து ஓடி வந்தன. இராமர் அம்புகளால் அரக்கர்களை அழித்து கொண்டு இருந்தார்.

அப்பொழுது இராவணனுக்கு சில தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. இராவணின் இடது கண்ணும், இடது தோளும் துடித்தன. இராவணன் கழுத்தில் இருந்த மாலை அழுகி நாற்றம் வீசியது. இருப்பினும் இராவணன் இந்த மனிதனா? என்னை வெல்லப் போகிறான். நான் வெள்ளி மலையை அள்ளி எடுத்தவன். இந்திரனை வென்றவன் என்று கூறினான். இராவணன், இந்த இராமனை நான் புழுவை நசுக்குவது போல் நசுக்கி கொல்வேன் என கர்ஜனை செய்தான். உடனே இராவணன், இராமரை நோக்கி ஆயிரமாயிரம் அம்புகளை ஏவினான். அந்த அம்புகள் இராமர் இருந்த இடத்தையே மறைத்துவிட்டது. இதைப்பார்த்து வானரங்கள் அஞ்சி நடுங்கினர். விண்ணுலகத்தவரும் இதைக் கண்டு அஞ்சி நடுங்கினர். இராவணன் தன் தேரை விண்ணிலும், மண்ணிலும் சுழன்று சுழன்று சுத்தினான்.

அதேப் போல் மாதலியும், இராவணன் செல்லும் இடமெல்லாம் அவன் முன் தேரை நிறுத்தி நிலை தடுமாற வைத்தான். இராவணன் அர்த்த சந்திர பாணத்தை ஏவி, இராமரின் தேரில் இருந்த கொடியை அறுத்தெறிந்தான். உடனே இராவணன், இராமரின் தேரில் இருந்த கொடி அறுத்தெறிந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். இதைப்பார்த்த கருட பகவான், இராமரின் தேரில் கொடியாக வந்து நின்றார். பிறகு இராமர் ஒரு சிறந்த கணையை ஏவி இராவணனின் தேரில் இருந்த வீணைக்கொடியை அறுத்தெறிந்தார். இதைப் பார்த்து கோபங்கொண்ட இராவணன், இராமர் மீது தாமதப் படையை ஏவினான். தாமதப்படை புயல், மழை, நெருப்பு என மாறி மாறி சுழன்றுக் கொண்டு இராமரை நோக்கி வந்தது. இராமர், தெய்வப் படைக்கலன்களில் சிறந்த அஸ்திரமான சிவாஸ்திரத்தை தாமதப் படை மீது ஏவினார்.

தாமதப் படை சிதறி வௌ;வேறு திசையில் போய் விழுந்தது. பிறகு இராவணன், இராமரை நோக்கி அசுராஸ்திரத்தை ஏவினான். அந்த அஸ்திரம் கோடிக்கணக்கான அஸ்திரங்களாக பிரிந்து நெருப்பு பொறியாக இராமரை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. இராமர் அசுராஸ்திரத்தை, அக்னி கணையால் நொடிப்பொழுதில் பொடியாக்கினார். இராவணன் மறுபடியும், மண்டோதரியின் தந்தையுமான, இராவணனின் மாமன் மயன் கொடுத்த ஒரு சிறந்த அஸ்திரத்தை இராமர் மீது ஏவினான். இராமர், அந்த அஸ்திரத்தை காந்தர்வக் கணையைக் கொண்டு பொடிப் பொடியாக்கினார்.

தொடரும்...!

No comments:

Post a Comment