Tuesday, January 2, 2024

RAMAYANAM PART 157

 இராமாயணம் தொடர்....157

இராவணனின் சூலாயுதம்...!

★ இராவணன், இந்த இராமனை சாதாரண அஸ்திரத்தை கொண்டு வீழ்த்த முடியாது. நான் மிகச் சிறந்த அஸ்திரத்தை ஏவி இராமனைக் கொல்லுவேன் என்றான். பிறகு இராவணன், மாயாஸ்திரத்தை எடுத்து அதனை மலர்களால் அர்ச்சனை செய்து, பிறகு சிவபெருமானை வழிபட்டு இராமர் மீது ஏவினான். அந்த அஸ்திரம் மறைந்த அரக்கர்களை அதாவது இந்திரஜித், கும்பகர்ணன், அட்சய குமாரன், அதிகாயன், மூலப்படை முதலிய அரக்கர்கள் எழுந்து ஆரவாரம் செய்வது போல் இருந்தது. இந்த அஸ்திரத்தை பார்த்து தேவர்கள், வானரங்கள் அஞ்சி நடுங்கினர். இராமர், இந்த அஸ்திரத்தை பெரியதாக பொருட்படுத்தாமல் ஞானாயஸ்திரத்தை ஏவினார். இதனால் மாயாஸ்திரம் இருந்த இடம் தெரியாமல் பொடியானது. மறுபடியும் இராவணன் மிகவும் பலம் பொருந்திய சூலாயுதத்தை இராமர் மீது ஏவினான். அந்த சூலாயுதம் இராமரை கொல்ல வந்துக் கொண்டிருந்தது. இராமர், அந்த அஸ்திரத்தை பொடியாக்க பல கணைகளை ஏவினார்.

★ ஆனால் அவை எல்லாமே சூலாயுதத்துக்கு முன்னால் பயனற்று போனது. சூலாயுதம் இராமரின் மார்பை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து வானரங்கள் திகைத்து நின்றனர். தேவர்கள் இனி இராமர் உயிர் பிழைப்பது கடினம் என கண்கலங்கி நின்றனர். பரம்பொருளான இராமர் 'ம்" என்ற ஓங்கார ஒலியை எழுப்பினார். இந்த ஓங்காரத்தால் சூலாயுதம் பொடி பொடியாகி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதைப்பார்த்த இராவணனும் ஆச்சர்யம் அடைந்தான். சக்தி வாய்ந்த சூலாயுதம் ஒரு சாதாரண மனிதனால் அழிந்துவிட்டதை நினைத்து அதிர்ச்சி அடைந்தான்.

★ இவன் என்ன சிவபெருமானா? அப்படி இருந்தால் இவனுக்கு மூன்று கண்களும், நீலமேகம் போன்ற நிறமுடைய மேனியும் இருக்க வேண்டும். அதனால் இவன் சிவன் இல்லை.

★ சிவன் இல்லையென்றால் பிரம்மதேவனா? பிரம்ம தேவனாக இருந்தால் நான்கு முகங்களும், எட்டு கண்களும் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் இவன் பிரம்மதேவன் இல்லை.

★ பிரம்மதேவன் இல்லையென்றால் இவன் திருமாலா? திருமாலாக இருந்தால் இவன் கையில் சங்கு சக்கரம் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் இவன் திருமாலும் இல்லை.

★ நான் பலகாலம் தவமிருந்து முயன்று பெற்ற வரங்களையெல்லாம் அழித்து விட்டான். இவன் தெய்வப்பிறவியாக இல்லாதபோது தவம் செய்யும் முனிவனாக இருப்பானா? அப்படி இவன் தவமுனிவனாக இருந்தால் இந்த இளம் வயதில் இவ்வளவு வலிமைகள் பெற இயலாதே. இந்த உலகத்தையே அழிக்கக்கூடிய இந்த சூலாயுதத்தை ஓங்காரம் ஓசையை கொண்டு அழித்து விட்டான். அப்படியென்றால் விபீஷணன் கூறியது உண்மை தானோ? இவன் பரம்பொருளே தான். விபீஷணன் கூறியவற்றை நான் இப்பொழுது உணர்கிறேன். இவன் யாராக இருந்தால் எனக்கென்ன? அந்த பரம்பொருளாக இருந்தால் தான் எனக்கென்ன? இவனை வெல்லாமல் நான் பின் வாங்க மாட்டேன் என எண்ணினான். பிறகு இராவணன் அரக்கர்கள் நிரம்பிய நிருதிப் படையை ஏவினான். இராமர், நிருதிப் படையை கருடப் படையை கொண்டு அழித்தார். பிறகு இராமர் ஒரு சிறந்த கணையை இராவணன் மீது ஏவினார். அந்தக் கணை இராவணன் கழுத்தை அறுத்துச் சென்றது.

தொடரும்...!

No comments:

Post a Comment