Monday, January 1, 2024

RAMAYANAM PART 155

 இராமாயணம் தொடர்....155

சிவபெருமானின் கட்டளை...!

இராவணன், இரத்தின கவசம் கட்டி, அம்புறாத் துணியை தோளில் கட்டி, வில்லை கையில் ஏந்திக் கொண்டு சூரியனைப் போல் ஒளி வீசும் தேரில், காற்றை விட வேகமாகச் செல்லும் குதிரைகளை பூட்டி, அதில் போருக்கு தேவையான வாள், சூலம் முதலிய ஆயுதங்களை வைத்து, அத்தேருக்கு மலர்களால் பூஜித்து வழிபாடு செய்தான். இராவணனுடைய பத்து தலைகளும் ரத்தினங்களால் அழகுப்பட்டிருந்தன. இராவணன், கணவனை நினைத்து இன்று சீதை அழ வேண்டும். அப்படி இல்லையென்றால் மண்டோதரி அழ வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இன்று நடந்தே ஆகும் எனக் கூறிவிட்டு சிங்கத்தை போல் தேரில் ஏறி போர்களத்திற்குச் சென்றான். இராவணனுடைய கோபத்தைக் கண்டு தேவர்கள் இன்று என்ன நிகழப் போகிறதோ என கதிகலங்கி இருந்தனர்.

இராவணன் போருக்கு வருவதைக் கண்ட விபீஷணன் இராமரிடம் சென்று இராவணன் போருக்கு வந்துக் கொண்டிருக்கிறான் எனக் கூறினான். இதைக்கேட்டு வானரங்கள் பயத்தால் நடுநடுங்கிப் போயினர். இராமர் வானரங்களிடம் கருணையுடன், வீரர்களே! தாங்கள் பயப்பட வேண்டாம். இன்று இராவணனின் வதம் நிகழும். நீங்கள் அனைவரும் துன்பத்தில் இருந்து மீள்வீர்கள் எனக் கூறிவிட்டு போர்க்களம் பூண்டார். விண்ணுலகத்தில் சிவபெருமான் தேவர்களை அழைத்து, இன்று இந்தப் போர் முடிந்துவிடும். இராவணன் இன்று மாள்வான். அதனால் இராமருக்கு, இந்திரனின் தேரை காட்டிலும் நிகரில்லாத வெற்றி பொருந்திய தேரை இராமருக்கு அனுப்புங்கள் என பணித்தார். இந்திரன் உடனே ஒரு தேரை தயார் செய்தார்.

அத்தேரை தேவர்கள் அனைவரும் வணங்கி, இப்போரில் வெற்றியை காண்பாயாக எனக் கூறி வாழ்த்தினர். அத்தேரை இந்திரனின் தேர்பாகனான மாதலியிடம் கொடுத்து இராமருக்கு அனுப்பினர். அத்தேர் இராமரின் முன்வந்து நின்றது. இராமர் அத்தேரை கண்டு திகைத்து நின்றார். இராமர், அத்தேரை பார்த்து இது அரக்கர்களின் மாய வேலையாக இருக்குமோ? என நினைத்தார். இராமர், மாதலியை பார்த்து, நீ யார்? உன் பெயர் என்ன? எனக் கேட்டார். மாதலி, இராமரை வணங்கி, என் பெயர் மாதலி. நான் இந்திரனின் தேர்ப்பாகன். சிவபெருமானும், பிரம்ம தேவனும் கட்டளையிட, இந்திரனால் அனுப்பப்பட்ட தேர் இது. அத்தேரின் தேர்பாகன் நான் என்றான். பிறகு அத்தேரில் பூட்டியிருந்த குதிரைகள், மாதலி கூறிய அனைத்தும் உண்மையே என வேத மொழிகளால் உறுதி செய்தன.

பிறகு விபீஷணன் அங்கு வந்து, அத்தேரை உற்று நோக்கினான். இராமர், இலட்சுமணன், அனுமன், விபீஷணனை பார்த்து இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா? எனக் கேட்டார். அவர்கள் பெருமானே! இதில் சந்தேகப்பட ஒன்றும் இல்லை. இது இந்திரன் அனுப்பிய தேர் தான் என்றனர். பிறகு இராமர் அத்தேரில் ஏறி அமர்ந்தார். தேவர்கள் வாழ்த்து மழை பொழிய, இராமர் போருக்கு புறப்பட்டுச் சென்றார். அத்தேர் இராவணன் முன் வந்து நின்றது. இராவணனும் தேரை விரைந்து செலுத்தி இராமர் முன் வந்து நின்றான். இராமரின் தேர், தேவர்கள் அனைவரும் சேர்ந்து கொடுத்தது என்பதை அறிந்து மிகவும் கோபங்கொண்டான். கோபத்தால் அவன் கண்கள் சிவந்தன. இராமரும், இராவணனும் போர் புரிய எதிரெதிரே நின்று கொண்டிருந்தனர். 

தொடரும்...!

No comments:

Post a Comment