இராமாயணம் தொடர்....170
இராமரின் வருகை - அயோத்தியின் மகிழ்ச்சி...!
புஷ்பக விமானம் தரையில் இறங்கியது. இராமர், புஷ்பக விமானத்தில் இருந்து இறங்க முற்பட்டார். உடனே பரதர், தான் தலையில் வைத்திருந்த பாதுகைகளை இராமரின் திருவடிக்கு கொண்டு சேர்த்தார். இராமர், பரதரின் பாசத்தை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். பிறகு இராமர் பரதரை அன்போடு தழுவிக் கொண்டார். அதன் பின் குல குருவான வசிஷ்டரை பார்த்து இராமர் வணங்கினார். வசிஷ்டரின் கண்களில் கண்ணீர் பெருக இராமரை வாழ்த்தி, தழுவிக் கொண்டார். சத்ருக்கன், இராம இலட்சுமணரை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தான். இராம இலட்சுமணர், சத்ருக்கனை அன்போடு தழுவிக் கொண்டனர். சத்ருக்கன் ஆனந்த கண்ணீர் வடித்தான். பிறகு இராமரின் தாய்மார்கள் இராமர் சீதை மற்றும் இலட்சுமணனை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். கௌசலை, இராமரைப் பார்த்து, இராமா! உன்னை நான் இத்தனை காலம் பார்க்காமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
இன்று உன்னை கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன் என்றாள். இராமரும், தன் தாய் கௌசலையை அன்போடு பார்த்தார். பிறகு இராமர், சீதை மற்றும் இலட்சுமணர் கௌசலையின் திருவடிகளில் விழுந்து ஆசியைப் பெற்றுக் கொண்டனர். அப்பொழுது சுமித்திரை, இராமா! நீ வந்துவிட்டாயே! இனி எனக்கு கவலைவில்லை. உன்னை காணாமல் நாங்கள் மிகவும் துன்பம் அடைந்தோம் எனக் கூறி அன்போடு தழுவிக் கொண்டார். அதன்பின் இலட்சுமணனை பார்த்து, இலட்சுமணா! என் அருமை மகனே! நீ எவ்வாறு இருக்கின்றாய்? எனக் கூறி அன்போடு தழுவிக் கொண்டாள். இலட்சுமணனும் தன் தாய் சுமித்திரையைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். அதன்பின் இராமர், சீதை மற்றும் இலட்சுமணர் சுமித்தரையின் திருவடிகளில் விழுந்து ஆசியைப் பெற்றுக் கொண்டனர்.
அப்பொழுது இராமர் தன் தாய் கைகேயியை தேடினார். கைகேயி, ஓரமாக நின்றுக் கொண்டு இருந்தாள். இதைப் பார்த்த இராமர், கைகேயிடம் ஓடிச் சென்று திருவடிகளில் விழுந்து வணங்கினார். கைகேயின் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. பிறகு இராமர் கைகேயிடம், அம்மா! தாங்கள் ஏன் ஓரமாக நின்று கொண்டு உள்ளீர்கள் எனக் கேட்டார். கைகேயி, என் அன்பு மகனே! நான் உனக்கு செய்த செயல் தான் நான் ஓரமாக நிற்பதற்கு காரணம் என்றாள். இராமர், அம்மா! தாங்கள் இவ்வாறு பேசுதல் கூடாது. என்ன அன்போடு வளர்த்தவர் நீங்கள். தங்களால் தான் எனக்கு இந்த பதினான்கு வருட வனவாச காலத்தில், பல முனிவர்களின் ஆசிகளையும், பல ரிஷிகளின் சாப விமோச்சனைத்தையும், பலரது நட்புகளையும் பெற்று தந்தது.
அது மட்டுமல்லாமல் பல அரக்கர்களின் பாவச் செயல்களும் அழிந்து போனது. இது எல்லாம் தங்களால் தான் நடந்தது. இதை நினைத்து தாங்கள் வருந்துதல் கூடாது என்றார். இராமரின் இந்த பணிவான சொற்களை கேட்டப்பின் கைகேயி இராமரை அன்போடு ஆசிர்வதித்தாள். இதைப் பார்த்து அயோத்தி மக்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். அதன்பின் இலட்சுமணரும், சீதையும் கைகேயின் திருவடிகளில் விழுந்து ஆசியைப் பெற்றுக் கொண்டானர். பிறகு சுமந்திரர் முதலான அமைச்சர்கள் இராமரை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். அயோத்தி மக்களும் இராமரைக் கண்டு தரிசித்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகு இராமர், சுக்ரீவன், அங்கதன் மற்றும் விபீஷணன் முதலானவர்களை தன் தாய்மார்களுக்கும், பரதன் மற்றும் சத்ருக்கனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் இராவணாதி அரக்கர்களால் ஏற்பட்ட துன்பங்களையும் எடுத்துக் கூறினார். இதைக்கேட்டு அவர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இராமரால் இராவணாதி அரக்கர்கள அழிந்ததை நினைத்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அனைவரும் அயோத்தி செல்ல முற்பட்டனர். இராமர், நாம் அனைவரும் இந்த புஷ்பக விமானத்தில் பரதன் தங்கிருந்த நந்தி கிரமத்திற்கு சென்று அதன்பின் அயோத்தி செல்லலாம் என்றார். இராமரின் சொற்படியே அனைவரும் புஷ்பக விமானத்தில் நந்தி கிராமத்திற்கு புறப்பட்டனர்.
சிறிது நேரத்தில் அனைவரும் நந்தி கிராமத்தை அடைந்தனர். இராமர் சீதையை காண்பதற்காக அயோத்தி மக்கள் கூட்டமாக கூடியிருந்தனர். புஷ்பக விமானம் நந்தி கிராமத்தில் இறங்கியது. இராமருக்காக அங்கு வெண் குதிரைகளால் பூட்டப்பட்ட பொன்னால் ஆன சிறந்த தேர் காத்துக் கொண்டிருந்தது. நந்திகிராமத்தை அடைந்த இராமர் தம்பிகளுடன் சடாமுடி போக்கி, வன வாச கோலத்தை நீங்கி சரயு நதியிலே நீராடினர். பிறகு இராமரை அழகாக ஒப்பனை செய்தனர். பிறகு இராமர் அயோத்திக்குச் செல்ல, வெண் குதிரைகள் பூட்டப்பட்ட அழகிய தேரிலே ஏறினார்.
இலட்சுமணர், இராமருக்கு குடை பிடித்தார், சத்ருக்கன், இராமருக்கு வெண்சாமரம் வீசினார். பரதர், அத்தேருக்கு சாரதியாக இருந்து தேரை செலுத்தினார். விபீஷணன் மற்றும் சுக்ரீவன் இருவரும் தேரின் இருபுறமும் யானைகள் மீது சென்றனர். அங்கதனும், அனுமனும் அத்தேருக்கு முன்னும் பின்னும் சென்றனர். பொன்னாலான தேரில் சீதை சென்றாள். மனித உருவம் கொண்ட வானர பெண்கள் சீதையுடன் குதிரைகளின் மேலும், பல்லக்கிலும் அமர்ந்துச் சென்றனர். சிறிது தேரிலேயே அனைவரும் அயோத்தி நகரை அடைந்தனர்.
தொடரும்....!
No comments:
Post a Comment