Saturday, January 20, 2024

RAMAYANAM PART 172

 இராமாயணம் தொடர்....172

இராமரின் பட்டாபிஷேகம் - அயோத்தி மக்கள் மகிழ்ச்சி!

🍀 அயோத்தி மக்கள் அனைவரும் தங்களுக்கே முடிசூட்டு விழா என்பது போல் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். வசிஷ்டர் முதலான முனிவர்கள் வேதங்கள் ஓதினர். அனுமன் இராமரின் பக்கத்தில் பணிவாக நின்று கொண்டிருந்தான். கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்தங்களால் இராமருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேக நீர் இராமரின் தலை முதல் பாதம் வரை தொட்டுச் சென்றது. அதேபோல் அபிஷேக நீர் அனுமனின் தலையில் பட்டு அனுமனை கௌரவிப்பது போல் இருந்தது. இதைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். கௌசலை, சுமித்திரை, கைகேயி கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிந்தது.

🍀 வசிஷ்டர் முதலான முனிவர்கள் மந்திரங்கள் பாடி வாழ்த்த, திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் குலத்து முன்னோர்கள் மகுடத்தை எடுத்துக் கொடுக்க, அதனை வாங்கி வசிஷ்ட முனிவர் ஸ்ரீராமருக்கு சூட்டினார். சுபமுகூர்த்த நன்னாளில், முனிவர்கள் வேதங்கள் ஓத இராமரின் பட்டாபிஷேகம் இனிதாக நடைப்பெற்றது. அப்பொழுது இராமர், திருமால் போல் அனைவருக்கும் காட்சி அளித்தார். தன் பட்டாபிஷேகம் முடிந்த பின் இராமர், பரதனுக்கு இளவரசர் பட்டம் சூட்டி தனது ஆட்சியை நீதிநெறி தவறாமல் செங்கோலுடன் ஆட்சி புரியுமாறு கட்டளையிட்டார். இதைப் பார்த்து முனிவர்களும், தேவர்களும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து மலர்மழை தூவினர். பட்டாபிஷேகம் முடிந்த பிறகு இராமர் ஏழை, எளியவர்களுக்கு பொன், பொருள், ஆடை, அணிகலன் கொடுத்து மகிழ்ந்தார்.

🍀 அதன் பின் இராமர் தனக்கு துணை நின்றவர்களுக்கு பரிசளிக்க விரும்பினார். முதலில் இராமர் சுக்ரீவனை அழைத்து, தன் தந்தை தசரதர் இந்திரனிடம் இருந்து வென்ற இரத்தின கடகத்துடன் யானைகளையும், குதிரைகளையும் பரிசாக கொடுத்து, கிரீடம் அணிவித்து தன் நன்றியை தெரிவித்தார். சுக்ரீவன் இராமரின் கைகளை பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டான். அங்கதனை அழைத்து, இந்திரன் கொடுத்த மணிக்கடகத்தையும், விலை மதிப்பற்ற முத்தாரங்களையும், குதிரைகளையும், யானைகளையும் பரிசாக கொடுத்தார். பிறகு விபீஷணனை அழைத்து, தேவர்கள் கொடுத்த இரத்தின கடகத்தையும், பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்து வாழ்த்தினார். அதன் பிறகு நீலன், ஜாம்பவான் முதலிய வானர படைத் தலைவர்களுக்கு இரத்தின மாலைகளையும், யானைகளும், குதிரைகளும், பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்தார்.

🍀 பிறகு இராமர் அனுமனை அழைத்து, அனுமனே! நீ எனக்கு தக்க சமயத்தில் உதவி செய்துள்ளாய். உனக்கு ஆயிரமாயிரம் பொருட்கள் பரிசாக கொடுத்தாலும் ஈடாகாது. உன்னுடைய வலிமையும், தியாக உதவியும் மேன்மையானது. உனக்கு என்ன பரிசு கொடுப்பது என்று தெரியவில்லை. அதனால் என்னையே உனக்கு கொடுக்கிறேன் எனக் கூறி அனுமனை அன்போடு தழுவிக் கொண்டார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

No comments:

Post a Comment