Friday, January 19, 2024

ஸ்ரீரங்கம் ஆலயமும் இராமாயணத் தொடர்பும்

ஸ்ரீரங்கம் கோயில் சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் .இதை சுயம்பு என்று கூறுவர். பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த சிலையை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். இராமர் அச்சிலையை இலங்கையிலிருந்து தனது பட்டாபிசேகத்துக்கு வந்த விபீடணனுக்கு பரிசாகக் கொடுத்தார்.

 இதனை விபீடணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். அங்கு சிலையை கீழே இறக்கி வைக்க கூடாது என்று என்னினான். அப்போது ஒரு சிறுவன் அங்கு ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்தான், அச்சிறுவனிடம் அச்சிலையை கொடுத்து விட்டு கீழே வைக்க கூடாது என்று சொல்லி விட்டு இளைப்பாறினான். அச்சமயம் சிறுவன் சிலையை கீழே வைத்து விட்டான், பின்னர் விபீடணன் அவன் மீண்டும் புறப்பட வந்தான், சிறுவன் சிலையை கீழே வைத்ததை கண்டு, சிறுவன் என்ன காரியம் செய்தாய் என்று கூறி சிலையை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். பின் சிறுவனாக வந்தது விநாயக பெருமான் சிலையை கீழே வைத்தது நான் தான் என்று கூறி மறைந்தார். அவ்விநாயகற்கு காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோவில் உள்ளது, அதுவே மலை மீது இருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகும், திருவரங்கம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. பின் வைகுண்டபெருமாள் அரங்கநாதராக காட்சியளித்து காவிரிக்கரையிலேய தங்கி இருக்க விருப்பம் என்று தெரிவித்தார். 

அங்கு சோழ நாட்டை ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினார். விபீடணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். பின் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் மணலால் மூடப்பட்டது. பின் வந்த சோழ மன்னர் ஒருவர் மணலால் மூடிய கோவிலை ஒரு கிளியின் உதவியுடன் கோவிலை கண்டுபிடித்ததால் கிளி சோழன் என்றும் சோழன் கிள்ளிவளவன் என்றும் அழைக்கப் பெற்றார், அக்கோவிலை புரணமைத்து, பின்பு அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான பெரிய கோவிலை கட்டினார் சோழன் கிள்ளிவளவன்

குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.

 தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாசுரம்


ஸ்ரீரங்கம் கோவில் பல ஆன்மீக சான்றோர்களையும் ஈர்த்துள்ளது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் அதாவது பொ.ஊ. 14 இல் ராமாயணத்தை திருவரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார். அம்மண்டபம் இன்றும் ஸ்ரீரங்கநாச்சியார் சன்னதி முன்பு காணலாம்.

தொகுப்பு
வா ஶ்ரீராம்
மாநில ஊடக இணைச் செயலர்
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு 

செல் 9786795104

No comments:

Post a Comment