இராமாயணம் தொடர்....173
அனுமனின் வரம்...! இராமரின் ஆட்சி...!
🌟 இராமர் தன் கழுத்தில் இருந்த முத்துமாலையை எடுத்து, சீதா! என் பரிசளிப்பு முடிந்துவிட்டது. இந்த முத்துமாலையை நீ விரும்பியவருக்கு பரிசாக அளிக்கலாம் எனக் கூறி சீதையின் கையில் கொடுத்தார். முத்துமாலையை கையில் வாங்கிய சீதை முதலில் பார்த்தது அனுமனை தான். அனுமனை பார்த்து, சுந்தரா! என அன்போடு அழைத்தாள். அனுமன் சீதையின் அருகில் வந்து நின்றான். சீதை, முத்துமாலையை அனுமனின் கழுத்தில் அணிவித்தாள். எனக்கு தக்க சமயத்தில் உதவி செய்த உனக்கு என் பரிசு என்றாள். இராமர், சீதா! நீ நான் நினைத்ததை தான் செய்துள்ளாய். பிறகு இராமர் அனுமனை பார்த்து, அனுமனே! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார்.
🌟 அனுமன், பெருமானே! நான் வேண்டுவதை தாங்கள் தவறாமல் கொடுக்க வேண்டும் எனக் கூறிவிட்டு, நான் உங்களின் அடிமையாக இருக்க வேண்டும். என்னை வேண்டுபவர்களுக்கு முதலில் உங்கள் நாமமே நினைவுக்கு வர வேண்டும் எனக் கேட்டான். பிறகு இராமர் புன்னகைத்து விட்டு, உனக்கு அவ்வரமே தருகிறேன் எனக் கூறினார். அனுமனின் இவ்வரத்தை கேட்டு மக்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர். இராமரின் முடிசூட்டும் விழா அறுபது நாள் கோலாகலமாக நடந்தது. குகன், சுக்ரீவன், அங்கதன், விபீஷணன், அனுமன் முதலியவர்கள் இராமரின் பட்டாபிஷேகத்தை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
🌟 இராமர், குகன், சுக்ரீவன், அங்கதன், விபீஷணன், அனுமன் முதலியவர்களை அழைத்து, அரசன் இல்லாத நாடு வெறுமையாகிவிடும். ஆதலால் தாங்கள் அவரவர் இருப்பிடத்திற்கு சென்று, உங்களது நாட்டை மேன்மையுடன் நல்லாட்சி புரியுங்கள் என்று கூறி விடை கொடுத்தார். இராமரிடம், விடைபெற்ற அவர்கள் இராமரையும், சீதையும். தம்பியர்களையும், வசிஷ்ட முனிவரையும், தாய்மார்களையும் வணங்கி விடை பெற்றனர். அனைவரும் புஷ்பக விமானத்தில் ஏறி, குகன் சிருங்கிபேரத்திலும், சுக்ரீவன் கிஷ்கிந்தையிலும் இறங்கினார்கள். பிறகு விபீஷணன் இலங்கைக்குச் சென்றான். அனைவரும் இராமரின் திருநாமத்தை சொல்லிக் கொண்டு நல்லாட்சி புரிந்தனர்.
🌟 இராமர், தன் தம்பிகளுடன் அயோத்தியை நீதி நெறியுடன், அரசாட்சி புரிந்தார். இராமரின் அருளால் மண்ணுலகம் செழித்து விளங்கியது.
முற்றும்...!
No comments:
Post a Comment