Thursday, January 18, 2024

RAMAYANAM PART 166

 இராமாயணம் தொடர்...166

அயோத்திக்குச் செல்லும் இராமர்...!

🌿 இராமர் விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! இன்றுடன் என் பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்துவிட்டது. நான் இன்று அயோத்தி செல்ல வேண்டும். என் வரவைக் காணாமல் பரதன் நிச்சயமாக இறந்து போவான். நான் உடனே அயோத்திக்குச் செல்ல ஏதேனும் வாகனம் உள்ளதா? எனக் கேட்டார். விபீஷணன், எம்பெருமானே! இராவணன் தன் தமையனான குபேரனிடம் இருந்து பறித்த புஷ்பக விமானம் உள்ளது. அதன் வேகமானது, வாயு வேகத்தை விட அதிகம் என்று சொல்லலாம். நாம் அனைவரும் புஷ்பக விமானத்தில் செல்லலாம் என்றான். இராமர், அன்பர்களே! நீங்கள் அனைவரும் உங்கள் இருப்பிடத்திற்கு சென்று, உங்களின் உறவினர்களை சந்தித்து உங்களின் நலத்தை கூறுங்கள். என் பதினான்கு ஆண்டு வனவாச காலம் முடிந்துவிட்டதால், நான் இன்றே அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்றார்.

🌿 அதன்பின் விபீஷணன் மற்றும் வானர வீரர்கள், இராமரிடம் பெருமானே! நாங்கள் எல்லோரும் தங்களின் பட்டாபிஷேகம் காண விரும்புகிறோம். அதற்கு தாங்கள் அனுமதி தர வேண்டும் என வேண்டினர். இராமர், அனைவரும் அவ்வண்ணமே அயோத்திக்கு வாருங்கள் எனக் கூறினார். பிறகு இராமர் புஷ்பக விமானத்தை கொண்டு வரும்படி கூறினார். இராமர், இலட்சுமணர் மற்றும் சீதை மூவரும் புஷ்பக விமானத்தில் ஏறினர். இராமர், விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! உன் மக்களுக்கு நல்லாட்சி புரிந்து, நீதிநெறி விளங்க, தர்மத்தை நிலை நிறுத்துவாயாக என வாழ்த்தி ஆசி கூறினார். பிறகு சுக்ரீவனைப் பார்த்து, சுக்ரீவா! உன் உதவியால் தான், நான் இராவணனை கொன்றேன். நீயும், உன் வானரப்படைகளும் கிஷ்கிந்தைக்கு சென்று எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக எனக் கூறினார்.

🌿 அதன் பின், அங்கதன், அனுமன், நீலன், ஜாம்பவானை அழைத்து நீங்கள் அனைவரும் எல்லாவித நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழ்வீர்களாக எனக் கூறினார். இராமரை பிரிய முடியாமல் அங்குள்ள அனைவரும் கண்கலங்கி நின்றனர். பிறகு அனைவரும் இராமரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, நாங்கள் அனைவரும் தங்களோடு அயோத்திக்கு வந்து, தங்களின் பட்டாபிஷேகத்தை கண்டு களித்து, அதன் பின் நாங்கள் கிஷ்கிந்தை செல்கிறோம் என வேண்டினர். இராமர் அவர்களின் அன்பை மெச்சி, நீங்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். உங்களின் மனக்கருத்தை தெரிந்துக் கொள்ளவே இவ்வாறு செய்தேன். நீங்கள் அனைவரும் அயோத்திக்கு வாருங்கள்.

🌿 நாம் அனைவரும் ஒன்றாக செல்லலாம் என்றார். பிறகு சுக்ரீவன், அங்கதன், அனுமன் முதலிய அனைவரும் மனித உருவம் கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டனர். பிறகு விபீஷணன் இராமரிடம், நாங்களும் தங்களுடன் வந்து பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்க விரும்புகிறோம் என்றனர். இராமர் சம்மதம் தெரிவிக்க விபீஷணனும் அவனின் மனைவி மக்களுடன் புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டனர். இராமர், சீதைக்கு இலங்கையை சுற்றி காண்பிக்க விரும்பினார். அதனால் புஷ்பக விமானத்தை இலங்கையை சுற்றி செல்லுமாறு வேண்டினார். இராமரின் வேண்டுகோளுக்கிணங்க புஷ்பக விமானமும் இலங்கையை ஒரு வலம் வந்து சென்றது.

தொடரும்...!

No comments:

Post a Comment