Thursday, January 18, 2024

RAMAYANAM PART 163

 இராமாயணம் தொடர்...163

சீதை தீக்குளித்தல்...

இராமர், கற்புடைய பெண்கள் கணவனை பிரிந்த மறுகணமே உயிரை மாய்த்துக் கொள்வார்கள். ஆனால் நீயோ பெண் குலத்திற்கே இழிவை உண்டாக்கியுள்ளாய். நீ புழுவைப் போல் மண்ணிலிருந்து தோன்றியவள் தானே? அதனால் தான் உன்னிடத்தில் நற்குணம் இல்லை. நீ என் கண்முன் நிற்காதே. இங்கிருந்து சென்றுவிடு என மிக கோபமாக கூறினார். இராமர் பேசிய கடுஞ்சொற்கள், எம்பெருமான் தனக்கு தரும் தண்டனை என்பதை சீதை உணர்ந்தாள். இராமரின் கடுஞ்சொற்களை கேட்டு அனுமன் கதறி அழுதான். வானர வீரர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் உருக்குலைத்து போய் கதறி அழுதார்கள். தேவர்களும், முனிவர்களும் இராமரின் கடுஞ்சொற்களைக் கேட்டு துடிதுடித்தனர்.

சீதையின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சீதை இராமரை பார்த்து, எம்பெருமானே அனுமன் அசோகவனம் வந்து, என்னைப் பிரிந்த தங்களின் நிலையையும், பகைவனை வென்று விரைவில் என்னை மீட்பீர்கள் என கூறிச் சென்றதனால், நான் இதுநாள் வரையிலும் தங்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். தங்களின் பேரன்பினை எனக்கு எடுத்துரைத்த அனுமன், தங்களை பிரிந்து நான் வருந்தும் என் நிலைமையையும் தங்களிடம் உள்ளவாறு சொல்லியிருக்க வேண்டுமே? நான் தங்கள் மேல் கொண்ட அன்பினால், ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். தங்களை காண இத்தனை நாள் நற்குணங்களுடன் தவம் செய்து கொண்டிருந்தேன். நான் தங்களை தரிசித்து விட்டேன். தங்களுக்கு என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினாள்.

அதன் பின் இராமரின் அருகில் இருக்கும் இலட்சுமணனைப் பார்த்து, இலட்சுமணா! எம்பெருமான் என்னை தவறாக கூறிவிட்டார். இனியும் நான் உயிர் வாழ விரும்பவில்லை. நான் தீக்குளிக்க தீ வார்த்திக் கொடு எனக் கேட்டாள். அன்று உன்னை நான் வாயினால் சுட்டேன். இன்று தீயினால் சுடப் போகிறேன் என்றாள். இலட்சுமணன் கண்களில் கண்ணீர் நிரம்ப இராமரை பார்த்தார். இராமர் கண்களால் கட்டளையிட்டார். அதன் பின் இலட்சுமணன் பெருந்தீயை வளர்த்தினார். சீதை, அக்னி குண்டத்தையும், இராமரையும் வலம் வந்தாள். பின் இராமரை பார்த்து, எம்பெருமானே! எனக்கு வேண்டுவது தங்களின் திருவருள் மட்டுமே. தாங்கள் என் கற்பின் நிலையறியாமல் பேசிவிட்டீர்கள். இனி நான் உயிர் வாழ விரும்பவில்லை எனக் கூறி விட்டு அக்னி குண்டம் அருகில் சென்றாள். இதைப் பார்த்த அத்தனை உயிர்களும் கதறி அழுதனர்.

இதை வானத்தில் இருந்து பார்த்த இந்திராணி! இத்தகைய கொடுமையை பார்க்க நான் என்ன பாவம் செய்தேன் என்று தெரியவில்லையே! எனக் கதறி அழுதாள். சீதை அக்னி குண்டம் அருகில் சென்று, அக்னி தேவா! உலகில் சிவபெருமானும், பிரம்மாவும், திருமாலும் பெண்களின் நிலைமையை அறியமாட்டார்கள். நீ தான் எனக்கு சாட்சி. உலகில் உள்ள அனைவரும் திருமணத்தின் போது அக்னியை சாட்சியாக வலம் வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் உடலாலும், மனதாலும் ஏதேனும் குற்றம் செய்திருந்தாள் என்னை உன் தீயினால் சுட்டெரிப்பாயாக எனக் கூறி இராமர வணங்கி, கைகூப்பிய கரங்களுடன் தீயில் பாய்ந்தாள்.

தொடரும்...!

No comments:

Post a Comment