Showing posts with label RAMAYANAM. Show all posts
Showing posts with label RAMAYANAM. Show all posts

Sunday, December 3, 2023

RAMAYANAM PART 132

 இராமாயணம் தொடர்...132

இந்திரஜித் போர் !!!

❃ இந்திரஜித் தேரில் ஏறிக் கொண்டு தேவர்களையெல்லாம் வென்ற வில்லை கையில் ஏந்திக் கொண்டு போருக்கு புறப்பட்டான். அவனுடன் அரக்க சேனைகள் புடைசூழ பின் தொடர்ந்து வந்தன. போர்க்களத்தில் இலட்சுமணன் அதிகாயனைக் கொன்று விட்டு, அடுத்து இராவணன் அல்லது இந்திரஜித் தன் படைகளோடு வருவார்கள் என எதிர்நோக்கி காத்து கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தான். இந்திரஜித், இலட்சுமணனின் எதிரே வந்து நின்றான். இந்திரஜித், என் தம்பிகளான அதிகாயன், நிகும்பன், கும்பனை கொன்ற இலட்சுமணனை இன்று போரில் கொல்லாமல் நான் நகர் திரும்ப மாட்டேன். இலட்சுமணனின் இரத்தத்தை நான் பூமி தேவிக்கு பருக கொடுப்பேன். நான் அவனை வெல்லவில்லையென்றால் தேவர்களும், விண்ணுலகத்துவரும் என்னை இகழ்வார்கள் என கோபத்துடன் கூறினான்.

❃ இலட்சுமணன், இந்திரஜித்தை பார்த்து இவன் யார்? என விபீஷணனிடம் கேட்டான். இலட்சுமணா! இவன் இராவணனின் மகன். மிகவும் வலிமை படைத்தவன். மாய வேலைகள் செய்வதில் வல்லவன். இந்திரனை வென்றவன். இவனிடம் தாங்கள் தனியாக போர் புரிய வேண்டாம். அனுமன், ஜாம்பவான், சுக்ரீவன், அங்கதன், நீலன் ஆகியோர் உன்னுடன் இருக்கட்டும் என வணங்கி கூறினான். இலட்சுமணன், நீ கூறியது நன்று எனக் கூறிவிட்டு போருக்கு தயாரானான். இலட்சுமணனுக்கு துணையாக அனுமன் அங்கு வந்து சேர்ந்தான். சுக்ரீவன் தன் பெரிய சேனைகளை அழைத்துக் கொண்டு இலட்சுமணனுக்கு முன் வந்து நின்றான். அங்கதனும் இலட்சுமணனுக்கு துணையாக அங்கு வந்து நின்றான்.

❃ இந்தப் போரைக் காண தேவர்கள் வானத்தில் வந்து தோன்றினர். இரு படைகளும் எதிரெதிரே மோதிக் கொண்டன. வானரங்கள் அரக்கர்களின் மீது குன்றுகளை தூக்கி எறிந்தனர். அரக்கர்களும், வானரங்களின் மீது வாள், சூலாயுதம் முதலியவற்றை கொண்டு தாக்கினர். போர்க்களத்தில் எங்கு பார்த்தாலும் இரத்த பூமியாக காட்சி அளித்தது. ஒரு புறத்தில் அங்கதன் மிக கடுமையாக போர் புரிந்து கொண்டிருந்தான். மற்றொரு புறம் நீலன், இடபன், ஜாம்பவான், மயிந்தவன் முதலானவர்கள் போர் புரிந்து கொண்டிருந்தனர். இந்திரஜித் தனியாக நின்று போர் புரிந்து கொண்டிருந்தான். அப்போது சுக்ரீவன் முதலிய வானர வீரர்கள் இந்திரஜித்தை எதிர்த்து போர் புரிய தொடங்கினர். அப்பொழுது இந்திரஜித் அனுமனை பார்த்து, அடேய்! அனுமனே! நில்லடா! என் தம்பிகளை கொன்ற உன்னை, நினைத்துக் கொண்டு தான் நான் போருக்கு வந்தேன். 

❃ வானரங்களாகிய நீங்கள் குன்றுகளையும், பாறைகளையும் தூக்கி எறிந்தால் நீங்கள் வெற்றி பெற முடியுமா என்ன? நான் போருக்கு வராததால் நீ உன் ஆண்மை பெரிதென கூறிக் கொண்டிருக்கிறாய். நீ எறியும் இந்த மலைகளும், பாறைகளுமா? என்னை கொல்ல போகிறது. நான் இப்பொழுது போருக்கு வந்துவிட்டேன். இனி உங்களால் என்னை கொல்ல முடியாது. உங்கள் அனைவரின் உயிரையும் நான் எடுப்பேன் என்றான். இதைக் கேட்ட அனுமன் இந்திரஜித்தை பார்த்து, போர் புரிபவர்கள் தங்களை பெருமையாக கூற மாட்டார்கள். வீரத்தில் நீ மட்டும் தான் சிறந்தவன் என பெருமை கொள்ளாதே என்றான்.

தொடரும்...

RAMAYANAM PART 131

 இராமாயணம் தொடர்...131

இந்திரஜித் - இராமரின் நிகும்பலா யாகம்!...

✦ இராவணன் போரில் தன் மகன், தம்பி உள்பட பலரை இழந்தான். இருந்தாலும் அவன் பின்வாங்காமல் தன் மகன் இந்திரஜித்தை போருக்கு அனுப்பி வைத்தான். ஆனாலும் ஏனோ இராவணனின் மனம் பயந்தது. தன் மகனையும் இழந்து விடுவோமோ என்று மனம் கலங்கினான். போரில் பல உயிர்களை இழந்து, இப்போது தன் மகனையே பலி கொடுக்க அனுப்புகிறோமே என்று அஞ்சினான் இராவணன். இராவணன், போரில் தன் மகன் இந்திரஜித்தை இழந்து விடக் கூடாது. அதே சமயம் இராமனையும் வீழ்த்த வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தான். தன் மகன் இந்திரஜித், ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவி பக்தன் என்பது அவனுக்கு ஞாபகம் வந்தது. 

✦ உடனே இந்திரஜித்திடம், நீ ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவியின் பக்தன். ஆகவே நீ போரில் வெற்றி பெற, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோன்றுவித்து, ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகம் செய்தால் உன்னை யாராலும் வீழ்த்த முடியாது என்றான் இராவணன். தன் தந்தை இராவணன் ஆலோசனைப்படி பிரம்மாண்டமான நிகும்பலா யாகம் செய்தான் இந்திரஜித். அனுமன் இராவணனின் திட்டத்தையும், இந்திரஜித்தின் நிகும்பலா யாகத்தையும் அறிந்து கொண்டான். உடனே அனுமன் இராமரிடம் விரைந்து வந்தான். தங்களை வீழ்த்த இந்திரஜித் நிகும்பலா யாகம் செய்து ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவியை தனக்கு உதவி செய்ய அழைக்கிறான் என்றான் அனுமன். இதை கேட்ட இராமர், அனுமனே! நீ கவலை கொள்ள வேண்டாம். தேவி பிரத்தியங்கிரா, எப்போதும் நல்லமுறையில் நடப்பவர்களுக்குதான் துணையாக இருப்பாள்.

✦ நேற்றுவரையில் இந்திரஜித் நல்லமுறையில் ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவியின் பக்தனாக இருந்து வந்தான். அதனால் அவனுக்கு தேவி துணையாக இருந்தாள். ஆனால் இன்றோ அவன் தவறான செயலுக்கு தேவியை துணைக்கு அழைக்கிறான். நிச்சயமாக அவன் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் அருளை பெற மாட்டான் என்று கூறினார். பிறகு இராமர், ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவியை மனதால் வணங்கி நல்ல எண்ணத்தோடு பூஜை செய்தார். இராமர் மற்றும் இந்திரஜித் இருவரும் ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவியின் பக்தர்கள். இருவரும் தேவியின் அருளுக்காக கடுமையாக பூஜை செய்தனர். இவர்களில் யாருக்கு ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவி துணையிருந்து உதவி செய்வாள்? என்று தேவலோகமே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

✦ ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி இந்திரஜித்தின் முன் தோன்றினாள். இந்திரஜித், நீ மிகச் சிறந்த என்னுடைய பக்தன். உன் தந்தை இராவணனின் தீய எண்ணத்துக்கு நீ துணை போகலாமா? தீய எண்ணத்துக்காக நீ எவ்வளவு நிகும்பலா யாகம் செய்தாலும் நான் உனக்கு துணையாக இருக்கமாட்டேன். இருந்தாலும் நீ என் தீவிர பக்தனாக இருப்பதால் உலகம் இருக்கும்வரை உன் புகழ் இருக்கும். நீ யாகம் செய்த இந்த இடமும் உன் புகழ் பேசும் என்று ஆசி வழங்கினாள் தேவி. பிறகு ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி இராமர் முன் தோன்றி, உன் பூஜைக்கான எண்ணம் மிகவும் சிறந்தது. இந்த போரில் நீ வெற்றி பெறுவாய். நான் உனக்கு துணையாக இருப்பேன் எனக் கூறி மறைந்தாள்.

தொடரும்...

RAMAYAN PART 130

 இராமாயணம் தொடர்...130

இந்திரஜித் போருக்கு செல்லுதல் !!!

❖ இலங்கை நகரம் பெரும் சோகமயமாக காட்சி அளித்தது. இலங்கையில் எப்போதும் ஆடலும், பாடலும், நாத ஓசைகளும் ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால் இன்று நகர் முழுவதும் அழுகுரல் மட்டுமே ஒலித்துக் கொண்டு இருந்தது. இலங்கையில் தங்கள் கணவர்களை இழந்த அரக்கர்கள் தலையை விரித்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தனர். தங்கள் மார்பிலும், தலையிலும் அடித்துக் கொண்டனர். இந்த அழுகொலியைக் கேட்டு இந்திரஜித் திடுக்கிட்டான். ஏன் இந்த அழுகுரல்? என்ன நிகழ்ந்தது? இராவணன், இராமனிடம் தோற்றுவிட்டானா? இல்லை அந்த அனுமன் இலங்கை நகரை பெயர்த்து எடுத்துவிட்டானா? இந்த அழுகுரலுக்கான காரணம் என்ன? என்று தன் பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்டான். அவர்கள் இந்திரஜித்திடம் சொல்ல அஞ்சி நடுங்கினார்கள். பிறகு அவர்கள் பயந்துக் கொண்டு, அசுர குலத்தின் வேந்தனே! உம் தம்பிகளான அதிகாயன், நிகும்பன், கும்பன் முதலியவர்களை இலட்சுமணன் அழித்து விட்டான் என்றனர்.

❖ இதைக் கேட்ட இந்திரஜித் பெரும்கோபம் கொண்டான், இருப்பினும் தம்பிகளை இழந்துவிட்ட அவன் மிகவும் வருந்தினான். உடனே அவன் இராவணனின் மாளிகைக்கு விரைந்து வந்தான். அங்கு துயரத்தில் இருக்கும் இராவணனை பார்த்து வணங்கினான். பிறகு அவன் தந்தையே! ஏன் இலங்கை நகரம் முழுவதும் அழுகுரலாக கேட்கின்றது? இங்கு என்ன நேர்ந்தது எனக் கேட்டான். இராவணன், மகனே! இந்திரஜித், உன் தம்பிகளான அதிகாயன், நிகும்பன், கும்பன் போரில் மாண்டு விட்டனர் எனக் கூறினான். இதைக்கேட்டு இந்திரஜித் மிகவும் கோபங்கொண்டான். தந்தையே! தாங்கள் அறிவை இழந்து விட்டீர்களா? போருக்கு ஒவ்வொருவராக அனுப்பி தாங்கள் அனைவரையும் இழந்துவிட்டீர்கள். தாங்கள் இவர்களை அனுப்பியதற்கு பதில் என்னை அனுப்பி இருந்தால் நான் போரில் வெற்றி பெற்றிருப்பேன். அன்று தூதனாக வந்த அந்த அனுமனையும் கொல்லாமல் விட்டுவிட்டாய்.

❖ அந்த இராமன் இருக்கும் இடம் தெரிந்தும் அவனை கொல்லாமல் இருக்கின்றாய். இனியும் தாங்கள் அறிவற்றவனாக முடிவு செய்யாமல், இலங்கை நகரை காப்பாற்றுங்கள். என் தம்பிகளை கொன்ற அந்த இலட்சுமணனை நான் கொல்வேன். இல்லையென்றால் நான் இலங்கை நகருக்குள் நுழைய மாட்டான். இப்பொழுதே நான் போருக்குச் செல்கிறேன் என்றான். இராவணன், மகனே! நீ சொன்ன இந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருக்கிறது என்றான். பிறகு இந்திரஜித் இராவணனை வணங்கிவிட்டு, போருக்கு செல்ல ஆயத்தமானான். தன் படைகளை திரட்டிக் கொண்டு, வில்லை கையில் ஏந்திக் கொண்டு போருக்குச் செல்ல தந்தையிடம் விடைபெற்றான். இராவணனை இந்திரஜித்தை மார்புடன் தழுவிக் கொண்டு, வெற்றியுடன் திரும்புவாயாக எனக் கூறி வழியனுப்பினான். இந்திரஜித்துடன் சென்ற படைகள் எண்ணில் அடங்காதவை.

போரில் வெற்றி பெற இந்திரஜித் செய்த யாகம் பற்றி நாளை காண்போம்!... 

தொடரும்...

Monday, November 27, 2023

RAMAYANAM PART 129

 இராமாயணம் தொடர் ..129

இலட்சுமணன் - அதிகாயன்!...

✧ அனுமனின் போர் திறமையை கண்டு அதிகாயன் அதிசயித்தான். பிறகு அவன் நான் அனுமனுடனா போர் புரிய வந்தேன் என நினைத்துக் கொண்டு இலட்சுமணன் இருக்கும் இடத்திற்கு தேரை செலுத்தினான். இலட்சுமணனும், அதிகாயனும் போர் புரிய தொடங்கினர். அதிகாயன் தேரில் நின்று போர் புரிந்ததால், அங்கதன் இலட்சுமணனை தன் தோளின் மீது ஏறி போர் புரியுமாறு கேட்டுக் கொண்டான். அதிகாயன், இலட்சுமணன் இருவருக்கும் கடும்போர் நடந்தது. இலட்சுமணன் அம்புகளை ஏவி அதிகாயனின் தேரையும், தேர் பாகனையும் வீழ்த்தினார். பிறகு அதிகாயன் மேல் பல அம்புகளை ஏவினார். இலட்சுமணனின் அம்புகளை எதிர்த்து நின்று எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நிற்கும் அதிகாயனைக் கண்டு வானர வீரர்கள் திகைத்து நின்றனர். தேவர்களும், யட்சர்களும், ரிஷி முனிவர்களும் இந்த அதிசயச் சண்டையைக் காண விண்ணில் கூடி நின்றனர்.

✧ இலட்சுமணன் அதிகாயனை வீழ்த்தும் வழி தேடித் திகைத்து நின்றார். அப்போது வாயுதேவன் இலட்சுமணன் அருகில் வந்து, அதிகாயனை பிரம்மாஸ்திரத்தால் மட்டுமே வீழ்த்த முடியும். வேறு எந்த ஆயுதங்களாலும் வீழ்த்த முடியாது எனக் கூறிவிட்டு சென்று விட்டார். உடனே இலட்சுமணன் பிரம்மாஸ்திரத்தை வரவழைத்து, பூமி அதிரும்படி அதனை அதிகாயன் மேல் செலுத்தினார். அதிகாயன் பிரம்மாஸ்திரத்தை வீழ்த்த ஏவிய அஸ்திரங்கள் பலனற்றுப் போயின. அந்த அஸ்திரம் அதிகாயனின் தலையை துண்டித்து வானவழியாகச் சென்றது. இதனை பார்த்த வானர வீரர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். தேவர்களும் இதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பிறகு இலட்சுமணன் அங்கதனின் தோளில் இருந்து கீழே இறங்கினார். இலட்சுமணின் இத்தகைய ஆற்றலைக் கண்ட விபீஷணன், இந்திரஜித் அழிவது உறுதி என நினைத்துக் கொண்டான். அதிகாயன் மாண்டதை கண்ட நராந்தகன், இலட்சுமணனுடன் போரிட விரைந்து வந்தான்.

✧ அங்கதன் அவனை தடுத்தி நிறுத்தி, தான் வைத்திருந்த வாளால் வெட்டிக் கொன்றான். போர்மத்தன் எனும் அரக்கன் நீலனோடு கடுமையாக வெகுநேரம் போரிட்டு மாண்டான். வயமந்தன் எனும் அரக்கனுடன், இடபன் எனும் வானர வீரன் போரிட்டு மாண்டான். கும்பனையும், அவனின் படைகளையும் சுக்ரீவன் தனித்து நின்று போரிட்டுக் கொன்றான். நிகும்பன் என்னும் அரக்கன் அனுமனிடம் போர் புரிந்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கதன் சூலாயுதம் ஒன்றை எடுத்து அனுமனை நோக்கி தூக்கி எறிந்தான். அனுமன் அதை தன் கையில் பிடித்து, நிகும்பன் மீது செலுத்தினான். நிகும்பன் அந்த இடத்திலேயே மாண்டான். அதிகாயன் மாண்டச் செய்தி இராவணனுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு நடந்தவற்றை தூதர்கள் இராவணனிடம் கூறினர். இராவணன் இதைக் கேட்டு மிக கோபம் கொண்டான். இருப்பினும் தன் மகன் அதிகாயன் இறந்துவிட்டான் என்னும் செய்தியை அறிந்து வருந்தினான்.

✧ இராவணனின் மனைவியும், அதிகாயனின் தாயுமான தான்யமாலினி தன் மகன் இறந்து விட்டான் என்னும் செய்தியை அறிந்து, ஓடி வந்து இராவணின் காலில் விழுந்து கதறி அழுதாள். என் மகன் எங்கே? என் மகன் மாண்ட பிறகு நான் உயிர் வாழ்வதில் என்ன பயன்? இனி நான் எப்பொழுது அவன் முகத்தை காண்பேன்? என் மகன் மாண்டதற்கு நீ தான் காரணம்? நீ பிறர் மனைவியின் மேல் ஆசைப்பட்டதால் இன்று என் மகனுக்கு இந்த நிலைமை. நீ மாற்றான் மனைவியை விரும்பி உன் அறிவை இழந்துவிட்டாய். உன் தம்பி விபீஷணன், கும்பகர்ணன் சொன்ன அறிவுரை நீ கேட்கவில்லை. உன் பாட்டனாகிய மாலியவான் சொன்ன அறிவுரையும் கேட்கவில்லை. உன் பெண்ணாசையால் இந்த அரக்க குலமே அழியப் போகிறது எனக் கூறி புலம்பி அழுதாள். பிறகு தான்யமாலினியை தேவலோக பெண்களான ரம்பை, ஊர்வசி, மேனகை போன்றோர் தேற்றி அழைத்துச் சென்றனர்.

தொடரும்...

RAMAYANAM PART 128

 இராமாயணம் தொடர் - 128

மயிடனின் தூது !!!

✾ இராமர் மயிடனை பார்த்து, இங்கு எதற்காக வந்தாய்? எனக் கேட்டார். அதற்கு அவன், நான் இராவணனின் மகனான அதிகாயன் அனுப்பிய தூதுவன். அதிகாயன், தங்கள் தம்பி இலட்சுமணனிடம் போர் புரிய அழைப்பு விடுத்திருக்கிறார் என கூறினான். இராமர், தூதுவனே! என் தம்பியை வெல்ல இந்த உலகில் எவரும் இல்லை. போர்க்களத்தில் அவனின் வலிமையை காண்பீர்கள் எனக் கூறி அனுப்பினார். பிறகு இராமர், இலட்சுமணன் ஒருவனே அதிகாயனை தனித்து நின்று போரிட்டு அழிப்பான். இலட்சுமணனை சாதரணமாக எண்ணி விடாதீர்கள். என்னைக் காட்டிலும் இலட்சுமணன் சிறந்த வீரன் என அங்கிருந்தவர்களிடம் கூறினார். அப்பொழுது விபீஷணன், இராமா, அதிகாயன் பிரம்ம தேவனிடம் தவம் செய்து எவராலும் அழிக்க முடியாத வரத்தினை பெற்றுள்ளான்.

✾ அதனால் இலட்சுமணனுடன் நாம் அனைவரும் செல்வது நலம் என்றான். இராமர், விபீஷணா! நீ இலட்சுமணனுடன் சென்று, அவனின் போர் வேகத்தையும், கர வேகத்தையும் காண்பாயாக எனக் கூறி இராமர் அனுப்பி வைத்தார். பிறகு இலட்சுமணனும், விபீஷணனும், இராமரை தொழுது அங்கிருந்து போர்க்களத்திற்கு சென்றனர். அங்கு அரக்க படைகளும், வானர படைகளும் பெரும் ஆரவாரத்துடன் மோதிக் கொண்டனர். அரக்கப் படைகளின் தாக்குதலை தாக்கு பிடிக்காமல் வானர படைகள் நிலை தடுமாறின. இலட்சுமணன் தன்னை நோக்கி வந்த அரக்கர்களை, தன் அம்பிற்கு இரையாக்கினார். இதைப் பார்த்த தாருகன் என்னும் அரக்கன், தேர் மீது நின்றுக் கொண்டு இலட்சுமணன் மீது அம்புகளை ஏவினான். இலட்சுமணன் அந்த அம்புகளை தகர்த்தெறிந்தார். 

✾ பிறகு இலட்சுமணன் அம்பினை ஏவி தாருகனின் தலையினை துண்டாக்கினார். தாருகன் இறந்ததை கண்ட மற்ற அரக்கர்கள், இலட்சுமணனை தாக்க ஓடி வந்தனர். இலட்சுமணன் அவர்கள் அனைவரையும் நொடியில் வீழ்த்தினார். அப்பொழுது இராவணன், அதிகாயனுக்கு துணையாக யானைப்படைகளை அனுப்பி வைத்தான். அங்கு வந்த யானைப்படைகளை இலட்சுமணன் தன் அம்பினால் வீழ்த்தினார். இலட்சுமணனின் கரவேகத்தை எவராலும் பார்க்க முடியவில்லை. மற்றொரு புறம் அனுமன் யானைப்படைகளை வீழ்த்திக் கொண்டு இருந்தான். அனுமன், யானைகளை கைகளால் அடித்தும், காலால் மிதித்தும், கடலில் ஏறிந்தும், தரையில் தேய்த்தும் கொன்றான்.

✾ இதனைப் பார்த்து கோபங்கொண்ட தேவாந்தகன் எனும் அரக்கன் அனுமனைத் தாக்க வந்தான். அனுமனின் தாக்குதலை தாக்கு பிடிக்காமல் அவன் மாண்டான். இதைப் பார்த்து மிகவும் கோபங்கொண்ட அதிகாயன், உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்றான். அப்பொழுது அனுமன் உன்னுடன் திரிசரனையும் அழைத்து வா என்று கூறிக் கொண்டிருக்கும் போது அரக்கன் ஒருவன் தேரில் வந்து அனுமன் மீது பாய்ந்தான். அனுமன், அந்த அரக்கனை தேரில் இருந்து தள்ளி, தேரை அவன் மீது ஏற்றிக் கொன்றான். அனுமனின் போர் திறமையை கண்டு அதிகாயன் அதிசயித்தான்.

தொடரும்...

RAMAYANAM PART 127

இராமாயணம் தொடர் - 127

அதிகாயன் போருக்கு செல்லுதல்!

✥ இராவணன் கோபத்துடன் ஆலோசனை மண்டபத்தை அடைந்தான். அங்கு நின்று கொண்டிருந்த அமைச்சர்களை பார்த்து, நீங்கள் எல்லாம் வீரர்களா? இல்லை கோழைகளா? உங்கள் உடம்பில் வீர இரத்தம் ஓடுகிறதா? இல்லை கழுநீர் ஓடுகிறதா? நான் இன்று என் அருமை தம்பியை இழந்துவிட்டேன். ஆனால் நீங்கள் இங்கு கல் போல் அசையாமல் நின்று கொண்டு இருக்கிறீர்கள். பகைவர்களை அழித்து வெற்றியுடன் திரும்புவோம் என வீர வசனம் பேசி கொண்டு சென்றீர்கள். நீங்கள் என் தம்பிக்கு துணையாக இருந்து அவனை காப்பாற்றவும் இல்லை, போரில் வெற்றி பெறவும் இல்லை. இனி போரில் வெற்றி பெற முடியும் என்றால் மட்டுமே போருக்குச் செல்லுங்கள். அப்படி இல்லையென்றால் யாரும் எங்கும் செல்ல வேண்டாம். என்னிடம் சொல்லுங்கள் நானே போருக்குச் செல்கிறேன் என அமைச்சர்களை மிக கடுமையாக பேசினான். இராவணன் சொன்னதைக் கேட்டு இராவணனின் மகன் அதிகாயன் எரிமலை போல் பொங்கி எழுந்தான்.

அதிகாயன்

✥ அதிகாயன், இராவணன், தான்யமாலினி தம்பதிகளின் மகனாவான். மலை போன்ற பெரிய உருவம் கொண்டவன். பிரம்மாவை நோக்கி தவமிருந்து கவசம், தங்க ரதம் முதலிய பல வரங்களை பெற்றவன். அறநெறியை உணர்ந்தவன். வீரத்தில் சிறந்தவன். ஆலோசனைகள் சொல்லுவதில் வல்லவன், வேதங்களை முழுமையாகக் கற்றறிந்தவன். எதிரிப்படைகளைத் துண்டிப்பதில் சிறந்தவன். இவன் இந்திரனின் வஜ்ராயுதத்தையே அடக்கியவன்.

✥ தந்தையே! தாங்கள் தம்பியை இழந்து தவிப்பது போல் அந்த இராமனின் தம்பி இலட்சுமணனை கொன்று அவனுக்கு உங்களின் வலியை கொடுப்பேன். நான் போருக்கு செல்கிறேன். தாங்கள் போருக்கு தனியாக செல்ல சொன்னாலும் சரி, சேனைகளை அழைத்து கொண்டு செல்ல சொன்னாலும் சரி. நான் அவ்வாறே செய்கிறேன். தாங்கள் எனக்கு விடை கொடுங்கள் என்றான். அதிகாயன் சொன்னதைக் கேட்ட இராவணன், அவனுக்கு பெரும் சேனையை அனுப்பி வைத்தான். சிறந்த வீரர்களான கும்பன், நிகும்பன், அகம்பன் ஆகியோரையும் அதிகாயன் தேருக்கு முன்பாகவும், பின்பாகவும் செல்லும்படி ஆணையிட்டு அனுப்பினான். அதிகாயன் இராவணனிடம் இருந்து விடைப்பெற்று, கவசத்தை அணிந்து கொண்டு கையில் வில்லையும், உடைவாளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். கோடிக்கணக்கில் யானைப்படையும், தேர்ப்படையும் உடன் சென்றது.

✥ அதிகாயன் போர்களத்திற்கு வந்தடைந்தான். அங்கு இராமனால் ஏற்பட்ட அரக்க சேனைகளின் அழிவைக் கண்டு வருந்தினான். கும்பகர்ணனின் உடல் முண்டமாக கிடப்பதை கண்டு துடிதுடித்தான். இதை காணவா நான் இங்கு வந்தேன் என புலம்பி அழுதான். பிறகு அவன் கோபங்கொண்டு எழுந்தான். கும்பகர்ணனை கொன்ற இராமனின் தம்பி இலட்சுமணனை கொன்று, இராமனுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துவேன். அப்பொழுது தான் என் மனம் சாந்தமடையும் என்றான். இலட்சுமணனை என்னுடன் போர் புரிய வருமாறு மயிடன் என்னும் அரக்கனை தூது சொல்ல அனுப்பினான். மயிடன், இராமர் இருக்கும் இருப்பிடத்தை அடைந்தான். அவனை பார்த்த வானரங்கள், அவனை துன்புறுத்தினர். இராமர் அவர்களை தடுத்து நிறுத்தி தூதுவர்களாக வந்தவர்களை துன்புறுத்தக் கூடாது என தடுத்து நிறுத்தினார். 

தொடரும்...

RAMAYANAM PART 126

  இராமாயணம் தொடர் - 126

இராவணனின் கோபம் !!!

❆ மகோதரன் இராவணனை பார்த்து, அரசே! தாங்கள் சீதையிடம் கோபம் கொள்ள வேண்டாம். சீதையின் தந்தையாகிய ஜனகன் கூறினால் நிச்சயம் அவள் கேட்பாள். பிறகு மாய ஜனகன் சீதையை பார்த்து, மகளே! என் செல்லமே! நீ அழாதே. நீ இந்த இராவணனை அடைந்தால், நிச்சயம் உன் துன்பம் தீரும். உன்னால் பிற உயிர்கள் அழிவது நல்ல செயலா? உன்னால் நான் இன்று இறக்கும் தருவாயில் உள்ளேன். ஆதலால் நீ இராவணனை ஏற்றுக் கொள். இதனால் உன் துன்பமும் நீங்கும். எங்கள் துன்பமும் நீங்கும் என்றான். இதைக் கேட்ட சீதை பெரும் கோபம் கொண்டாள். இப்படி பேசுகின்ற நீ என் தந்தையா? இது மிதிலையின் அரசன் ஜனகர் பேசும் வார்த்தையா? தண்ணீர் பனிக்கட்டியாக மாறினாலும், மேருமலை கடலில் மிதந்தாலும், சீதை ஒரு போதும் இந்த இராவணனை ஏற்க மாட்டாள். விஷம் போன்ற இந்த வார்த்தைகளை பேசி தாங்கள் உங்கள் பெருமையை இழந்து விடாதீர்கள் என்றாள் சீற்றத்துடன்.

❆ அப்பொழுது இராவணனின் தூதன் ஒருவன் அங்கு வந்து, இராவணனின் காதில் போரில் உன் தம்பி கும்பகர்ணன் மாண்டு விட்டான் என்றும். இதனால் தேவர்களும், வானரங்களும் அங்கு பெரும் ஆரவாரம் செய்து கொண்டு இருக்கின்றனர் என்றும் கூறினான். கும்பகர்ணன் போரில் இறந்துவிட்ட செய்தியை அறிந்த இராவணன், மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த அவன் இந்திரனை வென்ற என் அருமை தம்பியே! ஆயிரம் யானைகள் வந்தாலும் எதிர்த்து நிற்கும் வலிமை உடையவனே! உன் பிரிவை நான் எவ்வாறு தாங்குவேன். உன்னை நம்பி இருந்த என்னை இப்படி நட்டாற்றில் விட்டு சென்று விட்டாயே! அந்த இராமன் இறந்து விட்டான் என்னும் செய்தியை கேட்டு மகிழ வேண்டிய நான், நீ இறந்து விட்டாய் என்னும் செய்தியை கேட்கும் நிலைமை வந்துவிட்டதே! பொன்னையும், பொருளையும் இழந்தால் மீட்டு விடலாம். உன்னை எப்படி மீட்பது?

❆ இனி அந்த வானரங்கள் உயிர் வாழ்வார்களே. என் தம்பியை கொன்ற அந்த இராமனையும் அவனுடன் இருக்கும் அந்த வானரங்களையும் உயிருடன் விடமாட்டேன் எனக் கூறி கோபங்கொண்டான். அப்போது அங்கு வந்த அமைச்சர்கள் இராவணனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். சீதை கும்பகர்ணன் மாண்டச் செய்தியை அறிந்து மகிழ்ந்தாள். போகும் போது மகோதரன், மாய ஜனகனை பார்த்து இவனை சிறையில் அடையுங்கள் என்றான். அப்போது சீதை தந்தையை பார்த்த வண்ணம் வருந்திக் கொண்டு இருந்தாள். அப்போது திரிசடை சீதையிடம், தாயே நீ வருந்த வேண்டாம். இங்கு உன் தந்தை போல் வந்தது, மாய வேலையில் வல்லவனான மருத்தன். நீ இதனை நினைத்து கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினாள். இராவணன் கோபத்துடன் ஆலோசனை மண்டபத்தை அடைந்தான்.

தொடரும்...

Sunday, November 26, 2023

RAMAYANAM PART 125

 மாய ஜனகனும், சீதையும் !!!

❁ இராவணனின் சொற்களை கேட்ட சீதை நெருப்பு போல் கொதித்தாள். அரக்கனே! கொடியவனே! பாதகனே! ஒரு சிங்கத்தை விரும்பும் நான், ஒரு நாய்குட்டியை விரும்புவேனா? இனியும் இது போன்ற ஆசை இருந்தால் அதை நீ மறந்து விடு. பெண்ணாசையால் அழிந்து விடாதே. உனக்கு அழிவு காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது. துஷ்டனே! இங்கே நின்று கொண்டு மதிகெட்டு பேசாதே. இங்கே இருந்து சென்று விடு என்று கடிந்து பேசினாள். சீதை இப்படி பேசியதைக் கேட்டு இராவணன் அமைதியாக இருந்தான். பெண்ணே! இராவணனாகிய என்னை மூடனாக நினைக்காதே. நீ என் ஆசைக்கு இணங்கவில்லை என்றால் நீ பிறந்த நகரையும், புகுந்த நகரையும் பொடிபொடியாக்குவேன். என்னை யார் என்று நினைத்தாய்? நான் வெள்ளி மலையை அள்ளியெடுத்தவன். நான் இந்த மூன்று உலகங்களையும் வென்றவன். நான் மிதிலாபுரிக்கும், அயோத்திக்கும் அரக்கர்களை அனுப்பியுள்ளேன்.

❁ அயோத்தியில் பரதன், சத்ருக்கனையும், மிதிலையில் உன் தந்தை ஜனகனையும் கட்டி கொண்டு வருமாறு ஏவலாட்களை அனுப்பியுள்ளேன் என்றான். அப்பொழுது, மகோதரன் மாய ஜனகனாக மாறிய மருத்தனை கை, கால்களை கட்டி இழுத்துக் கொண்டு வந்தான். சீதை வருவது தன் தந்தை என நினைத்து, தந்தையின் இந்த நிலையைக் கண்டு மிகவும் வருந்தினாள். என்ன செய்வதென்று தெரியாமல் தந்தையை பார்த்து அழுதாள். கடவுளே! என் தந்தைக்கு இந்த துயரம் வந்ததே. இனி நான் என்ன செய்வேன். என்னை பெண்ணாக பெற்றதற்கு தாங்கள் இன்று பெருந்துயரம் அடைந்தீரே. என்னை பெற்ற பாவத்திற்காகவா! உங்களுக்கு இந்த தண்டனை. ஆயிரமாயிரம் வறியவர்களுக்கு உதவி செய்வீரே. இன்று நமக்கு உதவ யாரும் இல்லையே! தரும மூர்த்தியாகிய உங்களுக்கு துன்பம் நேர்ந்ததே. இனி நான் என்ன செய்வேன். என்னை சிறை மீட்டுச் செல்ல இன்னும் என் கணவர் வரவில்லையே! எப்படி உங்களை சிறை மீட்பேன்.

❁ ஒரு பெண்ணாகிய நான் உங்களை எப்படி சிறை மீட்பேன் என பலவாறு புலம்பி அழுதாள். அப்பொழுது இராவணன் சீதையிடம், பெண்ணே! நீ கவலைப்படாதே. நீ என்னை ஏற்றுக் கொள். நான் உன் தந்தையை இலங்கையின் அரசனாக முடி சூட்டுகிறேன். நீயும் நானும் இங்கு மகிழ்ச்சியாக வாழலாம். உன்னை பெற்றெடுத்த தாய் தந்தையரை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். இதற்காக நீ என்னை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்றான். சீதை, ஒரு சிங்கத்தை விரும்பும் நான், ஒரு நாய்குட்டியுடன் வாழ்வேனா? என் கணவனின் அம்பிற்கு நீ அழிவது நிச்சயம். போர்க்களத்தில் நீ இராமனின் அம்புப்பட்டு வீழ்ந்து கிடப்பாய் என்றாள் கோபத்துடன். இராவணன் இதைக்கேட்டு கடுங்கோபம் கொண்டான். அப்பொழுது மகோதரன் இராவணனை பார்த்து, அரசே! தாங்கள் சீதையிடம் கோபம் கொள்ள வேண்டாம். 

தொடரும்...

RAMAYANAM PART 124

 இராவணனின் மந்திர சூழ்ச்சி !!!

☛ இராமர், கும்பகர்ணனை கடலில் வீசியதைப் பார்த்து வானரங்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இதைப் பார்த்த அரக்கர்கள் அங்கிருந்து இலங்கை நகரை நோக்கி ஓடினர். இலங்கை நகரில் இராவணன் மந்திர ஆலோசனை மண்டபத்திற்கு வந்தான். அங்கு அவன் இனி சீதையை நான் எவ்வாறு அடைவது? சீதையை கவர்ந்து வந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் நான் அவளை அடைந்த பாடில்லை. இனி என்ன செய்தால் நான் அவளை எளிதாக அடைய முடியும் என ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது மாய வேலையில் வல்லவனான மகோதரன் அங்கு வந்தான். அவன் இராவணனை வணங்கி நின்றான். பிறகு அவன் இராவணனிடம், அரசே! தங்கள் முகம் ஏன் இவ்வளவு வாடி இருக்கின்றது? தாங்கள் எதையோ நினைத்து சிந்தனையில் மூழ்கி இருக்கிறீர்கள் போல் தெரிகிறதே? தங்களின் முக வாட்டத்திற்கான காரணம் என்ன? என்று கேட்டான்.

☛ இராவணன், மகோதரனே! நீ மந்திரத்திலும், தந்திரத்திலும் மிகச் சிறந்தவன். நான் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறேன். அழகில் ஒப்பற்றவளாய் இருக்கும் சீதையை அடைந்தால் மட்டுமே எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும். என்ன செய்தால் அவளை எளிதாக அடைய முடியும். மந்திரத்திலும், தந்திரத்திலும் வல்லவனாக இருக்கும் உன்னிடம் ஏதேனும் யோசனை இருந்தால் என்னிடம் கூறு என்றான். மகோதரன், அரசே! பெண்களுக்கு தாய் வீட்டின் மீது பாசம் அதிகம். தாய் தந்தையரின் மேல் அதிக பாசம் வைத்திருப்பார்கள். ஒரு சமயம், தட்ச பிரஜாபதியின் மகளாக, தாட்சாயணியாக அவதாரம் கொண்டு ஈசனை மணந்தாள். பின்னர் தட்சன் தான் நடத்திய யாகத்தில் ஈசனை அழைக்காததால் ஈசன் அங்கு செல்லாமல் இருந்தாலும் இறைவனின் ஆணையை மீறி தாட்சாயணி தட்சனின் யாகத்திற்கு சென்றாள். இது போல் பெண்களுக்கு தாய் வீட்டிற்கு செல்வதில் அதிக பிரியமுண்டு.

☛ பெண்கள், தாய் தந்தையின் மேல் அதிக கவனம் செலுத்துவார்கள். இதை மையமாக கொண்டு, மாய வேலையில் வல்லவனாக இருக்கும் மருத்தனை, மிதிலாபுரியை ஆளும் சீதையின் தந்தை ஜனகனாக உருமாறி வரச் செய்து, உன்னை அடையாறு சீதையை வற்புறுத்தி கூறச் சொல்லலாம். தந்தையின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அல்லது தந்தைக்கு தன்னால் எந்த இடரும் வரக்கூடாது என எண்ணி சீதை மனம் மாறுவாள். தங்களையும் நேசிப்பாள். இதைக் கேட்ட இராவணன், மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். மகோதரா! என்னே! உன் அறிவு திறமை என பாராட்டினான். இந்த மந்திர சூழ்ச்சியில் எப்படியேனும் நான் சீதையை அடைவேன் என்றான். மகோதரா, நான் அசோக வனத்திற்கு சென்று சீதையுடன் உரையாடிக் கொண்டு இருக்கிறேன். அப்பொழுது நீ மருத்தனை ஜனகனாக மாறச் சொல்லி, அவனுடன் அங்கு வா என கூறிவிட்டு அவனை தழுவிக் கொண்டான். அசோக வனத்தில் சீதை, இராவணனின் பெருந்துயரத்திற்கு நடுவில் வேதனையுடன் இராமனை நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

☛ அப்பொழுது இராவணன் பெண்கள் புடைசூழ, சீதையின் முன் வந்து நின்றான். சீதையின் முன் கைகூப்பி வணங்கி, பெண்ணே! அழகின் வடிவமே! உன்னால் நான் தினம் தினம் வருந்திக் கொண்டு இருக்கிறேன். உன் மீது கொண்ட ஆசையால் நான் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன். நீ எப்போது என் மீது இரக்கம் காட்ட போகின்றாய். பெண்களுக்கு எப்போதும் இளகிய மனம் உண்டு. நீ என் மேல் ஏன் இரக்கம் காட்ட மறுக்கின்றாய்? உனக்கு என் மேல் என்ன கோபம்? நீ என்னை ஏற்றுக் கொண்டால், உன்னை அரசியாக்கி நான் உனக்கு சேவை புரிந்து என் வாழ்நாளை கழிப்பேன். அரண்மனையில் உள்ள பெண்கள் அனைவரும் உனக்கு சேவை புரிவார்கள். நீ மகாராணி போல் இங்கு வாழலாம். நீ இப்போதாவது என் மீது கருணை காட்டு என தரையில் விழுந்து வணங்கினான்.

தொடரும்...

Monday, November 20, 2023

RAMAYANAM PART 123

 இராமாயணம் தொடர் - 123

கும்பகர்ணனின் வரம்!...

கும்பகர்ணன் இராமரிடம், இராமா! என்னால் சூர்ப்பனகை போல் மூக்கறுக்கப்பட்டு உயிருடன் வாழ முடியாது. நான் இராவணனின் தவறை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் என்னால் அதை தடுக்க முடியவில்லை. இன்று நான் உன் முன்னால் மூக்கும், காதும் அறுக்கப்பட்டு உன் முன் தலைகுனிந்து நிற்கிறேன். இந்த நிலைமையில் என்னால் இலங்கை நகருக்கு சென்று உயிர் வாழ முடியாது. நான் வீரப்போர் புரிந்து உயிர் விடுவேனே தவிர நான் திரும்பி செல்ல மாட்டேன் என கூறிவிட்டு தன் பக்கத்தில் இருந்த மலை போன்ற பாறையை எடுத்து இராமரை நோக்கி வீசினான். இராமர் அதை தன் அம்பால் தூள்தூளாக்கினார். பிறகு கும்பகர்ணன் விடாமல் ஒவ்வொரு மலையாக எடுத்து இராமர் மீது வீசினான். இராமர் அதையெல்லாம் தன் அம்பிற்கு இரையாக்கினார். இவ்வாறு கும்பகர்ணனுக்கும், இராமருக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்தது. இராமர் ஓர் அம்பை கும்பகர்ணனை நோக்கி ஏவினார்.

ஆனால் அந்த அம்பு கும்பகர்ணன் அணிந்திருந்த சிவபெருமான் கொடுத்த கவசத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் இராமர், சிவபெருமான் அருளிய பாசுபதாஸ்திரத்தை எடுத்து, கும்பகர்ணன் மேல் ஏவி, அவனது கவசத்தை உடைத்தார். பிறகு இராமர் மற்றொரு அம்பை ஏவி கும்பகர்ணனின் வலக்கரத்தை அறுத்தெறிந்தார். ஆனால் கும்பகர்ணன் மற்றொரு கையால் வானரங்களை அடித்து வீழ்த்தினான். இதைப் பார்த்த தேவர்கள், இராமரிடம், இராமா! அவனின் மற்றொரு கையையும் அறுப்பாயாக எனக் கேட்டுக் கொண்டனர். பிறகு இராமர் மற்றொரு அம்பை செலுத்தி கும்பகர்ணனின் மற்றொரு கையையும் அறுத்தெறிந்தார். கும்பகர்ணன், என் கைகள் போனால் என்ன, என் கால்கள் உள்ளது. அதைக் கொண்டு போர் புரிவேன் எனக் கூறி வானரங்களிடம் போர் புரிந்தான். இதைப் பார்த்த இராமர், ஓர் அம்பை ஏவி கும்பகர்ணன் காலை அறுத்தெறிந்தார்.

ஆனால் கும்பகர்ணன் தன் மற்றொரு காலைக் கொண்டு போர் புரிய தொடங்கினான். பிறகு இராமர், கும்பகர்ணனின் மற்றொரு காலையும் ஓர் அம்பை ஏவி அறுத்தெறிந்தார். தன் கை, கால்கள் இழந்த கும்பகர்ணன் தன் வாயைக் கொண்டு ஊதி ஊதி போர் புரிந்தான். இராமர் கும்பகர்ணனின் தீர்க்கமான போரைக் கண்டு அதிசயத்து நின்றார். வெகு நேரம் கும்பகர்ணனால் ஊதி ஊதி போர் புரிய முடியவில்லை. பிறகு கும்பகர்ணன் இராமரை நினைத்து, காலவரம்பின்றி வாழ வேண்டிய நான் இராவணனின் பெண்ணாசையால் இன்று வீழ போகிறேன். இராமனின் வில்லின் ஆற்றலுக்கு முன் ஆயிரம் இராவணன் வந்தாலும் இராமனுக்கு இணையாக முடியாது என நினைத்தான். பிறகு கும்பகர்ணன் இராமரிடம், இராமா! நீ சிபிச்சக்ரவர்த்தி போல் அபயம் என்று வருபவரை காக்கும் பண்புடையவன். விபீஷணன் அரக்க குலத்தில் பிறந்திருந்தாலும், உன்னை நம்பி அடைக்கலம் தேடி வந்தான். என் தம்பி விபீஷணன் நற்குணசீலன், நீதிநெறி தவறாதவன். அவனை காப்பது உன்னுடைய கடமை.

இராவணன், தம்பி என்று பாராமலும் விபீஷணனை கொல்ல வருவான், நீ அவனிடமிருந்து விபீஷணை காப்பாற்று. உன் தம்பிகளில் ஒருவர் அல்லது நீயோ யாரேனும் வீபீஷணனை விட்டு பிரியாமல் அவனை காக்க வேண்டும். இராமா! அனைத்தும் அறிந்த பரம்பொருளே! நான் இறுதியாக உன்னிடம் ஒரு வரம் கேட்க வேண்டும். அதை நீ எனக்கு மறுக்காமல் தர வேண்டும் என்றான். இராமர், கும்பகர்ணா! நீ உன் வரத்தை கேள் என்றார். கும்பகர்ணன், இராமா! இந்த யுத்தத்தை தேவர்கள் முதலானோர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். என்னை கை, கால்கள் இல்லாத முண்டம் என யாரும் ஏளனம் செய்யாத வண்ணம் என் கழுத்தை துண்டித்து யாருக்கும் எட்டாத தூரத்தில், கண்காணாமல் கடலில் போட்டு விடு. என் முண்டம் ஒருவர் கண்ணிற்கும் பட வேண்டாம். இந்த வரத்தை நீ எனக்கு அருள வேண்டும் என்றான். பிறகு இராமர், தன் அம்பினால் கும்பகர்ணனின் தலையை துண்டித்து, அது கடலில் மூழ்கும் படி செய்தார். கும்பகர்ணனின் தலை கடலில் மூழ்கியது.

தொடரும்...

RAMAYANAM PART 122

 இராமாயணம் தொடர் - 122

இராமர் கும்பகர்ணன் மீது கருணை காட்டுதல்!...

★ இராமரின் அம்பினால், கும்பகர்ணன் ஒரு மலை விழுவது போல் மயங்கி கீழே விழுந்தான். கும்பகர்ணனின் இரத்தம் சுக்ரீவனின் மேல் பட்டு அவன் மயக்கம் தெளிந்தான். அப்போது சுக்ரீவன் மயக்கம் தெளிந்ததை கண்டு இராமர் மகிழ்ந்தார். அங்கு கும்பகர்ணன் அம்பு பட்டு மயங்கி விழுந்திருப்பதைக் கண்ட சுக்ரீவன், இராமர் தான் இவ்வாறு செய்திருப்பார் என நினைத்தான். உடனே சுக்ரீவன் இராமர் எங்கே இருக்கிறார் என சுற்றியும் பார்த்தான். பிறகு இராமரைக் கண்டு மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அவன் கும்பகர்ணனின் மீது பாய்ந்து (சுக்ரீவன் இராவணனிடம் கிரீடத்தில் இருந்து மணிகளை பறித்து வந்தது போல்) காதையும், மூக்கையும் கடித்து அதைக் எடுத்துக் கொண்டு சென்றான். கும்பகர்ணனின் காதையும், மூக்கையும் நம் அரசர் சுக்ரீவன் கடித்து விட்டதை வானரங்கள் ஒருவருக்கொருவர் சொல்லி மகிழ்ந்தனர்.

★ சிறிது நேரம் கழித்து கும்பகர்ணன் மயக்கம் தெளிந்தான். அப்போது தான் பிடித்து வைத்திருந்த சுக்ரீவன் தப்பி ஓடியதையும், தன் மூக்கையும், காதையும் கடித்து கொண்டு சென்றதை அறிந்து மிகவும் வருந்தினான். இதனால் கடுங்கோபம் கொண்ட கும்பகர்ணன் தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவர்களை கொல்வேன் எனக் கூறிக் கொண்டு அங்கிருந்து எழுந்தான். தன் கையில் இருந்த வாள் மற்றும் கேடகம் கொண்டு வீசி வீசி போர் புரிந்தான். இதனால் பல வானரங்கள் மாண்டு விழுந்தனர். அப்போது ஜாம்பவான் இராமரிடம் சென்று, பெருமானே! இந்த கும்பகர்ணனை சீக்கிரம் கொல்லுங்கள். இல்லையெனில் நம் வானர படைகளை இவன் அழித்து விடுவான் என வேண்டினான். பிறகு இராமர் கும்பகர்ணனுடன் வந்த சேனைகள் அனைத்தையும் விரைந்து அழித்தார்.

★ இராமர் கும்பகர்ணன் கையில் இருந்த கேடகத்தை தன் அம்பை ஏவி அதை உடைத்தெறிந்தார். அப்போது கும்பகர்ணன் தன் கையில் இருந்த வாளைக் கொண்டு போர் புரிந்தான். பிறகு இராமர், கும்பகர்ணனை நோக்கி ஒவ்வொரு அம்பாக கணப்பொழுதில் செலுத்தினார். ஆனால் கும்பகர்ணன் இதையெல்லாம் தன் கையால் தடுத்து நிறுத்தினான். பிறகு மற்றொரு அம்பை ஏவி கும்பகர்ணனின் கையில் இருந்த வாளை உடைத்தெறிந்தார். தன் வாளை இராமன் உடைத்ததைக் கண்டு மற்றொரு வாளை கும்பகர்ணன் கையில் எடுத்துக் கொண்டு இராமரை தாக்க தொடங்கினான். அப்பொழுது இராமர் ஒவ்வொரு அம்பாக ஏவி கும்பகர்ணனிடம் இருந்த வாள், கேடகம், கவசம், சூலாயுதம் என அனைத்தையும் அறுத்தெறிந்தார்.

★ அப்பொழுது இராவணன் கும்பகர்ணனுக்கு உதவியாக ஒரு சூலப்படையை அனுப்பினான். பிறகு கும்பகர்ணன் அந்த சூலப்படையைக் கொண்டு போர் புரிய தொடங்கினான். ஆனால் இராமர் அந்த படைகள் அனைத்தையும் தன் வில்லுக்கு இரையாக்கினார். கடைசியில் கும்பகர்ணன் மட்டும் தனியாக வெறுங்கையுடன் நின்றான். அப்பொழுது இராமர் கும்பகர்ணனை பார்த்து, பெரும் சேனைகளுடன் போர் புரிய வந்த நீ இப்பொழுது எல்லாம் இழந்து நிற்கின்றாய். நீ பண்பில் சிறந்த, நீதிநெறியில் உயர்ந்த விபீஷணனின் சகோதரன் என்பதால் உன்மேல் கருணை காட்டுகிறேன். நீ இலங்கை நகருக்குச் சென்று நாளை திரும்பி வந்து போர் செய்கிறாயா? அல்லது இப்பொழுது என்னுடன் போரிட்டு மடிகிறாயா? உனது விருப்பம் எதுவோ அதன்படி செய் என்றார்.

தொடரும்...

RAMAYANAM PART 121

Friday, November 17, 2023

RAMAYANAM PART 120

 இராமாயணம் தொடர் - 120

கும்பகர்ணன் சுக்ரீவனை தூக்கி செல்லுதல் !!!

அனுமனின் வலிமையைக் கண்ட கும்பகர்ணன், நீ என்னுடன் போர் புரிய வா என்று அழைத்தான். அதற்கு அனுமன், நான் உன்னுடன் போர் செய்ய மாட்டேன் என முடிவு செய்த பிறகு உன்னுடன் போர் செய்வது தவறு எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றான். அப்பொழுது சுக்ரீவன், கும்பகர்ணனை தன் கைகளால் தாக்க தொடங்கினான். மிகவும் பலம் கொண்டு சுக்ரீவன் அவனைத் தாக்கினான். கும்பகர்ணன் அவனை பார்த்து, உன் வலிமை மிகவும் சிறந்தது. ஆனால் இன்று நான் உன்னை அழித்து விடுகிறேன் என்றான். பிறகு இருவரும் எதிரும் புதிருமாக மாறி மாறி சண்டையிட்டனர். இருவருக்கும் இடையில் கடும்போர் நிகழ்ந்தது. இருவரும் வெகுநேரம் சோர்வடையாமல் சண்டையிட்டனர். கும்பகர்ணனின் அடியை சுக்ரீவனால் தாங்க முடியவில்லை. இதனால் அவன் மயங்கி கீழே விழுந்தான்.

மயங்கிய சுக்ரீவனை, கும்பகர்ணன் தன் தோளில் தூக்கிக் கொண்டு நகருக்குள் சென்றான். அப்பொழுது சுக்ரீவன் எந்த உணர்வின்றி மயங்கி இருந்தான். அங்கிருந்த வானரங்கள், தங்கள் அரசன் கும்பகர்ணனின் கையில் அகப்பட்டு செல்வதைப் பார்த்து மிகவும் புலம்பி அழுதனர். இதைப் பார்த்த அரக்கர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். கும்பகர்ணன் சுக்ரீவனை தூக்கிச் செல்வதை பார்த்த அனுமன், இவனிடம் நான் சண்டையிட மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டேனே என நினைத்து என்ன செய்வதென்று தெரியாமல் கும்பகர்ணனை பின் தொடர்ந்து சென்றான். வானரங்கள் ஓடிச் சென்று இராமரிடம், எங்கள் அரசன் சுக்ரீவனை கும்பகர்ணன் தூக்கி கொண்டு செல்கிறான். இனி எங்களுக்கு யார் துணை எனக் கூறி அழுதார்கள். இதைக் கேட்ட இராமர், நெருப்பு போல் கண்கள் சிவக்க எழுந்தார்.

தன் வில் மற்றும் அம்பை கையில் எடுத்துக் கொண்டு கணப்பொழுதில் இலங்கை நகர் வாயிலை அடைந்தார். இராமர், சுக்ரீவனை இலங்கை நகருக்குள் கொண்டு சென்று விட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என நினைத்து, கோட்டையின் வாயில்கள் அனைத்தையும் தன் அம்புகளை ஏவி அடைத்தார். அந்த அம்புகளை கடந்து இலங்கை நகருக்குள் செல்ல கும்பகர்ணனால் முடியவில்லை. பிறகு மிதிலை கடந்து போக நினைத்த அவனுக்கு அங்கும் அம்புகள் அவனை தடுத்தது. பிறகு அவன் இலங்கை நகருக்கு திரும்ப முடியாமல் திரும்பினான். திரும்பும்போது இராமர் அவனை எதிர்த்து நிற்பதை கண்டான். இராமா! உனக்காக தான் நான் காத்துக் கொண்டு இருந்தேன். வலிமையுடையவர் செய்யும் போரில், நான் உன் தம்பி இலட்சுமணனுடனும் போர் செய்யவில்லை, அனுமனுடனும் போர் செய்யவில்லை, சுக்ரீவனிடமும் போர் செய்யவில்லை.

ஏனென்றால் இவர்கள் யாரும் எனக்கு நிகரானவர்கள் இல்லை. உனக்காக தான் நான் காத்து கொண்டிருந்தேன். இந்த சுக்ரீவனை நீ காப்பாய் என்றால் நிச்சயம் நீ சீதையை மீட்பாய் என்றான். கும்பகர்ணன் பேசியதைக் கேட்டு இராமர் புன்னகைத்தார். பிறகு இராமர், சுக்ரீவனை தூக்கி கொண்டு வந்த உன்னையும், மலை போல் உள்ள உன் தோளையும் நான் சாய்க்கவில்லை என்றால் உனக்கு தோற்றவன் ஆவேன் என்று கூறிவிட்டு கும்பகர்ணனின் நெற்றியை குறி வைத்து அம்புகளை எய்தினார். பிறகு கும்பகர்ணனின் நெற்றியில் இருந்து இரத்தம் ஆறு போல் வலிந்தது. அந்த இரத்தம் சுக்ரீவனின் முகத்தில் பட்டு, மயக்கம் தெளிந்து எழுந்தான். அப்பொழுது கும்பகர்ணன் மயங்கி ஒரு மலை விழுவது போல் கீழே விழுந்தான்.

தொடரும்...

RAMAYANAM PART 119

 இராமாயணம் தொடர்...119

கும்பகர்ணனின் போர் திறன் !!!

👉 அங்கதன் மயங்கி கீழே விழுந்ததை பார்த்த அனுமன் அங்கே ஓடி வந்தான். ஓர் பெரிய மலையை தூக்கி கும்பகர்ணனை நோக்கி வீசினான். கும்பகர்ணன் அம்மலையை தன் கையால் பிடித்து திரும்ப அனுமன் மீது வீசினான். அப்போது வானர வீரர்கள், அங்கதனை அங்கிருந்து தூக்கிச் சென்றனர். அனுமன் மறுபடியும் ஓர் மலையை தூக்கி, அரக்கனே! இந்த மலையை நான் உன் மேல் எறிவேன். இந்த மலையை உன்னால் தவிர்க்க முடியுமானால் நீ மிகவும் வலிமைமிக்கவன். உன் வலிமையை அனைவரும் போற்றுவர். அப்படி இல்லாமல் இந்த மலையால் தாக்கப்பட்டால் நீ என்னிடம் தோற்றவன் ஆவாய் பிறகு உனக்கும் எனக்கும் போர் இல்லை. நான் இங்கிருந்து சென்றுவிடுவேன் என்றான். கும்பகர்ணன் இதைக் கேட்டு, நான் உன் வலிமைக்கு குறைந்தவன் இல்லை எனக் கூறி சம்மதித்தான்.

👉 பிறகு அனுமன் அந்த மலையை கும்பகர்ணன் மீது தூக்கி எறிந்தான். கும்பகர்ணன் அந்த மலையை தூள் தூளாக்கினான். இதனைப் பார்த்த அனுமன், இவன் மிகவும் வலிமை படைத்தவன். இவனை இராமரை தவிர வேறு எவராலும் கொல்ல முடியாது என நினைத்து அங்கிருந்துச் சென்றான். அப்பொழுது இலட்சுமணன் அங்கு வந்து போர் புரிவதற்கான அடையாளமான தன் நாணை இழுத்து பெரும் ஓசையை எழுப்பினான். பிறகு அங்கு ஆயிரமாயிரம் அம்புகளை ஏவி அரக்கப் படைகளை கொன்று குவித்தான். இலட்சுமணனின் கரவேகத்தை கண்டு கும்பகர்ணன் வியந்தான். பிறகு கும்பகர்ணன், இலட்சுமணன் முன்வந்து நின்றான். கும்பகர்ணன் தேரின் மீது ஏறி நின்று போர் புரிந்தான். இதனைப் பார்த்த அனுமன், இலட்சுமணை தன் தோளில் ஏறி நின்று போர் புரியச் செய்தான்.

👉 கும்பகர்ணன் இலட்சுமணனை பார்த்து, இலட்சுமணா! நீயோ! இராமனின் தம்பி, நானோ இராவணனின் தம்பி. நம் இருவரின் போரை காண தேவர்கள் முதலானோர் இங்கு வந்துள்ளனர். சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த உன்னை, இன்று அடியோடு ஒழிப்பேன் என்றான். இலட்சுமணன், அரக்கனே! வீரர்கள் சொல்லால் பெருமை பேச மாட்டார்கள். வில்லால் தான் பேசுவார்கள். உன்னைப் போல் வீண் பேச்சு பேச நான் விரும்பவில்லை. நான் என் வில்லினால் பேசுவேன் என்றான். இலட்சுமணனுக்கும், கும்பகர்ணனுக்கும் மிக கடுமையாக போர் நடந்தது. கும்பகர்ணன் விடுத்த அம்புகளை எல்லாம், இலட்சுமணன் அடித்து ஒழித்தான். பிறகு இலட்சுமணன் தன் வில்லைக் கொண்டு, கும்பகர்ணனின் தேர் முதலியவற்றை ஒழித்தான். கும்பகர்ணன் மீதும் அம்புகளை ஏவி தாக்கினான். இதனால் கும்பகர்ணன் கடும்கோபம் கொண்டான்.

👉 இப்பொழுதே உன்னை கொல்கிறேன் எனக் கூறி இலட்சுமணன் மீது கூர்மையான சூலாயுதத்தை வீசினான். இலட்சுமணன் அந்த சூலாயுத்தை ஒழித்தான். இலட்சுமணன், கும்பகர்ணன் தரையில் நின்று போர் புரிவதைக் கண்டு, மனமிரங்கி, அனுமனின் தோளில் இருந்து இறங்கி போர் புரிந்தான். அப்பொழுது இராவணன், கும்பகர்ணனுக்கு துணையாக அரக்க சேனைகளை அனுப்பி வைத்தான். புதியதாக ஓர் அரக்க படைகள் வருவதைக் கண்ட வானரங்கள் அங்கிருந்து ஓடினர். பிறகு கும்பகர்ணன், சுக்ரீவனிடம் போர் புரிய தொடங்கினான். அப்போது கும்பகர்ணன், சுக்ரீவன் மீது ஓர் கூர்மையான சூலாயுதத்தை எறிந்தான். சூலாயுதம் வந்த வேகத்தைப் பார்த்த அங்கிருந்தவர்கள் இறந்தான்! இறந்தான்! எனக் கத்தினார்கள். இதனைப் பார்த்த அனுமன், மின்னலை போல் வேகமாகச் சென்று அச்சூலாயுத்ததை பிடித்து ஒடித்தான். இதைப் பார்த்த கும்பகர்ணன், அனுமனின் வலிமையை பாராட்டினான்.

தொடரும்...

RAMAYANAM PART 118

 இராமாயணம் தொடர்...118

கும்பகர்ணனின் போர்!!!

🌀 போர் தொடங்கியது. அரக்க சேனைகளும், வானர சேனைகளும் எதிர்த்துப் போர் புரிந்தன. வானர வீரர்கள் கற்களையும், மலைகளையும், பாறைகளையும் அரக்கர்கள் மீது எறிந்தனர். அரக்கர்கள் வில், வேல், சூலம் முதலிய ஆயுதங்களை வானரங்கள் மீது எறிந்தனர். அரக்கர்களின் வில்லில் இருந்து வெளிவந்த அம்பு பல வானரங்களை கொன்றது. பதிலுக்கு வானரங்களும் மலை, பாறை, கல், மரம் முதலியவற்றை தூக்கி எறிந்தனர். இப்படி போர் மிக கடுமையாக நடந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து கொண்டிருந்த தேவர்கள் திகைத்து நின்றனர். அப்பொழுது கும்பகர்ணன் போர்களத்திற்கு வந்தான். அவனிடம் பல வானரங்கள் அகப்பட்டனர். வானரங்கள் மலைகளை தூக்கி கும்பகர்ணன் மீது எறிந்தனர். ஆனால் அதை அவன் தூள் தூளாக்கினான்.

🌀 கும்பகர்ணன் தன்னிடம் அகப்பட்ட வானரங்களை வானத்தில் தூக்கி எறிந்தும், சில வானரங்களை வாயில் போட்டு உமிழ்ந்தும், சில வானரங்களை தன் கால்களால் மிதித்தும் கொன்றான். கும்பகர்ணன் இப்படி வானரங்களை கொன்று குவிப்பதை பார்த்த தேவர்கள் பயந்து ஓடினர். அப்போது நீலன், கும்பகர்ணன் மீது பெரும் மலையை தூக்கி எறிந்தான். கும்பகர்ணன் அதை தன் சூலத்தால் பொடி பொடியாக்கினான். பிறகு நீலன், கும்பகர்ணனின் தேரில் ஏறி அதிலிருந்த ஆயுதங்களை தூக்கி எறிந்தான். நீலன் எந்த ஆயுதங்களும் இல்லாமல் போர் புரிந்ததால், கும்பகர்ணனும் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை. நீலன் கும்பகர்ணனை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.

🌀 அப்போது கும்பகர்ணன், நீலனை தன் கையால் ஒரு தட்டு தட்டினான். இதனால் நீலன் மயங்கி கீழே விழுந்தான். இதைப் பார்த்த அங்கதன், கும்பகர்ணன் மீது ஓர் மலையை தூக்கி வீசினான். கும்பகர்ணன் அந்த மலையை தன் கைகளால் தூள் தூளாக்கினான். பிறகு அவன் அங்கதன் மீது ஓர் அம்பை ஏவினான். அங்கதன் அந்த அம்பை தன் கைகளால் பிடித்து கும்பகர்ணன் மீது எறிய ஓடி வந்தான். அப்போது கும்பகர்ணன், அங்கதனை பார்த்து, வானரமே! நீ யார்? வாலியின் மகனா? இல்லை சுக்ரீவனா? இல்லை இலங்கைக்கு தீ வைத்த அனுமனா? என்றான். அங்கதன், அரக்கப்படை தலைவனே! உன் அண்ணனான இராவணனை தன் வாலில் கட்டி, இரத்தம் சிந்த எட்டு திசைகளிலும் தாவி போர் புரிந்த வாலியின் மகன் நான். என் பெயர் அங்கதன்.

🌀 என் தந்தையை போலவே நானும் உன்னை என் வாலில் கட்டி இராமரின் பாதங்களில் வீழ்த்துவேன் என்றான். அப்போது கும்பகர்ணன், நீ சொல்வது சரிதான். உன் தந்தையை தன் ஓர் கணையால் வீழ்த்திய இராமனுக்கு நீ செய்ய வேண்டிய தொண்டு மிகவும் பாராட்டத்தக்கது என நகைத்தான். அப்போது அங்கதன், மலைகளை தூக்கி கும்பகர்ணன் மீது வீசினான். அம்மலை கும்பகர்ணன் மீது பட்டு பொடியானது. கும்பகர்ணன், தன் சூலாயுதத்தை அங்கதன் மீது வீசினான். அங்கதன் அந்த சூலாயுதத்தை தன் கைகளால் பிடித்து கும்பகர்ணன் மீது திருப்பி எறிந்தான். கும்பகர்ணன் அந்த சூலாயுதத்தை பொடி பொடியாக்கிவிட்டு அங்கதன் மார்பில் ஓங்கி குத்தினான். இதனால் அங்கதன் அந்த இடத்தில் மயங்கி விழுந்தான்.

தொடரும்...

Monday, November 13, 2023

RAMAYANAM PART 117

 இராமாயணம் தொடர்...!! 117

விபீஷணன் கும்பகர்ணனின் பாசம் !!!

👬 கும்பகர்ணன் சொன்னதைக் கேட்ட விபீஷணன், அண்ணா! நான் தங்களிடம் சேர்ந்துக் கொள்ள வரவில்லை. தங்களிடம் வேறு செய்தியை சொல்ல வந்துள்ளேன் என்றான். கும்பகர்ணன், அப்படியென்றால் நீ கொண்டு வந்த செய்தியைக் கூறு என்றான். அண்ணா! கருணையே வடிவான இராமர், தங்களை அவர்களுடன் சேர்ந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். தாங்கள் அறவழியில் நடப்பீர்கள் என்றால் இராமருடன் வந்து சேர்ந்துக் கொள்ளுங்கள். இதுவே என்னுடைய விருப்பம் ஆகும். நீங்கள் இராமருடன் சேர்ந்துக் கொண்டால் நாம் நம் குலத்தை சிறப்புடன் ஆட்சி செய்யலாம். இராமர், தங்கள் மீது கொண்ட இரக்கத்தாலும், என் மீது கொண்ட அன்பாலும் உங்களை அழைத்து வரும்படி என்னை அனுப்பியுள்ளார். நீங்கள் என்னுடன் வருவது எனது விருப்பமும் ஆகும் என்றான்.

👬 வீபீஷணன் கூறியதைக் கேட்டு, கும்பகர்ணன் கண்ணீர் தழும்ப விபீஷணனை தழுவிக் கொண்டான். விபீஷணா! உலக வாழ்க்கை நீரின் மேல் எழுதியதற்கு சமமாகும். என்னை நெடுங்காலம் வளர்த்த அண்ணனுக்காக உயிர் கொடுப்பது தான் என் கடமை. தன் கடமையை மறப்பவன் அறிவற்றவன். கடமை மட்டுமே உடைமை. என் துன்பத்தை நீ நீக்க வேண்டும் என நினைத்தால், நீ விரைந்துச் சென்று இராமனிடம் சேர்ந்துவிடு. பிரம்மன் உனக்கு எண்ணிலடங்கா வரத்தினை அளித்துள்ளார். அதனால் நீ சிரஞ்ஜீவியாக வாழப் போகிறவன். நீ அறவழியில் நடக்கும் இராமனிடம் இருப்பது தான் நியாயம். எனக்கு மரணமே புகழுக்குரியதாகும். இதுவரை எனக்கு உண்ண உணவும் அளித்து என்னை சுமந்த அண்ணனுக்கு உயிரை தருவது தான் சிறந்தது. இது என்னுடைய கடமையும் ஆகும்.

👬 நான் போரில் அனுமன், அங்கதன், சுக்ரீவன், நீலன் முதலிய வானர வீரர்களை வென்று என் ஆற்றலை இந்த உலகிற்கு காட்டுவேன். வானரங்களின் உயிரை துறப்பேன். நீ தாமதிக்காமல் இராம இலட்சுமணரிடம் சேர்ந்துக் கொள். நமக்குள் இனி எந்த பேச்சுவார்த்தையும் வேண்டாம். நாங்கள் இறந்த பிறகு, எங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நீ செய்வாயாக. இன்று நம் உறவு முடிந்து விட்டது. இனி நாம் இருவரும் சந்திக்கவும் வாய்ப்பில்லை. ஆதலால் நீ இங்கிருந்துச் செல் என்றான். பிறகு இருவரும் கண்ணீர் தழும்ப தழுவிக் கொண்டனர். கும்பகர்ணன், விபீஷணனுக்கு விடைக்கொடுத்து அங்கிருந்து சென்றான். வீபீஷணன் அகமும், முகமும் மிகவும் வாடிப் போனது. இனியும் கும்பகர்ணனிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை என நினைத்து அங்கிருந்து சென்றான். போகும் வழியில் நான் கும்பகர்ணனை எப்போது பார்க்கப் போகிறேன் என நினைத்து கும்பகர்ணனை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டுச் சென்றான்.

👬 கும்பகர்ணனும் தன் தம்பி விபீஷணனை பாசத்தோடு பார்த்தான். பிறகு இருவரும் அவரவர் வழியில் சென்றனர். விபீஷணன் இராமர் இருப்பிடத்தை அடைந்தான். அங்கு நடந்ததை அனைத்தையும் இராமரிடம் கூறினான், விபீஷணன். இராமர் விபீஷணனிடம், விபீஷணா! உன் முன்னால் உன் அண்ணன் கும்பகர்ணனை நான் எவ்வாறு கொல்ல முடியும்? அதற்காக தான் அவனை இங்கு அழைத்து வரச் சொன்னேன். ஆனால் கும்பகர்ணன் என் அழைப்பை மறுத்துவிட்டான். இனி என்னால் என்ன செய்ய முடியும். எல்லாம் விதியின் கையில் தான் உள்ளது என்றார். இப்படி இராமர் பேசிக் கொண்டிருக்கும் போது அரக்கப் படைகள், வானரப் படைகளை சூழ்ந்துக் கொண்டது. போர்க்களத்தில் பெரும் ஆரவாரம் உண்டானது.

தொடரும்...




Sunday, November 12, 2023

RAMAYANAM PART 116

 இராமாயணம் தொடர் 116

கும்பகர்ணன் போருக்குச் செல்ல விடைபெறுதல் !!!

★ கும்பகர்ணன், அண்ணா! முன்பு நீ தர்மத்தைக் கடைப்பிடித்ததால் வலிமையும், செல்வமும் உனக்குப் புகழைத் தந்தன. ஆனால் எப்போது நீ தர்மத்தை மீறினாயோ, அப்போதே உன் அழிவைத் நீ தேடிக் கொண்டு விட்டாய். இனி உன்னை எவராலும் காப்பாற்ற முடியாது. இராம இலட்சுமணரின் வாக்கில் சத்தியமும், குணத்தில் நல்லொழுக்கமும் நிறைந்துள்ளது. ஆனால் நமக்கு நெஞ்சில் வஞ்சகமும், வாக்கில் பொய்யும், செயலில் பாவமும் நிறைந்திருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் நமக்கு எப்படி வெற்றி உண்டாகும். நான் உனக்கு கடைசியாக ஒன்று சொல்கிறேன். கடலை கடந்து வந்த வானரங்களும் இன்னும் துணையாக இராம இலட்சுமணருக்கு இருக்கின்றனர். சீதை அசோக வனத்தில் பெரும் துன்பத்தில் உள்ளாள். வாலியின் மார்பைத் துளைத்த பாணமும் இன்னும் இராமனின் அம்புறா துணியில் உள்ளது.

★ ஆகவே, நீ சீதையை இராமரிடம் சென்று ஒப்படைத்துவிட்டு விபீஷணனுடன் சேர்ந்து வாழ்வதே நலம். அதுவே உனக்கும், நம் குலத்துக்கும் நல்லது. இல்லையென்றால் நம் அரக்க குலம் அழிவது நிச்சயம் என்றான். கும்பகர்ணனின் அறிவுரையைக் கேட்டு கொதித்து எழுந்த இராவணன், காலினால் நிலத்தை ஓங்கி மிதித்தான். கும்பகர்ணா! எனக்கு அறிவுரை சொல்ல நான் உன்னை இங்கு அழைக்கவில்லை. நீ எனக்கு அறிவுரை கூற அவசியமும் இல்லை. நான் ஆயிரம் பேருக்கு அறிவுரை கூறுபவன். நான் கல்லாத கலையும் இல்லை, நான் வெல்லாத போரும் இல்லை. வெள்ளிமலையை அள்ளி எடுத்த தோள்களை உடைய என்னை அந்த மனிதர்கள் அசைக்க முடியாது. அந்த குரங்குகளை போல் அந்த மனிதர்களை வணங்கி விபீஷணனுடன் சேர்ந்துக் கொள். அது தான் உனக்கு பொருந்தும். உன் வீரம் பயனற்று போனது.

★ நீ போருக்கு தகுதி இல்லாதவனாக ஆகிவிட்டாய். போ! இன்னும் மாமிசங்களும், கள்ளும் மீதம் உள்ளது. அதை உண்டு விட்டு போய் உறங்கு. என் பகைவரை எப்படி அழிப்பது என்பது எனக்கு தெரியும். நீ இங்கிருந்து செல் என்றான். பிறகு இராவணன் தன் ஏவலாட்களை அழைத்து, என் தேரையும், ஆயுதங்களையும் கொண்டு வருக. நானே போருக்குச் சென்று அனைவரையும் ஒழிப்பேன் என எழுந்தான். அப்பொழுது கும்பகர்ணன் இராவணனை பணிந்து வணங்கி, அண்ணா! என்னை பொறுத்தருள வேண்டும். நீ போருக்குச் செல்ல வேண்டாம். அடியேன் போருக்குச் செல்கிறேன். ஆனால் நான் திரும்பி வருவேன் என்பதை என்னால் சொல்ல இயலாது. நான் போரில் இறந்துவிட்டால் நீ சீதையை இராமனிடம் ஒப்படைப்பது தான் நலம். என்னை வென்றவர் தங்களையும் வெல்வர். உன் அரக்க படைகள் அழிவதும் நிச்சயம்.

★ உன் மகன் இந்திரஜித் போருக்குச் சென்றால், அவன் இலட்சுமணனின் வில்லினால் அழிவது நிச்சயம். பிறகு உனக்கு ஏற்படும் முடிவை அறிந்துக் கொண்டு அதற்கேற்ப முயற்சி செய். நான் கடைசியாக உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் இதுநாள் வரைக்கும் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவற்றை பொறுத்தருள வேண்டும். இனி நான் தங்கள் முன் நின்று கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை என கண்ணீர் மல்க இராவணனை ஏற இறங்க பார்த்துவிட்டு, மனம் நொந்து போருக்கு புறப்பட்டான். அண்ணா! நான் விடைப்பெற்று கொள்கிறேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். இராவணனின் கண்களில் கண்ணீர் நிரம்ப அசையாது கும்பகர்ணனை பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு கூடியிருந்த அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர்.

தொடரும்...

RAMAYANAM PART 115

 இராமாயணம் தொடர்...115

கும்பகர்ணனின் அறிவுரை!...

👉 மறுபடியும் கிங்கரர்கள் இராவணனிடம் சென்று, கும்பகர்ணன் எழவில்லை என்றனர். இராவணன் குதிரை படைகளை கும்பகர்ணன் மீது ஓடவிட்டு எழுப்புங்கள் எனக் கட்டளையிட்டான். அவ்வாறே கிங்கரர்களும் செய்தனர். ஆனால் இதுவும் பயனற்று போனது. குதிரை படைகள் கும்பகர்ணன் மீது சென்றது அவனுக்கு தாலாட்டுவது போல் இருந்தது. இதனால் அவன் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றான். இவ்வளவு முயற்சி செய்தும் கும்பகர்ணன் எழுந்தபாடில்லை என இராவணனிடம் சென்று கூறினர். இதற்கு மேல் என்ன செய்வதென்று ஆலோசனைக் கேட்டனர். இராவணன் அவர்களிடம், வாள், சூலம், உலக்கை இவற்றைக் கொண்டு தாக்கியாவது கும்பகர்ணனை எழுப்புங்கள் என்றான். பிறகு ஆயிரம் வீரர்கள் கும்பகர்ணனின் கன்னங்களில் வாள், சூலம், உலக்கை கொண்டு தாக்கினர். அப்பொழுது கும்பகர்ணன் ஓர் பூதம் போல் எழுந்து அமர்ந்தான்.

👉 தூக்கத்தில் இருந்து எழுந்த கும்பகர்ணனால் பசியை தாங்க முடியவில்லை. உடனே அவன் உணவு எங்கே? என்றான். உடனே சமைக்கப்பட்ட உணவுகள் வண்டி வண்டியாக கொண்டு வரப்பட்டது. பிறகு நூற்றுக்கணக்கான குடங்களில் கொண்டு வரப்பட்ட கள் அனைத்தையும் குடித்தான். இவ்வளவு சாப்பிட்ட பிறகும் கும்பகர்ணனுக்கு பசி இன்னும் அதிகமானது. பசி அடங்காததால் ஆயிரத்து இருநூறு எருமை கடாக்களை தின்ற பிறகு அவன் சிறிது பசியாறினான். பிறகு அவன் உறங்கச் சென்றான். அப்போது கிங்கரர்கள் பயந்து சென்று உன் அண்ணன் இராவணன் அழைத்ததாக அவன் காதில் சென்று கூறினார்கள். பிறகு அவன் ஒரு நெடுமலையை போல் எழுந்துச் சென்றான். கும்பகர்ணன் அரசவை சென்றடைந்ததும், இராவணனின் கால்களில் வீழ்ந்து வணங்கினான். இராவணன், கும்பகர்ணனை தன் தோளோடு தழுவிக் கொண்டான்.

👉 அங்கு கும்பகர்ணன் தனக்கு விசாலமாக இருக்கும் ஓர் அரியணையில் அமர்ந்தான். பிறகு இராவணன், கும்பகர்ணனுக்கு நல்ல உடைகளையும், விசேஷமான ஆபரணங்களையும் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தான். சந்தனக் குழம்பைக் கொண்டு வரச் செய்து, அதையும் அவன் உடலெங்கும் பூசிக்கொள்ளச் செய்தான். அவன் மார்பில் கவசத்தை அணிவித்து, நெற்றியில் வீர பட்டத்தைக் கட்டி போருக்குத் தயார் செய்தான். இதையெல்லாம் பார்த்த கும்பகர்ணன் இராவணனிடம், 'எனக்குச் சிறப்பு செய்வதெல்லாம் எதற்காக" என்றான். அதற்கு இராவணன், இரண்டு மானிடர்கள், எழுபது வெள்ளம் வானர சேனையோடு இங்கு வந்துள்ளனர். அவர்கள் இலங்கையை சூழ்ந்து போரிட்டு, என்னையும் வென்று விட்டார்கள். ஆதலால் நீ சென்று அவர்களை உன் பசிக்கு இரையாக்கிக் கொள் என்றான். இதைக் கேட்டதும் கும்பகர்ணன் திடுக்கிட்டான்.

👉 அண்ணா! போர் வந்துவிட்டதா! கற்புடைய சீதையின் துயரம் இன்னமும் தீரவில்லையோ? தேவலோகத்திலும், மண்ணுலகத்திலும் வளர்ந்த நமது புகழ் அழிந்து போனதோ? நாம் அனைவருமே அழியப் போகும் காலம் வந்து விட்டதோ? ஒருவனுக்கு நிலம் காரணமாகவும், பதவி காரணமாகவும் போர் வரும். ஆனால் உனக்கு ஒரு பெண்ணின் காரணமாக போர் வந்துவிட்டது. ஆனால் இன்று உனக்கு சீதையினால் அழிவு நேர்ந்து விட்டதே! அன்று அரசவை ஆலோசனையின் போது நானும், விபீஷணனும், பாட்டன் மாலியவானும் சீதையை விடுவிக்குமாறு சொன்ன அறிவுரைகளை நீ கேட்கவில்லை. விதியின் செயலை நாம் என்ன செய்வது? நம் குலத்தின் பண்பு அழிந்துவிட்டது. நம் உறவினர்களும், சேனைகளும், நம் குலமும் அழிய வழிவகுத்து விட்டாய். உன் நிலைமையை நினைத்தால் என் உள்ளம் பதறுகிறது. இனி நம் அசுர குலம் வாழுமோ! வாழாதோ! என்பது தெரியவில்லை என்றான்.

தொடரும்...

RAMAYANAM PART 114

 இராமாயணம் தொடர்..114

கும்பகர்ணனை எழுப்புதல் !!!

🌀 இராவணன் சொன்னதைக் கேட்ட மாலியவான், பேரனே! நீ போருக்கு செல்வதற்கு முன், நான் இராமனின் திறமையைப் பற்றி கூறினேன். ஆனால் நீ அதை அலட்சியம் செய்துவிட்டாய். உன் தம்பி விபீஷணன் கூறியவற்றையும் நீ கேட்கவில்லை. மாற்றான் மனைவியை விரும்பினால், நெருப்பில் விழுந்த புழுவின் நிலைமை தான் கிடைக்கும். கற்பில் சிறந்தவளாய் விளங்கும் சீதையை விரும்புவது தவறானது. ஆதலால் நீ சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிட்டு இராமனின் கருணையை பெறுவாயாக. இதனால் உன் அசுர குலமும் தழைக்கும் என்றார். அப்பொழுது அரசவையின் முதலமைச்சர் மகோதரன் அங்கு வந்தான். அவன் மாய வேலை செய்வதில் வல்லவன். மகோதரன் இராவணனிடம், அரசே! ஒருவன் மனதில் அச்சம் வந்துவிட்டால் அது அவனை அழித்துவிடும். உன் ஆற்றலுக்கு நிகரானவர் இவ்வுலகில் எவரும் இல்லை.

🌀 அனைத்தையும் வென்றவன் நீ என்பதை புரிந்துக் கொள். இன்று வெல்பவர் நாளை தோற்பார். இன்று தோற்றவர் நாளை வெல்வார். இதுவே உலக நியதி. ஆதலால் நீ உன் பாட்டன் சொல்லைக் கேட்டு சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிடாதே. இவ்வாறு செய்தால் தேவர்கள் உன்னை பார்த்து சிரிப்பார்கள். இவ்வாறு நீ வருந்திக் கொண்டு இருந்தால் அந்த வானரங்கள் நம்மை எளிதாக அழித்துவிடுவார்கள். இன்று நீ தோற்றிருக்கலாம். நாளை நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் என்பதை மனதில் கொள்! என இராவணனை ஊக்கப்படுத்தினான். பிறகு மகோதரன், உன் தம்பி கும்பகர்ணனை அனுப்பலாம் என்றான். மகோதரனின் சொல்லைக் கேட்ட இராவணன், மனம் தேறினான். உடனே தன் ஏவலாட்களை அனுப்பி கும்பகர்ணனை அழைத்து வரும்படி கட்டளையிட்டான். ஏவலர்கள் கும்பகர்ணனின் மாளிகையை அடைந்தனர். அங்கு கும்பகர்ணன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.

🌀 ஏவலர்கள் கும்பகர்ணனை எழுப்ப முயன்றனர். எவ்வளவு முயன்றும் கும்பகர்ணனை அவர்களால் எழுப்ப முடியவில்லை. பிறகு அவர்கள் இரும்புத் தூணால் அவன் தலையிலும் செவியிலும் மோதினார்கள். அதற்கும் அவன் செவி சாய்க்காமல் தூங்கிக் கொண்டிருந்தான். பிறகு கிங்கரர்கள் வந்து இரும்பு உலக்கையினால் கும்பகர்ணனை இடித்து எழுப்ப முயன்றனர். இவர்கள் எவ்வளவு முயன்றும் கும்பகர்ணனை எழுப்ப முடியவில்லை. பிறகு கிங்கரர்கள் இராவணனிடம் சென்று கும்பகர்ணனை எவ்வளவு முயன்றும் உறக்கத்தில் இருந்து எழுப்ப முடியவில்லை என்றனர். இராவணன், யானைகளை விட்டு மிதிக்கச் செய்து எழுப்புங்கள் என்றான். அவ்வாறே யானைகளை விட்டு மிதிக்கச் செய்து கும்பகர்ணனை எழுப்ப முயன்றனர். அப்படியும் கும்பகர்ணன் எழுந்தபாடில்லை. மறுபடியும் கிங்கரர்கள் இராவணனிடம் சென்று யானைகள் மிதித்தும் கும்பகர்ணன் எழவில்லை என்றனர்.

🌀 இராவணன், ஆயிரம் மல்லர்களை அழைத்து வந்து கும்பகர்ணனை எழுப்பச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். மல்லர்கள் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் உறங்கி கொண்டிருக்கும் கும்பகர்ணனை பார்த்து பயந்து நடுங்கினார்கள். அவர்கள் கும்பகர்ணனை அடித்து எழுப்ப பயந்து அவன் காதருகில் சங்கு, தாரை போன்ற ஊது கருவிகளை கொண்டு பெரும் ஓசை எழுப்பினர். இதற்கும் கும்பகர்ணன் சிறிதும் அசைவு கொடுக்கவில்லை. பிறகு கிங்கரர்கள், படைகலன்களில் தேர்ச்சிப் பெற்ற வீரர்களை அழைத்துவந்து கொம்பு, வலிமையுடைய தண்டு, சம்மட்டி, ஈட்டி போன்றவற்றைக் கொண்டு கும்பகர்ணனின் மார்பிலும், தலையிலும், தாடையிலும், மூட்டுகளிலும் அடித்தனர். அவர்கள் எவ்வளவு அடித்தும் கும்பகர்ணன் எழுந்தபாடில்லை. அவர்கள் தான் அடித்து அடித்து சோர்ந்து போனார்கள்.

தொடரும்...

RAMAYANAM PART 113

 இராமாயணம் தொடர் 113

இராவணனின் கவலை !!!

👉 தோல்வி என்பதை அறியாத இராவணன் இன்று தன் வீரத்திற்கு இழுக்கு நேர்ந்துவிட்டதை நினைத்து இராவணனால் ஒன்றும் பேச முடியவில்லை. இன்று ஒரு மனிதன் தன்னை 'இன்று போய் நாளை வா" என்று சொல்லும் அளவிற்கு தன் நிலைமை தாழ்ந்து போனதை நினைத்து ஏளனமாக சிரித்தான். பிறகு இராவணன் நிலத்தை பார்த்தவாறே தன் அரண்மனையை நோக்கிச் சென்றான்.முதல் போர் முடிவு பெற்றது.

👉 இறுதியாக இராவணனிடம் இருந்தது வீரம் மட்டும் தான். இராவணன் போரில் தன் பெருமைகளை இழந்துவிட்டு, இராமர் கொடுத்த உயிர் பிச்சையை மட்டும் வைத்துக் கொண்டு அரண்மனை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இராவணன் இலங்கைக்குள் நுழையும் போது சூரியன் மறைய தொடங்கியது. இராவணன் இலங்கையில் நுழையும் போது அவன் எத்திசையும், யாரையும் பார்க்கவில்லை. தலையை குனிந்தவாறு அரண்மனை நோக்கி சென்று கொண்டிருந்தான். அரண்மனையில் இராவணன் வரும்போது இருக்கும் பரபரப்பு அன்று அங்கு தென்படவில்லை. அங்கு இராவணனின் மனைவிமார்களும், உறவினர்களும், சேனைத்தலைவர்களும் நின்று கொண்டிருக்க அவன் யாரையும் பார்க்காமல் நேராக தன் அறைக்குச் சென்று போரில் எவ்வாறு வெல்வது என்பதைப் பற்றி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான்.

👉 இராவணன் மெய்க்காப்பாளனை அழைத்து தூதர்கள் நால்வரை அழைத்து வரும்படி சொன்னான். உடனே தூதர்கள் நால்வரும் அங்கு வந்துச் சேர்ந்தார்கள். அவர்கள் மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் என்பவர்கள். இராவணன் அவர்களிடம் நான்கு திசைகளுக்கும் சென்று அரக்கர்களை ஒன்று திரட்டி வரும்படி கூறினான். பின் இராவணன் யாரையும் பார்க்க விருப்பமின்றி தன் படுக்கைக்குச் சென்றான். சீதையை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டிருந்த இராவணனுக்கு இப்பொழுது கவலை தொற்றிக் கொண்டது. கவலையால் இராவணனுக்கு தூக்கம் வரவில்லை. நான் பெற்ற தோல்வியைக் கண்டு தேவர்கள் சிரிப்பார்கள். என் பகைவர்களும், மண்ணுலகத்தில் உள்ளோரும் சிரிப்பார்கள்.

👉 அது மட்டுமின்றி அழகும், அன்பும், மென்மையும் உடைய சீதை என்னைப் பார்த்து சிரிப்பாளே என நினைத்து கவலை கொண்டான். இராவணன் தூக்கம் வராமல் தன் படுக்கையில் இருந்து எழுந்து அரசவைக்குச் சென்று தன் அரியணையில் அமர்ந்தான். இராவணன் கவலையுடன் இருப்பதைக் கண்டு இராவணனின் பாட்டன் மாலியவான், எழுந்து அன்புடன் கேட்டார். பேரப்பிள்ளையே! உன் முகம் ஏன் இவ்வளவு வாடி இருக்கின்றது. உன் துன்பத்திற்கான காரணம் என்னவென்று கேட்டார். இராவணன், பல வெற்றிகளை கண்ட நான் இன்று ஒரு மனிதனிடம் தோற்றுவிட்டேன். இராமன் என் சேனைகள் அனைத்தையும் அழித்து விட்டான். இந்திரன், சிவன், திருமால் ஆகிய மூவரையும் வென்ற பேராற்றல் உடைய நான், இராமனிடம் இன்று தோற்றுவிட்டேன்.

👉 நான் திக் விஜயம் செய்தபோது இந்திரன், திருமால், பிரம்மன், ஈசன் என அனைவரையும் வென்று விட்டேன். ஆனால் இன்று ஒரு மனிதனான இராமனை என்னால் வெல்ல முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். இராமன் வீரம் நிறைந்தவன். அவன் என்னுடன் போர் புரியும்போது கோபமோ, பரபரப்போ தெரியவில்லை. மிகவும் நுணுக்கமாக போர் புரிந்தான். இன்று அவன் மிகுந்த கோபத்துடன் போர் புரிந்திருந்தால் நான் இன்று தங்கள் முன் பேசி கொண்டிருக்கமாட்டேன். இராமனின் போரின் வீரத்தை நான் என்னவென்று சொல்வது? இராமனின் பாணங்கள் அனைத்தும் எரிக்கும் வல்லமை உடையது. இராமரிடம் தன் பெருமைகள் அனைத்தையும் இழந்துவிட்டு, இங்கு வந்துள்ளேன் என மிகவும் வருத்தத்துடன் கூறினான்.

தொடரும்...