இராமாயணம் தொடர் 116
கும்பகர்ணன் போருக்குச் செல்ல விடைபெறுதல் !!!
★ கும்பகர்ணன், அண்ணா! முன்பு நீ தர்மத்தைக் கடைப்பிடித்ததால் வலிமையும், செல்வமும் உனக்குப் புகழைத் தந்தன. ஆனால் எப்போது நீ தர்மத்தை மீறினாயோ, அப்போதே உன் அழிவைத் நீ தேடிக் கொண்டு விட்டாய். இனி உன்னை எவராலும் காப்பாற்ற முடியாது. இராம இலட்சுமணரின் வாக்கில் சத்தியமும், குணத்தில் நல்லொழுக்கமும் நிறைந்துள்ளது. ஆனால் நமக்கு நெஞ்சில் வஞ்சகமும், வாக்கில் பொய்யும், செயலில் பாவமும் நிறைந்திருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் நமக்கு எப்படி வெற்றி உண்டாகும். நான் உனக்கு கடைசியாக ஒன்று சொல்கிறேன். கடலை கடந்து வந்த வானரங்களும் இன்னும் துணையாக இராம இலட்சுமணருக்கு இருக்கின்றனர். சீதை அசோக வனத்தில் பெரும் துன்பத்தில் உள்ளாள். வாலியின் மார்பைத் துளைத்த பாணமும் இன்னும் இராமனின் அம்புறா துணியில் உள்ளது.
★ ஆகவே, நீ சீதையை இராமரிடம் சென்று ஒப்படைத்துவிட்டு விபீஷணனுடன் சேர்ந்து வாழ்வதே நலம். அதுவே உனக்கும், நம் குலத்துக்கும் நல்லது. இல்லையென்றால் நம் அரக்க குலம் அழிவது நிச்சயம் என்றான். கும்பகர்ணனின் அறிவுரையைக் கேட்டு கொதித்து எழுந்த இராவணன், காலினால் நிலத்தை ஓங்கி மிதித்தான். கும்பகர்ணா! எனக்கு அறிவுரை சொல்ல நான் உன்னை இங்கு அழைக்கவில்லை. நீ எனக்கு அறிவுரை கூற அவசியமும் இல்லை. நான் ஆயிரம் பேருக்கு அறிவுரை கூறுபவன். நான் கல்லாத கலையும் இல்லை, நான் வெல்லாத போரும் இல்லை. வெள்ளிமலையை அள்ளி எடுத்த தோள்களை உடைய என்னை அந்த மனிதர்கள் அசைக்க முடியாது. அந்த குரங்குகளை போல் அந்த மனிதர்களை வணங்கி விபீஷணனுடன் சேர்ந்துக் கொள். அது தான் உனக்கு பொருந்தும். உன் வீரம் பயனற்று போனது.
★ நீ போருக்கு தகுதி இல்லாதவனாக ஆகிவிட்டாய். போ! இன்னும் மாமிசங்களும், கள்ளும் மீதம் உள்ளது. அதை உண்டு விட்டு போய் உறங்கு. என் பகைவரை எப்படி அழிப்பது என்பது எனக்கு தெரியும். நீ இங்கிருந்து செல் என்றான். பிறகு இராவணன் தன் ஏவலாட்களை அழைத்து, என் தேரையும், ஆயுதங்களையும் கொண்டு வருக. நானே போருக்குச் சென்று அனைவரையும் ஒழிப்பேன் என எழுந்தான். அப்பொழுது கும்பகர்ணன் இராவணனை பணிந்து வணங்கி, அண்ணா! என்னை பொறுத்தருள வேண்டும். நீ போருக்குச் செல்ல வேண்டாம். அடியேன் போருக்குச் செல்கிறேன். ஆனால் நான் திரும்பி வருவேன் என்பதை என்னால் சொல்ல இயலாது. நான் போரில் இறந்துவிட்டால் நீ சீதையை இராமனிடம் ஒப்படைப்பது தான் நலம். என்னை வென்றவர் தங்களையும் வெல்வர். உன் அரக்க படைகள் அழிவதும் நிச்சயம்.
★ உன் மகன் இந்திரஜித் போருக்குச் சென்றால், அவன் இலட்சுமணனின் வில்லினால் அழிவது நிச்சயம். பிறகு உனக்கு ஏற்படும் முடிவை அறிந்துக் கொண்டு அதற்கேற்ப முயற்சி செய். நான் கடைசியாக உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் இதுநாள் வரைக்கும் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவற்றை பொறுத்தருள வேண்டும். இனி நான் தங்கள் முன் நின்று கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை என கண்ணீர் மல்க இராவணனை ஏற இறங்க பார்த்துவிட்டு, மனம் நொந்து போருக்கு புறப்பட்டான். அண்ணா! நான் விடைப்பெற்று கொள்கிறேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். இராவணனின் கண்களில் கண்ணீர் நிரம்ப அசையாது கும்பகர்ணனை பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு கூடியிருந்த அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர்.
தொடரும்...
No comments:
Post a Comment