இராமாயணம் தொடர்...119
கும்பகர்ணனின் போர் திறன் !!!
👉 அங்கதன் மயங்கி கீழே விழுந்ததை பார்த்த அனுமன் அங்கே ஓடி வந்தான். ஓர் பெரிய மலையை தூக்கி கும்பகர்ணனை நோக்கி வீசினான். கும்பகர்ணன் அம்மலையை தன் கையால் பிடித்து திரும்ப அனுமன் மீது வீசினான். அப்போது வானர வீரர்கள், அங்கதனை அங்கிருந்து தூக்கிச் சென்றனர். அனுமன் மறுபடியும் ஓர் மலையை தூக்கி, அரக்கனே! இந்த மலையை நான் உன் மேல் எறிவேன். இந்த மலையை உன்னால் தவிர்க்க முடியுமானால் நீ மிகவும் வலிமைமிக்கவன். உன் வலிமையை அனைவரும் போற்றுவர். அப்படி இல்லாமல் இந்த மலையால் தாக்கப்பட்டால் நீ என்னிடம் தோற்றவன் ஆவாய் பிறகு உனக்கும் எனக்கும் போர் இல்லை. நான் இங்கிருந்து சென்றுவிடுவேன் என்றான். கும்பகர்ணன் இதைக் கேட்டு, நான் உன் வலிமைக்கு குறைந்தவன் இல்லை எனக் கூறி சம்மதித்தான்.
👉 பிறகு அனுமன் அந்த மலையை கும்பகர்ணன் மீது தூக்கி எறிந்தான். கும்பகர்ணன் அந்த மலையை தூள் தூளாக்கினான். இதனைப் பார்த்த அனுமன், இவன் மிகவும் வலிமை படைத்தவன். இவனை இராமரை தவிர வேறு எவராலும் கொல்ல முடியாது என நினைத்து அங்கிருந்துச் சென்றான். அப்பொழுது இலட்சுமணன் அங்கு வந்து போர் புரிவதற்கான அடையாளமான தன் நாணை இழுத்து பெரும் ஓசையை எழுப்பினான். பிறகு அங்கு ஆயிரமாயிரம் அம்புகளை ஏவி அரக்கப் படைகளை கொன்று குவித்தான். இலட்சுமணனின் கரவேகத்தை கண்டு கும்பகர்ணன் வியந்தான். பிறகு கும்பகர்ணன், இலட்சுமணன் முன்வந்து நின்றான். கும்பகர்ணன் தேரின் மீது ஏறி நின்று போர் புரிந்தான். இதனைப் பார்த்த அனுமன், இலட்சுமணை தன் தோளில் ஏறி நின்று போர் புரியச் செய்தான்.
👉 கும்பகர்ணன் இலட்சுமணனை பார்த்து, இலட்சுமணா! நீயோ! இராமனின் தம்பி, நானோ இராவணனின் தம்பி. நம் இருவரின் போரை காண தேவர்கள் முதலானோர் இங்கு வந்துள்ளனர். சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த உன்னை, இன்று அடியோடு ஒழிப்பேன் என்றான். இலட்சுமணன், அரக்கனே! வீரர்கள் சொல்லால் பெருமை பேச மாட்டார்கள். வில்லால் தான் பேசுவார்கள். உன்னைப் போல் வீண் பேச்சு பேச நான் விரும்பவில்லை. நான் என் வில்லினால் பேசுவேன் என்றான். இலட்சுமணனுக்கும், கும்பகர்ணனுக்கும் மிக கடுமையாக போர் நடந்தது. கும்பகர்ணன் விடுத்த அம்புகளை எல்லாம், இலட்சுமணன் அடித்து ஒழித்தான். பிறகு இலட்சுமணன் தன் வில்லைக் கொண்டு, கும்பகர்ணனின் தேர் முதலியவற்றை ஒழித்தான். கும்பகர்ணன் மீதும் அம்புகளை ஏவி தாக்கினான். இதனால் கும்பகர்ணன் கடும்கோபம் கொண்டான்.
👉 இப்பொழுதே உன்னை கொல்கிறேன் எனக் கூறி இலட்சுமணன் மீது கூர்மையான சூலாயுதத்தை வீசினான். இலட்சுமணன் அந்த சூலாயுத்தை ஒழித்தான். இலட்சுமணன், கும்பகர்ணன் தரையில் நின்று போர் புரிவதைக் கண்டு, மனமிரங்கி, அனுமனின் தோளில் இருந்து இறங்கி போர் புரிந்தான். அப்பொழுது இராவணன், கும்பகர்ணனுக்கு துணையாக அரக்க சேனைகளை அனுப்பி வைத்தான். புதியதாக ஓர் அரக்க படைகள் வருவதைக் கண்ட வானரங்கள் அங்கிருந்து ஓடினர். பிறகு கும்பகர்ணன், சுக்ரீவனிடம் போர் புரிய தொடங்கினான். அப்போது கும்பகர்ணன், சுக்ரீவன் மீது ஓர் கூர்மையான சூலாயுதத்தை எறிந்தான். சூலாயுதம் வந்த வேகத்தைப் பார்த்த அங்கிருந்தவர்கள் இறந்தான்! இறந்தான்! எனக் கத்தினார்கள். இதனைப் பார்த்த அனுமன், மின்னலை போல் வேகமாகச் சென்று அச்சூலாயுத்ததை பிடித்து ஒடித்தான். இதைப் பார்த்த கும்பகர்ணன், அனுமனின் வலிமையை பாராட்டினான்.
தொடரும்...
No comments:
Post a Comment