Friday, November 17, 2023

RAMAYANAM PART 120

 இராமாயணம் தொடர் - 120

கும்பகர்ணன் சுக்ரீவனை தூக்கி செல்லுதல் !!!

அனுமனின் வலிமையைக் கண்ட கும்பகர்ணன், நீ என்னுடன் போர் புரிய வா என்று அழைத்தான். அதற்கு அனுமன், நான் உன்னுடன் போர் செய்ய மாட்டேன் என முடிவு செய்த பிறகு உன்னுடன் போர் செய்வது தவறு எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றான். அப்பொழுது சுக்ரீவன், கும்பகர்ணனை தன் கைகளால் தாக்க தொடங்கினான். மிகவும் பலம் கொண்டு சுக்ரீவன் அவனைத் தாக்கினான். கும்பகர்ணன் அவனை பார்த்து, உன் வலிமை மிகவும் சிறந்தது. ஆனால் இன்று நான் உன்னை அழித்து விடுகிறேன் என்றான். பிறகு இருவரும் எதிரும் புதிருமாக மாறி மாறி சண்டையிட்டனர். இருவருக்கும் இடையில் கடும்போர் நிகழ்ந்தது. இருவரும் வெகுநேரம் சோர்வடையாமல் சண்டையிட்டனர். கும்பகர்ணனின் அடியை சுக்ரீவனால் தாங்க முடியவில்லை. இதனால் அவன் மயங்கி கீழே விழுந்தான்.

மயங்கிய சுக்ரீவனை, கும்பகர்ணன் தன் தோளில் தூக்கிக் கொண்டு நகருக்குள் சென்றான். அப்பொழுது சுக்ரீவன் எந்த உணர்வின்றி மயங்கி இருந்தான். அங்கிருந்த வானரங்கள், தங்கள் அரசன் கும்பகர்ணனின் கையில் அகப்பட்டு செல்வதைப் பார்த்து மிகவும் புலம்பி அழுதனர். இதைப் பார்த்த அரக்கர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். கும்பகர்ணன் சுக்ரீவனை தூக்கிச் செல்வதை பார்த்த அனுமன், இவனிடம் நான் சண்டையிட மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டேனே என நினைத்து என்ன செய்வதென்று தெரியாமல் கும்பகர்ணனை பின் தொடர்ந்து சென்றான். வானரங்கள் ஓடிச் சென்று இராமரிடம், எங்கள் அரசன் சுக்ரீவனை கும்பகர்ணன் தூக்கி கொண்டு செல்கிறான். இனி எங்களுக்கு யார் துணை எனக் கூறி அழுதார்கள். இதைக் கேட்ட இராமர், நெருப்பு போல் கண்கள் சிவக்க எழுந்தார்.

தன் வில் மற்றும் அம்பை கையில் எடுத்துக் கொண்டு கணப்பொழுதில் இலங்கை நகர் வாயிலை அடைந்தார். இராமர், சுக்ரீவனை இலங்கை நகருக்குள் கொண்டு சென்று விட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என நினைத்து, கோட்டையின் வாயில்கள் அனைத்தையும் தன் அம்புகளை ஏவி அடைத்தார். அந்த அம்புகளை கடந்து இலங்கை நகருக்குள் செல்ல கும்பகர்ணனால் முடியவில்லை. பிறகு மிதிலை கடந்து போக நினைத்த அவனுக்கு அங்கும் அம்புகள் அவனை தடுத்தது. பிறகு அவன் இலங்கை நகருக்கு திரும்ப முடியாமல் திரும்பினான். திரும்பும்போது இராமர் அவனை எதிர்த்து நிற்பதை கண்டான். இராமா! உனக்காக தான் நான் காத்துக் கொண்டு இருந்தேன். வலிமையுடையவர் செய்யும் போரில், நான் உன் தம்பி இலட்சுமணனுடனும் போர் செய்யவில்லை, அனுமனுடனும் போர் செய்யவில்லை, சுக்ரீவனிடமும் போர் செய்யவில்லை.

ஏனென்றால் இவர்கள் யாரும் எனக்கு நிகரானவர்கள் இல்லை. உனக்காக தான் நான் காத்து கொண்டிருந்தேன். இந்த சுக்ரீவனை நீ காப்பாய் என்றால் நிச்சயம் நீ சீதையை மீட்பாய் என்றான். கும்பகர்ணன் பேசியதைக் கேட்டு இராமர் புன்னகைத்தார். பிறகு இராமர், சுக்ரீவனை தூக்கி கொண்டு வந்த உன்னையும், மலை போல் உள்ள உன் தோளையும் நான் சாய்க்கவில்லை என்றால் உனக்கு தோற்றவன் ஆவேன் என்று கூறிவிட்டு கும்பகர்ணனின் நெற்றியை குறி வைத்து அம்புகளை எய்தினார். பிறகு கும்பகர்ணனின் நெற்றியில் இருந்து இரத்தம் ஆறு போல் வலிந்தது. அந்த இரத்தம் சுக்ரீவனின் முகத்தில் பட்டு, மயக்கம் தெளிந்து எழுந்தான். அப்பொழுது கும்பகர்ணன் மயங்கி ஒரு மலை விழுவது போல் கீழே விழுந்தான்.

தொடரும்...

No comments:

Post a Comment