Monday, November 13, 2023

RAMAYANAM PART 117

 இராமாயணம் தொடர்...!! 117

விபீஷணன் கும்பகர்ணனின் பாசம் !!!

👬 கும்பகர்ணன் சொன்னதைக் கேட்ட விபீஷணன், அண்ணா! நான் தங்களிடம் சேர்ந்துக் கொள்ள வரவில்லை. தங்களிடம் வேறு செய்தியை சொல்ல வந்துள்ளேன் என்றான். கும்பகர்ணன், அப்படியென்றால் நீ கொண்டு வந்த செய்தியைக் கூறு என்றான். அண்ணா! கருணையே வடிவான இராமர், தங்களை அவர்களுடன் சேர்ந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். தாங்கள் அறவழியில் நடப்பீர்கள் என்றால் இராமருடன் வந்து சேர்ந்துக் கொள்ளுங்கள். இதுவே என்னுடைய விருப்பம் ஆகும். நீங்கள் இராமருடன் சேர்ந்துக் கொண்டால் நாம் நம் குலத்தை சிறப்புடன் ஆட்சி செய்யலாம். இராமர், தங்கள் மீது கொண்ட இரக்கத்தாலும், என் மீது கொண்ட அன்பாலும் உங்களை அழைத்து வரும்படி என்னை அனுப்பியுள்ளார். நீங்கள் என்னுடன் வருவது எனது விருப்பமும் ஆகும் என்றான்.

👬 வீபீஷணன் கூறியதைக் கேட்டு, கும்பகர்ணன் கண்ணீர் தழும்ப விபீஷணனை தழுவிக் கொண்டான். விபீஷணா! உலக வாழ்க்கை நீரின் மேல் எழுதியதற்கு சமமாகும். என்னை நெடுங்காலம் வளர்த்த அண்ணனுக்காக உயிர் கொடுப்பது தான் என் கடமை. தன் கடமையை மறப்பவன் அறிவற்றவன். கடமை மட்டுமே உடைமை. என் துன்பத்தை நீ நீக்க வேண்டும் என நினைத்தால், நீ விரைந்துச் சென்று இராமனிடம் சேர்ந்துவிடு. பிரம்மன் உனக்கு எண்ணிலடங்கா வரத்தினை அளித்துள்ளார். அதனால் நீ சிரஞ்ஜீவியாக வாழப் போகிறவன். நீ அறவழியில் நடக்கும் இராமனிடம் இருப்பது தான் நியாயம். எனக்கு மரணமே புகழுக்குரியதாகும். இதுவரை எனக்கு உண்ண உணவும் அளித்து என்னை சுமந்த அண்ணனுக்கு உயிரை தருவது தான் சிறந்தது. இது என்னுடைய கடமையும் ஆகும்.

👬 நான் போரில் அனுமன், அங்கதன், சுக்ரீவன், நீலன் முதலிய வானர வீரர்களை வென்று என் ஆற்றலை இந்த உலகிற்கு காட்டுவேன். வானரங்களின் உயிரை துறப்பேன். நீ தாமதிக்காமல் இராம இலட்சுமணரிடம் சேர்ந்துக் கொள். நமக்குள் இனி எந்த பேச்சுவார்த்தையும் வேண்டாம். நாங்கள் இறந்த பிறகு, எங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நீ செய்வாயாக. இன்று நம் உறவு முடிந்து விட்டது. இனி நாம் இருவரும் சந்திக்கவும் வாய்ப்பில்லை. ஆதலால் நீ இங்கிருந்துச் செல் என்றான். பிறகு இருவரும் கண்ணீர் தழும்ப தழுவிக் கொண்டனர். கும்பகர்ணன், விபீஷணனுக்கு விடைக்கொடுத்து அங்கிருந்து சென்றான். வீபீஷணன் அகமும், முகமும் மிகவும் வாடிப் போனது. இனியும் கும்பகர்ணனிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை என நினைத்து அங்கிருந்து சென்றான். போகும் வழியில் நான் கும்பகர்ணனை எப்போது பார்க்கப் போகிறேன் என நினைத்து கும்பகர்ணனை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டுச் சென்றான்.

👬 கும்பகர்ணனும் தன் தம்பி விபீஷணனை பாசத்தோடு பார்த்தான். பிறகு இருவரும் அவரவர் வழியில் சென்றனர். விபீஷணன் இராமர் இருப்பிடத்தை அடைந்தான். அங்கு நடந்ததை அனைத்தையும் இராமரிடம் கூறினான், விபீஷணன். இராமர் விபீஷணனிடம், விபீஷணா! உன் முன்னால் உன் அண்ணன் கும்பகர்ணனை நான் எவ்வாறு கொல்ல முடியும்? அதற்காக தான் அவனை இங்கு அழைத்து வரச் சொன்னேன். ஆனால் கும்பகர்ணன் என் அழைப்பை மறுத்துவிட்டான். இனி என்னால் என்ன செய்ய முடியும். எல்லாம் விதியின் கையில் தான் உள்ளது என்றார். இப்படி இராமர் பேசிக் கொண்டிருக்கும் போது அரக்கப் படைகள், வானரப் படைகளை சூழ்ந்துக் கொண்டது. போர்க்களத்தில் பெரும் ஆரவாரம் உண்டானது.

தொடரும்...




No comments:

Post a Comment