இராமாயணம் தொடர்..114
கும்பகர்ணனை எழுப்புதல் !!!
🌀 இராவணன் சொன்னதைக் கேட்ட மாலியவான், பேரனே! நீ போருக்கு செல்வதற்கு முன், நான் இராமனின் திறமையைப் பற்றி கூறினேன். ஆனால் நீ அதை அலட்சியம் செய்துவிட்டாய். உன் தம்பி விபீஷணன் கூறியவற்றையும் நீ கேட்கவில்லை. மாற்றான் மனைவியை விரும்பினால், நெருப்பில் விழுந்த புழுவின் நிலைமை தான் கிடைக்கும். கற்பில் சிறந்தவளாய் விளங்கும் சீதையை விரும்புவது தவறானது. ஆதலால் நீ சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிட்டு இராமனின் கருணையை பெறுவாயாக. இதனால் உன் அசுர குலமும் தழைக்கும் என்றார். அப்பொழுது அரசவையின் முதலமைச்சர் மகோதரன் அங்கு வந்தான். அவன் மாய வேலை செய்வதில் வல்லவன். மகோதரன் இராவணனிடம், அரசே! ஒருவன் மனதில் அச்சம் வந்துவிட்டால் அது அவனை அழித்துவிடும். உன் ஆற்றலுக்கு நிகரானவர் இவ்வுலகில் எவரும் இல்லை.
🌀 அனைத்தையும் வென்றவன் நீ என்பதை புரிந்துக் கொள். இன்று வெல்பவர் நாளை தோற்பார். இன்று தோற்றவர் நாளை வெல்வார். இதுவே உலக நியதி. ஆதலால் நீ உன் பாட்டன் சொல்லைக் கேட்டு சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிடாதே. இவ்வாறு செய்தால் தேவர்கள் உன்னை பார்த்து சிரிப்பார்கள். இவ்வாறு நீ வருந்திக் கொண்டு இருந்தால் அந்த வானரங்கள் நம்மை எளிதாக அழித்துவிடுவார்கள். இன்று நீ தோற்றிருக்கலாம். நாளை நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் என்பதை மனதில் கொள்! என இராவணனை ஊக்கப்படுத்தினான். பிறகு மகோதரன், உன் தம்பி கும்பகர்ணனை அனுப்பலாம் என்றான். மகோதரனின் சொல்லைக் கேட்ட இராவணன், மனம் தேறினான். உடனே தன் ஏவலாட்களை அனுப்பி கும்பகர்ணனை அழைத்து வரும்படி கட்டளையிட்டான். ஏவலர்கள் கும்பகர்ணனின் மாளிகையை அடைந்தனர். அங்கு கும்பகர்ணன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.
🌀 ஏவலர்கள் கும்பகர்ணனை எழுப்ப முயன்றனர். எவ்வளவு முயன்றும் கும்பகர்ணனை அவர்களால் எழுப்ப முடியவில்லை. பிறகு அவர்கள் இரும்புத் தூணால் அவன் தலையிலும் செவியிலும் மோதினார்கள். அதற்கும் அவன் செவி சாய்க்காமல் தூங்கிக் கொண்டிருந்தான். பிறகு கிங்கரர்கள் வந்து இரும்பு உலக்கையினால் கும்பகர்ணனை இடித்து எழுப்ப முயன்றனர். இவர்கள் எவ்வளவு முயன்றும் கும்பகர்ணனை எழுப்ப முடியவில்லை. பிறகு கிங்கரர்கள் இராவணனிடம் சென்று கும்பகர்ணனை எவ்வளவு முயன்றும் உறக்கத்தில் இருந்து எழுப்ப முடியவில்லை என்றனர். இராவணன், யானைகளை விட்டு மிதிக்கச் செய்து எழுப்புங்கள் என்றான். அவ்வாறே யானைகளை விட்டு மிதிக்கச் செய்து கும்பகர்ணனை எழுப்ப முயன்றனர். அப்படியும் கும்பகர்ணன் எழுந்தபாடில்லை. மறுபடியும் கிங்கரர்கள் இராவணனிடம் சென்று யானைகள் மிதித்தும் கும்பகர்ணன் எழவில்லை என்றனர்.
🌀 இராவணன், ஆயிரம் மல்லர்களை அழைத்து வந்து கும்பகர்ணனை எழுப்பச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். மல்லர்கள் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் உறங்கி கொண்டிருக்கும் கும்பகர்ணனை பார்த்து பயந்து நடுங்கினார்கள். அவர்கள் கும்பகர்ணனை அடித்து எழுப்ப பயந்து அவன் காதருகில் சங்கு, தாரை போன்ற ஊது கருவிகளை கொண்டு பெரும் ஓசை எழுப்பினர். இதற்கும் கும்பகர்ணன் சிறிதும் அசைவு கொடுக்கவில்லை. பிறகு கிங்கரர்கள், படைகலன்களில் தேர்ச்சிப் பெற்ற வீரர்களை அழைத்துவந்து கொம்பு, வலிமையுடைய தண்டு, சம்மட்டி, ஈட்டி போன்றவற்றைக் கொண்டு கும்பகர்ணனின் மார்பிலும், தலையிலும், தாடையிலும், மூட்டுகளிலும் அடித்தனர். அவர்கள் எவ்வளவு அடித்தும் கும்பகர்ணன் எழுந்தபாடில்லை. அவர்கள் தான் அடித்து அடித்து சோர்ந்து போனார்கள்.
தொடரும்...
No comments:
Post a Comment