Monday, November 20, 2023

RAMAYANAM PART 123

 இராமாயணம் தொடர் - 123

கும்பகர்ணனின் வரம்!...

கும்பகர்ணன் இராமரிடம், இராமா! என்னால் சூர்ப்பனகை போல் மூக்கறுக்கப்பட்டு உயிருடன் வாழ முடியாது. நான் இராவணனின் தவறை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் என்னால் அதை தடுக்க முடியவில்லை. இன்று நான் உன் முன்னால் மூக்கும், காதும் அறுக்கப்பட்டு உன் முன் தலைகுனிந்து நிற்கிறேன். இந்த நிலைமையில் என்னால் இலங்கை நகருக்கு சென்று உயிர் வாழ முடியாது. நான் வீரப்போர் புரிந்து உயிர் விடுவேனே தவிர நான் திரும்பி செல்ல மாட்டேன் என கூறிவிட்டு தன் பக்கத்தில் இருந்த மலை போன்ற பாறையை எடுத்து இராமரை நோக்கி வீசினான். இராமர் அதை தன் அம்பால் தூள்தூளாக்கினார். பிறகு கும்பகர்ணன் விடாமல் ஒவ்வொரு மலையாக எடுத்து இராமர் மீது வீசினான். இராமர் அதையெல்லாம் தன் அம்பிற்கு இரையாக்கினார். இவ்வாறு கும்பகர்ணனுக்கும், இராமருக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்தது. இராமர் ஓர் அம்பை கும்பகர்ணனை நோக்கி ஏவினார்.

ஆனால் அந்த அம்பு கும்பகர்ணன் அணிந்திருந்த சிவபெருமான் கொடுத்த கவசத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் இராமர், சிவபெருமான் அருளிய பாசுபதாஸ்திரத்தை எடுத்து, கும்பகர்ணன் மேல் ஏவி, அவனது கவசத்தை உடைத்தார். பிறகு இராமர் மற்றொரு அம்பை ஏவி கும்பகர்ணனின் வலக்கரத்தை அறுத்தெறிந்தார். ஆனால் கும்பகர்ணன் மற்றொரு கையால் வானரங்களை அடித்து வீழ்த்தினான். இதைப் பார்த்த தேவர்கள், இராமரிடம், இராமா! அவனின் மற்றொரு கையையும் அறுப்பாயாக எனக் கேட்டுக் கொண்டனர். பிறகு இராமர் மற்றொரு அம்பை செலுத்தி கும்பகர்ணனின் மற்றொரு கையையும் அறுத்தெறிந்தார். கும்பகர்ணன், என் கைகள் போனால் என்ன, என் கால்கள் உள்ளது. அதைக் கொண்டு போர் புரிவேன் எனக் கூறி வானரங்களிடம் போர் புரிந்தான். இதைப் பார்த்த இராமர், ஓர் அம்பை ஏவி கும்பகர்ணன் காலை அறுத்தெறிந்தார்.

ஆனால் கும்பகர்ணன் தன் மற்றொரு காலைக் கொண்டு போர் புரிய தொடங்கினான். பிறகு இராமர், கும்பகர்ணனின் மற்றொரு காலையும் ஓர் அம்பை ஏவி அறுத்தெறிந்தார். தன் கை, கால்கள் இழந்த கும்பகர்ணன் தன் வாயைக் கொண்டு ஊதி ஊதி போர் புரிந்தான். இராமர் கும்பகர்ணனின் தீர்க்கமான போரைக் கண்டு அதிசயத்து நின்றார். வெகு நேரம் கும்பகர்ணனால் ஊதி ஊதி போர் புரிய முடியவில்லை. பிறகு கும்பகர்ணன் இராமரை நினைத்து, காலவரம்பின்றி வாழ வேண்டிய நான் இராவணனின் பெண்ணாசையால் இன்று வீழ போகிறேன். இராமனின் வில்லின் ஆற்றலுக்கு முன் ஆயிரம் இராவணன் வந்தாலும் இராமனுக்கு இணையாக முடியாது என நினைத்தான். பிறகு கும்பகர்ணன் இராமரிடம், இராமா! நீ சிபிச்சக்ரவர்த்தி போல் அபயம் என்று வருபவரை காக்கும் பண்புடையவன். விபீஷணன் அரக்க குலத்தில் பிறந்திருந்தாலும், உன்னை நம்பி அடைக்கலம் தேடி வந்தான். என் தம்பி விபீஷணன் நற்குணசீலன், நீதிநெறி தவறாதவன். அவனை காப்பது உன்னுடைய கடமை.

இராவணன், தம்பி என்று பாராமலும் விபீஷணனை கொல்ல வருவான், நீ அவனிடமிருந்து விபீஷணை காப்பாற்று. உன் தம்பிகளில் ஒருவர் அல்லது நீயோ யாரேனும் வீபீஷணனை விட்டு பிரியாமல் அவனை காக்க வேண்டும். இராமா! அனைத்தும் அறிந்த பரம்பொருளே! நான் இறுதியாக உன்னிடம் ஒரு வரம் கேட்க வேண்டும். அதை நீ எனக்கு மறுக்காமல் தர வேண்டும் என்றான். இராமர், கும்பகர்ணா! நீ உன் வரத்தை கேள் என்றார். கும்பகர்ணன், இராமா! இந்த யுத்தத்தை தேவர்கள் முதலானோர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். என்னை கை, கால்கள் இல்லாத முண்டம் என யாரும் ஏளனம் செய்யாத வண்ணம் என் கழுத்தை துண்டித்து யாருக்கும் எட்டாத தூரத்தில், கண்காணாமல் கடலில் போட்டு விடு. என் முண்டம் ஒருவர் கண்ணிற்கும் பட வேண்டாம். இந்த வரத்தை நீ எனக்கு அருள வேண்டும் என்றான். பிறகு இராமர், தன் அம்பினால் கும்பகர்ணனின் தலையை துண்டித்து, அது கடலில் மூழ்கும் படி செய்தார். கும்பகர்ணனின் தலை கடலில் மூழ்கியது.

தொடரும்...

No comments:

Post a Comment