Showing posts with label RAMAYANAM. Show all posts
Showing posts with label RAMAYANAM. Show all posts

Monday, January 1, 2024

RAMAYANAM PART152

 இராமாயணம் தொடர்...152

இராமர் அசுரப்படையுடன் போரிடுதல்!

💠 அங்கதன், ஜாம்பவானை பார்த்து! மதிநலம் மிக்கவரே! தாங்கள் இவர்களை கண்டு அஞ்சலாமா? நம்முடன் இருப்பவர் மனிதன் என்று எண்ணுகிறீர்களா? உலகத்தை ஆளும் பரம்பொருளே மனிதனாக வந்திருக்கிறார் அல்லவா? நம்மை காக்க இராமரின் கோதண்டம் இருக்கிறது. அவர் நிச்சயம் இந்த அசுர சேனைகளை வென்று காட்டுவார். அதனால் பயம் கொள்ள வேண்டாம் என ஆறுதல் கூறி அழைத்து வந்தனர். விபீஷணன் இராமரிடம், பெருமானே! இந்த படைகள் மூலப்படைகள். இவர்கள் இராவணனின் கட்டளையால் இங்கு வந்துள்ளார்கள். இவர்கள் உலகத்தையே வெல்லும் அளவிற்கு ஆற்றல் படைத்தவர்கள் என்றான். பிறகு இராமர் இலட்சுமணனிடம், தம்பி இலட்சுமணா! நான் இந்த மூலப்படைகளை எதிர்த்து போரிட்டு அழிக்கிறேன். 

💠 நீ வானரங்களுக்கும், வீபிஷணனுக்கும் துணையாக இரு எனக் கூறிவிட்டு தன் கோதண்டத்தை கையில் எடுத்துக் கொண்டு போருக்குச் சென்றார். இராமர் போருக்கு செல்வதை பார்த்த தேவர்கள், இராமர் ஒருவரால் இந்த அசுர சேனைகளை அழிப்பது கடினம். இராமர் நற்குணத்தில் சிறந்தவர். சிறந்த வில்லாளன். ஆனால் அரக்கர்களோ அதர்மம் செய்பவர்கள். அதர்மத்தை காட்டிலும் தர்மம் தான் வெல்லும். இப்போரில் அறம் தான் செல்லும் எனக் கூறி இராமர் போரில் வெற்றி பெற வாழ்த்தினார்கள். இராமர், தன் வில்லின் நாணோசையை எழுப்பி அரக்கர்கள் முன் நின்றார். அரக்கர்கள் இராமரைக் கண்டு, இந்த சிறு மனிதனா நம்மை எதிர்த்து போர் புரிய போகிறான். மலை போல் பலம் கொண்ட நம்மை இந்த எறும்பு கடிக்க முடியுமா? என ஏளனம் செய்தனர். இவனை அழிக்க ஒரு நொடி போதும் என இராமர் மீது பாணங்களை ஏவினர். 

💠 இராமர் அப்பாணங்களை தடுத்து, கோதண்டத்தில் ஆயிரம் பாணங்களை தொடுத்து அரக்கர்களை அழித்தார். இராமரின் கரவேகம் மின்னலை போல் இருந்தது. நொடி பொழுதில் ஆயிரம் ஆயிரம் பாணங்களை தொடுத்து கடைசியில் இலட்சம் பாணங்கள் அரக்கர்களை அழித்தது. இவ்வாறு நொடியில் அரக்கர்களை கொன்று வீழ்த்தினார். இராமர் ஒருவரே பல்லாயிர இராமனாக இருப்பது போன்ற தோற்றம் அரக்கர்களுக்கு ஏற்பட்டது. போர்க்களத்தில் ஒவ்வொரு அரக்கனுடனும் இராமர் போரிடுவது போன்ற தோற்றம் அரக்கர்களை நிலை தடுமாற வைத்தது. இராமனின் கைவில்லின் மணி ஒலிக்கும் போதெல்லாம் அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக இறந்து வீழ்ந்தனர்.

இராமருடைய கோதண்டத்தில் இருக்கும் பதினாறு தங்க மணிகளும், பதினாறு கவந்த மணிகளும் :

💠 இராமருடைய கோதண்டத்தில் பதினாறு தங்க மணிகளும், பதினாறு கவந்த மணிகளும் மொத்தம் முப்பத்திரண்டு மணிகள் தொங்க விட்டிருந்தது. ஆயிரம் யானைகள், பதினாயிரம் தேர் ஒரு கோடி குதிரைகள், ஆயிரம் சேனை வீரர்கள் இறந்தால் இராமருடைய வில்லில் உள்ள கவந்த மணி ஒரு முறை ஒலிக்கும். அந்தக் கவந்த மணி ஆயிரம் முறை ஒலித்தால் பெரிய தங்கமணி பெரிய சத்ததோடு கணீரென்று ஒலிக்கும். போரில் இராமருடைய கோதண்டத்தில் உள்ள முப்பத்திரண்டு மணிகளும் இடைவிடாமல் ஏழரை நாழிகை ஒலித்தது. அப்படியென்றால் அசுர சேனைகள் மாண்ட எண்ணிக்கையை எவ்வாறு எண்ண முடியும். இராமருடைய சக்தி வாய்ந்த போரை நாம் இந்த மூலப்படை மூலம் அறியலாம்.

தொடரும்...!

RAMAYANAM PART 151

 இராமாயணம் தொடர்....151

அசுரப்படைகளை கண்டு வானரங்கள் பயப்படுதல்!

⚩ மகோதரன் கூறியதைக் கேட்டு இராவணன் திரும்பிச் சென்றான். இராவணன் தன் ஏவலாட்களிடம் உலகில் உள்ள அரக்கர்கள் அனைவரும் இங்கு வர வேண்டும் என கட்டளையிட்டான். இராவணனின் கட்டளைப்படி உலகில் உள்ள அரக்கர்கள் இலங்கையை வந்தடைந்தனர். இராவணனின் தூதர்கள், இராவணனுக்கு படைகளை அறிமுகம் செய்தனர். இவர்கள் சாகத் தீவினர், இவர்கள் குசைத் தீவினர் என அங்கு வந்த ஆயிரம் ஆயிரம் படைகளை அறிமுகம் செய்தான். இவர்கள் அனைவரும் மேரு மலையை தூள்தூளாக்குவர். இவர்களால் முடியாத செயல் என்பது எதுவும் கிடையாது என்றனர். பிறகு இராவணன் அங்கிருந்துச் சென்று அரண்மனையின் கோபுரத்தின் மேல் நின்று அரக்கர்களின் எண்ணிக்கையை பார்த்தான்.

⚩ அதன் பின் இராவணன் படைத்தலைவர்களை அழைத்து, இப்போர் ஏற்பட்டதற்கான காரணத்தை விவரமாக கூறினான். அவனுக்கு சீதை மீது ஏற்பட்ட காதலை பற்றியும் கூறினான். அதற்கு அப்படைத்தலைவர்கள், மனிதர்களிடமும், வானரங்களிடமும் போரிடவா எங்களை அழைத்தீர்கள் என்றனர். அப்பொழுது வன்னி என்னும் தலைவன். அந்த மனிதர்கள் யார்? உங்களை காட்டிலும் அவர்கள் வலிமையானவர்களா? எனக் கேட்டான். அப்போது மாலியவான் அவர்களிடம், அவர்கள் வானரங்கள் என்று அலட்சியம் செய்யாதீர்கள். அவர்களில் ஒருவன் இங்கு வந்து அசோக வனத்தை அழித்து, இலங்கை நகரையும் தீமூட்டிவிட்டு சென்றுவிட்டான். அது மட்டுமின்றி பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்தவர்களை சிறு பொழுதில் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து அவர்களை உயிர்பித்துவிட்டான்.

⚩ இராமன் திருபாற்கடலை கடைந்த வாலியைக் கொன்றவன் என்றான். இதிலிருந்து ஒரே வழி சீதையை விடுவிப்பது தான் என்றான். ஆனால் அதற்கு வன்னி என்பவன், அரசனின் தம்பிமார்களும், மகன்களும் மாண்டபின் சீதையை விடுவிப்பது தவறு. எதிரிகளை வென்று காண்பிப்பது தான் சிறந்தது என்றான். பிறகு அவன் இராவணனைப் பார்த்து, வேந்தனே! இவ்வளவு நடந்த போதிலும் தாங்கள் ஏன் போருக்குச் செல்லவில்லை எனக் கேட்டேன். அதற்கு இராவணன் முதல் நாள் போரில் தோற்றதைக் கூறாமல், எனக்கு மனிதர்கள் மீதும், குரங்குகள் மீதும் போர் செய்ய கேவலமாக இருந்தது என்றான். பிறகு படைத் தலைவர்கள், நாங்கள் செல்கிறோம். இன்றுடன் போர் முடிந்துவிட்டது என எண்ணிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு சென்றனர். 

⚩ போருக்குச் செல்ல படைகள் தாயாராயின. அந்தப் படைகள் மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை. இவற்றில் மூலப்படையே தொன்மையானது என அவர்கள் நாங்களே செல்கிறோம் எனக் கூறிவிட்டுச் சென்றனர். மூலப்படையைக் கண்ட வானரங்கள் பயந்து ஓடி ஒளிந்தனர். நீலனும், அங்கதனும் வானரங்களை தடுத்து நிறுத்தி யாரும் பயப்பட வேண்டாம் எனக் கூறினர். அதற்கு வானரங்கள், அங்கே பாருங்கள்! அங்கு வருபவர்கள் எல்லாம் அசுர சேனைகள். உலகத்தை அழிக்கும் ஆற்றல் படைத்தவர்கள். இவர்களுடன் போர் புரிய ஆயிரம் இராமர் வந்தாலும், இலட்சுமணன் வந்தாலும் முடியாது. நாம் உயிர் வாழ்வதற்கு மலைகளும், குகைகளும் உள்ளது. பசியாற காய், கனிகள் இருக்கிறது எங்களுக்கு அது போதும் என நடுநடுங்கக் கூறினார்கள்.

தொடரும்...!

RAMAYANAM PART 150

 இராமாயணம் தொடர்...150

இராவணன் சீதையின் மேல் கோபம் கொள்ளுதல்!

✵ இந்திரஜித் மாண்டச் செய்தியை இராவணனிடம் கூறினால் நம்மை கொன்று விடுவானோ என அஞ்சி தூதர்கள் சொல்ல பயந்தனர். தேவர்களும், அரக்கர்களும் பயந்து ஓடி ஒளிந்தனர். கடைசியில் அரக்கன் ஒருவன் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இராவணனிடம் சொல்லச் சென்றான். அவன் இராவணன் முன் கை கால்கள் நடுங்க நின்றான். அசுர குலத்தின் வேந்தனே! இளவரசர் இந்திரஜித் போரில் இலட்சுமணனால் மாண்டார் எனக் கூறினான். இதைக்கேட்டு இராவணன் கோபங்கொண்டு அவன் தலையை வெட்டி வீசினான். இந்திரனையே வென்ற இந்திரஜித்தை இலட்சுமணன் கொன்றுவிட்டான் என்பதை நினைத்து மிகவும் கோபங்கொண்டான். உடனே இராவணன் போர்க்களத்திற்குச் சென்று இந்திரஜித்தின் உடலைக் கண்டு கதறி அழுதான். 

✵ என் செல்வமே! எனக்கு முன் நீ மாண்டாயே! உன் ஆற்றல் மேரு மலையை போன்றது. நீ எனக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளை, நான் உனக்கு செய்யும் படி விதி செய்துவிட்டதே. நீ இறந்த செய்தியை அறிந்து இந்திரன் முதலான தேவர்கள் மகிழ்ந்திருப்பார்களே! நீ இன்றி இனி நான் என்ன செய்யப் போகிறேன் என தலையில் அடித்துக் கொண்டு மிகவும் புலம்பி கதறி அழுதான். அப்போது அவன், இந்திரஜித் வில்லோடு அறுப்பட்ட கையைக் கண்டு ஆறாத் துயரம் அடைந்தான். இராவணன், இந்திரஜித்தை அரண்மனைக்குச் கொண்டு சென்று பஞ்சு மெத்தையில் படுக்க வைத்து அழுதான். இந்திரஜித் இறந்த செய்தி மண்டோதரிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு மகனே! மகனே! என அலறிக் கொண்டு இந்திரஜித் காலடியில் வந்து வீழ்ந்தாள். 

✵ என் அன்பு செல்வமே! என் ஆருயிரே! இனி உன்னை நான் என்று காண்பேன்! எவரும் வெல்ல முடியாத வலிமை உன்னிடம் இருந்தததே! நீ சிறு வயதில் அரண்மனைக்கு சிங்க குரளைக் கொண்டு அவற்றிற்கு சினமூட்டி விளையாடி மகிழ்வாயே. அது போன்ற காட்சியே இனிமேல் நான் எப்போது காணப் போகிறேன். உனக்கு நேர்ந்த இந்த நிலைமை தானே, நாளை உன் தந்தைக்கும் உண்டாகும் எனக் கூறி புலம்பி அழுதாள். இந்திஜித்தின் மனைவிமார்களும், இந்திரஜித்தைக் கண்டு கதறி அழுதனர். இலங்கையில் உள்ள அரக்கர்கள் அனைவரும் இந்திரஜித் மாண்ட செய்தியை அறிந்து கதறி அழுதனர். இராவணன் இவற்றை எல்லாம் கண்டு மிகவும் கோபம் கொண்டான். உடனே அவன் இவ்வளவு துன்பத்திற்கும் காரணம் சீதை தான். நான் இப்பொழுதே சீதையை வெட்டி வீழ்த்துகிறேன் எனக் கூறிக் வாளை உருவிக் கொண்டு அசோக வனத்தை நோக்கிச் சென்றான்.

✵ இராவணனை தடுக்க மந்திரிமார்களும், இராவணனின் மனைவிமார்களும் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போயிற்று. அப்போது மகோதரன் இராவணனை தடுத்து, அரசே! சற்று பொறுமையாக இருங்கள். அவரப்பட்டு அந்நியாய செயலை செய்து விடாதீர்கள். ஒரு பெண்ணை கொல்வது வீரனுக்கு அழகல்ல. அவ்வாறு தாங்கள் கொன்றாலும் தேவர்கள் முதலானோர் தங்களை பார்த்து கைக்கொட்டி சிரிப்பார்கள். நீங்கள் சீதையை அடைவது தான் நல்லது. தங்களுக்கு கோபமும், ஆத்திரமும் வந்தால் அதை இராம இலட்சுமணன் மேல் காட்டுங்கள். சீதையை கொன்றுவிட்டு நாளை போரில் இராமனையும், இலட்சுமணனையும் வெல்வதில் என்ன பயன் உள்ளது? அதனால் தாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என ஆறுதல் கூறினான்.

தொடரும்...

RAMAYANAM PART 149

 இராமாயணம் தொடர்...149

இந்திரஜித் இலட்சுமணனால் அழிதல்!...

🌿 இலட்சுமணன், படைக்கலன்கள் அழித்ததை பார்த்து தேவர்கள் பாராட்டினர். ஆனால் இந்திரஜித் இதைக் கண்டு திகைத்து நின்றான். பிறகு இந்திரஜித் இலட்சுமணனை பார்த்து, இலட்சுமணா! இப்பொழுது நான் விடும் அஸ்திரத்தால் நிச்சயம் நீ மாண்டொழிவாய். உன்னால் இதிலிருந்து தப்பிக்க முடியாது எனக் கூறி விட்டு மிகச்சிறந்த அஸ்திரமான நாராயணஸ்திரத்தை ஏவினான். இலட்சுமணனும், அதே அஸ்திரத்தைக் கொண்டு அதை தூள்தூளாக்கினார். இதைப் பார்த்த இந்திரஜித் மிகவும் கோபங்கொண்டு இதற்கெல்லாம் விபீஷணன் தான் காரணம். அதனால் அவனை கொல்ல ஓர் அஸ்திரத்தை ஏவினான். அந்த அம்பு விபீஷணனை நோக்கி வரும்போது, இலட்சுமணன் அதையும் உடைத்தெறிந்தார். பிறகு இந்திரஜித் அங்கிருந்து மறைந்து அரண்மனையில் வீற்றிருக்கும் இராவணன் முன் தோன்றினான்.

🌿 இந்திரஜித் இராவணனை பார்த்து, உன் தம்பி விபீஷணனால் இன்று என் யாகம் தடைப்பட்டு போனது. பிறகு அங்கு நடந்த போரை பற்றிக் கூறினான். இலட்சுமணனின் வில்வேகத்தையும், போர்திறமையும் பற்றிக் கூறினான். அதனால் நீ சீதையை மறந்து விடு. இதுவே உனக்கு நன்மை. அவர்களும் போரை நிறுத்திக் கொள்வார்கள் எனக் கூறினான். இராவணன் கோபத்துடன், நான் சீதையை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு பதில், அவர்கள் முன் என் உயிரைத் துறப்பது மேல். உனக்கு போருக்குச் செல்ல பயமாக இருந்தால் என்னிடம் சொல், நானே போருக்குச் செல்கிறேன் எனக் கூறினான். பிறகு இந்திரஜித் இராவணனிடம், தந்தையே! தாங்கள் கோபம் கொள்ள வேண்டாம். நானே போருக்கு செல்கிறேன் என்றான். இந்திரஜித் இராவணனிடம் இருந்து விடைப்பெற்று போர் நடக்கும் இடத்திற்குச் சென்றான்.

🌿 அங்கு இலட்சுமணனுக்கும் இந்திரஜித்துக்கும் கடும்போர் நடந்தது. இலட்சுமணன், ஒரு அம்பை ஏவி இந்திரஜித்தின் தேரை உடைத்தெறிந்தார். பிறகு இந்திரஜித் கையில் வாளை ஏந்திக் கொண்டு வானத்தில் சென்று மறைய முற்பட்டான். அப்போது இலட்சுமணன், அம்பை எய்தி இந்திரஜித்தின் வாளோடு கையை வெட்டினான். தன் கையை இழந்த நிலையில் இந்திரஜித் இலட்சுமணனை நோக்கி, ஒரு சூலாயுத்தை வீசினான். இலட்சுமணன் அதையும் உடைத்தெறிந்தார். பிறகு இலட்சுமணன் வேதங்களைத் தெளிந்து கூறும் கடவுளும், அந்தணர்கள் வணங்கும் கடவுளும் இராமனே என்பது உண்மை என்றால், இந்திரஜித்தைக் கொல் என்று ஓர் கடிய பாணத்தை ஏவினான். அப்பாணம் இந்திரஜித்தின் தலையை சீவிக் கொண்டு விழுந்தது.

🌿 மாவீரனும், மந்திர வேலையில் வல்லவனான இந்திரஜித் அந்த இடத்திலேயே தன் உயிரை விட்டான். இதைக்கண்டு விபீஷணன் ஆர்ப்பரித்தான். வானரர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். தேவர்கள் இலட்சுமணனை வாழ்த்தி பூமாரி பொழிந்தனர். பிறகு அங்கதன், இந்திரஜித்தின் தலையை கையில் ஏந்திக் கொண்டு, அனுமன் இலட்சுமணனை தோளில் ஏற்றிக் கொண்டு இராமரிடம் இச்செய்தியைக் கூறச் சென்றனர். இதைக் கேட்டு இராமர், இலட்சுமணனைத் தழுவிக்கொண்டு, இராவணனுக்கு இனி யார் இருக்கிறார்கள்? அவனின் முடிவு காலம் வந்து விட்டது எனக்கூறி தன் மகிழ்ச்சியை காட்டினார். பிறகு இராமர் இலட்சுமணனிடம், தம்பி இலட்சுமணா! இந்த வெற்றிக்கு நீயும் காரணம் இல்லை, நானும் காரணம் இல்லை. இதற்கு காரணம் விபீஷணன் தான் எனக் கூறி விபீஷணனை பாராட்டினார். பிறகு அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

தொடரும்

RAMAYANAM PART 148

 இராமாயணம் தொடர் 148

இலட்சுமணன் - இந்திரஜித் போர்...!

🌷 போரைக் காண்பதற்காக விண்ணுலகத்தவர் வானில் வந்து தோன்றினர். அப்பொழுது இந்திரஜித் விபீஷணனிடம், நீ அரக்க குலத்தையே கெடுக்க வந்தாயா? சிறிது கூட உனக்கு வம்ச ரத்தம் ஓடவில்லையா? நம் விரோதியே கதி என்று இருக்கின்றாய். உனக்கென்ன மூளை மழுங்கிவிட்டதா? இன்று உன் யோசனையால் தான் இந்த யாகம் தடைப்பட்டு விட்டது என்றான். விபீஷணன், நான் அரக்க குணம் கொண்டவனல்ல. நேர்மையை விரும்புபவன். அதனால்தான் இவர்களோடு நட்பு கொண்டேன். நட்பு நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்தது. பிறர் பொருளைக் கவர்ந்தவன் என்றுமே வாழ்க்கையில் உயரமாட்டான். நீ இராவணனுக்காக போர் புரிகிறாய். அதனால் நீயும் அழிய வேண்டியவன் தான் என்றான். இதைக்கேட்டு இந்திரஜித் மிகவும் கோபம் கொண்டான். 

🌷 இலட்சுமணனை பார்த்து, நான் உன்னையும், உன் அண்ணனையும் நினைவிழக்கச் செய்தேனே. அதை நீ மறந்துவிட்டு இப்பொழுது என் கையால் இறக்கவா வந்திருக்கின்றாய்? எனக் கேட்டான். இலட்சுமணன், வீரனே! இனி என்னை கொல்வது என்பது முடியாத காரியம். அதனால் என்னிடம் வீண்பேச்சு பேசாதே. மறைந்து தாக்குவது தான் வீரனின் பலமா? என்னுடன் வந்து நேருக்கு நேர் போர் புரிந்து வென்றுக்காட்டு எனக் கூறினார். இருவருக்கும் போர் ஆரம்பமானது. இவர்களுக்கிடையில் நீண்ட நேரம் போர் நடந்தது. இந்திரஜித்தால் இலட்சுமணனின் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. விபீஷணன், வானரர்களே, அரக்கர்களை அழியுங்கள். இராவணனுக்கு இந்த இந்திரஜித் ஒருவனே மாவீரன். இவனைக் இலட்சுமணன் கொன்று விடுவார். 

🌷 நாம் இலட்சுமணனுக்கு உதவி புரியும் வகையில் அரக்கர்களை அழிப்போம் என கூறினான். வானர வீரர்கள், அரக்கர்களை கொன்று வீழ்த்தினர். இலட்சுமணன் இந்திரஜித்தின் தேர்ப்பாகனைக் கொன்றான். அதனால் இந்திரஜித் தானே தேரை ஓட்டிக் கொண்டு போர் புரிந்தான். வானர வீரர்கள் இந்திரஜித்தின் தேரைத் ஒடித்தெறிந்தனர். பிறகு இந்திரஜித் தரையில் நின்றுக் போர் புரிந்தான். இலட்சுமணனின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் இந்திரஜித் சக்தி வாய்ந்த படைக்கலன்களை ஏவ ஆரம்பித்தான். இந்திரஜித் இலட்சுமணன் மீது வாயுப்படையை ஏவினான். இலட்சுமணன் தன்னிடமிருந்த அக்னிப் படையை ஏவி அதை அணைத்தார். இந்திரஜித் வருணாஸ்திரத்தை இலட்சுமணன் மீது ஏவினான். இலட்சுமணன் தன்னிடமிருந்த வருணாஸ்திரத்தால் அதனைத் தூள்தூளாக்கினார். 

🌷 இந்திரஜித் ஏவும் படைக்கலனைக் அதே படைக்கலனைக் கொண்டு அழித்தார். வெகு நேரம் போர் புரிந்ததால் இந்திரஜித் சோர்வை உணர்ந்தான். அதனால் அவன் இலட்சுமணனை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரம்மாஸ்திரத்தை இலட்சுமணன் மீது ஏவினான். இதைப் பார்த்த தேவர்கள் இலட்சுமணன் வீழ்வது உறுதி என நினைத்து வருந்திக் கொண்டு இருந்தனர். உடனே இலட்சுமணன் தன்னிடமிருந்த சக்தி வாய்ந்த பிரம்மாஸ்த்திரத்தை நாணில் பூட்டி, இந்திரஜித் தொடுத்த படைக்கலனை மட்டும் அழிப்பாயாக. இந்திரஜித்தின் உயிரையும் ஏனைய உலகங்களையும் அழிக்காதே எனக் கூறி ஏவினான். அதேபோல் இலட்சுமணன் ஏவிய பிரம்மாஸ்த்திரம், இந்திரஜித்தின் படைக்கலனை மட்டும் அழித்தது. இதைக் கண்டு தேவர்கள் இலட்சுமணனை பாராட்டினர்.

தொடரும்...!!

RAMAYANAM PART 147

 இராமாயணம் தொடரும் ...147

விபீஷணன் கேட்கும் அனுமதி...!

🔸 சீதை நலமுடன் இருக்கிறாள் என்பதைக் கேட்டு இராமர் மன நிம்மதி அடைந்தார். வானரங்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இராமர், இந்திரஜித் வெட்டியது மாய சீதை என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு விபீஷணனைக் கட்டித் தழுவிக் கொண்டார். விபீஷணா! எங்களின் துன்பங்களை நீக்க நீ இருக்கின்றாய். கடவுள் இருக்கிறார். அனுமன் இருக்கின்றான். எங்களின் ஆற்றலும், தவமும் இருக்கின்றது. இதையும் தாண்டி வேறென்ன வேண்டும் எங்களுக்கு என விபீஷணனை பாராட்டினார். பிறகு விபீஷணன், பெருமானே! இந்திரஜித் நிகும்பலா யாகத்தை முடிப்பதற்குள் நாம் அதனை தடுக்க வேண்டும். ஆதலால் தங்களின் தம்பி இலட்சுமணனுக்கு விடைக்கொடுத்து என்னுடன் அனுப்புமாறு வேண்டுகிறேன் என்றான். இராமர் இலட்சுமணனிடம், தம்பி இலட்சுமணா! நீ பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம், பாசுபதாஸ்திரம் முதலிய தெய்வ படைகலன்களை பயன்படுத்தக் கூடாது.

🔸 அவ்வாறு நீ உபயோகப்படுத்தினால் இந்த உலகம் அழிந்து விடும். இந்திரஜித் இப்படைகலன்களை பயன்படுத்தினால் அதனை தடுக்கும் பொருட்டு அப்படைகலன்களை பயன்படுத்துவாயாக. இராமர், இலட்சுமணனுக்கு கவசத்தையும் திருமால் கொடுத்த அம்புறாத் துணியையும் கொடுத்து இப்போரில் தர்மம் தான் வெல்லும் அதர்மம் வெல்லாது எனக் கூறி அவர்களுக்கு விடைக் கொடுத்தார். அவர்களுடன் வானரங்களும் உடன் சென்றனர். இவர்கள் அனைவரும் நிகும்பலா யாகம் நடக்கும் இடத்திற்கு வந்தடைந்தனர். அந்த யாகத்தை காக்கும் பொருட்டு பல கோடி அரக்கர்கள் காவல் புரிந்துக் கொண்டிருந்தனர். விபீஷணன் இலட்சுமணனிடம், நாம் இப்போதே இந்த யாகத்தை சிதைக்க வேண்டும் என்றான். வானரப் படைகள் அரக்க படைகளுடன் போர் புரிய தொடங்கினர். 

🔸 வானரங்களுக்கும் அரக்கர்களுக்கும் இடையே கடும் போர் நடந்தது. இதில் அசுர சேனைகள் பல அழிந்தன. யாகத்திற்காக வைத்திருந்த யாக குண்டங்களும், தீர்த்த கும்பங்களும் சிதைந்து போயின. இலட்சுமணன், அரக்கர்களை வதம் செய்துக் கொண்டே வந்தான். போர் புரிந்து அனுமன் மிகவும் சோர்ந்து போனான். அவனை தொடர்ந்து அங்கதன் போர் புரிந்தான். போரில் மாண்ட அரக்கர்களை கண்டு இந்திரஜித் பெருங்கோபம் கொண்டான். அனுமன் இந்திரஜித்தை பார்த்து! அரக்கனே! மூடனே! ஓர் அரக்கனை சீதை போல் மாற்றி ஏமாற்றியவனே! அயோத்திக்கு போய் பரதனையும், சத்ருக்கனையும் கொல்வேன் என கூறினாயே! அவர்களுடன் போர் புரிந்தாயா? பொய்யே வடிவானவனே! உன் அழிவுக் காலம் வந்துவிட்டது. 

🔸 நீ இறப்பது உறுதி. உன்னை நினைத்து உன் தந்தையும், தாயும் அழப் போகிறார்கள் என்றான். இதைக் கேட்ட இந்திரஜித் கோபங்கொண்டு, ஏ வானரமே! உங்களை நான் இன்றே அழிக்கப் போகிறேன். உங்களை வெல்வதற்கு எனக்கு இந்த யாகம் ஒன்றும் தேவையில்லை எனக் கூறிக்கொண்டு போருக்கு வந்தான். இலட்சுமணன் அனுமன் மீது ஏறினான். விபீஷணன், இலட்சுமணா! இந்திரஜித்தை கொல்ல இது தான் ஏற்ற நேரம். காலத்தை தாழ்த்தாமல் விரைந்து அவனைக் கொன்று வெற்றி வாகை சூடுவாயாக எனக் கூறினான். இந்திரஜித்திற்கும், இலட்சுமணனுக்கும் பெரும் போர் உண்டானது. அப்போரைக் காண விண்ணுலகத்தவர் வானில் வந்து தோன்றினர்.

தொடரும்...!!

RAMAYANAM PART 146

 இராமாயணம் தொடர் ...146

மாய சீதை...!

🌷 இராவணன் கோபங்கொண்டு, என் ஆற்றலை நீ அறியவில்லை. நாளை நானே போருக்குச் சென்று அவர்களை கொல்லுவேன் என்றான். இதைக்கேட்ட இந்திரஜித், தந்தையே! தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும். நாளை நான் போருக்குச் செல்கிறேன். அதற்கு முன் நான் இராம இலட்சுமணனை வெல்ல நிகும்பலா யாகம் செய்ய வேண்டும். இதற்கும் ஒரு தடை உள்ளது. நான் நிகும்பலா யாகம் செய்வதை விபீஷணன் இராம இலட்சுமணனிடம் சொல்லாமல் இருக்க வேண்டும். இதனை தடுக்க நாம், மாய சீதையை கொன்றுவிட்டு பிறகு அயோத்திக்கு செல்வது போல் பாசாங்கு காட்ட வேண்டும். அதன்பின் நான் நிகும்பலா யாகத்தை செய்து முடிப்பேன் என்றான். இந்திரஜித்தின் யோசனையை ஏற்று இராவணன் இதற்கு சம்மதம் தெரிவித்தான்.

🌷 இந்திரஜித்தின் யோசனைப்படி, அனுமன் சஞ்சீவி மலையை வைத்துவிட்டு வான மார்க்கமாக வந்துக் கொண்டிருக்கும்போது இந்திரஜித் ஓர் அரக்கனை மாய சீதையாக மாற்றி அனுமன் முன்தோன்றினான். இந்திரஜித் மாய சீதையின் கூந்தலை கையில் பிடித்துக் கொண்டு, ஒரு வாளை கையில் வைத்திருந்தான். இந்திரஜித் அனுமனை பார்த்து, அடேய், வானரமே! இத்தனை விளைவுகளும் இந்த சீதையினால் தான் நிகழ்ந்தது. அதனால் இவளை நான் கொல்லப் போகிறேன். அது மட்டுமல்லாமல் நான் அயோத்திக்குச் சென்று பரதன், சத்ருக்கனையும் கொல்லப் போகிறேன் என்றான். அனுமன், அவனிடம் பணிவாக, பெண்ணை கொல்வது என்பது பாவச் செயலாகும். இதனால் உனக்கு பாவங்கள் தான் அதிகரிக்கும். அறநெறியை அழித்து பாவத்தை தேடிக் கொள்ளாதே என தடுத்தான். 

🌷 ஆனால் இந்திரஜித் அனுமனின் சொல்லைக் கேட்காமல் மாய சீதையை அனுமன் கண் முன் தன் வாளால் வெட்டிவிட்டு, நான் அயோத்திக்குச் சென்று பரதன், சத்ருக்கனையும் கொல்லப் போகிறேன் எனக் கூறி அயோத்திக்குச் செல்வதை போல் நிகும்பலா யாகம் செய்யும் இடத்திற்குச் சென்றான். அனுமன் நிஜமாகவே சீதை இறந்த விட்டதாக நினைத்து புலம்பி அழுதான். பிறகு அனுமன், விரைந்துச் சென்று இராமரிடம் சீதை இறந்தச் செய்தியையும், இந்திரஜித் அயோத்தி சென்றிருப்பதையும் கூறினான். இதைக் கேட்ட இராமர், அசைவற்று இருந்தார். வானரங்கள் எல்லாம் புலம்பி அழுதனர். இராமரின் நிலைமையை பார்த்த இலட்சுமணன், அண்ணா! தாங்கள் இவ்வாறு வருந்துவது அறிவுடைமையாகாது. நாம் இந்த மூவுலகங்களையும் அழிக்க வேண்டும் என்றான்.

🌷 அப்பொழுது விபீஷணன் இராமரை பணிந்து, பெருமானே! இது எல்லாம் அரக்கர்களின் மாய வேலையாகத் தான் இருக்க வேண்டும். உங்களை திசை திருப்பிவிட்டு, இந்திரஜித் நிகும்பலா யாகம் செய்யச் சென்றிருப்பான். அந்த யாகத்தை அவன் திறம்பட செய்துவிட்டால் அவனை வெல்ல எவராலும் முடியாது. தாங்கள் கவலை கொள்ளாமல் இருங்கள். நான் வண்டு போல் சிறு உருவம் எடுத்து அன்னை சீதை எவ்வாறு இருக்கிறார் என்பதை பார்த்துவிட்டு வருகிறேன் என்றான். பிறகு விபீஷணன் சிறு வண்டு போல் உருவம் எடுத்து, அசோக வனத்திற்குச் சென்றான். அங்கு சீதை நலமுடன் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். உடனே விபீஷணன் அங்கிருந்து விரைந்து வந்து இராமரிடம், அன்னை சீதை நலமுடன் இருக்கிறார் எனக் கூறினான்

RAMAYANAM PART 145

 இராமாயணம் தொடர்...145

இராவணனின் மந்திர ஆலோசனை...!

🔸 வானரங்கள் அனுமனை சூழ்ந்துக் கொண்டு வாழ்த்தினர். அனைவரும் உயிர்ப்பெற்று எழுந்தவுடன் ஜாம்பவான் அனுமனிடம், சஞ்சீவி மலையை சிறிதும் தாமதிக்காமல் அதை எடுத்த இடத்திலேயே கொண்டு போய் வைத்துவிட்டு வா எனக் கூறினான். அனுமன், சஞ்சீவி மலையை இருந்த இடத்தில் வைக்க சென்றான். இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரம் இராமர் முன் வந்து தோன்றியது. என்னை வில்லில் பூட்டி செலுத்திய பின் நான் கொல்லுவது என்பது உறுதி என்ற உண்மையை நீ நிலை நிறுத்திவிட்டாய் எனக் கூறிவிட்டு இராமரை சரணடைந்தது. இராவணனின் அரண்மனையில், இந்திரஜித் தன் பிரம்மாஸ்திரத்தால் இராம இலட்சுமணன் உள்ளிட்ட வானரங்கள் வீழ்ந்ததை வெற்றி விழாவாகக் கொண்டாடிக் கொண்டு இருந்தனர். அரக்கர்களும், அரக்கியர்களும் மது அருந்தி ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாக கொண்டாடினர். அங்கு வானர வீரர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். வானரங்களின் ஆரவாரங்களை கேட்டு இராவணன் திடுக்கிட்டான். அப்பொழுது இராவணனின் தூதர்கள் அங்கு வந்தனர்.

🔸 அரசே! அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்ததால் பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்தவர்கள் புத்துயிர் பெற்று எழுந்து ஆரவாரம் செய்துக் கொண்டு இருக்கின்றனர் என்றார்கள். இதைக்கேட்ட இராவணனின் மகிழ்ச்சி நிரம்பிய உள்ளம் சோகத்தால் வாடியது. உடனே இராவணன் மந்திர ஆலோசனைக்கு விரைந்துச் சென்றான். அங்கு இந்திரஜித், மாலியவான், மகோதரன் உள்ளிட்ட மற்ற மந்திர தலைவர்கள் அங்கு வந்துச் சேர்ந்தனர். இராவணன், இராம இலட்சுமணர் மற்றும் வானர வீரர்கள் உயிர் பிழைத்ததைக் கூறினான். அப்போது மாலியவான், இராவணா! நீ அவசரப்பட்டு அரக்கர்களின் பிணங்களை கடலில் போட்டு விட்டாய். அப்படி செய்யாமல் இருந்தால் அனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மலையால் அவர்களும் உயிர் பிழைத்திருப்பார்கள். சஞ்சீவி மலையை தூக்கிய அனுமன் இந்த இலங்கை நகரை தூக்கி கடலில் எறிந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நீ உன் பிடிவாதத்தைக் கொண்டு உன் மதியை இழந்து விடாதே.

🔸 நீ சீதையை கொண்டு போய் இராமனிடம் ஒப்படைத்து விட்டு, இராமனை சரணடைந்தால் இலங்கையில் மீதமுள்ள அரக்கர்களும் உயிர் வாழ்வார்கள் என்றான். இதைக் கேட்டு இராவணன், மிகுந்த கோபங்கொண்டு தங்களின் அறிவுரைகளுக்கு நன்று எனக் கூறி அமர வைத்தான். இலங்கையில் அரக்கர்கள் அனைவரும் அழிந்தாலும், நான் ஒருவனே தனித்து நின்று போர் புரிவேன். போர் புரிவதற்கு யாருக்கேனும் பயம் இருந்தால் ஓடி விடுங்கள். அது மகனாக இருந்தாலும் சரி. என் எதிரிகளை அழிக்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது. எனக்கு துணையாக யாரும் வர வேண்டாம். நானே அவர்களை அழிப்பேன் எனக் கூறினான். அப்பொழுது இந்திரஜித் தந்தையை வணங்கி, தந்தையே! நான் அனைவரையும் கொல்லுமாறு பிரம்மாஸ்திரத்தை ஏவினேன். ஆனால் அதிலிருந்து இராமன் தப்பித்து விட்டான். இதிலிருந்து விபீஷணன் கூறியவாறு இராமன் பரம்பொருள் என்பதை தாங்கள் உணர வேண்டும் என்றான்.

தொடரும்...

Thursday, December 21, 2023

RAMAYANAM PART 144

 இராமாயணம் தொடர்...144

அனுமன் சஞ்சீவி மலையை அடைதல்!

❇ ஜாம்பவான், அனுமனே! உடனே வேகமாக சென்றுச் சூரியன் உதிப்பதற்கு முன் மருந்து மலையைக் கொண்டு வர வேண்டும் என்று அனுமனிடம் வேண்டிக் கூறினான். உடனே அனுமன் தன் பெரிய உருவத்தை எடுத்து, நிலத்தில் காலை ஊன்றி வானுயர பறந்தான். (வேகமாக பறப்பதில் அனுமனுக்கு நிகர் எவரும் இல்லை. இருப்பினும் தான் பறந்த வேகத்தை பார்த்து அனுமனுக்கே ஆச்சரியம்தான். தன்னால் இவ்வளவு விரைவாக பறக்க முடியுமா என்று? தான் வணங்கி வழிபடும் இராமரின், உடன்பிறப்பு அல்லவா அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. அதை அனுமனின் அங்கங்களும் உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் பறப்பதில் இவ்வளவு வேகம்). அனுமன், ஜாம்பவான் கூறிய வழியில் சென்று இமயமலையை அடைந்தான். அங்கே கயிலை மலையில் உமை அம்மையுடன் சிவனைக் கண்டு கண்ணுதற்குரிய கடவுளாக, எண்ணுதற்கரிய புண்ணியமென்று வணங்கி அவரது அருளைப் பெற்றான்.

❇ பிறகு ஏம கூட மலையையும், நிடத மலையையும் கடந்துச் சென்றான். இவற்றையெல்லாம் கடந்து மேரு மலையை அடைந்தான். அங்கு பிரம்மதேவனையும், இலட்சுமி தேவியுடன் வீற்றிருக்கின்ற விஷ்ணு மூர்த்தியைக் கண்டு வியந்து பயபக்தியுடன் பணிந்தார். ஆயிரம் ஆதித்தர்கள் ஒருங்கே உதித்தது போன்ற பேரொளிப் பிழம்பாக விளங்கும் சதாசிவ மூர்த்தியையும் மனோன்மணி அம்மையையும் கண்டு பிறவியின் பேறாக எண்ணி, ஆறாகக் கண்ணீர் வடித்து அஞ்சலி செய்தான். பிறகு இந்திரபகவானை வணங்கி தொழுதான். எண்திசைக் காவலரைக் கண்டு கைகூப்பினார். இவர்களின் ஆசியைப் பெற்ற அனுமன், உத்தர குரு என்ற புண்ணிய பூமியை அடைந்தான். அங்கே ஆதித்தனைக் கண்டார்.

❇ அங்கு இளமை மாறாது உயிரும் உடலும்போல ஒன்றுபட்டு வாழ்கின்ற புண்ணிய ஆத்மாக்களைக் கண்டான். பிறகு அங்கிருந்து நீலகிரி மலையை அடைந்து, அதற்கடுத்துள்ள சஞ்சீவி மலை என்னும் மருந்து மலையை அடைந்தான். அதனைக் காக்கின்ற தெய்வங்கள், அனுமனை பார்த்து, நீ யார்? நீ இங்கு வந்ததற்கான காரணம் என்ன? எனக் கேட்டன. அனுமன், தெய்வங்களே! நான் வாயு குமாரன், அனுமன். நான் இராமரின் தூதன். போரில் மாண்ட இராம பக்தர்களை உயிர்ப்பிக்க மருந்து கொண்டு செல்ல வந்தேன் என்று கூறினான். அத்தெய்வங்கள், நீ வேண்டிய மருந்துகளை கொண்டு சென்று, மீண்டும் இங்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று கூறி மறைந்தன. அதன் பிறகு, திருமாலின் சக்கரத்தாழ்வார் வந்து காட்சி தந்து கருணை காட்டி மறைந்தார். பிறகு அனுமன், ஜாம்பவான் கூறிய மருந்துகளைப் பிரித்தெடுப்பது அரிதான செயல் என எண்ணினான்.

❇ ஜாம்பவான் கூறிய மருந்தின் விவரம் :

சஞ்சீவ கரணி - இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் மருந்து

சந்தான கரணி - உடல் பல துண்டுகளாகப் பிளவு பட்டுப் போயிருந்தால் அதனை ஒட்ட வைக்கும் மருந்து

சல்லிய கரணி - உடலில் பாய்ந்த படைக்கருவிகளை வெளியே எடுக்கும் மருந்து

சமனி கரணி - சிதைந்து போன உருவத்தை மீண்டும் பழையபடியே பெறுவதற்கான மருந்து

❇ அனுமன், இங்கேயே நின்றுக் கொண்டு மருந்து பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் கால தாமதம் ஆகிவிடும் என நினைத்தான். பிறகு அனுமன் சஞ்ஜீவி மலையை வேரோடு பெயர்த்து எடுத்துத் தன் ஒரு கையில் வைத்துக் கொண்டு வான வழியில் இலங்கை நோக்கிப் புறப்பட்டான்.

தொடரும்...

RAMAYANAM PART 143

 இராமாயணம் தொடர்...143

ஜாம்பவான் சஞ்சீவி மலைக்கு செல்ல வழிகாட்டுதல்!

விபீஷணன் பிரம்மாஸ்திரத்தால் மாளாதவர் எவரேனும் உள்ளார்களா எனச் சுற்றியும் பார்த்தான். உடனே அவனின் கண்களில் அனுமன் தென்பட்டான். அனுமன் அருகில் சென்று, அவன் மேல் பட்டிருந்த அம்புகளை தூக்கி எறிந்தான். பிறகு தண்ணீரைக் கொண்டு அனுமனின் முகத்தில் தெளித்தான். அனுமன் இராம இராம என சொல்லிக் கொண்டு எழுந்தான். விபீஷணனை பார்த்த அனுமன் மகிழ்ச்சியில் கட்டி தழுவிக் கொண்டான். பிறகு அனுமன், விபீஷணா! இராமர் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? எனக் கேட்டான். விபீஷணன், இலட்சுமணனின் நிலைமையை கண்ட இராமர் அழுது தோய்ந்து மயக்கத்தில் உள்ளார் எனக் கூறினான். பிறகு இருவரும் இராம இலட்சுமணரும் மற்றும் மற்ற வானர வீரர்களும் இந்த இடர்ப்பாட்டில் இருந்து மீள்வதற்கு ஏதேனும் வழி உள்ளதா என யோசித்தனர்.

அனுமனுக்கு உடனே ஜாம்பவான் ஞாபகம் வந்தது. உடனே விபீஷணனிடம் ஜாம்பவான் எங்கே? அவனுக்கு இறப்பு என்பது கிடையாது. அவன் நமக்கு ஏதேனும் நல்ல வழியை காட்டுவான் என்றான். பிறகு இருவரும் ஜாம்பவானை தேடினர். ஜாம்பவான், உடலெங்கும் அம்புகள் துளைத்ததால் மிகுந்த துன்பத்துடனும், சோர்வைடைந்த உணர்விலும், கண்கள் மங்கிய நிலையில் மயக்கத்தில் இருந்த ஜாம்பவானை கண்டனர். தன்னை நோக்கி யாரோ வருவதை உணர்ந்த ஜாம்பவான், வருவது யார்? என்னை காக்க வந்த இராமனா? இல்லை இலட்சுமணனா? அல்லது அனுமனா? இல்லை விபீஷணனா? என எண்ணினான். ஜாம்பவானை பார்த்த விபீஷணன் மகிழ்ச்சியில் கண்டுவிட்டேன்! கண்டுவிட்டேன்! எனக் கத்தினான். 

குரலைக் கேட்டு வந்திருப்பது விபீஷணன் என்பதை அறிந்து கொண்டான், ஜாம்பவான். பிறகு அருகில் இருப்பவன் யார்? என்பதை அறியாமல், நீங்கள் யார்? எனக் கேட்டான். அனுமன், நான் அடியேன் அனுமன் வந்திருக்கிறேன் என்றான். இதைக்கேட்ட ஜாம்பவான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். நாம் இறக்கவில்லை, பிழைத்துக் கொண்டோம் என மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். பிறகு ஜாம்பவான் இராம இலட்சுமணர், வானரங்களின் நிலைமை கேட்டு அறிந்துக் கொண்டான். இதைக் கேட்ட ஜாம்பவான், இவர்கள் அனைவரும் பிழைக்க வைக்க அனுமன் ஒருவனால் மட்டுமே முடியும் என்றான். அனுமனே! நீ உடனே சஞ்சீவி மலைக்குச் சென்று சாவா மருந்தைக் கொண்டு வந்தால் இங்கு உள்ள அனைவரும் பிழைத்து எழுவார்கள். அங்கு பல அதிசய மூலிகைகள் இருக்கின்றன. 

இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் மருந்து, உடல் பல துண்டுகளாகப் பிளவுபட்டுப் போயிருந்தால் அதனை ஒட்ட வைக்கும் மருந்து, உடலில் பாய்ந்த ஆயுதங்களை வெளியே எடுக்கும் மருந்து, சிதைந்து போன உருவத்தை மீண்டும் பழையபடியே பெறுவதற்கான மருந்து என்று தனித்தனியாக உள்ளது. அங்கு சென்று அந்த மருந்துகளை கொண்டுவா. தாமதம் செய்தால் பெரிய இழப்பு ஏற்படும். அம்மலைக்கு போகும் வழியை நான் உனக்கு கூறுகிறேன் என்றான். தென் கடலுக்கு ஒன்பதனாயிரம் தொலைவில் இமயமலை இருக்கின்றது. இமயத்துக்கு அப்பால் ஒன்பதனாயிரம் தொலைவில் ஏமகூட மலை இருக்கிறது. அம்மலைக்கு அப்பால் ஒன்பதனாயிரம் தூரத்தில் நிடதமலை இருக்கின்றது. அதற்கு அப்பால் ஒன்பதனாயிரம் தொலைவில் மேரு மலை இருக்கிறது. மேரு மலைக்கு அப்பால் ஒன்பதனாயிரம் தூரத்தில் நீலகிரி இருக்கின்றது. நீலகிரிக்கு அப்பால் நாலாயிரம் தூரத்தை கடந்தால் மருந்துமலை இருக்கின்றது.

தொடரும்...

RAMAYANAM PART 142

 இராமாயணம் தொடர்...142

சீதைக்கு திரிசடை கூறும் ஆறுதல்!

✦ சீதை, பெருமானே! தங்களுக்கு என்னால் தான் இந்த துன்பம் நேர்ந்ததே. கண் இமைக்காமல் என்னை காத்த இலட்சுமணா! அண்ணன் இறக்கும் முன் நான் என் உயிரை விடுவேன் என உன் அன்னை சுமித்திரையிடம் கூறினாயே. அதுபோல் இன்று செய்து விட்டாயே. கடலை கடந்து வந்து என்னைக் கண்டு சென்ற அனுமனே! உனக்கு இந்நிலைமை நேர்ந்துவிட்டதே எனக் கூறி கதறி அழுதாள். பெருமானே! நான் தீராப் பழிக்கு ஆளாகிவிட்டேன். இனி என்னை காக்க யார் இருக்கிறார்கள் எனக் கூறிக் கொண்டு கீழே விழ முயன்றாள். அப்பொழுது திரிசடை சீதையை தடுத்தாள். பிறகு சீதையை அன்போடு தழுவிக் கொண்டாள். அம்மா சீதை! இதெல்லாம் மாயை. மாய மானை அனுப்பியதும், உன் தந்தை போல் மாய ஜனகரை உன் முன் கொண்டு வந்து நிறுத்தியதும் அரக்கர்கள் செய்த மாய வேலை என்பதை நினைவில் கொள்வாயாக.

✦ அங்கு வீழ்ந்து இருக்கும் உன் கணவனை பார்! இராமனின் உடலில் அம்பு பட்ட இடமும் தெரியவில்லை. இரத்த காயங்களும் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் இங்கு ஒரு அரக்கர்கள் கூட தென்படவில்லை. இது எல்லாம் அரக்கர்களின் மாய செயல் என்பதை உணர்வாயாக. நான் கண்ட கனவு பொய்யாகாது. உனக்கு நேர்ந்த நல்ல நிமித்தங்களையும் நினைத்துப் பார். நிச்சயம் தர்மம் தலைத்தோங்கும். பாவச்செயல்கள் செய்யும் அரக்கர்களின் நிலைமை நிச்சயம் ஒரு முடிவுக்கு வரும். நீ அழாதே என ஆறுதல் கூறினாள். பிறகு திரிசடை, சீதா! முன்பு நாகப்பாசத்தால் கட்டுண்டவர்கள் விடுபட்டு ஆரவாரம் செய்த ஒலி உனக்கு கேட்டது அல்லவா? நிச்சயம் இவர்கள் திரும்பி வருவார்கள். இராமர் இறந்திருந்தால் இந்த ஏழு உலகங்களும் அழித்திருக்கும். 

✦ நீ சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என அனுமனுக்கு கொடுத்த வரம் பொய்யாகாது. உன் கற்பின் திறனுக்கும் அழிவு வராது. பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்து கிடப்பவர்கள் நிச்சயம் உயிர் பெறுவார்கள். நீ உன் மனதை தெளிவுப்படுத்திக்கொள் என ஆறுதல் கூறினாள். சீதை, திரிசடை தாயே! இதுவரை தாங்கள் சொன்ன எதுவும் பொய்யாகவில்லை. தக்க சமயத்தில் தாங்கள் எனக்கு அறிவுரை கூறியுள்ளீர்கள். தாங்கள் கூறிய வார்த்தைகளை தெய்வமாக நினைத்து, நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றாள். நிச்சயம் எம்பெருமான் என்னை வந்து காப்பார் எனக் கூறினாள். பிறகு அரக்கியர்கள் புஷ்பக விமானத்தை மீண்டும் அசோக வனத்திற்கே கொண்டு சென்று சீதையைக் காவலில் வைத்தனர். 

✦ இராமரின் கட்டளைப்படி உணவு சேகரிக்க சென்ற விபீஷணன் போர்க்களத்திற்கு வந்தான். போர்க்களத்தில் பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்து கிடக்கும் வானர வீரங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தான். அங்கதன், சுக்ரீவன் முதலான வானர வீரர்கள் வீழ்ந்துக் கிடப்பதைக் கண்டு மிகவும் கவலை அடைந்தான். பிறகு விபீஷணன், இராமன் மயங்கி கிடப்பதைக் கண்டு அவனது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் குழம்பி இருந்தான். விபீஷணன், இராமரை உற்றுப் பார்த்தபோது இராமரின் உடலில் எந்த அம்பும் துளைக்கவில்லை என்பதைக் கண்டுகொண்டான்.

தொடரும்...

RAMAYANAM PART 141

 இராமாயணம் தொடர்...141

சீதையின் துயரம்...!

✨ இராமரின் துயரத்தைக் கண்டு தேவர்கள் முதலானோர் அழுதனர். இதை அறிந்த அரக்க தூதர்கள் இராவணனிடம் ஓடிச் சென்று வானரப் படையோடு இலட்சுமணன் மாண்டான். இலட்சுமணனின் பிரிவை தாங்க முடியாமல் இராமன் மாண்டான். இதனால் தங்களின் பகை தீர்ந்தது எனக் கூறினார்கள். பிரம்மாஸ்திரத்தால் இராம இலட்சுமணன் உட்பட வானர வீரர்கள் மாண்டதை அறிந்து இராவணன் மகிழ்ச்சி அடைந்தான். இந்த மகிழ்ச்சியை விழாவாக கொண்டாட நினைத்தான். உடனே மருத்தன் என்னும் அரக்கனை அழைத்து, நீ உடனே போர்களத்திற்குச் சென்று, போரில் மாண்ட அரக்கர்களை அனைவரையும் ஒன்று விடாமல் கடலில் எடுத்து வீசி விடு. இந்த வேலையை உன்னைத் தவிர வேறு யாரும் செய்யக்கூடாது. இது உன்னை தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது.

✨ அப்படி யாருக்கேனும் தெரிந்தால் உன் தலையை சீவி விடுவேன் எனக் கட்டளையிட்டு அனுப்பினான். (இதற்கான காரணம் என்னவென்றால் அரக்கர்களின் பிணங்கள் போர் களத்தில் இருந்தால், பார்ப்பவர்கள் இராவணனின் அரக்கர்கள் தான் போரில் அதிகம் மாண்டவர்கள் என்பது தெரிய வரும் அதனால் தான்.) இராவணனின் கட்டளைப்படி மருத்தன், போர்களத்திற்குச் சென்று அரக்கர்களின் பிணங்களை கடலில் போட்டுவிட்டான். இப்பொழுது போர்களத்தில் வானர வீரர்கள் மட்டும் வீழ்ந்துக் கிடந்தனர். இராவணன், சீதையை போர்களத்திற்குச் அழைத்துச் சென்று, போரில் அரக்கர்கள் யாரும் மாளவில்லை என்பதை தெரியப்படுத்த நினைத்தான். உடனே இராவணன், சீதையை அழைத்துச் சென்று இராம இலட்சுமணனுக்கு நேர்ந்த கதியை காட்டுங்கள் என கட்டளையிட்டான்.

✨ இதனால் சீதை, இராம இலட்சுமணர் மாண்டு விட்டனர் என நினைத்து தன்னை ஏற்றுக் கொள்வாள் என நினைத்தான். அரக்கியர்கள் சீதையை ஒரு புஷ்பரக விமானத்தில் ஏற்றி ராம இலட்சுமணனின் நிலையை காட்டினர். சீதை, இராம இலட்சுமணரின் நிலையைக் கண்டு கதறி அழுதாள். என் பெருமானே! இராவணாதி அரக்கர்களை கொன்று தண்டகவனத்தில் வாழும் முனிவர்களுக்கு அனுகூலம் புரிவதாக கூறினீர்களே! தங்களின் இந்த நிலைமைக்கு நான் தானே காரணம். நான் அந்த மாய மான் மேல் ஆசைப்படாமல் இருந்திருந்தால் தங்களுக்கு இந்த நிலைமை நேர்ந்திருக்காது. நான் தங்களை மானின் பின் அனுப்பியது என் தவறு. இனி நான் என்ன செய்வேன். எனக்கு துணையாக இனி யார் இருப்பார்கள். எம்பெருமானே தயவுகூர்ந்து எழுங்கள் என கதறி அழுதாள்.

✨ சீதை இலட்சுமணனை பார்த்து, இளையவனே! வலிமையானவனே! என் அண்ணன் இராமனுக்கு துணையாக இருப்பேன் எனக் கூறினாயே! நான் அன்று உன்னை இகழ்ந்து பேசியதற்கு பதிலாக தான் இன்று இங்கு சிறைப்பட்டு கொண்டிருக்கிறேன். நீ மாய மான் எனக் கூறியும் நான் அதைக் கேட்காமல் உன் அண்ணனை சென்று தேடி வருமாறு கூறியது என் தவறு என்பதை உணர்ந்துவிட்டேன். நீ அன்று என்னுடன் இருந்திருந்தால் தங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. இரவும் பகலும் பாராமல் கண்விழித்து காவல் புரிவாயே. நான் செய்த தவறால் தங்களுக்கு இந்நிலைமை நேர்ந்துவிட்டதே. நான் மதியை இழந்ததால் தான் இராவணனின் சிறையில் அகப்பட்டு விட்டேன். இனி என்னை காக்க யார் இருக்கிறார்கள் என கூறிக் கதறி அழுதாள்.

RAMAYANAM PART 140

 இராமாயணம் தொடர்...140

இராமரின் துயரம்!...

💠 மறுபடியும் மகோதரன், இந்திரன் போல் உருவம் கொண்டு ஐராவரத்தின் மீது ஏறிக் கொண்டு வானரங்களுக்கு எதிராக போர் செய்து கொண்டு இருந்தான். ஆனால் இலட்சுமணனுக்கு இந்திரன் போல் வந்திருப்பது மாய வேலையில் வல்லவனான மகோதரன் என்பது தெரியவில்லை. இதைப் பார்த்த இலட்சுமணன் அனுமனிடம், நாம் இந்திரன் முதலிய தேவர்களை காக்கும் பொருட்டு தான் இராவணனுடன் போர் செய்து கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் இந்திரன் முதலியவர்கள் நம்மீது போர் செய்ய என்ன காரணம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை பிரயோகம் செய்து இலட்சுமணன் மீது ஏவினான். அனுமன், பிரம்மாஸ்திரத்தை ஏவியவனை நான் கொல்வேன் எனத் துணிந்தான். ஆனால் அனுமன் பிரம்மாஸ்திரத்தின் தாக்கத்தால் மயங்கி கீழே விழுந்தான்.

💠 பிரம்மாஸ்திரத்தால் இலட்சுமணன், சுக்ரீவன், அங்கதன் முதலிய வானர வீரர்கள் உயிர் நீத்தனர். நளன் முதலிய வானரப் படைகளும் பிரம்மாஸ்திரத்தால் உயிர் நீத்தனர். அங்கிருந்த வானர வீரர்கள் அனைவருமே வீழ்ந்தனர். பிறகு இந்திரஜித் வெற்றி முழக்கமிட்டு அரண்மனைக்குச் சென்றான். இராவணனிடம் சென்று, தந்தையே! பிரம்மாஸ்திரத்தால் இராமனை தவிர மற்ற அனைவரும் உயிர் நீத்தனர் என்றான். இதைக்கேட்டு இராவணன் மகிழ்ச்சியடைந்தான். ஆனால் இராமன் சாகவில்லை என்பதை நினைத்து வருந்தினான். அதற்கு இந்திரஜித், இராமன் போர்க்களத்தை விட்டு வெகுதூரம் சென்றதால் அவனை பிரம்மாஸ்திரம் தாக்கவில்லை எனக் கூறினான். இருந்தாலும் இராமனின் படைகள் அழிந்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தான். பிறகு இராவணன், இந்திரஜித்துக்கும், மகோதரனுக்கும் விடைகொடுத்து அவரவர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு கூறினான்.

💠 இராமர் தன் படைகலன்களின் பூஜையை முடித்துவிட்டு திரும்பி வந்தார். வரும் வழியில் பிரம்மாஸ்திரத்தால் தாக்கப்பட்டு வீழ்ந்து கிடப்பவர்களை பார்த்தார். இதைப் பார்த்த இராமர் தன் படைகள் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு வருந்தினார். சுக்ரீவனைப் பார்த்து அன்பு தம்பியே! நட்பின் திலகமே! எனக்கு துணையாக வந்த நீ வீழ்ந்து கிடக்கிறாயே எனக் கூறி புலம்பி அழுதார். அனுமனை பார்த்த இராமர், வலிமையில் சிறந்தவனே! சீதைக்கு உயிர் கொடுத்த சேவைமிக்க பண்புடையவனே! தேவர்கள் உனக்கு சாகா வரம் கொடுத்தார்களே. அந்த வரம் பொய்யாகுமா? நான் கனவிலும் உனக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என நினைக்கவில்லையே எனக் கூறி புலம்பி அழுதார். இராமர் தன் தம்பி இலட்சுமணன் பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இலட்சுமணனை மார்போடு தழுவிக் கொண்டார்.

💠 தம்பி! எனக்கு தாயும் நீ! எனக்கு தந்தையும் நீ தான். எவ்வாறு நீ என்னை விட்டு பிரிந்துச் சென்றாய். என் ஆருயிர் தம்பியே! கானகத்தில் இந்த 14 வருடம் எனக்கு காய், கனிகள் கொடுத்து நீ உண்ணாமல் இருந்தாய். எனக்கு தூக்கத்தை கொடுத்து நீ தூங்காமல் இருந்தாய். இந்த வனவாசத்தில் நீ எனக்கு துணையாக இருந்து சேவை புரிந்தாயே. இனி எனக்கு துணையாக யார் இருப்பார்கள். நீ என்னைவிட்டு பிரிந்த பின் நான் மட்டும் வாழ்ந்து என்ன பயன்? தம்பி! நீ எனக்காக உன் மனைவியை விட்டு, அரண்மனையை விட்டு, உன் உணர்வையும், தூக்கத்தையும் விட்டு எனக்காக பணி செய்தாயே! நீ இல்லாமல் எனக்கு இந்த புகழ் எதுவும் வேண்டாம். இனி நானும் உயிர் வாழ மாட்டேன் என பலவாறு கூறி புலம்பி அழுதார். தன் மனச்சுமையையும், துக்கத்தையும் தாங்காமல் இராமர் மயங்கி விழுந்தார்.

தொடரும்...

RAMAYANAM PART 139

 இராமாயணம் தொடர்...139

இந்திரஜித் இலட்சுமணன் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவுதல்...!

இராவணன் இந்திரஜித்தை அழைத்து, மகனே! படைத்தலைவர்களும், கரன் மகனான மகரக்கண்ணனும் போரில் மாண்டனர். இப்போரில் உன்னைத் தவிர வேறு எவராலும் வெல்ல முடியாது. உனக்கு நிகரான மாவீரர்கள் இந்த உலகில் இல்லை. அந்த இராம, இலட்சுமணனை உன்னைத் தவிர வேறு எவராலும் வெல்ல முடியாது. நீ போருக்கு சென்று வெற்றியுடன் திரும்பி வா! எனக் கூறி விடை கொடுத்தான். இந்திரஜித் தன் தந்தையை வணங்கி போருக்கு புறப்பட்டான். இந்திரஜித், ஆயிரம் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி, அசுர சேனைகள் புடைசூழ போர்க்களத்திற்கு வந்துச்  சேர்ந்தான். அவனை பார்த்த வானர வீரர்கள் சிலர் பயத்தில் ஓடி ஒளிந்தனர். இராமர் வானர வீரர்களுக்கு பயம் நீங்க ஆறுதல் கூறினார். இராமர், அனுமனின் தோளிலும், இலட்சுமணன் அங்கதன் தோளிலும் ஏறி போர் புரிய தொடங்கினர்.

இராமரும், இலட்சுமணரும் தங்கள் கர வேகத்தையும், வில்வேகத்தையும் கொண்டு போர் புரிந்து கொண்டு இருந்தனர். இராம இலட்சுமணனின் வில் திறமையைக் கண்டு இந்திரஜித் வியந்து நின்றான். இராம இலட்சுமணனின் போர் திறமையைக் கண்டு அரக்க சேனைகள் பயந்து ஓடின. இந்திரஜித் நான் தனியாகவே போர் புரிந்து கொள்கிறேன் எனக் கூறி போர் புரிந்தான். அப்பொழுது இராமர் அவனின் தேரை உடைத்தெறிந்தார். இலட்சுமணனும், இந்திரஜித்தும் கடுமையாக போர் புரிந்தனர். அப்பொழுது இந்திரஜித் தன் மாய திறமையால் வானத்தில் போய் மறைந்தான். இலட்சுமணன் இராமரை பார்த்து, அண்ணா! நான் இப்பொழுது இவன் மேல் பிரம்மாஸ்திரத்தை ஏவ போகிறேன் என்றான்.

இராமர், தம்பி இலட்சுமணா! நீ பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினால் ஒரு நொடியில் உலகமே அழிந்துவிடும். அதனால் நீ பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த வேண்டாம் என தடுத்து நிறுத்தினார். போரில் தோற்று மாய வேலை செய்து மறைந்த இந்திரஜித் யாரும் அறியாமல் இலங்கை நகரை அடைந்தான். இந்திரஜித்தை காணாததால், அவன் பயந்து ஓடி விட்டான் என நினைத்து இராம இலட்சுமணன் உள்ளிட்ட வானரப்படைகள் இளைப்பாறினர். இராமர், வானரப் படைகளுக்கு உணவு பொருட்களை கொண்டு வருமாறு விபீஷணனை அனுப்பினார். இராமர், தன் படைக்கலன்களுக்கு பூஜை செய்ய தனியாகச் சென்று விட்டார். இலட்சுமணன் மற்றும் மற்ற வானர வீரர்கள் மட்டுமே போர்க்களத்தில் இருந்தனர். இந்திரஜித் அரண்மனைக்கு சென்று இராவணனிடம் தான் மறைந்து நின்று பிரம்மாஸ்திரத்தை விடுவது என முடிவு செய்தான்.

அதற்கு மகோதரனை முதலில் சென்று போர் புரியுமாறு கூறினான். அவன் மாய போர் செய்து கொண்டிருக்கையில் நான் பிரம்மாஸ்திரத்தை செலுத்தி விடுவேன் எனக் கூறினான். (மாயப் போர் என்பது ஒருவரை ஒருவர் பார்க்காமல் போர் புரிவது.) மகோதரன் போர்க்களத்தில் மாய போர் புரிந்தான். அவன் ஆங்காங்கே நின்று போர் புரிந்தான். இதை கவனித்த இலட்சுமணன், பாசுபதாஸ்திரத்தை ஏவினார். இதில் அரக்க சேனையும், அவர்களது மாயமும் எரிந்து போனது. மாய விலகிய மகோதரன் அவ்விடத்தை விட்டு ஓடினான். அப்போது இந்திரஜித் யாரும் அறியாத வண்ணம் மறைந்து இருந்து பிரம்மாஸ்திரத்திற்கான மந்திரத்தை சொல்லிக் கொண்டு இருந்தான்.

Monday, December 11, 2023

RAMAYANAM PART 138

 இராமாயணம் தொடர்...138

மகரக்கண்ணனின் போர்...!

🔹 போரில் வேள்விப்பகைஞன், இலட்சுமணனுடன் போர் புரிந்து மாண்டான். வச்சிரப்பல்லன் அனுமனின் கையால் மாண்டான். இலட்சுமணன், பிசாசன் என்னும் வீரனையும் கொன்றான். இராமர் ஆறு கோடி சேனைகளை அழித்தார். இலட்சுமணன், நான்கு கோடி சேனைகளை அழித்தார். போரில் படைத்தலைவர்கள் மாண்டச் செய்தியை தூதர்கள் இராவணனிடம் சென்று கூறினர். இதைக் கேட்டு இராவணன் மிகவும் கோபங்கொண்டான். இராவணன் தம்பி கரன். இவனின் மகன் மகரக்கண்ணன். ஒருமுறை காட்டில் இராமரும், இலட்சுமணரும் இருந்தபோது சூர்ப்பனகை அவர்களிடம் தவறாக நடக்க முற்பட்டாள். அப்பொழுது கோபங்கொண்ட இலட்சுமணன் சூர்ப்பனகையின் காதையும், மூக்கையும் அறுத்தான். உடனே தன் அண்ணன் இராவணனிடம் சென்று முறையிட்டாள். 

🔹 அப்பொழுது இராமரிடம் போர் புரிய சென்றவர்களுள் ஒருவன் தான் கரன். காட்டில் போர் புரியும் போது கரன் இராமரால் மாண்டான். மகரக்கண்ணன் இராவணனை தொழுது, பிதாவே! என் தந்தையை கொன்ற இராமனை நான் கொன்று என் பழியை தீர்த்துக் கொள்கிறேன். தாங்கள் என்னை போருக்கு அனுப்பி வையுங்கள். நான் இப்போரில் தங்களுக்கு வெற்றியை தேடித் தருவேன். நான் போருக்குச் செல்ல தாங்கள் விடை தாருங்கள் என்றான். இராவணன் அவனை அன்போடு தழுவி, மகனே! உன் வீரம் மேருமலையை விடச் சிறந்தது. நீ போரில் இராமனையும், இலட்சுமணனையும் கொன்று வெற்றி மாலை சூடி திரும்புவாயாக எனக் கூறி விடைக் கொடுத்தான். பிறகு இராவணன், ஐந்து கோடி சேனைகளை உடன் அனுப்பி வைத்தான். 

🔹 மகரக்கண்ணன், சேனைகள் புடைசூழ, முரசொலிகள் முழங்க போர்களத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு இராமரை பார்த்து கோபங்கொண்டு, இராகவா! நீ என் தந்தையைக் கொன்று அரக்க குலத்திற்கு பழியை தேடி தந்து உள்ளாய். அதே போல் நான் உன்னையும், உன் தம்பியையும் கொன்று என் பழியை தீர்த்து கொள்ள போகிறேன் என்றான். பிறகு தன் மாய உருவினால் நெருப்பு மழை சிந்தியும், புயல்காற்று வீசியும், வானத்தில் இடி விழச் செய்தும் தன் உருவத்தினை மறைத்து பல மகரகண்ணன்கள் இருப்பது போல் தோற்றமளித்து போர் புரிந்தான். இவ்வாறு அவன் தன் உருவினை மாற்றி மாற்றி போர் புரிந்துக் கொண்டிருந்தான். இராமர் அவனை நோக்கி அம்புகளை ஏவினார். 

🔹 அதில் ஓர் அம்பு பட்டு அவன் உடம்பில் இருந்து இரத்தம் வலிந்தது. இதைப் பார்த்த இராமர், இரத்தம் சிந்தும் உருவமே மகரக்கண்ணனின் உண்மையான உருவம் என்பதைக் கண்டு கொண்டார். பிற உருவங்களில் இரத்தம் இல்லாததைக் கண்டார். மகரக்கண்ணனை தவிர மற்றவைகள் எல்லாம் மாயம் என்பதை உணர்ந்த இராமர், ஒரு தெய்வீக கணையை அவன் மீது ஏவினார். இதனால் அவனின் வலிமை குறைந்து அவன் மாண்டான். அரக்க தூதர்கள் இராவணனிடம் சென்று மகரக்கண்ணன் இராமனால் மாண்டான் என்னும் செய்தியைக் கூறினார்கள். இதைக்கேட்டு இராவணன் துன்பக்கடலில் ஆழ்ந்தான். இலங்கையில் அரக்கியர்கள் தங்கள் கணவர்கள் போரில் மாண்டதை அறிந்து கதறி அழுதுக் கொண்டிருந்தனர். --தொடரும்.

RAMAYANAM PART 137

 இராமாயணம் தொடர்....137

வானரப் படைகளும் அரக்கப் படைகளும்!...

❆ இராவணன் வானரங்களின் ஆரவாரத்தைக் கேட்டு இந்திரஜித்தின் மாளிகைக்கு விரைந்துச் சென்றான். அங்கு இந்திரஜித் போரினால் ஏற்பட்ட களைப்பால் மிகவும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். இராவணன், இந்திரஜித்தை எழுப்பினான். இந்திரஜித், தந்தையே! தாங்கள் ஏன் இவ்வளவு அவசரமாக என்னை எழுப்பினீர்கள் என்றான். இராவணன், மகனே! நீ நாகபாசத்தால் கொன்று விட்டேன் எனக் கூறியவர்கள், ஆரவாரம் செய்து கொண்டிருக்கும் ஓசை உனக்கு கேட்கவில்லையா? எனக் கேட்டான். இதைக் கேட்ட இந்திரஜித், இது எப்படி சாத்தியமாகும்? நாகபாசத்தால் கட்டுண்டவர்கள் எவ்வாறு மீள முடியும்? என்றான். அப்பொழுது தூதுவன் ஒருவன் அங்கு வந்தான். அரசே! நாகபாசத்தால் கட்டுண்டவர்களை பார்த்த இராமர், கோபங்கொண்டு நாகபாசத்தை ஏவியவனை கொல்வேன் என முனைந்தான்.

❆ அப்பொழுது கருட பகவான், வானத்தில் இருந்து பறந்து வந்து தன் சிறகுகளை அகல விரிந்து நாகபாசத்தால் கட்டுண்டவர்களையும், போர்களத்தில் மாண்ட வானரங்களையும் காப்பாற்றி விட்டான் எனக் கூறினான். இதைக் கேட்ட இராவணன், என்னுடன் தோல்வி அடைந்த அந்த கருடனுக்கு இவ்வளவு ஆற்றலா? எனக் கோபம் கொண்டான். பிறகு இந்திரஜித்திடம், மகனே! நீ உடனே போர்களத்திற்குச் சென்று பிரம்மாஸ்திரத்தை ஏவி அவர்களை கொன்று விட்டு திரும்புவாயாக என்றான். இந்திரஜித், தந்தையே! நான் இன்று ஓய்வு எடுத்துக் கொண்டு நாளை போரில் நிச்சயம் அவர்களை வீழ்த்தி, உங்களுக்கு மன ஆறுதலை கொடுப்பேன் என்றான். இராவணன், இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து வந்தான். இராவணன் தன் மாளிகைக்கு வந்தடைந்தான். அப்பொழுது படைத்தலைவர்கள் அங்கு வந்தனர்.

❆ அவர்கள், அரச பெருமானே! தாங்கள் எங்களை போருக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம். அப்பொழுது அவர்களில் ஒருவன், அரசே! மாபக்கனும், புகைக்கண்ணனும் போரில் அவர்களை பார்த்து ஓடி வந்தவர்கள் எனக் கூறினான். இதைக் கேட்டு இராவணன் அவர்கள் மேல் பெருங்கோபம் கொண்டான். போரில் எதிரிகளை கண்டு பயந்து ஓடி வந்த நீங்கள் எல்லாம் வீரர்களா? இவர்களின் மூக்கை அறுத்தெறியுங்கள் என்றான். அப்பொழுது மாலி என்னும் வீரன் இராவணனை வணங்கி, அரசே! ஒருவனுக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும். வெற்றியும், தோல்வியும் யாருக்கும் நிரந்தரம் அல்ல. உங்கள் தம்பிமார்களும் போரில் தோற்றவர்கள் தான். அதனால் தோற்றவர்களின் மூக்கை அறுப்பது நியாயமாகாது என்றான்.

❆ இதைக்கேட்டு இராவணன் கோபம் தணிந்து அவர்களை மன்னித்து, போருக்கு அவர்களுடன் பத்து கோடி வெள்ள சேனைகளை உடன் அனுப்பி வைத்தான். பிறகு படைத்தலைவர்களும், அரக்கப்படைகளும் கையில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். போருக்கு வரும் படைத்தலைவர்களின் ஆற்றலைப் பற்றி விபீஷணன், இராமரிடன் எடுத்துக் கூறினான். அரக்கப்படைகளும், வானரப்படைகளும் பெரும் ஆரவாரத்தோடு போர் புரியத் தொடங்கினர். இரு படைகளின் போர் மிகவும் கடுமையாக நடந்தது. புகைக்கண்ணன் அனுமனுடன் போர் புரிந்து மாண்டான். மாபக்கன், அங்கதனுடன் போர் புரிந்து மாண்டான். மாபெரும் வீரனான் மாலி, வானர படைத்தலைவன் நீலனுடன் போர் புரிந்து மாண்டான்.

தொடரும்...

RAMAYANAM PART 136

 இராமாயணம் தொடர்... 136

கருட பகவான் நாகபாசத்தை விடுவித்தல்!

இராமர், ஒருவன் செய்த தீமைக்காக மட்டும் உலகை அழிப்பது முறையல்ல என நினைத்துக் கொண்டு மனதை தேற்றினார். அப்பொழுது கருட பகவான், வானத்தில் இருந்தப்படி அந்த இடத்தை வட்டமிட்டார். வானத்தில் இருந்தப்படியே இராமரை தொழுதார். பரம்பொருளே! உலக நாயகனே! உலகங்களை காக்கும் தேவனே! கருணை வடிவானவரே! மற்றவர்களின் துன்பங்களை நீக்குபவரே! இராமா! அருட்பொருஞ் ஜோதியே! கருணைக் கடலே! எனப் போற்றி வணங்கினார். இப்படி வானத்தில் வட்டமிட்டு பறந்துக் கொண்டிருந்த கருட பகவான், தன் சிறகுகளை அகல விரித்துக் கொண்டு இராமர் முன் வந்து நின்றான். கருட பகவானுடைய நிழல் பட்டவுடன் இலட்சுமணன் முதலானவர்களை கட்டியிருந்த நாகபாசம் விடுபட்டு விட்டது.

கருட பகவானின் நிழல் பட்டு மாண்ட அரக்கர்கள் எழவில்லை. கருட பகவானின் வரவு தீயவர்களுக்கு நல்லது செய்யவில்லை. அதுமட்டுமின்றி கருட பகவானின் நிழல் பட்டு வானரங்கள் மீண்டும் உயிர்பெற்று, போரில் ஏற்பட்ட காயங்களும், புண்களும் ஆறி புத்துயிர் பெற்றது போல் இராம்!... இராம்!... என இராமரின் ஜெபத்தை சொல்லிக் கொண்டு எழுந்தனர். நாகபாசம் விடுபட்டு நீங்கிய இலட்சுமணனை, இராமர் மார்போடு தழுவிக் கொண்டார். பிறகு கருடனை பார்த்து, ஐயா தாங்கள் யார்? நாங்கள் செய்த தவப்பயனால் தான் தாங்கள் இங்கு வந்துள்ளீர்கள். தாங்கள் வந்ததால் தான் நாகபாசத்தால் கட்டுண்டவர்கள் விடுபட்டுள்ளனர். தாங்கள் எங்களுக்கு செய்த உதவிக்கு நாங்கள் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. தங்களை நாங்கள் இதற்கு முன் பார்த்ததும் இல்லை. தங்களை பற்றியும் கேட்டதில்லை.

அன்பனே! தாங்கள் கைம்மாறு எதிர்பாராமல் எங்களுக்கு உதவி செய்து உள்ளீர்கள். இதற்கு நாங்கள் கோடான கோடி நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். எங்களின் அன்பை தங்களுக்கு தருகிறோம். இவர்கள் மீண்டும் உயிர் பெறுவார்களா? என நினைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் தாங்கள் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் எங்களுக்கு உதவி செய்து உள்ளீர்கள் என்றார். இதைக் கேட்ட கருட பகவான், இராமரின் திருவடிகளை தொழுது வணங்கி, உங்கள் திருவடிக்கு கோடி வணக்கங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து பறந்து சென்றான். பிறகு அனுமன் இராமரிடம், பெருமானே! இலட்சுமணர் இறந்து விட்டார் எனவும், நாம் அனைவரும் இறந்து விட்டோம் எனவும் அன்னை சீதை நினைத்து வருந்திக் கொண்டு இருப்பார். அது மட்டுமின்றி அங்கு அரக்கர்கள் மகிழ்ச்சியில் இருப்பார்கள்.

ஆதலால், நாம் உயிர் பிழைத்துவிட்டோம் என்பதை இலங்கையில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள நாம் ஆரவாரம் செய்வோம் என்றான். இராமர், அனுமனின் யோசனைக்கு உடன்பட்டு சம்மதித்தார். பிறகு வானரங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உலகமே அதிரும் வண்ணம் ஆரவாரம் செய்தனர். இலங்கையில் இருவர் மட்டும் தூங்காமல் இருந்தனர். ஒருவன் இராவணன். இராவணன் சீதையை நினைத்துக் கொண்டு தூங்காமல் இருந்தான். மற்றொருவர் சீதை. சீதை இராமனையே நினைத்துக் கொண்டு தூங்காமல் இருந்தாள். இந்த ஆரவாரம் இலங்கை நகர் முற்றிலும் கேட்டது. இராவணன் இந்த ஆரவாரத்தைக் கேட்டு திடுக்கிட்டான். இது என்ன மாயம்? வானரங்களின் ஆரவாரம் செவிகளை பிளக்கிறதே! இலட்சுமணன் வில்லின் நாணொலியின் சத்தமும் கேட்கிறதே! அனுமனின் ஆரவாரமும் கேட்கிறதே! அப்படியென்றால் இவர்கள் அனைவரும் நாகபாசத்தில் இருந்து விடுப்பட்டு விட்டார்கள் என்பதை உணர்ந்தான்.

தொடரும்...

Tuesday, December 5, 2023

RAMAYANAM PART 135

 இராமாயணம் தொடர்...135

இராமர் இலட்சுமணரை நினைத்து வருந்துதல்!...

❇ இந்திரஜித், நான் இங்கு வந்த வேலையை முடித்து விட்டேன். என் உடல் சோர்வை நீக்கி விட்டு நாளை மறுபடியும் வருவேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து அரண்மனைக்குச் சென்றான். இராவணனிடம் சென்று, தந்தையே! வணக்கம். நான் இராமனை தவிர மற்ற அனைவரையும் நாகபாசத்தை ஏவி கொன்று விட்டேன். திரும்பவும் நாளைச் சென்று இராமனை கொல்வேன் என்றான். இதனைக் கேட்டு இராவணன் மகிழ்ந்தான். பிறகு இந்திரஜித் நான் மறுபடியும் செல்ல வேண்டியுள்ளதால் நான் என் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்து கொள்கிறேன் எனக் கூறி விட்டு அங்கிருந்துச் சென்றான். அங்கு இலட்சுமணன் நாகபாசத்தால் கட்டுண்டு கிடப்பதைப் பார்த்து விபீஷணன் வருந்திக் கொண்டு இருந்தான். அப்போது அங்கு அனலன் என்னும் வானர வீரன் விபீஷணனுக்கு ஆறுதல் கூறினான்.

❇ பிறகு அனலன் அங்கிருந்து ஓடிச் சென்று இராமரிடம், இலட்சுமணன் நாகபாசத்தால் கட்டுண்டு அசைவில்லாமல் இருக்கிறார் எனக் கூறினான். இதைக் கேட்டு இராமர் ஆழ்ந்த துயரம் அடைந்தார். அவரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. உடனே இராமர் போர்க்களத்திற்கு விரைந்து சென்றார். இருளில் சூழ்ந்திருந்த போர்க்களத்தை ஒரு அக்னி கணையை ஏவினார். அந்த இடத்திலிருந்த இருள் நீங்கி சூரிய வெளிச்சம் போல் ஒளி பரவியது. இராமர், அங்கு நாகபாசத்தால் வீழ்ந்து கிடக்கும் இலட்சுமணரை பார்த்தார். இலட்சுமணரை அன்போடு தன் மார்பில் தழுவிக் கொண்டார். இலட்சுமணனின் நிலையைக் கண்டு வருந்தினார். தம் தம்பியின் கை, கால்கள் அசைவின்றி இருப்பதைக் கண்டு வருந்தினார். இனி இலட்சுமணன் உயிர் பிழைக்க மாட்டான் என நினைத்து அழுதார்.

❇ இராமர் விபீஷணனை அழைத்து, விபீஷணா! இந்த கணையை தொடுத்தவர் யார்? என்றார். இலட்சுமணன் நீ ஏன் எச்சரிக்கவில்லை எனக் கேட்டார். விபீஷணன், பெருமானே! இலட்சுமணர் இந்திரஜித்தை வீழ்த்துவான் என நினைத்து இருந்தேன். ஆனால் அந்த இந்திரஜித் இலட்சுமணரின் போர்த்திறத்தால் தோற்று ஓடிப்போய் மறைந்திருந்து நாகபாசத்தை ஏவுவான் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. இங்கு நாகபாசத்தால் யாரும் உயிர் விடவில்லை. இவர்கள் அனைவரும் நாகபாசத்தால் கட்டுண்டு இருக்கிறார்கள் என்றான். இராமர், இந்த அஸ்திரத்தில் இருந்து விடுபட ஏதேனும் வழி இருந்தால் கூறு என்றார். நாகபாசத்தை, உலகைப் படைத்த பிரம்மன் வேள்வியில் உண்டாக்கினார். பிறகு அதை சிவன் வேண்டி பெற்றுக் கொண்டார்.

❇ சிவபெருமான், இந்திரஜித்தின் தவத்தை பாராட்டி அந்த அஸ்திரத்தை இந்திரஜித்திற்கு கொடுத்தார். இந்த நாகபாசம் இந்திரனின் தோள்களை கட்டியது. இந்த அஸ்திரத்தை ஏவிய இந்திரஜித் வந்தால் மட்டுமே நாகபாசத்தை விடுவிக்க முடியும். இல்லையென்றால் இது இவர்களின் வாழ்நாள் வரையிலும் பிணைந்திருக்கும் என்றான். இதைக் கேட்டு இராமர் கோபங்கொண்டு எழுந்தார். நான் இலங்கை நகரை அழிப்பேன் என எழுந்தார். விபீஷணா! நான் என் தம்பியை இழந்த பின்பு, எனக்கு பெருமை இருந்து என்ன பயன்? என் தம்பியைக் காட்டிலும் எனக்கு எதுவும் முக்கியம் இல்லை என்றார். பிறகு இராமர், ஒருவன் செய்த தீமைக்காக மட்டும் உலகை அழிப்பது முறையல்ல என நினைத்துக் கொண்டு மனதை தேற்றினார்.

தொடரும்...

RAMAYANAM PART 134

 இராமாயணம் தொடர் ...134

இந்திரஜித்தின் நாகபாசம்!...

❃ இலட்சுமணன் அனுமனின் தோளில் இருந்துக் கொண்டே அரக்க சேனைகளை அழித்தார். இந்திரஜித் இலட்சுமணனை நோக்கி ஆயிரம் ஆயிரம் பாணங்களை ஏவினான். இலட்சுமணன் அந்த பாணங்களை எல்லாம் தகர்த்தெறிந்தார். இலட்சுமணன், இந்திரஜித்தை நோக்கி ஆயிரமாயிரம் பாணங்களை ஏவினான். இந்திரஜித் அவற்றை தூள்தூளாக்கினான். இருவரும் ஏவும் பாணங்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு தூளாகின. பிறகு இலட்சுமணன் ஒரு பாணத்தை ஏவி இந்திரஜித்தின் கவசத்தை அறுத்தெறிந்தார். அனுமன், இந்திரஜித்தின் தேரை காலால் உதைத்து உடைத்தான். பிறகு இலட்சுமணன் ஓர் அம்பை ஏவி இந்திரஜித்தின் வில்லை உடைத்தார். மறுபடியும் இலட்சுமணன் ஓர் பாணத்தை இந்திரஜித்தின் மீது ஏவினார். அந்த அம்பு இந்திரஜித்தின் மார்பில் துளைத்தது.

❃ அவன் மார்பில் இரத்தம் வலிந்துக் கொண்டிருந்தது. அப்பொழுது இந்திரஜித்துக்கு உதவ துமிராட்சசனும், மகாபாரிசுவனும் வந்தனர். அவர்கள் இலட்சுமணனை நோக்கி எதிர்க்க தொடங்கினர். இலட்சுமணன் அவர்களை தன் அம்புகளுக்கு இரையாக்கினார். இலட்சுமணனின் வில் திறமையைக் கண்டு இந்திரஜித் பாராட்டினான். பிறகு இந்திரஜித் போர் புரிய மற்றொரு தேரில் ஏறினான். இலட்சுமணன் தன் அம்பை ஏவி அத்தேரை ஒடித்தார். இவ்வாறு இந்திரஜித் ஏறும் தேரை இலட்சுமணன் அழித்த வண்ணம் இருந்தார். இலட்சுமணரின் இந்த போரை கண்டு தேவர்கள் அதிசயித்தனர். பகல் பொழுது மறைய தொடங்கி இருள் சூழ்ந்தது. இந்திரஜித் வானத்தில் போய் மறைந்தான். வானர வீரர்கள் இந்திரஜித் பயந்து ஓடி பயந்து விட்டான் என மகிழ்ந்தனர்.

❃ தேவர்கள், மாயத்தில் வல்லவனான இந்திரஜித் என்ன செய்வானோ என பயந்துக் கொண்டு இருந்தனர். இந்திரஜித் மேக மண்டலத்தில் போய் நின்று கொண்டான். தான் பெற்ற தவத்தின் பலனாக, அவன் மிகச்சிறிய உருவம் எடுத்துக் கொண்டான். இங்கு இலட்சுமணன், அனுமனின் தோளில் இருந்து இறங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது இந்திரஜித் நாகபாசம் (பாம்புருவான ஒரு படைக்கலம்) என்னும் அஸ்திரத்தை மந்திரம் சொல்லி கையில் எடுத்தான். அங்கு இலட்சுமணனும், வானர வீரர்களும் இந்திரஜித் பயந்து ஓடிவிட்டான் நினைத்து மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த நேரம் பார்த்து இந்திரஜித் நாகபாசத்தை இலட்சுமணன் மீது ஏவினான். உலகமே எதிர்த்தாலும், எதிர்த்து போர் புரியும் இலட்சுமணன், தன் மீது நாகபாசம் ஏவியது இந்திரஜித் என்பதை தெரியாமல் ஒடுங்கி விழுந்தார்.

❃ அப்போது அனுமன், இதைச் செய்தவனை பிடிப்பேன் என எழுந்தபோது நாகபாசம் அனுமனையும் கட்டிப் போட்டது. இவர்கள் மட்டுமில்லாமல் அங்கிருந்த வானர வீரர்கள் அனைவரையும் நாகபாசம் கட்டிப்போட்டது. நாகபாசத்தால் கட்டுண்ட வானர வீரர்கள் எழ முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் கீழே விழுந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் புலம்பி இருந்தனர். இலட்சுமணன் நாகபாசத்தால் கட்டுண்டதைக் கண்டு அனுமனும், மற்ற வானர வீரர்களும் வருந்தினார்கள். அங்கு அங்கதன், சுக்ரீவன் முதலானோர் நாகபாசத்தால் கட்டுண்டு கிடந்தனர். நாகபாசத்தை எப்படி அழிப்பது என்பது இலட்சுமணருக்கு தெரியும். இருப்பினும் இலட்சுமணன் நாகபாசத்தால் கட்டுண்டு கிடப்பதைக் கண்டு வருந்தினர்.

தொடரும்...

RAMAYANAM PART 133

 இராமாயணம் தொடர் ...133

வானரங்கள் இந்திரஜித்துடன் போரிடுதல்!...

❆ அனுமன் இந்திரஜித்தை பார்த்து, போர் புரிபவர்கள் தங்களை பெருமையாக கூற மாட்டார்கள். வீரத்தில் நீ மட்டும் தான் சிறந்தவன் என பெருமை கொள்ளாதே. எங்களிடமும் வலிமை வாய்ந்த வீரர்கள் உள்ளார்கள் என்பதை மறந்து விடாதே. அவர்களுடன் உன்னை ஒப்பிட்டால் அவர்களை காட்டிலும் நீ சிறியவன் ஆவாய். எங்களிடமும் வில்லில் சிறந்த வீரர்கள் உள்ளனர். நீ வேண்டுமென்றால் இந்திரனை வென்றவனாக இருக்கலாம். ஆனால் நாங்கள் உன்னிடம் தோல்வி பெற வரவில்லை, வெற்றி பெறவே வந்துள்ளோம். வீரர்கள் வாயால் பேசுவது சிறப்பல்ல, கையால் பேசுங்க என்றான். பிறகு அனுமன் இந்திரஜித்தை பார்த்து, நீ யாருடன் போர் புரிய வந்தாய்? எங்களுடனா? இல்லை இலட்சுமணனுடனா? இல்லை இராவணனை அழிக்க வந்திருக்கும் இராமனுடனா? என்றான்.

❆ இந்திரஜித், என் தம்பி அதிகாயனை கொன்ற இலட்சுமணனின் உயிரை எடுக்க தான் வந்துள்ளேன். நான் விண்ணுலகத்தவரையும், மண்ணுலகத்தவரையும் தனியாக நின்று அழிக்கும் ஆற்றல் படைத்தவன் என்றான். பிறகு அனுமன் இந்திரஜித்தை நோக்கி ஒரு பாறையை தூக்கி எறிந்தான். ஆனால் அந்த பாறை இந்திரஜித் மேல் பட்டு துள்தூளானது. நீலனும் இந்திரஜித்தை நோக்கி மலைகளை எறிந்து கொண்டு இருந்தான். ஆனால் இந்திரஜித் அதை தன் அம்புகளால் தூள்தூளாக்கினான். பிறகு அங்கதன் வந்து போர் புரிய தொடங்கினான். ஆனால் அவனை இந்திரஜித்தின் பாணங்கள் வீழ்த்தியது. வானரங்கள் இந்திரஜித்தின் மீது பாறைகளை தூக்கி போட்டு களைத்து போயினர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இலட்சுமணன், விபீஷணா! நீ சொன்னது சரி தான். நம் படைகள் அழிந்துக் கொண்டிருக்கிறது.

❆ அங்கே பார்! நம் படைகள் வீழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். நான் முதலில் படைகளை அனுப்பியது தவறு. நானே சென்று அவனிடம் போர் புரிந்திருக்க வேண்டும் என்றான். விபீஷணன், இலட்சுமணா! முன்பு தேவர்களும் இப்படித்தான் இவனிடம் தோற்றனர். இவனிடம் கவனமாக போர் புரிய வேண்டும். ஏனென்றால் இவன் மாய வேலை செய்வதில் வல்லவன் என்றான். பிறகு இலட்சுமணன், இந்திரஜித்தை எதிர்த்து போரிட அவன் முன் சென்று நின்றான். அப்பொழுது இந்திரஜித், சாரன் என்னும் ஒற்றனை பார்த்து இவன் யார் எனக் கேட்டான். சாரன், இவன் தான் இராமனின் தம்பி இலட்சுமணன். தங்கள் தம்பிகளை கொன்றவன் என்றான். இதைப் கேட்ட அங்கிருந்த அரக்கர்கள் இலட்சுமணனை தாக்க ஓடி வந்தனர்.

❆ இலட்சுமணன், அவர்கள் அனைவரையும் தன் அம்புகளுக்கு இரையாக்கினார். இலட்சுமணனின் வில் வேகத்தையும், கரவேகத்தையும் கண்டு இந்திரஜித் வியப்படைந்தான். இலட்சுமணனை பார்த்து, இவன் சிறந்த வில் வீரன் எனப் புகழ்ந்தான். அங்கு யானைப்படைகள், குதிரைப்படைகள் என அனைத்தையும் இலட்சுமணன் அம்பை ஏவி அழித்துக் கொண்டிருந்தான். இலட்சுமணனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அரக்கர்கள் மாண்டனர். இதைப் பார்த்த இந்திரஜித் தன் படைகள் அழிவதைக் கண்டு கோபங்கொண்டான். உடனே அவன் தேரில் நின்று இட்சுமணனுடன் போர் புரிய தொடங்கினான். இதைப் பார்த்த அனுமன், இலட்சுமணனை தன் தோளில் ஏறிக் கொண்டு போர் புரியுமாறு வேண்டினான். இலட்சுமணன் அனுமனின் தோளில் இருந்துக் கொண்டே அரக்க சேனைகளை அழித்தார்.