Tuesday, December 5, 2023

RAMAYANAM PART 135

 இராமாயணம் தொடர்...135

இராமர் இலட்சுமணரை நினைத்து வருந்துதல்!...

❇ இந்திரஜித், நான் இங்கு வந்த வேலையை முடித்து விட்டேன். என் உடல் சோர்வை நீக்கி விட்டு நாளை மறுபடியும் வருவேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து அரண்மனைக்குச் சென்றான். இராவணனிடம் சென்று, தந்தையே! வணக்கம். நான் இராமனை தவிர மற்ற அனைவரையும் நாகபாசத்தை ஏவி கொன்று விட்டேன். திரும்பவும் நாளைச் சென்று இராமனை கொல்வேன் என்றான். இதனைக் கேட்டு இராவணன் மகிழ்ந்தான். பிறகு இந்திரஜித் நான் மறுபடியும் செல்ல வேண்டியுள்ளதால் நான் என் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்து கொள்கிறேன் எனக் கூறி விட்டு அங்கிருந்துச் சென்றான். அங்கு இலட்சுமணன் நாகபாசத்தால் கட்டுண்டு கிடப்பதைப் பார்த்து விபீஷணன் வருந்திக் கொண்டு இருந்தான். அப்போது அங்கு அனலன் என்னும் வானர வீரன் விபீஷணனுக்கு ஆறுதல் கூறினான்.

❇ பிறகு அனலன் அங்கிருந்து ஓடிச் சென்று இராமரிடம், இலட்சுமணன் நாகபாசத்தால் கட்டுண்டு அசைவில்லாமல் இருக்கிறார் எனக் கூறினான். இதைக் கேட்டு இராமர் ஆழ்ந்த துயரம் அடைந்தார். அவரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. உடனே இராமர் போர்க்களத்திற்கு விரைந்து சென்றார். இருளில் சூழ்ந்திருந்த போர்க்களத்தை ஒரு அக்னி கணையை ஏவினார். அந்த இடத்திலிருந்த இருள் நீங்கி சூரிய வெளிச்சம் போல் ஒளி பரவியது. இராமர், அங்கு நாகபாசத்தால் வீழ்ந்து கிடக்கும் இலட்சுமணரை பார்த்தார். இலட்சுமணரை அன்போடு தன் மார்பில் தழுவிக் கொண்டார். இலட்சுமணனின் நிலையைக் கண்டு வருந்தினார். தம் தம்பியின் கை, கால்கள் அசைவின்றி இருப்பதைக் கண்டு வருந்தினார். இனி இலட்சுமணன் உயிர் பிழைக்க மாட்டான் என நினைத்து அழுதார்.

❇ இராமர் விபீஷணனை அழைத்து, விபீஷணா! இந்த கணையை தொடுத்தவர் யார்? என்றார். இலட்சுமணன் நீ ஏன் எச்சரிக்கவில்லை எனக் கேட்டார். விபீஷணன், பெருமானே! இலட்சுமணர் இந்திரஜித்தை வீழ்த்துவான் என நினைத்து இருந்தேன். ஆனால் அந்த இந்திரஜித் இலட்சுமணரின் போர்த்திறத்தால் தோற்று ஓடிப்போய் மறைந்திருந்து நாகபாசத்தை ஏவுவான் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. இங்கு நாகபாசத்தால் யாரும் உயிர் விடவில்லை. இவர்கள் அனைவரும் நாகபாசத்தால் கட்டுண்டு இருக்கிறார்கள் என்றான். இராமர், இந்த அஸ்திரத்தில் இருந்து விடுபட ஏதேனும் வழி இருந்தால் கூறு என்றார். நாகபாசத்தை, உலகைப் படைத்த பிரம்மன் வேள்வியில் உண்டாக்கினார். பிறகு அதை சிவன் வேண்டி பெற்றுக் கொண்டார்.

❇ சிவபெருமான், இந்திரஜித்தின் தவத்தை பாராட்டி அந்த அஸ்திரத்தை இந்திரஜித்திற்கு கொடுத்தார். இந்த நாகபாசம் இந்திரனின் தோள்களை கட்டியது. இந்த அஸ்திரத்தை ஏவிய இந்திரஜித் வந்தால் மட்டுமே நாகபாசத்தை விடுவிக்க முடியும். இல்லையென்றால் இது இவர்களின் வாழ்நாள் வரையிலும் பிணைந்திருக்கும் என்றான். இதைக் கேட்டு இராமர் கோபங்கொண்டு எழுந்தார். நான் இலங்கை நகரை அழிப்பேன் என எழுந்தார். விபீஷணா! நான் என் தம்பியை இழந்த பின்பு, எனக்கு பெருமை இருந்து என்ன பயன்? என் தம்பியைக் காட்டிலும் எனக்கு எதுவும் முக்கியம் இல்லை என்றார். பிறகு இராமர், ஒருவன் செய்த தீமைக்காக மட்டும் உலகை அழிப்பது முறையல்ல என நினைத்துக் கொண்டு மனதை தேற்றினார்.

தொடரும்...

No comments:

Post a Comment