இராமாயணம் தொடர் ...134
இந்திரஜித்தின் நாகபாசம்!...
❃ இலட்சுமணன் அனுமனின் தோளில் இருந்துக் கொண்டே அரக்க சேனைகளை அழித்தார். இந்திரஜித் இலட்சுமணனை நோக்கி ஆயிரம் ஆயிரம் பாணங்களை ஏவினான். இலட்சுமணன் அந்த பாணங்களை எல்லாம் தகர்த்தெறிந்தார். இலட்சுமணன், இந்திரஜித்தை நோக்கி ஆயிரமாயிரம் பாணங்களை ஏவினான். இந்திரஜித் அவற்றை தூள்தூளாக்கினான். இருவரும் ஏவும் பாணங்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு தூளாகின. பிறகு இலட்சுமணன் ஒரு பாணத்தை ஏவி இந்திரஜித்தின் கவசத்தை அறுத்தெறிந்தார். அனுமன், இந்திரஜித்தின் தேரை காலால் உதைத்து உடைத்தான். பிறகு இலட்சுமணன் ஓர் அம்பை ஏவி இந்திரஜித்தின் வில்லை உடைத்தார். மறுபடியும் இலட்சுமணன் ஓர் பாணத்தை இந்திரஜித்தின் மீது ஏவினார். அந்த அம்பு இந்திரஜித்தின் மார்பில் துளைத்தது.
❃ அவன் மார்பில் இரத்தம் வலிந்துக் கொண்டிருந்தது. அப்பொழுது இந்திரஜித்துக்கு உதவ துமிராட்சசனும், மகாபாரிசுவனும் வந்தனர். அவர்கள் இலட்சுமணனை நோக்கி எதிர்க்க தொடங்கினர். இலட்சுமணன் அவர்களை தன் அம்புகளுக்கு இரையாக்கினார். இலட்சுமணனின் வில் திறமையைக் கண்டு இந்திரஜித் பாராட்டினான். பிறகு இந்திரஜித் போர் புரிய மற்றொரு தேரில் ஏறினான். இலட்சுமணன் தன் அம்பை ஏவி அத்தேரை ஒடித்தார். இவ்வாறு இந்திரஜித் ஏறும் தேரை இலட்சுமணன் அழித்த வண்ணம் இருந்தார். இலட்சுமணரின் இந்த போரை கண்டு தேவர்கள் அதிசயித்தனர். பகல் பொழுது மறைய தொடங்கி இருள் சூழ்ந்தது. இந்திரஜித் வானத்தில் போய் மறைந்தான். வானர வீரர்கள் இந்திரஜித் பயந்து ஓடி பயந்து விட்டான் என மகிழ்ந்தனர்.
❃ தேவர்கள், மாயத்தில் வல்லவனான இந்திரஜித் என்ன செய்வானோ என பயந்துக் கொண்டு இருந்தனர். இந்திரஜித் மேக மண்டலத்தில் போய் நின்று கொண்டான். தான் பெற்ற தவத்தின் பலனாக, அவன் மிகச்சிறிய உருவம் எடுத்துக் கொண்டான். இங்கு இலட்சுமணன், அனுமனின் தோளில் இருந்து இறங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது இந்திரஜித் நாகபாசம் (பாம்புருவான ஒரு படைக்கலம்) என்னும் அஸ்திரத்தை மந்திரம் சொல்லி கையில் எடுத்தான். அங்கு இலட்சுமணனும், வானர வீரர்களும் இந்திரஜித் பயந்து ஓடிவிட்டான் நினைத்து மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த நேரம் பார்த்து இந்திரஜித் நாகபாசத்தை இலட்சுமணன் மீது ஏவினான். உலகமே எதிர்த்தாலும், எதிர்த்து போர் புரியும் இலட்சுமணன், தன் மீது நாகபாசம் ஏவியது இந்திரஜித் என்பதை தெரியாமல் ஒடுங்கி விழுந்தார்.
❃ அப்போது அனுமன், இதைச் செய்தவனை பிடிப்பேன் என எழுந்தபோது நாகபாசம் அனுமனையும் கட்டிப் போட்டது. இவர்கள் மட்டுமில்லாமல் அங்கிருந்த வானர வீரர்கள் அனைவரையும் நாகபாசம் கட்டிப்போட்டது. நாகபாசத்தால் கட்டுண்ட வானர வீரர்கள் எழ முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் கீழே விழுந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் புலம்பி இருந்தனர். இலட்சுமணன் நாகபாசத்தால் கட்டுண்டதைக் கண்டு அனுமனும், மற்ற வானர வீரர்களும் வருந்தினார்கள். அங்கு அங்கதன், சுக்ரீவன் முதலானோர் நாகபாசத்தால் கட்டுண்டு கிடந்தனர். நாகபாசத்தை எப்படி அழிப்பது என்பது இலட்சுமணருக்கு தெரியும். இருப்பினும் இலட்சுமணன் நாகபாசத்தால் கட்டுண்டு கிடப்பதைக் கண்டு வருந்தினர்.
தொடரும்...
No comments:
Post a Comment