இராமாயணம் தொடர்...145
இராவணனின் மந்திர ஆலோசனை...!
🔸 வானரங்கள் அனுமனை சூழ்ந்துக் கொண்டு வாழ்த்தினர். அனைவரும் உயிர்ப்பெற்று எழுந்தவுடன் ஜாம்பவான் அனுமனிடம், சஞ்சீவி மலையை சிறிதும் தாமதிக்காமல் அதை எடுத்த இடத்திலேயே கொண்டு போய் வைத்துவிட்டு வா எனக் கூறினான். அனுமன், சஞ்சீவி மலையை இருந்த இடத்தில் வைக்க சென்றான். இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரம் இராமர் முன் வந்து தோன்றியது. என்னை வில்லில் பூட்டி செலுத்திய பின் நான் கொல்லுவது என்பது உறுதி என்ற உண்மையை நீ நிலை நிறுத்திவிட்டாய் எனக் கூறிவிட்டு இராமரை சரணடைந்தது. இராவணனின் அரண்மனையில், இந்திரஜித் தன் பிரம்மாஸ்திரத்தால் இராம இலட்சுமணன் உள்ளிட்ட வானரங்கள் வீழ்ந்ததை வெற்றி விழாவாகக் கொண்டாடிக் கொண்டு இருந்தனர். அரக்கர்களும், அரக்கியர்களும் மது அருந்தி ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாக கொண்டாடினர். அங்கு வானர வீரர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். வானரங்களின் ஆரவாரங்களை கேட்டு இராவணன் திடுக்கிட்டான். அப்பொழுது இராவணனின் தூதர்கள் அங்கு வந்தனர்.
🔸 அரசே! அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்ததால் பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்தவர்கள் புத்துயிர் பெற்று எழுந்து ஆரவாரம் செய்துக் கொண்டு இருக்கின்றனர் என்றார்கள். இதைக்கேட்ட இராவணனின் மகிழ்ச்சி நிரம்பிய உள்ளம் சோகத்தால் வாடியது. உடனே இராவணன் மந்திர ஆலோசனைக்கு விரைந்துச் சென்றான். அங்கு இந்திரஜித், மாலியவான், மகோதரன் உள்ளிட்ட மற்ற மந்திர தலைவர்கள் அங்கு வந்துச் சேர்ந்தனர். இராவணன், இராம இலட்சுமணர் மற்றும் வானர வீரர்கள் உயிர் பிழைத்ததைக் கூறினான். அப்போது மாலியவான், இராவணா! நீ அவசரப்பட்டு அரக்கர்களின் பிணங்களை கடலில் போட்டு விட்டாய். அப்படி செய்யாமல் இருந்தால் அனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மலையால் அவர்களும் உயிர் பிழைத்திருப்பார்கள். சஞ்சீவி மலையை தூக்கிய அனுமன் இந்த இலங்கை நகரை தூக்கி கடலில் எறிந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நீ உன் பிடிவாதத்தைக் கொண்டு உன் மதியை இழந்து விடாதே.
🔸 நீ சீதையை கொண்டு போய் இராமனிடம் ஒப்படைத்து விட்டு, இராமனை சரணடைந்தால் இலங்கையில் மீதமுள்ள அரக்கர்களும் உயிர் வாழ்வார்கள் என்றான். இதைக் கேட்டு இராவணன், மிகுந்த கோபங்கொண்டு தங்களின் அறிவுரைகளுக்கு நன்று எனக் கூறி அமர வைத்தான். இலங்கையில் அரக்கர்கள் அனைவரும் அழிந்தாலும், நான் ஒருவனே தனித்து நின்று போர் புரிவேன். போர் புரிவதற்கு யாருக்கேனும் பயம் இருந்தால் ஓடி விடுங்கள். அது மகனாக இருந்தாலும் சரி. என் எதிரிகளை அழிக்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது. எனக்கு துணையாக யாரும் வர வேண்டாம். நானே அவர்களை அழிப்பேன் எனக் கூறினான். அப்பொழுது இந்திரஜித் தந்தையை வணங்கி, தந்தையே! நான் அனைவரையும் கொல்லுமாறு பிரம்மாஸ்திரத்தை ஏவினேன். ஆனால் அதிலிருந்து இராமன் தப்பித்து விட்டான். இதிலிருந்து விபீஷணன் கூறியவாறு இராமன் பரம்பொருள் என்பதை தாங்கள் உணர வேண்டும் என்றான்.
தொடரும்...
No comments:
Post a Comment