இராமாயணம் தொடர்...144
அனுமன் சஞ்சீவி மலையை அடைதல்!
❇ ஜாம்பவான், அனுமனே! உடனே வேகமாக சென்றுச் சூரியன் உதிப்பதற்கு முன் மருந்து மலையைக் கொண்டு வர வேண்டும் என்று அனுமனிடம் வேண்டிக் கூறினான். உடனே அனுமன் தன் பெரிய உருவத்தை எடுத்து, நிலத்தில் காலை ஊன்றி வானுயர பறந்தான். (வேகமாக பறப்பதில் அனுமனுக்கு நிகர் எவரும் இல்லை. இருப்பினும் தான் பறந்த வேகத்தை பார்த்து அனுமனுக்கே ஆச்சரியம்தான். தன்னால் இவ்வளவு விரைவாக பறக்க முடியுமா என்று? தான் வணங்கி வழிபடும் இராமரின், உடன்பிறப்பு அல்லவா அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. அதை அனுமனின் அங்கங்களும் உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் பறப்பதில் இவ்வளவு வேகம்). அனுமன், ஜாம்பவான் கூறிய வழியில் சென்று இமயமலையை அடைந்தான். அங்கே கயிலை மலையில் உமை அம்மையுடன் சிவனைக் கண்டு கண்ணுதற்குரிய கடவுளாக, எண்ணுதற்கரிய புண்ணியமென்று வணங்கி அவரது அருளைப் பெற்றான்.
❇ பிறகு ஏம கூட மலையையும், நிடத மலையையும் கடந்துச் சென்றான். இவற்றையெல்லாம் கடந்து மேரு மலையை அடைந்தான். அங்கு பிரம்மதேவனையும், இலட்சுமி தேவியுடன் வீற்றிருக்கின்ற விஷ்ணு மூர்த்தியைக் கண்டு வியந்து பயபக்தியுடன் பணிந்தார். ஆயிரம் ஆதித்தர்கள் ஒருங்கே உதித்தது போன்ற பேரொளிப் பிழம்பாக விளங்கும் சதாசிவ மூர்த்தியையும் மனோன்மணி அம்மையையும் கண்டு பிறவியின் பேறாக எண்ணி, ஆறாகக் கண்ணீர் வடித்து அஞ்சலி செய்தான். பிறகு இந்திரபகவானை வணங்கி தொழுதான். எண்திசைக் காவலரைக் கண்டு கைகூப்பினார். இவர்களின் ஆசியைப் பெற்ற அனுமன், உத்தர குரு என்ற புண்ணிய பூமியை அடைந்தான். அங்கே ஆதித்தனைக் கண்டார்.
❇ அங்கு இளமை மாறாது உயிரும் உடலும்போல ஒன்றுபட்டு வாழ்கின்ற புண்ணிய ஆத்மாக்களைக் கண்டான். பிறகு அங்கிருந்து நீலகிரி மலையை அடைந்து, அதற்கடுத்துள்ள சஞ்சீவி மலை என்னும் மருந்து மலையை அடைந்தான். அதனைக் காக்கின்ற தெய்வங்கள், அனுமனை பார்த்து, நீ யார்? நீ இங்கு வந்ததற்கான காரணம் என்ன? எனக் கேட்டன. அனுமன், தெய்வங்களே! நான் வாயு குமாரன், அனுமன். நான் இராமரின் தூதன். போரில் மாண்ட இராம பக்தர்களை உயிர்ப்பிக்க மருந்து கொண்டு செல்ல வந்தேன் என்று கூறினான். அத்தெய்வங்கள், நீ வேண்டிய மருந்துகளை கொண்டு சென்று, மீண்டும் இங்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று கூறி மறைந்தன. அதன் பிறகு, திருமாலின் சக்கரத்தாழ்வார் வந்து காட்சி தந்து கருணை காட்டி மறைந்தார். பிறகு அனுமன், ஜாம்பவான் கூறிய மருந்துகளைப் பிரித்தெடுப்பது அரிதான செயல் என எண்ணினான்.
❇ ஜாம்பவான் கூறிய மருந்தின் விவரம் :
சஞ்சீவ கரணி - இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் மருந்து
சந்தான கரணி - உடல் பல துண்டுகளாகப் பிளவு பட்டுப் போயிருந்தால் அதனை ஒட்ட வைக்கும் மருந்து
சல்லிய கரணி - உடலில் பாய்ந்த படைக்கருவிகளை வெளியே எடுக்கும் மருந்து
சமனி கரணி - சிதைந்து போன உருவத்தை மீண்டும் பழையபடியே பெறுவதற்கான மருந்து
❇ அனுமன், இங்கேயே நின்றுக் கொண்டு மருந்து பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் கால தாமதம் ஆகிவிடும் என நினைத்தான். பிறகு அனுமன் சஞ்ஜீவி மலையை வேரோடு பெயர்த்து எடுத்துத் தன் ஒரு கையில் வைத்துக் கொண்டு வான வழியில் இலங்கை நோக்கிப் புறப்பட்டான்.
தொடரும்...
No comments:
Post a Comment