பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். இவர்களில் வினதை அருணன் மற்றும் கருடனையும், கத்ரு பாம்புகளையும் பெற்றெடுத்தனர். கத்ருவுக்கு வினதையைப் பிடிக்காது. அதனால், அவளை தனக்கு அடிமையாக்க நினைத்து, தந்திரமாக போட்டிக்கு அழைப்பு விடுத்தாள். அக்கா! நமக்குள் ஒரு போட்டி. பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட, உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை என்ன நிறம் தெரியுமா? என்றாள். இதிலென்ன சந்தேகம்; அது வெள்ளை நிறம் என்றாள் வினதை. இல்லையில்லை, அதன் வால் மட்டும் கருப்பு என்று கத்ரு கூற, வினதை அதை மறுத்தாள். இந்த விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. 

சரி! நாம் ஒரு பந்தயம் கட்டுவோம். யார் சொல்வது தவறோ, அவர் ஜெயிப்பவருக்கு அடிமையாக வேண்டும் என்றாள் கத்ரு. வினதையும் இதற்கு ஒப்புக் கொண்டாள். கத்ரு, ரகசியமாக தன் பாம்பு குழந்தைகளில் கருப்பானவற்றை அழைத்து, நீங்கள் போய் குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுங்கள் என உத்தரவு போட்டாள். பாம்புகளும் அவ்வாறே குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டன. போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானாள். அவளோடு அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். உடனே கருடன், சின்னம்மா கத்ருவிடம் சென்று, என் தாயை விடுதலை செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க, கத்ருவோ கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்தாள்.


கருட பஞ்சமி எதற்கு கொண்டாடப்படுகிறது? வியக்க வைக்கும் வரலாறு.. | Garuda Panchami 2023 History in Tamil

கத்ரு கருடனிடம், தேவலோகம் சென்று இந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான். தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். 

அப்போது, குதிரையின் வாலில் சுற்றியிருந்த கருப்பு பாம்புகள், அமுதத்தை குடிக்கும் ஆசையில் கீழே இறங்கின. வால் கருப்பாக மாறியதன் ரகசியம் வெளிப்பட்டு விட்டதால் அதிர்ந்துப்போனாள் கத்ரு. இருந்தாலும், வினதை அவளை மன்னித்தாள். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வு நீங்கி, ஆனந்தமாக வாழ தொடங்கினார்கள். பின்னர்,  எதிரிக்கும் அன்பு செய்த வினதைக்கும், கருடனுக்கும் திருமால் காட்சி தந்து, தாயைக் காத்த தனயனை, தன் வாகனமாக ஏற்றார். அந்த கருடன் பிறந்த தினமே இந்த 'கருட பஞ்சமி' ஆகும்.