Showing posts with label RAMAYANAM. Show all posts
Showing posts with label RAMAYANAM. Show all posts

Wednesday, October 18, 2023

RAMAYANAM PART 93

 இராமாயணம் தொடர் 93

அனுமன் விபீஷணனை பற்றிக் கூறுதல்!

🌟இராமர் அனுமனை நோக்கி, உனது கருத்தை கூறுவாயாக எனக் கேட்டார். அனுமன் இராமரை வணங்கி, எனது கருத்துப்படி விபீஷணனை தீயவன் என நான் கருதவில்லை. இங்கு உள்ள அனைவரும் விபீஷணனை நம்ப வேண்டாம் எனக் கூறினார்கள். இராவணன் அழிவது நிச்சயம் என்பதை உணர்ந்து தான் விபீஷணன் தங்களை அடைக்கலம் தேடி வந்துள்ளான். நம்மிடம் அடைக்கலம் என்று தேடி வருபவர்கள் நமக்கு தீங்கு செய்வார்களா? நான் இராவணனின் அரசவையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டபோது, இராவணன் இவனை கொல்லுங்கள் என ஆணையிட்டான். அப்போது விபீஷணன், தூதர்களை கொல்வது பாவச் செயலாகும். இது நம் குலத்திற்கு இழிவாகும் எனக் கூறினான். நான் இலங்கையில் இரவு நேரத்தில் சீதையை தேடிக் கொண்டு போகும்போது விபீஷணனின் மாளிகைக்குச் சென்றேன். அரக்கர்கள் பலர் மாளிகையில் மதுப்பானங்கள் நிரம்பிக் கிடந்தன. ஆனால் விபீஷணனின் மாளிகையில் பூஜைக்குரிய பொருட்கள் நிரம்பிக் கிடந்தன. விபீஷணன் அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும் அவன் நற்குணத்தில் சிறந்தவன்.

🌟அன்னை சீதை அங்கு பாதுகாப்பாக இருக்கிறார் என்றால் அதற்கு விபீஷணனின் மகள் திரிசடை தான் காரணம். தந்தையை போல திரிசடையும் நற்குணமுடையவள். அதனால் தான் அவள் அன்னைக்கு உறுதுணையாக உள்ளாள். இராவணன் தங்களால் அழியக் கூடியவன் என்பதை நன்றாக அறிந்து தான் தங்களை சரணடைய வந்துள்ளான். பகைவனிடம் இருந்து பிரிந்து வந்துள்ள விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பிறர் நம்மை ஏளனமாக அல்லவா நினைப்பார்கள். விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்வதன் மூலம் அரக்கர்களின் மாய வேலைகள் பற்றி நாம் தெரிந்துக் கொள்ளலாம். அனுமன் சொன்னதை கேட்ட இராமர், நல்லது சொன்னாய் என அனுமனை பாராட்டினார். பிறகு இராமர் அனைவரையும் பார்த்து, அனுமன் சொல்வது தான் சரி. விபீஷணன் நம்மை நோக்கி வந்த காலமும் நமக்கு ஏற்ற காலம் தான். நம்மிடம் அடைக்கலம் தேடி வருபவர்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

🐦இந்த தருணத்தில் சில வரலாற்றைக் கூறுகிறேன். சிபிச் சக்ரவர்த்தியின் புகழ் தேவலோகத்தை எட்டியது. தேவேந்திரன் சிபியைச் சோதித்துப் பார்க்க அக்னி பகவானை அழைத்துக்கொண்டு பூமிக்கு வந்தான். இந்திரன் ஒரு கழுகு வடிவத்திலும், அக்னி ஒரு புறா வடிவத்திலும் வந்து சேர்ந்தார்கள். புறாவைத் துரத்திக்கொண்டு கழுகு பறந்து வந்து சிபிச் சக்ரவர்த்தியின் அரண்மனையில் விழுந்தது. அந்த புறாவை கவ்வி கொண்டு போக முயன்றது கழுகு. இதைப் பார்த்த சிபி அதைத் தடுத்தான். கழுகு, அரசனே! அந்தப் புறா என்னுடைய பசியைத் தீர்க்கவேண்டிய இரையாகும். புறாவைக் கீழே விடு என்றது. அதற்கு சிபி கழுகிடம், உனக்கு என்ன வேண்டுமோ கேள். அதை நான் உனக்குத் தருகிறேன். ஆனால் புறாவை விட்டுவிடு என்று கூறினார்.

🐦அரசே! புறாவின் எடையளவு மாமிசம் எனக்கு வேண்டும். அது மனித மாமிசமாக இருந்தாலும் பரவாயில்லை என்றது கழுகு. அதற்கு ஒப்புக் கொண்ட சிபி, உனக்குத் தேவையானது புறாவின் எடையளவு மாமிசம் தானே! அதை நான் என் உடலிலிருந்தே வெட்டித் தருகிறேன் என்று கழுகிடம் கூறினார். ஒரு தராசின் ஒரு தட்டில் சிபி அந்தப் புறாவை வைத்து மறு தட்டில் தன் உடலிலிருந்து சிறு பகுதியைச் செதுக்கி எடுத்து வைத்தான். புறா அமர்ந்த தட்டு இறங்கவில்லை. எவ்வளவு வெட்டி வைத்தாலும் புறாவின் தட்டுக்குச் சமமாக முடியவில்லை. கடைசியில் சிபி கழுகைப் பார்த்து, நானே தட்டில் ஏறி அமர்ந்து கொள்கிறேன் என்று கூறிவிட்டுத் தட்டில் ஏறி அமர்ந்தான். உடனே புறா இருந்த தட்டு சமநிலையில் இறங்கிவிட்டது. உடனே கழுகு இந்திரனாகவும், புறா அக்னி தேவனாகவும் மாறினார்கள். உன்னுடைய கருணையையும் கொடைத் தன்மையையும் புரிந்துகொண்டோம் என்று வாழ்த்தி மறைந்தார்கள்.

தொடரும்...

Tuesday, October 17, 2023

RAMAYANAM PART 92

 இராமாயணம் தொடர் 92

விபீணன் இராமரிடம் சரணடைதல்!

💢 அனுமன் வானர வீரர்களின் கூச்சலைக் கேட்டு துமிந்தன், மயிந்தன் என்னும் இரு வீரர்களை அழைத்து, அங்கே! என்ன நடக்கிறது என அறிந்து கொண்டு வரும்படி கூறினான். பிறகு துமிந்தன், மயிந்தன் சென்று கூட்டமாய் நின்று கொண்டிருந்த வானர வீரர்களையெல்லாம் விலக்கிக் கொண்டு வந்திருப்பது யார் எனப் பார்த்தனர். அவர்கள் விபீஷணனின் அருகில் வந்து நன்றாக உற்று கவனித்தனர். பிறகு இவர்களை பார்த்தால் ஞானமும், அறநெறியும் உடையவர்கள் என்பதை தெரிந்து கொண்டனர். பிறகு விபீஷணனை பார்த்து, நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்துள்ளீர்கள்? எனக் கேட்டனர். விபீஷணன், நான் இராவணனின் தம்பி. நாங்கள் ரகு குலத்தில் பிறந்த இராமனின் திருவடியில் சரணடைய வந்துள்ளோம்.

💢 நான் பிரம்மனின் பேரனான விபீஷணன் வந்துள்ளதாக இராமனிடம் சென்று கூறுங்கள் என்றான். நான் இராவணனிடம் அவன் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளுமாறு அறிவுரை கூறினேன். ஆனால் அவன் என் மீது கோபங்கொண்டு, உயிர் பிழைத்து இங்கிருந்து ஓடி விடு. இல்லையேல் உன்னை கொன்று விடுவேன் எனக் கூறினான். ஆதலால் நாங்கள் இராமனிடம் சரணடைய வந்துள்ளோம் என்றான். பிறகு துமிந்தன், மயிந்தன் இராமனிடன் சென்று நடந்தவற்றை கூறினார்கள். விபீஷணன் தங்களிடன் சரணடைய வந்துள்ளான். அவர்கள் மிகுந்த கவலையுடன் காணப்படுகிறார்கள். இராவணன் அவர்களை விரட்டியடித்தாக கூறினார்கள். நாங்கள் அவர்களிடம் தங்களின் அனுமதியைப் பெற்று வருவதாக கூறிவிட்டு வந்துள்ளோம்.

💢 அவர்களை இங்கே வர அனுமதிப்பதா? இல்லை இங்கு இருந்து அவர்களை விரட்டியடிப்பதா? தாங்கள் உத்தரவு அளித்தால் அதன்படி நடப்போம் என்றனர். இவர்கள் சொல்வதைக் கேட்ட இராமர், எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு முன் மற்றவர்களிடம் ஆலோசிப்பது தான் சிறந்தது என எண்ணினார். இராமர் சுக்ரீவன் பார்த்து, சுக்ரீவா! விபீஷணன் அடைக்கலம் வேண்டி இங்கு வந்துள்ளான். அவனுக்கு அடைக்கலம் தரலாமா? இல்லை அவனை நிராகரித்து விடலாமா? எனக் கேட்டான். சுக்ரீவன், பெருமானே! விபீஷணன் நல்லவன் இல்லை. அவன் இராவணனை பகைத்துக் கொண்டு நம்மை காட்டிக் கொடுக்கத் தான் இங்கு வந்துள்ளான். அவன் நம்மிடம் வஞ்சனை செய்ய தான் இங்கு வந்துள்ளான் என்றான்.

💢 ஜாம்பவான், பெருமானே! பகைவர்களை நம்முடன் சேர்த்துக் கொள்ளுதல் கூடாது. இராவணன் அன்னை சீதையை யாரும் இல்லா நேரம் பார்த்து கவர்ந்து சென்றுள்ளான். இவனோ இராவணனின் தம்பி இவனை எப்படி நாம் நம்புவது? இவனை நாம் நிராகரிப்பது தான் சிறந்தது என்றான். இராமர், படைத்தலைவன் நீளனை பார்த்து உனது கருத்தை கூறுவாயாக என்றார். ஐயனே! அரக்கர்கள் மாய வேலைகள் செய்வதில் வல்லவர்கள். அரக்கர்களை நாம் ஒரு போதும் நம்பக் கூடாது. ஆதலால் நாம் விபீஷணனை நம்பக் கூடாது என்றான். அங்கதன், ஐயனே! தாங்கள் அனைத்தும் அறிந்தவர். அரக்கர்கள் தீய செயல்கள் செய்வதில் வல்லவர்கள். ஆதலால் நாம் அவர்களை நம்பக் கூடாது என்றான். இதேபோன்று மற்ற வானர வீரர்களும், விபீஷணனுக்கு தாங்கள் அடைக்கலம் தரக்கூடாது எனக் கூறினர்.

தொடரும்...

RAMAYANAM PART 91

 இராமாயணம் தொடர் 91

விபீஷணன் இராமரை காண செல்லுதல்!

💠 கதையை சொல்லி முடித்த விபீஷணன் இராவணனை பார்த்து, அண்ணா! இக்கதையில் வரும் நரசிம்மர் தான் திருமால். ஆதலால் அவரை பகைத்து அழிவை தேடிக் கொள்ளாதே என்றான். ஆனால் இராவணன் விபீஷணன் கூறியதை எதையும் மனதில் கொள்ளவில்லை. இதைக் கேட்டு இராவணன் மிகவும் கோபங்கொண்டான். இராவணன், விபீஷணா! இக்கதையில் வரும் பிரகலாதனும் நீயும் ஒன்று தான். அவன் தன் தந்தையை கொன்று செல்வத்தை அடைந்தான். அதேபோல் நீ என்னை கொன்று இச்செல்வத்தை அடையலாம் என நினைக்கிறாய். அதனால்தான் அந்த இராம இலட்சுமணர் மேல் உனக்கு பாசம் பொங்கி வருகிறது. இதற்கு மேல் நீ இராம இலட்சுமணரை புகழ்ந்து பேசினால் உன்னை கொன்று விடுவேன் என விபீஷணன் மீது சீறினான். அது மட்டுமில்லை எனக்கு இராமனிடம் சீதையை திரும்பி அனுப்பும் எண்ணமும் இல்லை. ஆதலால் நீ இங்கு இருந்து சென்று விடு.

💠 நீ என் தம்பி என்பதால் உன்னை கொல்லாமல் விடுகிறேன். இனியும் நீ எனக்கு உபதேசம் சொல்வதை நிறுத்திக் கொள். என் கண்முன் நிற்காதே இங்கிருந்து சென்று விடு. இல்லையேல் உன்னை கொன்று விடுவேன் என்றான். விபீஷணன், இராவணா! நான் சொல்வதைக் கேள். நான் உனக்கு சொன்ன அறிவுரைகளை நீ உணரவில்லை. உனக்கு அழிவு காலம் வந்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதே. நான் ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் என் தவறை மன்னித்துக் கொள் எனச் சொல்லிவிட்டு வான் வெளியில் பறந்தான். விபீஷணனுடன் அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகிய நான்கு அமைச்சர்களும் உடன் சென்றனர். அண்ணன் இராவணன், நீ இங்கிருந்து போய்விடு. இல்லையேல் உன்னை கொன்று விடுவேன் என்று அச்சுறுத்தியதால் இலங்கையை விட்டுச் சென்று கொண்டிருந்தான். இனி என்ன செய்வதென்று தெரியாத விபீஷணன் இராமனிடம் தஞ்சமடைய புறப்பட்டனர்.

💠 இப்படி விபீஷணன் சென்று கொண்டிருக்கும் போது மகேந்திர மலையில் வானரங்கள் அக்கரையில் தங்கியிருப்பதை பார்த்தான். பிறகு தன் அமைச்சர்களோடு இனி என்ன செய்யலாம் என ஆலோசித்தான். அவர்கள் அனைவரும் இராமரிடம் சென்று சரணடையலாம் என்றனர். பிறகு வீபிஷணனும் அவனுடைய அமைச்சர்களும் மகேந்திர மலையை அடைந்தனர். அங்கு இராமர் சீதையின் நினைவில் வாடிக் கொண்டிருந்தார். சீதையை நான் எவ்வாறு காண்பேன். இப்பெருங்கடலை நாம் எவ்வாறு கடக்க போகிறோம் என நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார். இலட்சுமணர் இராமருக்கு ஆறுதல் கூறினார். விபீஷணன், இப்பொழுது இரவு நேரமாகி விட்டதால் நாம் இச்சோலையில் தங்கி விட்டு, விடிந்ததும் இராமரை காண செல்லலாம் என்றான்.

💠 பொழுது விடிந்தது. இராம, இலட்சுமணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் முதலிய வானர வீரர்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். இராகவா! இராமா! எனக் கூறி கொண்டு இராமரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வானர வீரர்கள், விபீஷணனையும் அவனுடன் வரும் அமைச்சர்களையும் பார்த்தவுடன், அரக்கர்கள் இங்கே வந்துவிட்டார்கள். இவர்களை கொல்லுங்கள் எனக் கூச்சலிட்டுக் கொண்டு அவர்களை நோக்கி ஓடினர். சில வானர வீரர்கள் இவன் இராவணனாகத் தான் இருக்கக்கூடும் என கூறினர். சில வானர வீரர்கள் இராவணனுக்கு பத்து தலைகளும், இருபது கைகளும் இருக்கும். ஆனால் இவனுக்கு இரண்டு கைகள் தானே உள்ளது எனக் கூறினர். சில வானர வீரர்கள், இவர்களை பிடியுங்கள். இராமரிடம் கொண்டு சொல்வோம் என்றனர். சிலர் எச்சரிக்கையாக இருங்கள் இவர்கள் வானில் பறந்து சென்று விடுவார்கள் என்றனர்.

தொடரும்...

Sunday, October 15, 2023

RAMAYANAM PART 90

 இராமாயணம் தொடர் 90

விபீஷணன் கூறும் இரண்யனின் கதை!

 விபீஷணன் கூறியதை கேட்ட இராவணன் மிகவும் கோபங்கொண்டான். விபீஷணிடம், நீ அந்த இராமனை திருமாலின் அவதாரம் எனக் கூறுகிறாய். நான் இந்திரனை சிறையில் அடைத்தவன். தேவர்களை ஓட ஓட விரட்டினேன் என்பதை மறந்துவிட்டு பேசுகிறாய். உனக்கு என்னுடன் போருக்கு வருவது பயமாக இருக்கிறது என்றால் நீ இங்கேயே இரு என்று சொல்லி விபீஷணனை பார்த்து ஏளனமாக சிரித்தான். இதை பார்த்த விபீஷணன், அண்ணா! இந்த கோபத்தை குறைத்துக் கொள். திருமாலுடன் போரிட்டு மாண்டவர் பலர் உண்டு. அவற்றுள் ஒருவன் தான் இரண்யன் என்பவன். இரண்யன் உன்னைக் காட்டிலும் பல மடங்கு வலிமை உடையவன். காசிப முனிவருக்கும், திதி என்பவளுக்கும் பிறந்தவன் தான் இரண்யன். அவனின் தம்பி இரண்யாட்சன். இவன் மக்களுக்கு பெரும் துன்பங்களை செய்ததால் திருமால் வராக அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார். இதனால் கோபங்கொண்ட இரண்யன் திருமால் மீது கோபங்கொண்டான்.

இரண்யன் கடுமையான தவம் இருந்து பிரம்மனிடம் வரன் கேட்டான். தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், ஐம்பெரும் பூதங்கள், படைக்கலன்கள், பகல் நேரத்தில், இரவு நேரத்தில், வீட்டுக்கு உள் அல்லது வெளியில் தனக்கு இறப்பு என்பது வரக்கூடாது என வரம் பெற்றான். தான் பெற்ற இவ்வரத்தால் இவன் மக்கள் அனைவரையும் துன்புறுத்தினான். உலகத்தில் உள்ள அனைவரையும் தன்னை கடவுளாக வணங்கும் படி கட்டளையிட்டான். அனைவரும் பயந்து இரண்யனையே கடவுளாக வணங்கினர். அப்போது தேவேந்திரன் இரண்யனைப் பழிவாங்க நினைத்து, இரண்யனின் மனைவி கருவுற்றிருந்தபோது அவளைச் சிலகாலம் ஆசிரமத்தில் வைத்து, நாரதர் மூலம் மகாவிஷ;ணுவின் மகிமைகளை அறிய வைத்தான். இதை அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் கேட்டு, மகாவிஷ;ணுவின் பக்தனாகியது. அந்தக் குழந்தைதான் பிரகலாதன்.

 அனைவரும் இரண்யனையே கடவுளாக வணங்கினார்கள். ஆனால், இரண்யனின் மகன் பிரகலாதன் மகாவிஷ;ணுவையே எப்போதும் போற்றி வணங்கினான். அதைப் பொறுக்க முடியாத இரண்யன், தன் மகன் என்றும் பார்க்காமல் ஆயுதங்களைக் கொண்டு கொல்ல முயன்றான். தீயில் தள்ளிவிட்டும், கடலுக்குள் தள்ளிவிட்டும், நச்சுப் பாம்புகளை கடிக்க விட்டும் எத்தனையோ கொடுமைகளை செய்தான். ஆனால், எல்லா ஆபத்துகளிலிருந்தும் மகாவிஷஸ்ணு பிரகலாதனைக் காப்பாற்றினார். தன்னை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பவர் ஹரி என்று அழைக்கப்படுகின்ற மகாவிஷஸ்ணுவே தான் என்று பிரகலாதன் கூறினான். அதைக் கேட்ட இரண்யன், அந்த ஹரி எங்கே இருக்கிறான்?என்று கேட்டான். அதற்கு பிரகலாதன், எங்கும் நிறைந்துள்ள இறைவன் இந்தத் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று ஒரு தூணைக் காட்டினான்.

 இரண்யன் ஆவேசத்துடன், தன் கையிலிருந்த கதாயுதத்தால் அந்தத் தூணை அடித்தான். அப்போது, ஸ்ரீமந் நாராயணனாகிய மகாவிஷ;ணு, சிங்க முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்ம அவதாரத்தில், தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டார். அவரைத் தாக்கப் பாய்ந்தான் இரண்யன். நரசிம்மர் தன் நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்து, குடல்களை உருவி, மாலையாக அணிந்து கொண்டார். பூமியிலும், ஆகாயத்திலும் அவன் உடல் படாமல், தமது மடியில் வைத்துக் கொன்றார். அந்த நேரம் இரவுமின்றி, பகலுமின்றி மாலை வேளையாக இருந்தது. மகாவிஷ;ணுவின் பயங்கரமான நரசிம்ம உருவத்தைக் கண்டு, தேவர்கள் எல்லோரும் அருகில் வரப் பயந்து, தூரத்திலிருந்தபடியே வணங்கினார்கள். பக்தன் பிரகலாதன் அவர் அருகில் சென்று இனிய பாடல்களைப் பாடி வணங்கினான். அப்போது, ஸ்ரீநரசிம்மர் தமது கோபம் தணிந்து, அனைவருக்கும் அருள் புரிந்து மறைந்தார்.

தொடரும்...

RAMAYANAM PART 89

 இராமாயணம் தொடர் 89

கும்பகர்ணனின் ஆலோசனை!

 கும்பகர்ணன், அரசே! சீதையை இராம இலட்சுமணரிடம் ஒப்படைத்து நல்லது செய்வாயாக! இல்லையேல் இராமன் நிச்சயம் நம்மை வெல்வான். அப்படி இல்லையேல் இதற்கு மற்றொரு வழியும் உண்டு. இராமனுக்கு முன்பு நாம் நம் அரக்க படைகளை அழைத்துக் கொண்டு இராமனிடம் போர் புரிந்து இராம இலட்சுமரையும், அவர்களுடன் இருக்கும் வானர படைகளையும் அழித்து விடலாம். இது தான் சரியான வழி என்றான். இப்படி கும்பகர்ணன் பேசியதை கேட்டு கோபங்கொண்ட இராவணன், அவன் கடைசியாக கூறிய ஆலோசனையை மட்டும் ஏற்றுக் கொண்டான். தம்பி கும்பகர்ணா! நீ நல்லது சொன்னாய். நாம் உடனே போருக்கு புறப்படுவோம். பகைவர் அனைவரையும் அழித்துவிட்டு திரும்புவோம். நம் படைகள் அனைவரையும் போருக்கு தயாராகும்படி கூறினான். அப்போது இந்திரஜித் எழுந்து, அரசே! புழுக்களை கொல்வதற்கு தாங்கள் செல்வதா? எனக்கு அனுமதி கொடுங்கள். நான் சென்று அவர்கள் அனைவரையும் அழித்துவிட்டு வருகிறேன் என்றான்.

அப்போது இராவணனின் தம்பியான விபீஷணன் எழுந்து! மகனே, இந்திரஜித்! நீ சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறாய். நீ இன்னும் அரச நீதிகளை நன்கு உணரவில்லை. அனுபவம் உடையவர்கள் முடிவு செய்வதை நீ முடிவு செய்யலாமா? என்றான். விபீஷணன் இராவணனை பார்த்து, அண்ணா! எனக்கு தாய், தந்தை, அண்ணன், கடவுள் எல்லாம் நீங்கள் தான். உனக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர் நான் இல்லை என்றாலும், இவர்கள் கூறிய ஆலோசனை அனைத்தும் தங்களுக்கு தீமை அளிக்கக்கூடியவை. ஆதலால் நான் சொல்வதை கோபப்படாமல் கேட்க வேண்டும். இலங்கையை ஒரு வானரம் தான் எரித்தது என தாங்கள் நினைப்பது தவறு. சீதையின் கற்பின் திறன் தான் இலங்கை நகரை எரித்துள்ளது. தாங்கள் அதனை நன்கு உணர வேண்டும். இதை நீங்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் ஒருவனின் பெருமை இழப்பதற்கு காரணம் பெண்ணாகத் தான் இருக்கக் கூடும்.

அண்ணா! குரங்குகள் என்று நீ அலட்சியம் செய்வது தவறு. குரங்காகிய வாலியினால் நீ அடைந்த துன்பங்களை நினைத்துப் பார். அவர்கள் மனிதர்கள் தான் என அலட்சியம் செய்கிறீர்கள் தானே? கார்த்தவீர்யார்ஜுனன் உன்னை சிறை வைத்ததை மறந்து விட்டாயா? கார்த்தவீர்யார்ஜுனனை கொன்ற பரசுராமனை இராமன் வென்றதையும் நீ மறந்து விட்டாயா? இராம இலட்சுமணரை பகைப்பது உனக்கு தீங்கை விளைவிக்கும். உன் புகழும், உன் குலமும் அழிவதற்கு முன் நீ சீதையை இராம இலட்சுமணரிடம் ஒப்படைத்து விடு.  அவ்வாறு செய்வது தான் உனக்கு நன்மை என்றான். இதைக் கேட்ட இராவணன், கோபத்தில் குலுங்க குலுங்க சிரித்தான். பிறகு இராவணன், என் வலிமையைப் பற்றி நீ அறிந்திருந்தும் அந்த மனிதர்கள் என்னை வெல்வார்கள் எனக் கூறுகிறாய். நீ அவர்களை பார்த்து பயப்படுகிறாயா? இல்லை அவர்கள் மீது அன்பு காட்டுகிறாயா? என்றான்.

 இராவணன், வாலியை வலிமைமிக்கவன் எனக் கூறினாய். ஆனால் அவனிடம் போர் புரியும் எதிரியின் வலிமையை பாதி பெற்றவன் என்பதை மறந்து விட்டாயா? அவனிடம் யார் போர் புரிந்தாலும் அவன் அவர்களின் வலிமையை பாதி பெற்று விடுவான். இராமனும் வாலியை மறைந்து இருந்து தான் கொன்றான் என்பதை நீ மறந்து விட்டாயா? நீ மட்டும் தான் அந்த மனிதர்களுக்காக மனமிறங்கி பேசிக் கொண்டிருக்கிறாய். உன் பேச்சை கேட்பதில் ஒரு பயனும் இல்லை. ஆதலால் நான் போருக்கு செல்வது நிச்சயம். படைகளே போருக்கு செல்ல தயாராகுங்கள் என்றான். விபீஷணன் மறுபடியும் இராவணனிடம், அண்ணா! நான் சொல்வதை கேளுங்கள். ஒப்பற்ற திருமால் தான் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அரக்கர்களாகிய நம்மை அழிக்க அவதாரம் எடுத்து உள்ளான். ஆதலால் தாங்கள் போருக்கு செல்ல வேண்டாம் என்று இராவணனிடம் கெஞ்சிக் கேட்டான்.

தொடரும்...

Friday, October 13, 2023

RAMAYANAM PART 88

 இராமாயணம் தொடர் 88

இராவணனின் ஆலோசனைக் கூட்டம்!

🏶 அனைவரும் மகேந்திர மலையை அடைந்தனர். அப்பொழுது இரவாகிவிட்டதால் அன்றைய பொழுதை மகேந்திர மலையில் கழித்தனர். இலங்கையில் அனுமன் சேதத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டான். இராவணன் ஏவலாட்களுக்கு இலங்கையை முன்பு விட பன்மடங்கு அழகாக்கும் படி ஆணையிட்டான். பிறகு அரக்கர்கள் பொன்னாலும், தங்கத்தாலும், நவமணிகளாலும் இலங்கையை முன்பை விட அழகாக்கினர். இராவணன் இவற்றை கண்டு அவர்களுக்கு பரிசுகளை அளித்தான். இராவணன் ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். அக்கூட்டம் அனுமனால் இலங்கைக்கு ஏற்பட்ட அழிவு பற்றிய ஆலோசனைக் கூட்டமாகும். அக்கூட்டத்திற்கு தனக்கு நெருக்கமானவர்களை தவிர வேறு யாரையும் அவன் அனுமதிக்கவில்லை. அக்கூட்டத்திற்கு பலத்த காவல் ஏற்பாடு செய்திருந்தான். இராவணன் தன் அனுமதியின்றி எவரும் உள்ளே வரக்கூடாது எனக் கட்டளையிட்டான்.

🏶 ஆலோசனை கூட்டத்தில் இராவணன், ஒரு குரங்கு என் வீரத்தையும், என் ஆற்றலையும், என் பெருமையையும் அழித்துவிட்டு சென்றுவிட்டது. இதைக் காட்டிலும் பெரிய அவமானம் வேறு என்ன வேண்டும்? இலங்கை நகரை எரித்துவிட்டு சென்றுள்ளது. இலங்கை நகரம் பெரும் அழிவைக் கண்டுள்ளது. எனக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டு அக்குரங்கு சென்றுவிட்டது. இவ்வளவு ஏற்பட்ட பின் நான் மட்டும் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறேன் என புலம்பினான். அனுமன் இலங்கைக்கு வைத்த தீ இன்னும் அணையக்கூட இல்லை. ஆனால் நாம் சுகமாகத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அந்த அனுமன் இலங்கைக்கு ஏற்படுத்திவிட்டு சென்ற அழிவினால், நம் படைகள், நம் உறவினர்கள் என அனைவரையும் இழந்துள்ளோம். இது என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. ஆனால் அக்குரங்கை நாம் கொல்லாமல் விட்டுவிட்டோம் என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது எனக் கூறி மிகவும் வருந்தினான்.

🏶 இதனைக் கேட்ட படைத்தலைவன் எழுந்து, அரசே! நான் முன்பே சொல்லி இருந்தேன். சீதையை கவர்ந்து வருவது மட்டும் ஒரு வீரனுக்கு அழகல்ல. நான் சொன்னதை அப்பொழுது நீங்கள் கேட்கவில்லை. கரனையும் நம் அரக்கர்களையும் கொன்று, சூர்ப்பனைகையின் மூக்கையும் அறுத்த அந்த இராம இலட்சுமணரை அன்றே கொன்றிருக்க வேண்டும். அப்பொழுது விட்டுட்டு இன்று வருந்துவது ஒரு பயனும் இல்லை. நாம் பகைவரை எதிர்க்காமல் இங்கு இன்பத்தை அனுபவித்து கொண்டிருப்பதில் என்ன பயன்? இப்படி இருந்தால் குரங்கு மட்டுமல்ல சிறு கொசுவும் நம்மை எதிர்க்கும் என்றான். இவன் பேசிய பிறகு துன்முகன், மகாபார்சுவன், பிசாசன், சூரியசத்ரு, வேள்வியின் பகைஞன், தூமிராட்சன் முதலான அரக்க வீரர்களும் எழுந்து பேசினார்கள். அரசே! எலிகளை கண்டு புலிகள் பயம் கொள்ளுமா? எங்களுக்கு அனுமதி தாருங்கள். நாங்கள் அந்த மனிதர்களையும், குரங்குகளையும் கொன்று தின்று வருகிறோம் என்றனர்.

🏶 அப்பொழுது இராவணனின் தம்பி கும்பகர்ணன் எழுந்து, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கூறி அவர்களை அமர வைத்தான். பிறகு கும்பகர்ணன் இராவணனிடம் சென்று, உன் தம்பியாகிய நான் உனக்கு நல்லதை மட்டும் தான் சொல்வேன். நீ உன்னை உலகம் போற்ற வேண்டும் என நினைக்கிறாய். அவமானம் நடந்து விட்டது எனக் கூறுகிறாய். உன் மீது ஆசை கொண்ட மனைவிமார்கள் பலர் இருக்கையில் இராம இலட்சுமணர் இல்லாத நேரத்தில் நீ சீதையை கவர்ந்து வந்துள்ளாய். இது நியாயமா? நீ என்று சீதையை கவர்ந்து வந்து இங்கு சிறை வைத்தாயோ அன்றே அரக்கர்களின் புகழ் அழிந்து விட்டது. தீய செயல்களை செய்துவிட்டு புகழ் கிடைக்கவில்லை என்று புலம்புவதில் ஒரு பயனும் இல்லை. நம் அரக்க குலத்திற்கு அழிவைத் தேடித்தரும் செயலை நீ செய்துள்ளாய். இராமர் தன் ஒரு அம்பினால் கரன் முதலிய பதினாயிரம் அரக்கர்களை கொன்றுள்ளான்.

தொடரும்...

RAMAYANAM PART 87

 இராமாயணம் தொடர் 87

அனுமன் சூடாமணியை இராமரிடம் கொடுத்தல்!

🎆 அனுமன் இராமனிடம், பெருமானே! அன்னை, கடலுக்கு நடுவில் இருக்கும் இலங்கை என்னும் நகரத்தில், அழகிய சோலைகள் நிறைந்த அசோக வனம் என்னும் இடத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டுள்ளார். இராவணன், ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளை தொட்டால் அவனின் தலை வெடித்து விடும். இது பிரம்மன் அவனுக்கு கொடுத்த சாபமாகும். இச்சாபத்திற்கு அஞ்சி அவன் அன்னை சீதையை தீண்டாமல் சிறை வைத்திருக்கிறான் என்றான். இராமர் அனுமனிடம், நீ சீதையை எவ்வாறு கண்டாய்? எனக் கூறு என்றார். அனுமன், நாங்கள் அன்னை சீதையை தென் திசை முழுவதும் தேடினோம். ஆனால் எங்களால் எங்கேயும் அன்னையை தேடி கண்டுபிடிக்க முடியாமல் கடைசியில் மகேந்திர மலையை அடைந்தோம். அங்கு ஜடாயுவின் சகோதரனான சம்பாதி வந்து, எங்களுக்கு சீதை இருக்கும் இருப்பிடத்தைக் கூறினான்.

🎆 பிறகு நான் சீதையை தேடி இலங்கை சென்றேன். அங்கு மாட மாளிகைகளிலும், வனத்திலும், எல்லா அரண்மனையிலும் தேடினேன். எங்கு தேடியும் கிடைக்காத சீதை கடைசியில் அசோக வனத்தில் இருப்பதை கண்டேன். அங்கு சீதை மிகவும் துன்பப்பட்டு அரக்கியர்கள் நடுவே வீற்றிருந்தார். அப்போது இராவணன் அங்கு வந்தான். அவன் சீதையை தன் அன்புக்கு இணங்கும்படி வேண்டினான். ஆனால் சீதை கடுஞ்சொற்களால் அவனை பேசினார். என் மனதில் இராமரை தவிர வேறு எவருக்கும் இடமில்லை எனக் கூறினார். இராவணன் சென்ற பிறகு அன்னை மிகவும் துன்பப்பட்டார். அச்சமயத்தில் நான் அரக்கர்களை தூக்க நிலைக்கு ஆழ்த்திவிட்டு, அன்னை முன்பு தோன்றினேன். பிறகு நான் தங்களின் பெயரை சொன்னவுடன் அன்னை மிகவும் மகிழ்ந்தார். பிறகு தங்களின் அடையாளமாக கொடுத்த கணையாழியை அன்னையிடம் கொடுத்தேன்.

🎆 கணையாழியை பார்த்த அன்னை, மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பிறகு அன்னை என்னிடம், இராமர் ஏன் இன்னும் என்னை தேடி வரவில்லை. நான் அவரின் வரவை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார். இராவணன் அவனின் ஆசைக்கு இணங்க எனக்கு ஒரு வருட காலம் அவகாசம் கொடுத்து உள்ளான். அதற்கு இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது. அதற்குள் இராமர் வந்து என்னை மீட்டுச் செல்ல வேண்டும். இல்லையேல் என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன் என்றார். பிறகு அன்னை அவரின் அடையாளமாக, இந்த சூடாமணியை தங்களிடம் கொடுக்கச் சொல்லி கொடுத்தார் என்றான். பிறகு அனுமன் சீதை கொடுத்த சூடாமணியை இராமரிடம் கொடுத்தான். சூடாமணியை பார்த்த இராமரின் கண்களில் கண்ணீர் பொங்கியது.

🎆 பிறகு இராமர் சூடாமணியை மார்போடு அணைத்துக் கொண்டார். சீதையை நினைத்து மிகவும் வருந்தினார். அப்போது அங்கதன் முதலிய வானர வீரர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் இராமரை தொழுது வணங்கினர். இராமன் அனுமனை பார்த்து, எவராலும் செய்ய முடியாத காரியத்தை நீ செய்துள்ளாய். கடலை கடப்பது என்பது மிகவும் எளிதான விஷயம் அல்ல. ஆனால் எவராலும் நுழைய முடியாத இலங்கைக்கு சென்று இராவணனின் காவலில் இருக்கும் சீதையை கண்டுபிடித்து வந்துள்ளாய் எனப் பாராட்டினார். அப்போது சுக்ரீவன், இனியும் நாம் நேரத்தை வீணடிக்கக்கூடாது. சீதை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாகிவிட்டது. நாம் புறப்படுவோம் என வானர சேனைகளுக்கு கட்டளையிட்டான். பிறகு அனைவரும் தென் திசை நோக்கி பயணம் செய்தனர்.

தொடரும்...

Thursday, October 12, 2023

RAMAYANAM PART 86

 இராமாயணம் தொடர் 86

அனுமன் இராமரை சந்தித்தல்!

🌟 வானரங்கள் மிகுந்த பசியுடன் இருந்ததால், அவர்கள் அங்கதனிடம், நாங்கள் மிகுந்த பசியுடன் உள்ளோம் தாங்கள் இந்த மதுவனத்தில் உள்ள மதுவை அருந்த அனுமதி தர வேண்டும் என்றனர். அங்கதனும் அவர்களுக்கு அனுமதி அளித்தான். வானர வீரர்கள் மதுவனத்தில் ஆடியும் பாடியும் மகிழ்ந்தார்கள். இப்படி இவர்கள் மதுவை அருந்த மதுவின் மயக்கம் இவர்களுக்கு அதிகரித்துக் கொண்டே போனது. இதனால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு மதுவனத்தை நாசம் செய்தனர். இவர்களை தடுப்பற்காக துதிமுகனின் வானர வீரர்கள் சென்றனர். ஆனால் வானர வீரர்கள் இவர்களையும் அடித்து துன்புறுத்தினர். காவல் புரிந்த வானர வீரர்கள் துதிமுகனிடன் சென்று முறையிட்டனர். உடனே துதிமுகன் அங்கதனிடம் போருக்குச் சென்றான். அங்கதனோ அவனை அடித்து உதைத்தான். மிகவும் அடிப்பட்ட துதிமுகன் அரசன் சுக்ரீவனிடம் சென்றான்.

🌟 ரிசியமுக பர்வத்தில் இராமர் சீதையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். சீதையை தேடிச் சென்ற வானர வீரர்கள் எல்லோரும் திரும்பி வந்துவிட்டனர். ஆனால் தென் திசை நோக்கிச் சென்ற வானர வீரர்கள் இன்னும் திரும்பி வரவில்லை. அவர்கள் நிச்சயம் சீதையை தேடி கண்டுபிடித்துவிட்டு வருவார்கள் என இராமருக்கு ஆறுதல் சொன்னான் சுக்ரீவன். இராமர், தென் திசைக்கு சென்ற வானர வீரர்களுக்கு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் சீதையை காணாமல் மாண்டு போனார்களோ? இல்லை இன்னமும் சீதையை தேடி அலைந்துக் கொண்டு இருக்கிறார்களா? சீதைக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டு இருக்குமோ? இல்லை அவர்களுக்கு என்ன தான் ஆகி இருக்கும் எனக் கூறி இராமர் மிகவும் வருந்தினார்.

🌟 அப்போது துதிமுகன் அவ்விடத்திற்கு வந்து அங்கதன் தலைமையில் வந்த வானர வீரர்கள் செய்த அட்டூழியங்களையும், அங்கதனால் ஏற்பட்ட துன்பத்தை பற்றியும் கூறினான். இதைக் கேட்டு சுக்ரீவன் மகிழ்ந்தான். அப்படியென்றால் வானர வீரர்கள் நிச்சயம் சீதையை தேடி கண்டுபிடித்து இருப்பார்கள். அதனால் தான் மதுவனத்தை நாசம் செய்து இருக்கிறார்கள் என நினைத்தான். சுக்ரீவன் துதிமுகனை பார்த்து, துதிமுகனே! மதுவனத்தின் இளவரசனை நீ எதிர்க்கலாமா? நீ இளவரசன் அங்கதனிடம் சென்று சரணடைவாயாக எனக் கூறினான். பிறகு சுக்ரீவன் இராமனிடம், பெருமானே! தாங்கள் வருந்த வேண்டாம். வானர வீரர்கள் சீதையை கண்ட மகிழ்ச்சியில் மதுவனத்தை நாசம் செய்து இருக்கிறார்கள் என்று கூறினான். இவ்வாறு சுக்ரீவன் கூறிக் கொண்டு இருக்கையில், தென் திசையில் இருந்து அனுமன், அவர்கள் முன் வந்து நின்றான்.

🌟 அனுமன் தென் திசை நோக்கி சீதை இருக்கும் இடத்தை பார்த்து தொழுது வணங்கினான். இராமர் சிறிது நேரம் அனுமனையே உற்று நோக்கினார். அனுமன் முகத்தில் தெரிந்த பிரகாசமே சீதையை கண்டுவிட்டேன் என்ற செய்தியை கூறியது. பிறகு அனுமன் இராமனிடம், நான் கண்டுவிட்டேன்! நான் கண்டுவிட்டேன்! நான் அன்னை சீதை இருக்கும் இடத்தை கண்டுவிட்டேன். பெருமானே! தாங்கள் இனி கவலை கொள்ள வேண்டாம் என்றான். பெருமானே! தசரத மகாராஜாவின் பெருமைக்குரியவளும், ஜனக மகாராஜாவின் மகள் என்ற தகுதிக்குரியவளும், தங்களின் மனைவியுமான அன்னை சீதையை நான் கண்டுவிட்டேன் எனக் கூறினான். இதைக் கேட்ட இராமனின் முகம் பிரகாசமானது. பிறகு அனுமன், பெருமானே! அன்னை தங்களின் நினைவாகவே உள்ளார். தன் கற்புக்கு சிறிது கலங்கமற்றவளாய் உள்ளார். தங்களின் பெயரையே உச்சரித்துக் கொண்டு உள்ளார். தங்கள் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளார் என்றான்.

தொடரும்...

Wednesday, October 11, 2023

RAMAYANAM PART 85

 இராமாயணம் தொடர் 85

அனுமன் மகேந்திர மலையை அடைதல்

!

🌸 அனுமன் சீதையிடம் ஆசி பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு வடதிசை நோக்கிச் சென்றான். அவ்வாறு அனுமன் செல்லும்போது சமுத்திர ராஜன் வேண்டுகோளுக்கிணங்க தன் மீது ஓய்வெடுத்து செல்லும்படி சொன்ன மைந்நாகம் மலையின் மீது வந்து நின்றான். அங்கு அம்மலையின் மீது சிறிது நேரம் ஓய்வெடுத்தான். அப்பொழுது இலங்கையில் நடந்தவற்றையெல்லாம் அம்மலையிடம் கூறினான். பிறகு தன்னை எதிர்பார்த்து அங்கதனும் மற்ற வானர வீரர்களும் காத்து கொண்டிருப்பார்கள் எனக் கூறி விட்டு அம்மலைக்கு விடைகொடுத்து வானில் பறந்தான். அனுமன் விரைந்து சென்று மகேந்திர மலையை அடைந்தான். அனுமனின் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வானர வீரர்கள் அனுமனை கண்டு மிக்க மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். சிலர் அனுமனை தொழுதனர். சிலர் அனுமனை தூக்கி ஆரவாரம் செய்தனர். சிலர் அனுமனை கட்டி தழுவிக் கொண்டனர். சிலர் ஆடி பாடி மகிழ்ந்தார்கள்.

🌸 வானரங்கள் அனுமனை பார்த்து! அனுமனே! உன் வீரதீர செயல்களின் காரணமாய் ஏற்பட்ட புண்களும், உன் முகத்தின் பொழிவும் நீ சீதையை பார்த்துவிட்டாய் என்பதை காட்டுகிறது என்றனர். பிறகு வானரங்கள், உனக்காக காய்களும், கனிகளும், கிழங்குகளும் சேகரித்து வைத்துள்ளோம். இவற்றை உண்டு சிறிது நேரம் இளைப்பாறு என்றனர். பிறகு அனுமன் அங்கதனிடம் சென்று அவனை வணங்கினான். ஜாம்பவானின் காலில் விழுந்து வணங்கினான். பிறகு அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர். அனுமன் அனைவரிடமும் நான் சீதையை கண்டுவிட்டேன். சீதையின் வாழ்த்துக்களையும் பெற்றேன் என்றான். உடனே வானரங்கள் அனுமனிடம், நீ இங்கிருந்து சென்றது முதல் அங்கிருந்து இங்கு வந்தது வரை நடந்தவற்றை எல்லாம் கூறு என்றனர். அனுமன், சீதையின் கற்பு திறனையும், அவர் இராமரின் நினைவாக இருப்பதையும், தன் அடையாளமாக சீதை கொடுத்த சூடாமணி பற்றியும் கூறினான்.

🌸 பிறகு அங்கு அரக்கர்களிடம் போர் புரிந்ததையும், இலங்கைக்கு தீ மூட்டியதையும் கூறினான். பிறகு வானரங்கள், அனுமனே! நீ போர் புரிந்ததற்கு அடையாளமாய் உனக்கு ஏற்பட்ட புண்களே காண்பிக்கிறது. அவர்களிடம் நீ வெற்றி பெற்று தான் இங்கு வந்துள்ளாய் என்றனர். அங்கதன் அனுமனிடம், நீ மிகவும் துணிவுடன் இக்காரியத்தை செய்து உள்ளாய். உன் பலத்துக்கும், வலிமைக்கும் நிகரானவர் எவரும் இல்லை என்பதை நிரூபித்து விட்டாய். இன்று உன்னால் வானர குலம் புகழ் பெற்றுள்ளது என பாராட்டினான். பிறகு அனுமன், அன்னை சீதை, நான் இன்னும் ஒரு மாத காலம் தான் உயிருடன் இருப்பேன். அதற்குள் இராமர் வந்து என்னை காப்பாற்றி செல்ல வேண்டும் என்று கூறினார் என்றான். உடனே வானரங்கள், இனியும் நாம் தாமதிக்கக் கூடாது. உடனே இராமரிடம் சென்று சீதையை கண்ட செய்தியைக் கூற வேண்டும் என்றனர்.

  🌸 அங்கதன் அனுமனிடம், அனுமனே! நாங்கள் உயிரை விட தயாராக இருந்தோம். நீ தான் தக்க சமயத்தில் இலங்கை சென்று சீதையை கண்டு எங்கள் உயிரையும் காப்பாற்றி உள்ளாய் என்றான். ஆதலால் நீ விரைந்து சென்று, இராமரிடம் நடந்த விஷயங்களை எல்லாம் கூறு என்று அனுப்பி வைத்தான். பிறகு அங்கதன் தலைமையில் வானர வீரர்கள் இராமரை நோக்கிச் சென்றனர். அவர்கள் போகும் வழியில் மதுவனத்தை கண்டனர். அம்மதுவனம் முதலில் வாலியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. வாலி இறந்த பின் அம்மதுவனம் சுக்ரீவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதனை ததிமுகன் என்னும் வானர வீரன் தன் ஏவலாட்களுடன் காவல் காத்து கொண்டிருந்தான். வானரங்கள் மிகுந்த பசியுடன் இருந்ததால், அவர்கள் அங்கதனிடம், நாங்கள் மிகுந்த பசியுடன் உள்ளோம். தாங்கள் இந்த மதுவனத்தில் உள்ள மதுவை அருந்த அனுமதி தர வேண்டும் என்றனர்.

தொடரும்...

RAMAYANAM PART 84

 இராமாயணம் தொடர் 84

அனுமன் இலங்கைக்கு தீ வைத்தல்!

🔥 இராவணன் விபீஷணனிடம், தம்பி! நல்லது செய்தாய். இல்லையென்றால் இக்குரங்கை கொன்று பாவம் செய்திருப்பேன் என்றான். ஆனால் இந்த வானரம் குற்றம் செய்துள்ளது. அதற்கு தண்டனை தர வேண்டும் என நினைத்தான். அதனால் இக்குரங்கின் வாலில் தீ மூட்டி, இலங்கை நகரை சுற்றி வந்து பிறகு இந்நகரை விட்டு விரட்டியடியுங்கள் என்றான். அப்போது இந்திரஜித், இவன் பிரம்மாஸ்திரத்தால் பிணைக்கப்பட்டுள்ளான். அப்படி இருக்க இவன் மீது தீயிடக் கூடாது என்றான். உடனே அரக்கர்களிடம் இவனை கனமான கயிற்றை கொண்டு கட்டுங்கள் என சொல்லி விட்டு தன்னால் பிணைக்கப்பட்ட பிரம்மாஸ்திரத்தை அவிழ்த்துவிட்டான். அரக்கர்கள் அனுமனை கனமான கயிற்றை கொண்டு கட்டினார்கள். பிறகு அரக்கர்கள் இலங்கையில் அனைத்து கயிற்றையும் கொண்டு வந்து அனுமனின் வாலில் சுற்றினார்கள். 

🔥 பிறகு அனுமனை பார்த்து இப்பொழுது உன் வீரம் என்ன ஆயிற்று என கேலி செய்தனர். சிலர் அரக்கிகள் ஓடிப்போய் நடந்தவற்றை சீதையிடம் கூறினர். சீதை இதைக் கேட்டு மிகவும் வருந்தினாள். உடனே அவள், அக்னி தேவனே! இவ்வரக்கர்கள் அனுமனுக்கு இழைக்கும் கொடுமையைப் பார்! நான் கற்புடைய பெண் என்றால் அக்னியே! நீ அனுமனை சுடக் கூடாது என்றாள். சீதையின் துன்பத்தைக் கண்டு அக்னி தேவனும் பயந்தான். அங்கு அரக்கர்கள் அனுமனின் வாலில் தீயை மூட்டினர். ஆனால் அத்தீ அனுமனை சுடவில்லை. அனுமனுக்கு ஜில்லென்று இருந்தது, அப்போது அனுமன், அன்னை சீதை தான் நம்மை நெருப்பு சுடக் கூடாது என அக்னி தேவனை வேண்டியிருப்பாள் என நினைத்தான். பிறகு அனுமன் சீதை இருந்த திசையை பார்த்து தொழுதான். அரக்கர்கள் அனுமனை கயிற்றில் கட்டிக் கொண்டு இலங்கை முழுவதும் சுற்றினர். அப்பொழுது அனுமன் சரியான நேரம் பார்த்து வான் வெளியில் பறந்தான். 

🔥 அரக்கர்கள் செய்வதறியாது அக்கயிற்றில் தொங்கினர். அனுமன் இராமனை நினைத்து, வீடுகள், மாளிகைகள், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் தீயை வைத்தான். அப்பொழுது இலங்கை நகரம் தீயின் ஒளியால் பிரகாசமாக எரிந்தது. நெருப்பின் புகையால் இலங்கை நகரம் இருண்டு காணப்பட்டது. சில அரக்கர்கள் நெருப்பிற்கு பயந்து கடலில் குதித்தனர். தீயினால் இலங்கை நகரம் அழிந்தது. இலங்கை தீயில் எரிவதை கண்ட இராவணன், இதற்கு யார் காரணம்? எனக் கேட்டான். அங்கு உயிர் பிழைத்து வந்த அரக்கர்கள், குரங்கின் வாலில் நாம் இட்ட தீ தான். இலங்கை நகரம் எரிவதற்கு காரணம் என்றனர். கோபங்கொண்ட இராவணன், இலங்கை அழிவதற்கு காரணமாய் இருந்த அக்குரங்கை பிடித்து வாருங்கள் என கட்டளையிட்டான். அரக்கர்கள் குரங்கை பிடிக்கச் சென்றார்கள்.

🔥 இதை கவனித்த அனுமன், தன் பக்கத்தில் இருந்த மரத்தைப் பிடிங்கி அரக்கர்கள் மீது எறிந்தான். இதனால் அரக்கர்கள் மாண்டு போனார்கள். சில அரக்கர்கள் பயந்து ஒளிந்து கொண்டனர். பிறகு அனுமன் தன் வாலில் எரிந்து கொண்டிருக்கும் தீயை கடலில் தோய்த்து அணைத்தான். அப்போது அந்த இடத்தில் இருந்த சிலர், அனுமன் இட்ட தீ இலங்கை முழுவதும் எரிந்தது. ஆனால் அசோக வனத்திற்கு மட்டும் தீ பரவவில்லை என்றனர். இதைக் கேட்டு அனுமன், மகிழ்ந்தான். நல்ல வேளை அன்னை உள்ள இடத்திற்கு தீ பரவவில்லை என நினைத்தான். உடனே அனுமன், சீதையை காண அசோக வனத்திற்கு சென்றான். அனுமனை பார்த்த சீதை மகிழ்ந்தாள். பிறகு சீதை அனுமனின் வீரதீர செயல்களை பாராட்டினாள். அனுமன் சீதையிடம் ஆசி பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

தொடரும்...

Sunday, October 8, 2023

RAMAYANAM PART 83

 இராமாயணம் தொடர் 83

அனுமன் இராவணனுக்கு அறிவுரை கூறுதல்!

✧ இராவணனின் சபைக்கு கட்டிக் கொண்டு வரப்பட்ட அனுமனை இந்திரஜித் அறிமுகப்படுத்தினான். அனுமனை பார்த்து, குரங்கின் உருவில் இருக்கும் இவ்வீரன் சிவபெருமானை போலவும், விஷ்ணுவை போலவும் வலிமை கொண்டவன் எனக் கூறினான். இராவணன் அனுமனை பார்த்து, நீ யார்? எதற்காக இங்கு வந்துள்ளாய்? உன்னை இங்கு அனுப்பியவர் யார்? எனக் கேட்டான். அனுமன், நான் வில் வீரத்தில் சிறந்தவனான இராமனின் தூதுவன். இராமன், வேதங்களை நன்கு கற்றவன். அறிவில் சிறந்து விளங்குபவன். அறத்தை வளர்ப்பவன். தர்மநெறியில் விளங்குபவன். அத்தகைய இராமனின் தூதன் நான். இராமனின் மனைவி சீதையை தேடி வாலியின் சகோதரனான சுக்ரீவனின் கட்டளைப்படி வாலியின் மகன் அங்கதன் தலைமையில் வந்துள்ளேன். அவனுடைய தூதனாக மற்றும் தனியாக இங்கே வந்துள்ளேன் என்றான்.

✧ வாலியின் பெயரைக் கேட்ட இராவணன், பலமாக சிரித்தான். வாலியின் மகன் அங்கதனின் தூதனா நீ? வாலி நலமாக உள்ளானா? எனக் கேட்டான். அனுமன் இராவணனை பார்த்து கேலியாக சிரித்தான். பிறகு, அரக்கனே! வாலி இவ்வுலகை விட்டு வானுலகம் சென்று விட்டான். அவனின் உயிரை இராமனின் பாணம் பதம் பார்த்தது. இப்போது வாலியின் தம்பியான சுக்ரீவன் அரசனாக உள்ளான் எனக் கூறினான். உடனே இராவணன் அனுமனிடம், வாலியை இராமன் எதற்காக கொன்றான் என சொல் என்றான். சீதையைத் தேடி இராமன் வந்தபோது, சுக்ரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்ரீவனின் துயரை போக்கும் பொருட்டு இராமன் வாலியை கொன்று சுக்ரீவனுக்கு முடி சூட்டினான் என்றான். இராவணன், உன் குலத்து தலைவனை கொன்ற இராமனிடம் அடிமையாக இருக்கின்றீர்கள். தன் சொந்த அண்ணனை இராமனை விட்டு கொன்ற சுக்ரீவன் எனக்கு தூது அனுப்பியுள்ளானா எனக் கேட்டான்.

✧ நீ இங்கு தூதுவனாக வந்துள்ளதால் உன்னை கொல்லாமல் இருக்கின்றேன். உண்மையைச் சொல் என்றான் இராவணன். அனுமன் இராவணனிடம், நான் உனக்கு அறிவுரையை கூறுகிறேன் கேள் என்றான். நான் உன்னை காண வேண்டும் என்பதற்காக தான் அசோக வனத்தையும், உன் அரக்கர்களையும் அழித்தேன். ஒருவனுக்கு ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஓர் அரசனாகிய நீ ஒழுக்கத்தை கடைப்பிடிக்காமல் இருக்கிறாய். பிறரின் மனைவியை விரும்புபவனுக்கு பழியும், பாவமும் வந்து சேரும். உனக்கோ பல மனைவிமார்கள் இருக்க நீ மற்றவர் மனைவியை விரும்புவது நியாயமா? ஒருவனுக்கு பெண்ணாசையும், பொன்னாசையும் இருந்தால் அது அவனுக்கு அழிவைத் தேடி தரும். நீ சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிட்டால் இராமன் உன்மீது சிறிதேனும் கருணை காட்ட வாய்ப்புள்ளது எனக் கூறினான்.

✧ இராவணன் இதனைக் கேட்டு பெரும் கோபங்கொண்டான். உடனே குரங்காகிய நீ! எனக்கு அறிவுரை சொல்வதா! உன்னை இப்பொழுதே எமலோகத்திற்கு அனுப்புகிறேன் என்றான். தன் ஏவலாட்களுக்கு இக்குரங்கை உடனே கொல்லுங்கள் என ஆணையிட்டான். உடனே அரக்கர்கள் அனுமனை சூழ்ந்துக் கொண்டனர். அப்போது அரசவையில் இருந்த இராவணனின் தம்பி விபீஷணன் எழுந்து 'நில்லுங்கள்" என்றான். விபீஷணன் இராவணனிடம் அண்ணா! உன் கோபம் உலக நீதிக்கு ஏற்றது அல்ல. உன் தவத்தின் பலனாய் இந்திரன் முதலிய தேவர்கள் உனக்கு பணிவிடை செய்கிறார்கள். இவன் ஒரு தூதுவன் என்று சொல்லியும் இவனைக் கொல்வது நம் குலத்திற்கு பாவமாகும். இத்தூதுவனை கொல்லாதே என தடுத்து நிறுத்தினான். அனுமன் இலங்கைக்கு தீ மூட்டியதை இனி காண்போம்.

தொடரும்...

Saturday, October 7, 2023

RAMAYANAM PART 82

 இராமாயணம் தொடர் 82

அனுமன் இராவணனின் அவைக்கு அழைத்து வருதல்!

✻ இந்திரஜித்தின் அரக்கர் படைகள் அனுமனை சூழ்ந்துக் கொண்டன. அனுமன் தன் விஸ்வரூபத்தை எடுத்தான். அனுமன் தன் பக்கத்தில் இருந்த ஆச்சா மரத்தை பிடுங்கி அரக்கர்களிடம் போரிட்டான். அரக்கர் படைகள் அனைத்தையும் கொன்றான். பிறகு அனுமன் தன் தோள்களைத் தட்டி என்னிடம் போருக்கு வாருங்கள் என முழக்கமிட்டான். அரக்கர்களுக்கு அழிவு வந்துவிட்டது என்றான். இதைக்கேட்ட இந்திரஜித், உன் எண்ணத்திற்கு நான் முடிவு கட்டுகிறேன் எனக் கூறி அனுமன் மீது அம்புகளை ஏவினான். அனுமன் மீது பாய்ந்த அம்புகளால் இரத்தம் வலிந்தது. அனுமன் உடலை மிகவும் பெரிதாக்கிக் கொண்டே சென்றான். இந்திரஜித்தால் அனுமனை பாதிக்குமேல் காண முடியவில்லை. பிறகு அனுமன், இந்திரஜித்தின் தேரில் ஏறி அவனுடைய வில்லை பிடுங்கி ஒடித்து எறிந்தான்.

✻ அனுமன் ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இந்திரஜித் மீது எறிந்தான். இதனால் இந்திரஜித்தின் மணிமுடிகள் உடைந்து கீழே விழுந்தன. இதனால் கோபங்கொண்ட இந்திரஜித் அனுமன் மீது ஆயிரம் பாணங்களை ஏவினான். அனுமன், இந்திரஜித்தை அவன் நின்றிருந்த தேரோடு தூக்கி எறிந்தான். தரையில் விழுந்த இந்திரஜித் எழுந்து வானில் சென்றான். என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இந்திரஜித், அனுமன் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவ நினைத்தான். அதனால் இந்திரஜித் பிரம்மாஸ்திரத்திற்கு அர்ச்சனைகளும், பூஜைகளும், வழிபாடுகளும், செய்து சகல தெய்வங்களை வணங்கி அந்த பிரம்மாஸ்திரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டான். பிறகு இந்திரஜித், ஒரு பெரிய வில்லை பிரம்மாஸ்திரத்தில் பொருத்தி அனுமன் மீது எய்தினான். பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட அனுமன் கீழே விழுந்தான்.

✻ பிறகு அனுமன் தன்னை கீழே சாய்த்தது பிரம்மாஸ்த்திரம் என்பதை உணர்ந்து கொண்டான். பிரம்மாஸ்திரத்திற்கு மதித்து கட்டுப்படுவது தான் சிறந்தது என நினைத்து கட்டுப்பட்டான். இதைப் பார்த்த இந்திரஜித், அனுமனின் அருகில் வந்து இவனுடைய வலிமையை ஒடிக்கி விட்டேன் என்றான். அதுவரையிலும் அனுமனை பார்த்து பயந்த அரக்கர்கள், ஓடி வந்து அனுமனை சூழ்ந்துக் கொண்டனர். அனுமன் கட்டுண்டதை பார்த்து அரக்கர்கள் மகிழ்ந்தார்கள். பிறகு அரக்கர்கள் அனுமனை கயிற்றோடு கட்டி அரண்மனைக்கு இழுத்துச் சென்றனர். அனுமன் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட செய்தியை அறிந்து சீதை மிகவும் வருந்தினாள். போகும் வழியில் சில அரக்கர்கள் அனுமனை பார்க்க பயந்தனர். சிலர் நீ கொன்ற என் மகனை திரும்பக் கொடு என்றனர். இன்னும் சிலர் நீ கொன்ற என் கணவரை திரும்ப கொடு என்றனர். இன்னும் சில அரக்கர்கள் அனுமனிடம் பணிந்து எங்களை மன்னித்து விடு என்றனர்.

✻ சிலர் நீ கொன்ற என் தந்தையை திரும்ப கொடு என்றனர். அனுமன், அரக்கர்கள் பின் சென்றால் இராவணனை காண முடியும் என நினைத்து அமைதியாக வந்தான். அனுமனுடன் இந்திரஜித் தலைமையில் அரக்கர்கள் அரண்மனையை அடைந்தனர். இராவணனுக்கு அனுமன் கட்டுண்ட செய்தி முன்பே தெரிவிக்கப்பட்டது. உடனே இராவணன், அரக்கர்களிடம் அவனை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள் என ஆணையிட்டான். அனுமனை இராவணன் முன்பு நேருக்குநேர் நிறுத்தி வைத்தனர். இராவணனை பார்த்த அனுமனுக்கு பிரம்மாஸ்திரத்தை அறுத்தெறிந்து இவனை இப்பொழுதே கொல்கிறேன் என எண்ணினான். பிறகு பிரம்மாஸ்திரத்தை அறுத்தெறிவது தவறு என்பதை நினைத்து அமைதியானான். இவனோடு நான் போரிட்டால் சீதையின் நிலைமையை நான் எப்படி இராமனிடம் சொல்வேன் என நினைத்தான். ஆதலால் இராவணன் முன்பு ஒரு தூதனாக சந்திப்பது தான் சிறந்தது என நினைத்தான். 

தொடரும்...



Friday, October 6, 2023

RAMAYANAM PART 81

 இராமாயணம் தொடர் 81

இந்திரஜித்தின் கோபம்!

🌿 அட்சய குமாரன் அனுமனிடம், இலங்கை நகரை நீ அழித்ததன் காரணமாக உன் இனத்தவர் இவ்வுலகில் எங்கு இருந்தாலும் அவர்களை நான் அழிப்பேன் என்றான். பிறகு அரக்கர் கூட்டம் அனுமனை சூழ்ந்துக் கொண்டது. பின் அவர்கள் அனுமன் மீது ஆயுதங்களையும், அம்புகளையும் எய்தினர். அனுமன் அவ்வரக்கர் படையுடன் தனியாக போர் புரிந்தான். அரக்கர்கள் அனைவரையும் அழித்தான். பின் அட்சய குமாரன் அனுமன் எதிரில் நின்றான். இருவரும் போர் புரிய தொடங்கினர். அட்சய குமாரன் தன் வாளை எடுத்து அனுமனை குத்த முற்பட்டான். அப்போது அனுமன் அந்த வாளை அட்சய குமாரனிடம் இருந்து பிடுங்கி உடைத்து எறிந்தான். பிறகு தன் இருக்கரங்களாலும் அவனை அடித்து உதைத்தான். வலி தாங்க முடியாத அட்சய குமாரன் அவ்விடத்திலேயே மாண்டு போனான். அரக்கர்கள் அலறிக் கொண்டு அரண்மனையை நோக்கி ஓடினர்.

🌿 அட்சய குமாரன் மாண்ட செய்தி மண்டோதரிக்கும், இராவணனுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த மண்டோதரி செய்வதறியாது இராவணனின் காலில் விழுந்து அழுதாள். அப்பொழுது இந்திரஜித் தன் மனைவிமார்களுடன் மகிழ்ச்சியாக இருந்தான். அவன் காதில் அரக்கர்கள் அழும் குரல் கேட்டது. உடனே அவன் தன் பக்கத்தில் இருந்த ஏவலர்களை பார்த்து இவ்வழுகை ஒலி எங்கிருந்து வருகிறது எனக் கேட்டான். அதற்கு ஏவலர்கள், ஒரு வானரம் அசோக வனத்தையும் அழித்து, கிங்கரர், ஜம்புமாலி, ஐந்து சேனைத் தலைவர்களையும் அழித்து விட்டது. கடைசியாக சென்ற இளவரசர் அட்சய குமாரனையும் கொன்று விட்டது. இதனால் அரக்கர்கள் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றனர். தன் தம்பி அனுமனால் கொல்லப்பட்ட செய்தி அறிந்த இந்திரஜித் மிகவும் கோபங்கொண்டான்.

🌿 தன் தம்பியை நினைத்து இந்திரஜித் மிகவும் வருந்தினான். இந்திரஜித் தன் வில்லை பார்த்து, ஒரு வானரம் என் தம்பியை கொன்றதா? இல்லை இராவணனின் புகழை அல்லவா கொன்று உள்ளது என்றான். உடனே இந்திரஜித் இராவணனின் மாளிகைக்கு சென்று இராவணனின் திருவடியில் விழுந்து வணங்கினான். இராவணன் இந்திரஜித்தை கட்டி தழுவிக் கொண்டான். அரசே! அந்த குரங்கின் வலிமையை அறிந்த பின்பும் தாங்கள் அரக்கர்களை அக்குரங்கிடம் அனுப்பி எமலோகத்திற்கு அனுப்புகிறீர்கள். அப்படி தான் கிங்கர அரக்கர்கள், ஐந்து சேனைத்தலைவர்கள், என் தம்பி அட்சய குமாரன் என ஒருவர் பின் ஒருவராக இறந்து போயினர். இவ்வளவு பேரையும் கொன்ற பிறகு அக்குரங்கை சும்மா விடுவது சரியல்ல. நான் சென்று அக்குரங்கை கணப்பொழுதில் பிடித்து வருகிறேன். தாங்கள் வருந்த வேண்டாம் என்றான் இந்திரஜித்.

🌿 இதைக்கேட்ட இராவணன், இந்திரஜித்துக்கு தன் ஆசியை கூறி விடை கொடுத்தான். பிறகு இந்திரஜித் அனுமனை நோக்கி வந்தான். போகும்போது இந்திரஜித் அனுமனின் ஆற்றலை எண்ணி பார்த்தான். பிறகு இந்திரஜித் தன் தம்பி இறந்த இடத்திற்கு சென்று பார்த்தான். அந்த இடத்தை பார்த்த இந்திரஜித்திக்கு அனுமனின் மேல் பெருங்கோபம் வந்தது. அனுமன், தொலைவில் மிகவும் கோபமுடனும், தன் தம்பியை இழந்த சோகத்துடன் வருவது இந்திரஜித் என்பதை கண்டுகொண்டான். பிறகு அனுமன், இதற்கு முன் என்னிடம் வந்து போரிட்ட அனைத்து அரக்கர்களையும் கொன்றுவிட்டேன். இப்போது வரும் இந்திரஜித் மிகவும் பலம் பொருந்தியவன். நான் அவனை கொன்றால் இராவணனை கொன்றதற்கு சமமாகும். அது மட்டுமில்லாமல் தேவர்களும் துன்பத்திலிருந்து மீள்வார்கள் என நினைத்தான்.

தொடரும்...

RAMAYANAM PART 80

 இராமாயணம் தொடர் 80

அட்சய குமாரன் போருக்கு செல்லுதல்!

✻ ஜம்புமாலி இறந்த செய்தியை அரக்கர்கள் ஓடிச் சென்று இராவணனிடம் தெரிவித்தனர். ஒரு குரங்கு தன் அரக்கர்களையும் மற்றும் ஜம்புமாலியையும் கொன்றதை அறிந்து இராவணன் மிகவும் கோபங்கொண்டான். உடனே இராவணன் தானே சென்று அந்த குரங்கைப் பிடித்து வருவதாக கூறினான். இதைக் கேட்ட விரூபாட்சன், யூபாசன், துர்த்தரன், பிரகசன், பாசகர்ணன் என்னும் ஐந்து சேனைத் தலைவர்களும், அரசே! தாங்கள் போய் ஒரு குரங்கிடம் போர் புரிவதா! தாங்கள் இங்கேயே இருங்கள் நாங்கள் சென்று அந்த குரங்கைப் பிடித்து வருகிறோம் எனக் கேட்டுக் கொண்டனர். சேனைத் தலைவர்கள் கேட்டுக் கொண்டத்துக்கிணங்க இராவணன் அவர்கள் போருக்கு செல்வதற்கு சம்மதித்தான். பிறகு ஐந்து சேனைத் தலைவர்கள் தன் அரக்க படைகளைத் திரட்டிக் கொண்டு அனுமன் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தனர்.

✻ அனுமன் ஒரு பெரும் அரக்க படை வருவதை கண்டு அவர்கள் அனைவரையும் நான் அழிப்பேன் என மனதில் நினைத்துக் கொண்டான். அரக்கர் படை அனுமனை எதிர்க் கொண்டது. இச்சிறிய குரங்கா அரக்கர்களை அழித்தது என ஆச்சர்யப்பட்டனர். அனுமன் தன் உருவத்தை மிகப்பெரிய உருவமாக மாற்றிக் கொண்டான். இதைப் பார்த்த அரக்கர்கள் மிகவும் கோபங்கொண்டு அனுமன் மீது அம்புகளையும், ஏராளமான ஆயுதங்களையும் எய்தினர். ஆனால் அந்த அம்புகளும், ஆயுதங்களும் வலிமைமிக்க அனுமனை ஒன்றும் செய்யவில்லை. அனுமனை தாக்க அரக்கர்கள் அலை போல் வந்தனர். உடனே தன் பக்கத்தில் இருந்த தூணை கையில் எடுத்துக் கொண்டு அரக்கர்களை வீழ்த்தினான். இப்படி அரக்கர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, சேனைத் தலைவர்கள் அனுமனை சூழ்ந்து அவன்மீது அம்புகளை எய்தினர்.

✻ அனுமன் தன்னை நோக்கி வந்த அம்புகளை தன் கையால் தடுத்தான். இவர்களுக்குள் கடுமையான போர் நடந்தது. அனுமன் ஐந்து சேனைத் தலைவர்களை ஒவ்வொருவராக கொன்று வீழ்த்தினான். தாங்கள் குரங்கை பிடித்து வருவதாக சென்ற ஐந்து சேனைத் தலைவர்களும் மாண்ட செய்தியை அறிந்த இராவணன் மிகவும் கோபம் கொண்டான். உடனே இராவணன் தான் சென்று அந்த அனுமனை தூக்கிக் கொண்டு வருவதாக கூறினான். அப்போது இராவணனின் கடைசி மகனான அட்சய குமாரன் எழுந்து, தந்தையே! இந்த வாய்ப்பை எனக்கு கொடுங்கள். அக்குரங்கை அழித்து பேரும், புகழும் பெறுவேன். எனக்கு கட்டளையிடுங்கள் என்றான். இதனை கேட்ட இராவணன் தன் மகனை கட்டித் தழுவி விடை கொடுத்தான்.

✻ அட்சய குமாரன் தேரில் ஏறும்போது அவனுடன் இளைஞர்களும், சேனைத் தலைவர்களின் மைந்தர்களும், நான்கு இலட்சம் வீரர்களும் உடன் சென்றனர். அனுமன் தன்னை நோக்கி வரும் பெரும்படையைக் கண்டு வருவது இராவணன் அல்லது இந்திரஜித் ஆக இருக்கக் கூடும் என நினைத்தான். இவர்களிடம் போர் புரிவதை நினைத்து அனுமன் மகிழ்ந்தான். அவர்கள் சிறிது பக்கத்தில் வந்தவுடன் தான் தெரிந்தது அது இராவணனும் இல்லை, இந்திரஜித்தும் இல்லை என்று. அனுமன் வருபவன் யார் என உற்று நோக்கினான். அனுமனை பார்த்த அட்சய குமாரன், இச்சிறிய குரங்கு தான் அரக்கர்களை கொன்றதா என ஏளனமாக கேட்டான். உடனே அனுமன் அவனிடம், ஐயனே! தங்கள் அரசன் இராவணனை வென்ற வாலியும் குரங்கு தான் என்பதை உனக்கு சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஆதலால் இதை மனதில் வைத்து போர் புரியுங்கள் என்றான். 

தொடரும்...

Wednesday, October 4, 2023

RAMAYANAM PART 79

 இராமாயணம் தொடர் 79

அனுமன் ஜம்புமாலி சண்டை!

🌀 அனுமன் சீதையிடம் இருந்து விடைப்பெற்றுச் சென்றான். அனுமன் போகும் போது நான் சீதையைத் தேடி கண்டுபிடித்துவிட்டேன். இப்பொழுது இராவணன் பற்றியும் அவனின் பலத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இராமர் போர் புரிய எவ்வளவு பலம் வேண்டும் என்பது தெரியும். அதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். அரக்கர்களை தொல்லை செய்யலாம் என எண்ணினான். பிறகு வேண்டாம் என நினைத்து விட்டு இவ்வளவு அழகு மிகுந்த இந்த அசோக வனத்தை அழித்தால் இராவணன் நிச்சயம் வர வாய்ப்புள்ளது என நினைத்தான். உடனே அனுமன் அசோக வனத்தை முற்றிலும் நாசம் செய்தான். இவ்வாறு அனுமன் அசோக வனத்தை நாசம் செய்து கொண்டிருக்கும்போது தூங்கி கொண்டிருந்த அரக்கிகள் விழித்துக் கொண்டனர். அப்போது மேரு மலையை போல் இருந்த அனுமனை கண்டு அரக்கிகள் பயந்தனர்.

🌀 உடனே அவர்கள் சீதையிடம் சென்று, ஏ பெண்ணே! இவன் யார் என்று உனக்கு தெரியுமா? இவன் எப்படி இங்கே வந்தான் எனக் கேட்டனர். இதற்கு சீதை, மாய உருவம் எடுக்கும் அரக்கர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். யார் வந்தார்கள்? என்ன செய்தார்கள் என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறி விட்டாள். உடனே அரக்கிகள் இராவணனிடம் ஓடிச்சென்று, மன்னரே! ஓர் வானரம் அசோகவனத்தில் சீதையின் இருப்பிடத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லா இடங்களையும் நாசம் செய்து விட்டது எனக் கூறினார்கள். இதைக்கேட்ட இராவணன் எவரும் செல்ல முடியாத அசோக வனத்தை ஓர் வானரம் நாசம் செய்து விட்டது என என்னிடம் வந்து மூடத்தனமாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான். அப்போது அனுமன் உலகம் அதிரும்படியான ஒரு கூக்குரலை எழுப்பினான். இக்குரல் இராவணனின் காதிலும் விழுந்தது.

🌀 உடனே இராவணன் கிங்கரர் என்னும் ஒரு வகை அரக்கர்களை அழைத்து, அக்குரங்கை தப்பிக்க விடாமல் என்னிடம் கொண்டு வந்து ஒப்படையுங்கள் என்று ஆணையிட்டான். உடனே கிங்கர அரக்கர்கள் அனுமனை தேடி விரைந்துச் சென்றனர். அவர்கள் அனுமனை சூழ்ந்துக் கொண்டனர். உடனே அனுமன் தன் பக்கத்தில் இருந்த மரத்தை பிடுங்கி கிங்கர அரக்கர்கள் அனைவரையும் அழித்தான். அனுமனை பிடிக்கச் சென்ற கிங்கர அரக்கர்கள் அனைவரும் இறந்த செய்தி இராவணனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட இராவணனின் முகம் கோபத்தால் சிவந்தது. உடனே இராவணன், ஜம்புமாலி என்னும் அரக்கனை அழைத்து, நீ குதிரைப்படையுடன் சென்று அக்குரங்கை கயிற்றால் கட்டி இங்கு அழைத்து வா! அப்போது தான் என்னுடைய கோபம் தணியும் என்றான். ஜம்புமாலி தன் படையை அழைத்துக் கொண்டு அனுமன் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

🌀 அனுமன் தன் பக்கத்தில் இருந்த இரும்புத் தடியை கையில் எடுத்துக் கொண்டான். தன்னிடம் போர் புரிய வந்த அரக்கர்கள் எல்லோரையும் இரும்புத் தடியால் அடித்துக் கொன்றான். கடைசியில் ஜம்புமாலி மட்டும் இருந்தான். அனுமன் அவனிடம், உயிர் மேல் ஆசை இருந்தால் இங்கிருந்து தப்பி ஓடிச்செல் என்றான். ஆனால் ஜம்புமாலி அங்கிருந்து கோழை போல் ஓடாமல் அனுமன் மீது அம்புகளை ஏவினான். தன்னை நோக்கி வந்த அம்புகளை அனுமன் தன் இரும்புத் தடியால் தடுத்தான். ஜம்புமாலி தன் அம்பால் அனுமனிடம் இருந்த இரும்புத்தடியையும் ஒடித்து விட்டான். இதனால் சற்று சளைத்து நின்ற அனுமன், ஓடிச்சென்று ஜம்புமாலியின் தேரில் ஏறி அவனின் வில்லை பிடுங்கி அவன் கழுத்தில் மாட்டி தேரிலிருந்து கீழே தள்ளிவிட்டான். ஜம்புமாலி கீழே விழுந்து இறந்தான்.

தொடரும்...



Monday, October 2, 2023

RAMAYANAM PART 78

 இராமாயணம் தொடர் 78

அனுமன் கணையாழியை கொடுத்தல்!


💍 இராமர், அவரின் அடையாளமாக என்னிடம் இந்த கணையாழியை தங்களிடம் காண்பிக்குமாறு கூறினார். அனுமன் தன் மடியில் வைத்திருந்த கணையாழியை சீதையிடம் கொடுத்தான். கணையாழியை பார்த்த சீதை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கணையாழியை பார்த்த சீதை, இராமரின் நினைவால் மிகவும் வருந்தினாள். அனுமன் சீதையிடம், அன்னையே! தாங்கள் என் தோள்மீது ஏறிக் கொள்ளுங்கள். நான் தங்களை இராமரிடம் ஒப்படைத்து விடுகிறேன். போகும் வழியில் அரக்கர்கள் யாரேனும் தடுத்தால் அவர்களை கொன்று விடுகிறேன். நான் தங்களை பார்த்த பிறகு, எப்படி தங்களை இத்துயரத்தில் விட்டுச்செல்வேன். அதுமட்டுமில்லை நான் இராமரிடம் சென்று தாங்கள் படும் துயரத்தை எவ்வாறு கூறுவேன் என்றான்.

💍 அனுமன் சொன்னதை கேட்ட சீதை, ஆற்றல் மிகுந்த மாருதியே! உன் ஆற்றலுக்கு இச்செயல் ஏற்றது. ஆனால் ஒரு பெண்ணாகிய நான் இச்செயலை செய்யக்கூடாது என எண்ணுகிறேன். நீ என்னை தோளில் சுமந்து போகும் வழியில் அரக்கர்கள் யாரெனும் தடுக்கும்போது நான் கீழே விழவும் வாய்ப்பு உள்ளது. இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. நான் உன்னுடன் வந்தால் இராமனின் வில்லுக்கும், வீரத்திற்கும் வீண் பழி உண்டாகும். இராவணன் என்னை பிறர் அறியா வண்ணம் கவர்ந்து வந்தது போல் நீயும் என்னை பிறர் அறியா வண்ணம் அழைத்து செல்கிறேன் என்கிறாய். இதை மற்றவர்கள் நியாயம் என்று சொல்வார்களா? நான் என் இராமனை தவிர வேறு எந்த ஆண்மகனையும் தீண்ட மாட்டேன். இராமன் இங்கே வந்து அரக்கர்களை அழித்து இராவணனை வென்று என்னை அழைத்துச் செல்வது தான் சிறப்பு என்றாள்.

💍 இராவணனாலும் என்னை தீண்ட முடியாது. ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவன் தீண்டினால் அவனுடைய பத்து தலைகளும் வெடித்து விடும். இது பிரம்மன் அவனுக்கு கொடுத்த சாபமாகும். இராவணன் பெற்ற சாபத்தால் தான் நான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றாள். பிறகு சீதை, மாருதியே! இராவணன் எனக்கு கொடுத்த கால அவகாசம் ஒரு வருடம். அதில் இன்னும் ஒரு மாதம் காலம் தான் உள்ளது. அதற்குள் இராமர் வந்து என்னை மீட்டு செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால் என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன். இதை நீ மனதில் வைத்துக் கொள் என்றாள். சீதை இப்படி பேசியதைக் கேட்ட அனுமன், தாங்கள் இறந்தால் இராமர் மட்டும் எவ்வாறு உயிர் வாழ்வார் எனக் கூறி சீதைக்கு ஆறுதல் கூறினான்.

💍 சீதை, தன் ஒளிமிக்க சூடாமணியை கையில் எடுத்து அனுமனிடம் கொடுத்தாள். அனுமன், இது என்ன? எனக் கேட்டான். நான் கொடுத்த அடையாளமாக இராமரிடன் இந்த சூடாமணியை கொடு. இந்த ஆபரணத்தை பார்த்தால் இராமருக்கு என் நினைவு மட்டுமின்றி, என் தாய் மற்றும் இராமரின் தந்தை தசரதனின் ஞாபகமும் வரும் என்றாள் சீதை. அனுமன், சீதையை வணங்கி சூடாமணியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டான். பிறகு அனுமன் தாங்கள் நிச்சயம் இத்துன்பத்தில் இருந்து மீள்வீர்கள். இராமர் தங்களை காப்பாற்ற பெரும்படையுடன் வருவார் என ஆறுதல் கூறினான். பிறகு அனுமன் சீதையிடம் ஆசியை பெற்றுக் கொண்டு அங்கிருந்து விடைப்பெற்றுச் சென்றான்.

தொடரும்...

Sunday, October 1, 2023

RAMAYANAM PART 77

 இராமாயணம் தொடர் 77

அனுமன் இராமரை பற்றிக் கூறுதல்!

✼ அனுமன் சீதையை வணங்கிவிட்டு, இராமர் தங்களை விட்டு பிரிந்த பிறகு அவருக்கு சூரிய குமாரான சுக்ரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்ரீவன் குரங்கினத் தலைவன் ஆவான். சுக்ரீவனுடைய அண்ணன் வாலி. வாலி சுக்ரீவனுக்கு தீங்கு இழைத்ததால் இராமர் அவனை தன் பாணத்தால் வீழ்த்தினார். நான் சுக்ரீவனுடைய அமைச்சன் அனுமன். இராவணன் தங்களை கவர்ந்து சென்ற போது, தங்களுடைய ஆபரணங்களை ஓர் துணியில் கட்டி நாங்கள் இருந்த ருசியமுக பர்வதத்தில் தூக்கி எறிந்தீர்கள். அதை நாங்கள் பத்திரபடுத்தி வைத்திருந்தோம். பிறகு நாங்கள் அந்த அணிகலன்களை இராமரிடம் காண்பித்தோம். இராமர் அணிகலன்களை பார்த்து அது தங்களுடைய அணிகலன்கள் தான் என்பதை உறுதி செய்தார். ஆனால் இராமர் தங்களுடைய அணிகலன்களை பார்த்து மிகவும் துன்பப்பட்டார்.

✼ இராமரும் இலட்சுமணரும் நான் கவர்ந்து சென்ற செய்தியை எவ்வாறு அறிந்தனர் எனக் கேட்டாள் சீதை. அதற்கு அனுமன், இராவணன் தூண்டுதலால் மாய மான் போல் வந்த மாரீசனை இராமன் கொன்று விட்டார். ஆனால் அவனோ இறக்கும் தருவாயில் சீதா! தம்பி இலட்சுமணா! என கூறிக் கொண்டு இறந்தவிட்டான். தாங்களோ அது இராமர் என நினைத்து இலட்சுமணரை கடிந்து பேசி இராமரை காண அனுப்பிவிட்டீர்கள். பர்ணசாலை நோக்கி வரும் வழியில் தம்பி இலட்சுமணன் வருவதை கண்ட இராமர், சீதையின் தூண்டுதலால் தான் இலட்சுமணன் இங்கே வந்துள்ளான் என்பதை இராமர் புரிந்துக் கொண்டார். பிறகு தங்களை தனியே விட்டு வந்ததால் அங்கு தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ என நினைத்து விரைந்து இருவரும் பர்ணசாலை வந்தடைந்தனர். அங்கு தங்களை காணாமல் இராமர் மிகவும் துன்பப்பட்டார்.

✼ பிறகு அவர்கள் இருவரும் தேரின் சுவடை வைத்து தெற்கு நோக்கி வந்தனர். அவர்கள் வரும் வழியில் ஜடாயு உயிர் துறக்கும் நிலையில் இருப்பதை கண்டனர். ஜடாயு அவர்களிடம் இராவணன் தங்களை கவர்ந்து சென்ற செய்தியை கூறினார். பிறகு இராமரும், இலட்சுமணரும் தங்களை தேடி எங்களை வந்தடைந்தனர் என்றான். இதைக் கேட்ட சீதை, இராமனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைத்து மிகவும் வருந்தினாள். சீதை அனுமனிடம், மாருதியே! இவ்வளவு சிறிய உருவம் கொண்ட நீ எவ்வாறு இக்கடலை கடந்து வந்தாய் எனக் கேட்டார். சீதை இவ்வாறு கேட்டதால் அனுமன் தன் முழு உருவத்தையும் காட்ட நினைத்தான். பிறகு அனுமன் வானை முட்டும் அளவிற்கு தன் உருவத்தை வளர்த்து நின்றான். அனுமனின் உருவத்தைக் கண்ட சீதை, மாருதி! போதும் உன் உருவத்தை ஒடுக்கிக் கொள் என்றாள். அனுமன், தங்கள் வார்த்தையே எனக்கு கட்டளையாகும் எனக் கூறிக் கொண்டு தன் உருவத்தை சிறிதாக்கி நின்றான்.

✼ பிறகு அனுமன் இராமரின் கட்டளைப்படி, சுக்ரீவன் தங்களை தேடச் சொல்லி பெரும் சேனையை எட்டுத் திசைகளுக்கும் செல்லுமாறு அனுப்பினார். தெற்கு திசையில் தங்களை தேடி வந்த வானர சேனைகளின் தலைவன் அங்கதன் ஆவான். அவன் தங்களை தேடும் பொருட்டு என்னை இலங்கைக்கு அனுப்பியவன். நான் தங்களை கண்டுபிடித்து விட்டு வருவேன் என்று எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றான். சீதை அனுமன் சொன்னத்தை கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தாள். சீதை அனுமனிடம் இராமர் நலமாக உள்ளாரா? என வினவினாள். இராமர் நலமாக உள்ளார். ஆனால் தங்களை நினைத்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார். இலட்சுமணரும் நலமாக இருக்கிறார். ஆனால் அவர் தங்களை கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளார் என்றான்.

தொடரும்...

Saturday, September 30, 2023

RAMAYANAM PART 76

 இராமாயணம் தொடர் 76

அனுமன் சீதை முன் தோன்றுதல்!

✻ இராவணன் திரும்பி சென்ற பிறகு அரக்கிகள் சீதையை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் சீதையிடம், அரசன் இராவணன் உன் மீது உண்மையான ஆசை வைத்து இருக்கிறார். அவரை நீ ஏற்றுக் கொள். இல்லையேல் உன்னை நாங்களே கொன்று தின்று விடுவோம் என்றனர். நீ இராவணனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் உன்னால் உயிர் வாழ முடியாது. இனியும் இராமன் வந்து உன்னை காப்பாற்றுவான் என எண்ணிக் கொண்டு இருக்காதே. இராவணன் இம்மூவுலகுக்கும் அதிபதி ஆவான். அவனை நீ ஏற்று கொள்வதை விட உனக்கு வேறு வழி இல்லை என பலவாறு சீதையை துன்புறுத்திக் கூறினர். இவர்களின் துன்புறுத்தல்களை கேட்ட திரிசடை தூக்கத்தில் இருந்து எழுந்தாள். உடனே அவள் மற்ற அரக்கிகளிடம், இனியும் நீங்கள் சீதையை துன்புறுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள். சீதையின் கணவன் இராமன் சீதையை மீட்டுச் செல்ல போகிறார். இது நான் கண்ட கனவு ஆகும்.

✻ பொதுவாக விடியற்காலையில் காணும் கனவு பலிக்கும் என்று சொல்வார்கள் என்றாள். இதைக் கேட்ட மற்ற அரக்கிகள் உன் கனவை விரிவாக கூறு என்றனர். நான் வெள்ளைக்குதிரை கொண்ட தங்கத்திலான புஷ்பரக தேரில் இராமனும் இலட்சுமணும் வந்து சீதையை மீட்டுச் சென்றனர். இராவணன் அத்தேரில் இருந்து தள்ளப்பட்டு கழுதை மீது ஏறி தென் திசை நோக்கிச் சென்றான். அவனுடன் கும்பகர்ணனும் சென்றான். விபீஷணன் மட்டும் யானை மீது அமர்ந்திருந்தான். இலங்கை நகரம் தீப்பிடித்து எரிவது போலவும் கண்டேன் என்றாள். இதைக் கேட்ட சீதை மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். திரிசடை தாயே! நீ கண்ட கனவு பலித்தால் நிச்சயம் நான் உனக்கு உதவி செய்வேன் என்றாள். இருந்தாலும் சீதை இராவணனின் தொல்லைகளையும், மற்ற அரக்கிகளின் அச்சுறுத்தல்களையும் நினைத்து மிகவும் வேதனையடைந்தாள்.

✻ இதையெல்லாம் மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அனுமன் இது தான் சரியான தருணம் நான் அன்னை சீதையிடம் பேசுவதற்கு என நினைத்தான். அதனால் அனுமன் ஒரு மந்திரத்தைச் சொல்லி அரக்கிகள் அனைவரையும் ஆழ்ந்த தூக்கத்திற்கு போகும்படி செய்தான். அரக்கிகள் என்றும் ஒன்றாக தூங்குவதை காணாத சீதை இன்று ஒன்றாக தூங்குவதைக் கண்டாள். சீதை தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நினைத்து மிகவும் வருந்தினாள். என் இராமன் எப்போது வந்து என்னை மீட்க போகிறான். மாய மானின் பின்னால் என் இராமனையும் இலட்சுமணனையும் அனுப்பினேனே. அதற்கு பதிலாக தான் இன்று இந்த கொடுமையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் என நினைத்து வேதனைப்பட்டாள்.

✻ அப்பொழுது இராமனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டு அனுமன் சீதை முன் தோன்றி சீதையை தொழுது வணங்கினான். அனுமன் திடீரென்று தோன்றியதால் சீதை அனுமனை பார்த்து பயந்தாள். அன்னையே! தாங்கள் பயப்பட வேண்டாம். நான் இராமனின் அடியேன் ஆவேன். இராமனின் கட்டளையினால் தங்களை தேடி இங்கு வந்தேன். தங்களை இலங்கை முழுவதும் தேடி கண்டுபிடிக்க முடியாமல் கடைசியில் இங்கு கண்டுவிட்டேன். நான் தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்றான். அனுமன் பேசியதைக் கேட்ட சீதை நிச்சயம் இவன் அரக்கனாக இருக்க முடியாது என நினைத்தாள். பிறகு சீதை அனுமனை உற்று நோக்கினாள். இவன் என் கணவன் இராமன் பெயரை கூறுவதால் நிச்சயம் இவன் நல்லவனாக தான் இருக்கக்கூடும் என நினைத்தாள். சீதை அனுமனை பார்த்து நீ யார்? என வினவினாள்.

தொடரும்...

Thursday, September 28, 2023

RAMAYANAM PART 75

 இராமாயணம் தொடர் 75

திரிசடையின் கனவுகள்!!!

✥ அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை சுற்றி பல அரக்கர்கள் நின்று கொண்டிருந்தனர். அங்கு திரிசடை என்னும் அரக்கி மட்டும் சீதையிடம் அன்பாக பேசுவாள். அங்கு திரிசடையை தவிர்த்து மற்ற அரக்கர்கள் மயக்க நிலையில் வீற்றிருந்தனர். அங்கு மற்ற அரக்கர்கள் தூங்கிவிட்டதால் சீதை திரிசடையிடம் பேச ஆரம்பித்தாள். திரிசடை நீ என்னிடம் அன்பாக இருப்பதால் நான் உன்னிடம் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் என்றாள். பிறகு சீதை, அன்புமிக்க திரிசடையே! என் இடக்கண் துடித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவு தான் என்ன? என் துன்பங்கள் நீங்கி நன்மை உண்டாக போகிறதா? இல்லை, துன்பத்திற்கும் மேல் துன்பம் வர போகிறதா? எனக் கேட்டாள்.

✥ அதுமட்டுமில்லை, இராமர் விசுவாமித்திர முனிவரிடம் மிதிலைக்கு வரும்போது எனது இடக்கண் துடித்தது. இன்றும் அதேபோல் என் இடக்கண் துடிக்கிறது. இராமர் நாட்டை விட்டு வனம் செல்லும்போது என் வலக்கண் துடித்தது. பிறகு இராவணன் என்னை கவர்ந்து வரும்போதும் என் வலக்கண் துடித்தது. ஆனால் இன்று என் இடக்கண் துடிக்கிறது. இதனால் ஏற்படும் விளைவு என என்னிடம் சொல் எனக் கூறினாள். சீதை சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த திரிசடை, சுபம் உண்டாகும். உன் இடக்கண் துடிப்பதால், நீ நிச்சயம் உன் கணவரை அடைவாய் என்றாள்.

✥ பிறகு திரிசடை, சீதையே! நான் என் கனவில் ஒளி மிகுந்த ஒரு பொன் வண்டு ஒன்று உன் காதருகே பாடிச் சென்றதை கண்டேன். இவ்வாறு ஒரு பொன் வண்டு காதருகே வந்து பாடினால், நிச்சயம் உன் கணவனால் அனுப்பப்பட்ட தூதன் உன்னை வந்து சந்திப்பான். குலமகளே! உனக்கு தூக்கம் என்பதே இல்லாததால் உனக்கு கனவு வரவில்லை. மேலும் நான் கண்ட கனவுகளை கூறுகிறேன், கேள் என்றாள். இராவணன் தன் வீட்டில் அக்னி ஹோத்ரம் செய்வதற்காக அக்னியை பாதுகாத்து கொண்டு வருகிறான். அந்த அக்னி அணையாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால் என் கனவில் அந்த அக்னி அணைந்துவிட்டது. மேலும் அந்த அக்னி இருந்த இடத்தில் செந்நிறத்தில் கரையான்கள் தோன்றின.

✥ அதே போன்று, மாளிகையில் நெடுங்காலமாக மணி விளக்குகள் ஒளி வீசி கொண்டு இருந்தன. திடீரென்று வானத்தில் வீசிய பேரிடியால் அவ்விளக்குகள் எல்லாம் அணைந்து போயின. தோரணங்கள், கம்பங்கள் என அனைத்தும் முறிந்து விழுந்தன. பொழுது விடியும் முன்பே கதிரவன் தோன்றியது. அரக்க பெண்களின் கழுத்திலிருந்த மங்கல நாண்கள் தானாக அறுந்து விழுந்தது. அதுமட்டுமின்றி இராவணனின் மனைவி மண்டோதரி தலைவிரி கோலமாக தோன்றினாள். இவை அனைத்தும் அரக்கர் குலம் அழிவதற்கான தீய சகுனங்கள்.

✥ நான் கடைசியாக கண்ட கனவு, இரண்டு ஆண் சிங்கங்கள், தங்கள் புலிக் கூட்டத்தை அழைத்துக் கொண்டு யானைகள் மிகுந்த காட்டிற்கு சென்று யானைகளை எதிர்த்து போரிட்டனர். அங்கு கணக்கற்ற யானைகளை கொன்று வீழ்த்திவிட்டு, இறுதியில் அவர்களுடன் ஓர் மயிலை அழைத்துக் கொண்டு சென்றனர். அதுமட்டுமின்றி இராவணனின் மாளிகையில் இருந்து ஓர் அழகிய பெண், ஆயிரம் திரிகளை கொண்ட ஓர் விளக்கை தன் கையில் ஏந்திக் கொண்டு விபீஷணனின் மாளிகைக்கு சென்றாள். விபீஷணனின் பொன் மாளிகையில் அப்பெண் நுழைந்த நேரத்தில் விபீஷணன் உறக்கத்தில் இருந்து எழுந்தான். அதற்குள் தாங்கள் என்னை எழுப்பி விட்டீர்கள் என்றாள் திரிசடை.

தொடரும்...

Wednesday, September 27, 2023

RAMAYANAM PART 74

 இராமாயணம் தொடர் 74

அனுமன் சீதையை பார்த்தல்

✹ திரிசடை தன் கனவை பற்றி கூறியதை கேட்ட சீதை, திரிசடை தாயே! உன் கனவின் மிஞ்சிய பகுதியையும் கண்டுவிட்டு, எனக்கு கூறு. இப்பொழுது நீ உறக்கத்திற்கு செல் என்றாள். தூரத்தில் தங்கத்திலான மண்டபத்தைக் கண்ட அனுமன் அங்கு வந்து சேர்ந்தான். அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த அரக்கியர்கள் தூக்கத்தை கலைத்து சீதையை காவல் புரிய தொடங்கினர். இதை பார்த்த அனுமன் உடனே ஓடி சென்று தன்னை யாரும் பார்க்காத வண்ணம் மரத்தில் ஏறி கொண்டான். அப்போது அரக்கிகள் சீதையிடம், நீ எதற்கு அழுது கொண்டிருக்கிறாய்? உன்னை யார் என்ன செய்தார்கள்? எங்கள் அரசன் இராவணனுக்கு அறிவே கிடையாது. அவர் எங்கள் யாரையாவது விரும்பி இருந்தால் நாங்கள் மகிழ்ச்சியாக அவரின் மனைவியாக இருப்போம். எங்கள் அரசரை நீ ஏற்றுக் கொண்டால் இங்கு நீ மகிழ்ச்சியாக இருக்கலாம். எங்கள் அரசர் இங்கு வந்தால் அவரை வரவேற்று வணக்கம் சொல் என்று அச்சுறுத்தினார்கள்.

✹ இவர்களின் இச்சொற்களை கேட்டு சீதை மிகவும் துன்பப்பட்டாள். அனுமன் சீதையின் நிலைமையை பார்த்து, யார் இந்த பெண்? இவளின் முகம் ஒளியிழந்து காணப்படுகிறதே. இவள் ஏன் அழுக்கு ஆடையை அணிந்து இருக்கிறாள்? இப்பெண்ணின் முகத்தில் தெய்வ ஒளி வீசுகிறதே. அரக்கியர் கூட்டம் சூழ இவள் யாரையோ நினைத்து அழுது கொண்டிருக்கிறாள். இராமர், சீதை பற்றி கூறிய அம்சங்கள் எல்லாம் இவளிடம் உள்ளது. அப்படியென்றால் இவள் நிச்சயம் சீதை தான் என்று தீர்மானித்துக் கொண்டான். நான் பட்டபாடு வீணாகவில்லை. நான் சீதையை கண்டுவிட்டேன். இனி நான் சாகமாட்டேன். அனுமன் மகிழ்ச்சியால் அங்கும் இங்கும் துள்ளி குதித்தான். இப்பெருஞ்செல்வியை தர்மம் காத்ததா? இல்லை ஜனக மகாராஜரின் புண்ணியம் தான் காத்ததா? கற்பு என்ற ஒன்று இவரை காத்தது என்றாள் அது மிகையாகாது என்று சீதையை பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தான்.

✹ தூங்கி கொண்டிருந்த இராவணன் சீதை தன் ஆசைக்கு இணங்கவில்லை என்ற கோபத்தில் தூக்கத்தை கலைந்தான். இராவணன் ஒளி வீசுகின்ற மணிகளை அணிந்து சீதையை நோக்கி வந்தான். ஊர்வசி உடைவாளை ஏந்திக் கொண்டு அவனுடன் வந்தாள். மேனகை வெற்றிலை பாக்கை மடித்து கொடுத்துக் கொண்டு உடன் வந்தாள். திலோத்தமை அவனுடைய காலணிகளை தூக்கிக் கொண்டு உடன் வந்தாள். மற்றும் ஏனைய தேவ மாதர்கள் சூழ ஆடம்பரமாக இராவணன் நடந்து வந்தான். இராவணன் அசோக வனத்திற்கு வந்தவுடன் அங்கு இருந்த அரக்கிகள் இராவணனுக்கு வழிவிட்டு நின்றனர். இராவணன் வருவதை கண்ட அனுமன் மரத்தில் ஒளிந்து கொண்டான். இராவணன் சீதையின் முன் நின்றான். அவனை கண்டதும் சீதையின் உடல் கூசியது. இராவணன் சீதையிடம், நீ என் மேல் இரக்கம் காட்ட மாட்டாயா? இதுநாள் வரை உனக்காக காத்திருந்து நாட்கள் வீணாகிவிட்டது.

✹ நீ என்னை அடைந்தால் மூவுலகமும் உன்னை வந்தடையும். இராமனிடம் இருந்து பிரிந்து வந்த பிறகு அவனை நினைத்து அழுவதில் ஒரு பயனும் இல்லை. உன் அழகுக்கு ஏற்றவன் நான் மட்டும் தான். என்னை வேண்டாம் என்று சொல்லாதே. என்னை போல் பலம் கொண்டவன் இவ்வுலகில் எவரும் இல்லை. உனக்கு நல்வாழ்வு காத்துக் கொண்டிருக்கிறது. அதை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். நீ என்னுடன் வந்தால் என் செல்வங்கள் மேலும் பெருகும். நீ இராமனையே நினைத்து கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. இராமன் இங்கு வந்து உன்னை மீட்டு செல்ல போவதில்லை. தேவர்கள் முதலானோர் என் அடிமைகளாக இருக்கின்றனர். நான் உன் அடிமையாக இருக்கிறேன். உன் அடிமையாகிய என்னை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என தன் இரு கரங்களையும் கூப்பி மண்டியிட்டு கேட்டான்.

தொடரும்...