Sunday, October 8, 2023

RAMAYANAM PART 83

 இராமாயணம் தொடர் 83

அனுமன் இராவணனுக்கு அறிவுரை கூறுதல்!

✧ இராவணனின் சபைக்கு கட்டிக் கொண்டு வரப்பட்ட அனுமனை இந்திரஜித் அறிமுகப்படுத்தினான். அனுமனை பார்த்து, குரங்கின் உருவில் இருக்கும் இவ்வீரன் சிவபெருமானை போலவும், விஷ்ணுவை போலவும் வலிமை கொண்டவன் எனக் கூறினான். இராவணன் அனுமனை பார்த்து, நீ யார்? எதற்காக இங்கு வந்துள்ளாய்? உன்னை இங்கு அனுப்பியவர் யார்? எனக் கேட்டான். அனுமன், நான் வில் வீரத்தில் சிறந்தவனான இராமனின் தூதுவன். இராமன், வேதங்களை நன்கு கற்றவன். அறிவில் சிறந்து விளங்குபவன். அறத்தை வளர்ப்பவன். தர்மநெறியில் விளங்குபவன். அத்தகைய இராமனின் தூதன் நான். இராமனின் மனைவி சீதையை தேடி வாலியின் சகோதரனான சுக்ரீவனின் கட்டளைப்படி வாலியின் மகன் அங்கதன் தலைமையில் வந்துள்ளேன். அவனுடைய தூதனாக மற்றும் தனியாக இங்கே வந்துள்ளேன் என்றான்.

✧ வாலியின் பெயரைக் கேட்ட இராவணன், பலமாக சிரித்தான். வாலியின் மகன் அங்கதனின் தூதனா நீ? வாலி நலமாக உள்ளானா? எனக் கேட்டான். அனுமன் இராவணனை பார்த்து கேலியாக சிரித்தான். பிறகு, அரக்கனே! வாலி இவ்வுலகை விட்டு வானுலகம் சென்று விட்டான். அவனின் உயிரை இராமனின் பாணம் பதம் பார்த்தது. இப்போது வாலியின் தம்பியான சுக்ரீவன் அரசனாக உள்ளான் எனக் கூறினான். உடனே இராவணன் அனுமனிடம், வாலியை இராமன் எதற்காக கொன்றான் என சொல் என்றான். சீதையைத் தேடி இராமன் வந்தபோது, சுக்ரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்ரீவனின் துயரை போக்கும் பொருட்டு இராமன் வாலியை கொன்று சுக்ரீவனுக்கு முடி சூட்டினான் என்றான். இராவணன், உன் குலத்து தலைவனை கொன்ற இராமனிடம் அடிமையாக இருக்கின்றீர்கள். தன் சொந்த அண்ணனை இராமனை விட்டு கொன்ற சுக்ரீவன் எனக்கு தூது அனுப்பியுள்ளானா எனக் கேட்டான்.

✧ நீ இங்கு தூதுவனாக வந்துள்ளதால் உன்னை கொல்லாமல் இருக்கின்றேன். உண்மையைச் சொல் என்றான் இராவணன். அனுமன் இராவணனிடம், நான் உனக்கு அறிவுரையை கூறுகிறேன் கேள் என்றான். நான் உன்னை காண வேண்டும் என்பதற்காக தான் அசோக வனத்தையும், உன் அரக்கர்களையும் அழித்தேன். ஒருவனுக்கு ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஓர் அரசனாகிய நீ ஒழுக்கத்தை கடைப்பிடிக்காமல் இருக்கிறாய். பிறரின் மனைவியை விரும்புபவனுக்கு பழியும், பாவமும் வந்து சேரும். உனக்கோ பல மனைவிமார்கள் இருக்க நீ மற்றவர் மனைவியை விரும்புவது நியாயமா? ஒருவனுக்கு பெண்ணாசையும், பொன்னாசையும் இருந்தால் அது அவனுக்கு அழிவைத் தேடி தரும். நீ சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிட்டால் இராமன் உன்மீது சிறிதேனும் கருணை காட்ட வாய்ப்புள்ளது எனக் கூறினான்.

✧ இராவணன் இதனைக் கேட்டு பெரும் கோபங்கொண்டான். உடனே குரங்காகிய நீ! எனக்கு அறிவுரை சொல்வதா! உன்னை இப்பொழுதே எமலோகத்திற்கு அனுப்புகிறேன் என்றான். தன் ஏவலாட்களுக்கு இக்குரங்கை உடனே கொல்லுங்கள் என ஆணையிட்டான். உடனே அரக்கர்கள் அனுமனை சூழ்ந்துக் கொண்டனர். அப்போது அரசவையில் இருந்த இராவணனின் தம்பி விபீஷணன் எழுந்து 'நில்லுங்கள்" என்றான். விபீஷணன் இராவணனிடம் அண்ணா! உன் கோபம் உலக நீதிக்கு ஏற்றது அல்ல. உன் தவத்தின் பலனாய் இந்திரன் முதலிய தேவர்கள் உனக்கு பணிவிடை செய்கிறார்கள். இவன் ஒரு தூதுவன் என்று சொல்லியும் இவனைக் கொல்வது நம் குலத்திற்கு பாவமாகும். இத்தூதுவனை கொல்லாதே என தடுத்து நிறுத்தினான். அனுமன் இலங்கைக்கு தீ மூட்டியதை இனி காண்போம்.

தொடரும்...

No comments:

Post a Comment