Thursday, October 12, 2023

RAMAYANAM PART 86

 இராமாயணம் தொடர் 86

அனுமன் இராமரை சந்தித்தல்!

🌟 வானரங்கள் மிகுந்த பசியுடன் இருந்ததால், அவர்கள் அங்கதனிடம், நாங்கள் மிகுந்த பசியுடன் உள்ளோம் தாங்கள் இந்த மதுவனத்தில் உள்ள மதுவை அருந்த அனுமதி தர வேண்டும் என்றனர். அங்கதனும் அவர்களுக்கு அனுமதி அளித்தான். வானர வீரர்கள் மதுவனத்தில் ஆடியும் பாடியும் மகிழ்ந்தார்கள். இப்படி இவர்கள் மதுவை அருந்த மதுவின் மயக்கம் இவர்களுக்கு அதிகரித்துக் கொண்டே போனது. இதனால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு மதுவனத்தை நாசம் செய்தனர். இவர்களை தடுப்பற்காக துதிமுகனின் வானர வீரர்கள் சென்றனர். ஆனால் வானர வீரர்கள் இவர்களையும் அடித்து துன்புறுத்தினர். காவல் புரிந்த வானர வீரர்கள் துதிமுகனிடன் சென்று முறையிட்டனர். உடனே துதிமுகன் அங்கதனிடம் போருக்குச் சென்றான். அங்கதனோ அவனை அடித்து உதைத்தான். மிகவும் அடிப்பட்ட துதிமுகன் அரசன் சுக்ரீவனிடம் சென்றான்.

🌟 ரிசியமுக பர்வத்தில் இராமர் சீதையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். சீதையை தேடிச் சென்ற வானர வீரர்கள் எல்லோரும் திரும்பி வந்துவிட்டனர். ஆனால் தென் திசை நோக்கிச் சென்ற வானர வீரர்கள் இன்னும் திரும்பி வரவில்லை. அவர்கள் நிச்சயம் சீதையை தேடி கண்டுபிடித்துவிட்டு வருவார்கள் என இராமருக்கு ஆறுதல் சொன்னான் சுக்ரீவன். இராமர், தென் திசைக்கு சென்ற வானர வீரர்களுக்கு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் சீதையை காணாமல் மாண்டு போனார்களோ? இல்லை இன்னமும் சீதையை தேடி அலைந்துக் கொண்டு இருக்கிறார்களா? சீதைக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டு இருக்குமோ? இல்லை அவர்களுக்கு என்ன தான் ஆகி இருக்கும் எனக் கூறி இராமர் மிகவும் வருந்தினார்.

🌟 அப்போது துதிமுகன் அவ்விடத்திற்கு வந்து அங்கதன் தலைமையில் வந்த வானர வீரர்கள் செய்த அட்டூழியங்களையும், அங்கதனால் ஏற்பட்ட துன்பத்தை பற்றியும் கூறினான். இதைக் கேட்டு சுக்ரீவன் மகிழ்ந்தான். அப்படியென்றால் வானர வீரர்கள் நிச்சயம் சீதையை தேடி கண்டுபிடித்து இருப்பார்கள். அதனால் தான் மதுவனத்தை நாசம் செய்து இருக்கிறார்கள் என நினைத்தான். சுக்ரீவன் துதிமுகனை பார்த்து, துதிமுகனே! மதுவனத்தின் இளவரசனை நீ எதிர்க்கலாமா? நீ இளவரசன் அங்கதனிடம் சென்று சரணடைவாயாக எனக் கூறினான். பிறகு சுக்ரீவன் இராமனிடம், பெருமானே! தாங்கள் வருந்த வேண்டாம். வானர வீரர்கள் சீதையை கண்ட மகிழ்ச்சியில் மதுவனத்தை நாசம் செய்து இருக்கிறார்கள் என்று கூறினான். இவ்வாறு சுக்ரீவன் கூறிக் கொண்டு இருக்கையில், தென் திசையில் இருந்து அனுமன், அவர்கள் முன் வந்து நின்றான்.

🌟 அனுமன் தென் திசை நோக்கி சீதை இருக்கும் இடத்தை பார்த்து தொழுது வணங்கினான். இராமர் சிறிது நேரம் அனுமனையே உற்று நோக்கினார். அனுமன் முகத்தில் தெரிந்த பிரகாசமே சீதையை கண்டுவிட்டேன் என்ற செய்தியை கூறியது. பிறகு அனுமன் இராமனிடம், நான் கண்டுவிட்டேன்! நான் கண்டுவிட்டேன்! நான் அன்னை சீதை இருக்கும் இடத்தை கண்டுவிட்டேன். பெருமானே! தாங்கள் இனி கவலை கொள்ள வேண்டாம் என்றான். பெருமானே! தசரத மகாராஜாவின் பெருமைக்குரியவளும், ஜனக மகாராஜாவின் மகள் என்ற தகுதிக்குரியவளும், தங்களின் மனைவியுமான அன்னை சீதையை நான் கண்டுவிட்டேன் எனக் கூறினான். இதைக் கேட்ட இராமனின் முகம் பிரகாசமானது. பிறகு அனுமன், பெருமானே! அன்னை தங்களின் நினைவாகவே உள்ளார். தன் கற்புக்கு சிறிது கலங்கமற்றவளாய் உள்ளார். தங்களின் பெயரையே உச்சரித்துக் கொண்டு உள்ளார். தங்கள் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளார் என்றான்.

தொடரும்...

No comments:

Post a Comment