Friday, October 13, 2023

RAMAYANAM PART 87

 இராமாயணம் தொடர் 87

அனுமன் சூடாமணியை இராமரிடம் கொடுத்தல்!

🎆 அனுமன் இராமனிடம், பெருமானே! அன்னை, கடலுக்கு நடுவில் இருக்கும் இலங்கை என்னும் நகரத்தில், அழகிய சோலைகள் நிறைந்த அசோக வனம் என்னும் இடத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டுள்ளார். இராவணன், ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளை தொட்டால் அவனின் தலை வெடித்து விடும். இது பிரம்மன் அவனுக்கு கொடுத்த சாபமாகும். இச்சாபத்திற்கு அஞ்சி அவன் அன்னை சீதையை தீண்டாமல் சிறை வைத்திருக்கிறான் என்றான். இராமர் அனுமனிடம், நீ சீதையை எவ்வாறு கண்டாய்? எனக் கூறு என்றார். அனுமன், நாங்கள் அன்னை சீதையை தென் திசை முழுவதும் தேடினோம். ஆனால் எங்களால் எங்கேயும் அன்னையை தேடி கண்டுபிடிக்க முடியாமல் கடைசியில் மகேந்திர மலையை அடைந்தோம். அங்கு ஜடாயுவின் சகோதரனான சம்பாதி வந்து, எங்களுக்கு சீதை இருக்கும் இருப்பிடத்தைக் கூறினான்.

🎆 பிறகு நான் சீதையை தேடி இலங்கை சென்றேன். அங்கு மாட மாளிகைகளிலும், வனத்திலும், எல்லா அரண்மனையிலும் தேடினேன். எங்கு தேடியும் கிடைக்காத சீதை கடைசியில் அசோக வனத்தில் இருப்பதை கண்டேன். அங்கு சீதை மிகவும் துன்பப்பட்டு அரக்கியர்கள் நடுவே வீற்றிருந்தார். அப்போது இராவணன் அங்கு வந்தான். அவன் சீதையை தன் அன்புக்கு இணங்கும்படி வேண்டினான். ஆனால் சீதை கடுஞ்சொற்களால் அவனை பேசினார். என் மனதில் இராமரை தவிர வேறு எவருக்கும் இடமில்லை எனக் கூறினார். இராவணன் சென்ற பிறகு அன்னை மிகவும் துன்பப்பட்டார். அச்சமயத்தில் நான் அரக்கர்களை தூக்க நிலைக்கு ஆழ்த்திவிட்டு, அன்னை முன்பு தோன்றினேன். பிறகு நான் தங்களின் பெயரை சொன்னவுடன் அன்னை மிகவும் மகிழ்ந்தார். பிறகு தங்களின் அடையாளமாக கொடுத்த கணையாழியை அன்னையிடம் கொடுத்தேன்.

🎆 கணையாழியை பார்த்த அன்னை, மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பிறகு அன்னை என்னிடம், இராமர் ஏன் இன்னும் என்னை தேடி வரவில்லை. நான் அவரின் வரவை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார். இராவணன் அவனின் ஆசைக்கு இணங்க எனக்கு ஒரு வருட காலம் அவகாசம் கொடுத்து உள்ளான். அதற்கு இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது. அதற்குள் இராமர் வந்து என்னை மீட்டுச் செல்ல வேண்டும். இல்லையேல் என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன் என்றார். பிறகு அன்னை அவரின் அடையாளமாக, இந்த சூடாமணியை தங்களிடம் கொடுக்கச் சொல்லி கொடுத்தார் என்றான். பிறகு அனுமன் சீதை கொடுத்த சூடாமணியை இராமரிடம் கொடுத்தான். சூடாமணியை பார்த்த இராமரின் கண்களில் கண்ணீர் பொங்கியது.

🎆 பிறகு இராமர் சூடாமணியை மார்போடு அணைத்துக் கொண்டார். சீதையை நினைத்து மிகவும் வருந்தினார். அப்போது அங்கதன் முதலிய வானர வீரர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் இராமரை தொழுது வணங்கினர். இராமன் அனுமனை பார்த்து, எவராலும் செய்ய முடியாத காரியத்தை நீ செய்துள்ளாய். கடலை கடப்பது என்பது மிகவும் எளிதான விஷயம் அல்ல. ஆனால் எவராலும் நுழைய முடியாத இலங்கைக்கு சென்று இராவணனின் காவலில் இருக்கும் சீதையை கண்டுபிடித்து வந்துள்ளாய் எனப் பாராட்டினார். அப்போது சுக்ரீவன், இனியும் நாம் நேரத்தை வீணடிக்கக்கூடாது. சீதை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாகிவிட்டது. நாம் புறப்படுவோம் என வானர சேனைகளுக்கு கட்டளையிட்டான். பிறகு அனைவரும் தென் திசை நோக்கி பயணம் செய்தனர்.

தொடரும்...

No comments:

Post a Comment