The Thirumangaimannan Vedupari ritual at the Srirangam Sri Ranganathaswamy Temple in Trichy, Tamil Nadu will be held on January 17, 2025 (After 3 pm).
கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமமே
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
பெரிய திருமொழி
பிறப்பும் பணியும்
திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் உள்ள திருவாலிக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் கள்ளர் குடியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார்.
தந்தை சோழ மன்னனின் படைத்தளபதியான ஆலிநாடான், தாயார் வல்லித்திரு. பெற்றோர் இட்ட பெயர் நீலன்.
ஆழ்வார்களில் சிலர் திருமாலின் ஆயுதங்களின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்ற வைணவக் கோட்பாட்டின்படி திருமாலின் சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாகப் பிறந்தார்.
இளமையில் கல்வி கற்று ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என நான்கு வகைக் கவிகளையும் பாடும் திறமை பெற்றார்.
நீலன் இளவயதிலேயே ஆயுதப்பயிற்சி பெற்று மற்போரில் தேர்ச்சி பெற்றார். ஆலிநாடார் மறைந்த பின் சோழமன்னன் அவரை திருமங்கை என்ற நாட்டின் குறுநில மன்னனாக்கினான். பரகாலன்(எதிரிகளுக்குக் காலன்) என அழைக்கப்பட்டார்.
நீலனின் காதல்
திருவெள்ளக்கோவிலில் ஒரு வைணவ வைத்தியனின் மகளாக வளர்ந்து வந்த குமுதவல்லியின் அழகைக் கண்டு, அவளை மணம் செய்ய விரும்பினார். குமுதவல்லியின் நிபந்தனைகளை ஏற்று பரகாலன் திருநறையூரில் (நாச்சியார்கோவில்) பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொண்டார்.
அங்கு கோவில் கொண்ட திருநறையூர் நம்பியே பரகாலனுக்கு குருவாக நல்வினைச்சடங்கு செய்து வைத்ததாகக் குருபரம்பரைக் கதை கூறுகிறது. குமுதவல்லியின் இரண்டாவது நிபந்தனையான ஒரு வருடம் 1008 வைணவ அடியவர்களுக்கு உணவளித்தலையும் நிறைவேற்றினார். அதனால் அரசனுக்குக் கப்பம் கட்ட முடியாமல் போகவே, அரசனால் சிறையில் அடைக்கப் பட்டார்.
புதையல் கிடைத்தது
பரகாலன் சிறையில் இருந்தபோது தேவப்பெருமாள் கனவில் தோன்றி காஞ்சியில் புதையல் இருப்பதைக்கூறி மறைந்தார். மன்னன் பரகாலனோடு தன் படையைக் காஞ்சிக்கு அனுப்பினார். வேகவதிக்கரையில் கிடைத்த பெரும்புதையலைக்கொண்டு, மன்னனின் கப்பத்தைக் கட்டி, சிறையிலிருந்து விடுதலை பெற்றார்.
திருமங்கையாழ்வார் அடியார் சேவையையே தனது குறிக்கோளாகக் கொண்டு தனக்குக் கிடைத்த செல்வத்தை அடியார் சேவையில் செலவிட்டார். செல்வம் தீரவே செல்வந்தர்களிடமிருந்து திருடியும், நீர்மேல்நடப்பான்', 'நிழலில்ஒதுங்குவான்', 'தாள்ஊதுவான்', 'தோலாவழக்கன்' ஆகிய நால்வரின் துணை கொண்டு வழிப்பறி செய்தும் தன் சேவையைத் தொடர்ந்தார். '
பெருமாள் பரகாலனைத் திருத்தி ஆட்கொள்ளல்
பெருமாள் பரகாலனை ஆட்கொள்ள வேண்டி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். பரகாலன் தன் துணை ஆட்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார். ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார்.
பரகாலன் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழட்டவில்லை. ஆழ்வாரும் மோதிரத்தை கழட்டும்படி கூறியதற்கு, என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் நாராயணன். அதேபோல் ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது நாராயணன் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார்.
வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார் மண்டியிட்டு பெருமாிடம் சரணடைந்தார்.
திருமங்கை ஆழ்வார் அவரது இறைப்பணி மற்றும் எந்நிலையிலும் கைவிடாத பக்தியும் எம்பெருமானின் மனதையும் வருடிய கள்வனாக நீங்கா புகழுடன் நிலைத்து போற்றப்படுகிறார்.
இந்நிகழ்ச்சி இன்றளவும் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி இராபத்து திருநாளில் 8 ஆம் நாள் நடத்திக் காண்பிக்கபடுகிறது.
வேடுபறி உற்சவம் :
சோழப் பேரரசில் படைத்தலைவராக இருந்த திருமங்கைமன்னன், திருவரங்கப் பெருமாளிடம் கொண்ட பக்தியால், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திருப்பணி செய்தார். போதுமான நிதியில்லாத நிலையில், வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டு திருப்பணியை தொடர்ந்தார். அவரை திருத்துவதற்காக மாறுவேடத்தில் வந்த பெருமாளையும் வழிமறித்தார் திருமங்கைமன்னன்.
அப்போது பெருமாள், திருமங்கைமன்னன் காதில் ‘ஓம் நமோ நாராயணா‘ என்ற மந்திரத்தை ஓதினார். இதன் மகிமையால் திருமங்கைமன்னன் மனம் திருந்தி திருமங்கையாழ்வாராக மாறினார். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் வேடுபறி நிகழ்ச்சி எனும் பெயரில் திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத இராப் பத்து திருவிழாவின் எட்டாம் நாள் மாலையில் பக்தர்களுக்கு நடத்திக் காண்பிக்கப்படுகிறது
திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-46.
1. திருப்புல்லாணி (அருள்மிகு கல்யாண ஜகன்னாதர் திருக்கோயில், திருப்புல்லாணி, ராமநாதபுரம்)
2. திருமயம் (அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை)
3. திருக்கரம்பனூர் (அருள்மிகு புரு÷ஷாத்தமன் திருக்கோயில், உத்தமர் கோயில், திருச்சி)
4. கண்டியூர் (அருள்மிகு ஹரசாப விமோசனர் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர்)
5. நைமிசாரண்யம் (அருள்மிகு தேவராஜர் திருக்கோயில், நைமிசாரண்யம், உ.பி.)
6. ஜோதிஷ்மட், திருப்பிரிதி(அருள்மிகு பரமபுருஷர் திருக்கோயில், நந்தப்பிரயாக், உ.பி.)
7. சிங்கவேள்குன்றம் (அருள்மிகு பிரகலாத வரதன்,நரசிம்மர் திருக்கோயில், அகோபிலம், கர்நூல், ஆந்திரா)
8. திருஎவ்வுள் (அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்)
9. தின்னனூர் (அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்)
10. திருத்தண்கா (அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
11. திருப்பரமேஸ்வர விண்ணகரம் (அருள்மிகு பரமபதநாதன் திருக்கோயில், திருப்பரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம்)
12. திருப்பவள வண்ணம் (அருள்மிகு பவள வண்ணர் திருக்கோயில், திருப்பவள வண்ணம், காஞ்சிபுரம்)
13. திரு நீரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
14. திரு காரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
15. திருக்கார் வானம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
16. திருக்கள்வனூர் (அருள்மிகு ஆதிவராக பெருமாள், கள்வப்பெருமாள் திருக்கோயில்கள், திருக்கள்வனூர், காமாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
17. நிலாத்திங்கள் துண்டான் (அருள்மிகு சந்திர சூடப் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்டான், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
18. திருப்புட்குழி (அருள்மிகு விஜய ராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம்)
19. திருவஹீந்தபுரம் (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர்)
20. காழிச்சீராம விண்ணகரம் (அருள்மிகு திரிவிக்ரமன் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம்)
21. திருக்காவளம்பாடி (அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், திருக்காவளம்பாடி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
22. திருவெள்ளக்குளம் (அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருவெள்ளக்குளம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)
23. கீழைச்சாலை (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருத்தேவனார் தோகை, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
24. திருப்பார்த்தன் பள்ளி (அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருப்பார்த்தன் பள்ளி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
25. திருமணிக்கூடம் (அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)
26. மணிமாடக் கோயில் (அருள்மிகு நாராயணன் திருக்கோயில், மணிமாடக் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
27. அரியமேய விண்ணகரம் (அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், அரியமேய விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
28. வன் புருத்÷ஷாத்தமம் (அருள்மிகு புருத்÷ஷாத்தமன் திருக்கோயில், வன் புருத்÷ஷாத்தமம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
29. திருத்தேற்றி அம்பலம் (அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தேற்றி அம்பலம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
30. வைகுந்த விண்ணகரம் (அருள்மிகு வைகுண்டநாதன் திருக்கோயில், வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
31. செம்பொன் சேய் கோயில், (அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில், செம்பொன்சேய் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
32. தலைசிங்க நான்மதியம் (அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம்)
33. இந்தளூர் (அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்)
34. தேரழுந்தூர் (அருள்மிகு தேவதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம்)
35. திருச்சிறுபுலியூர் (அருள்மிகு அருள் மாகடல் திருக்கோயில், திருச்சிறுபுலியூர், திருவாரூர்)
36. நாகை (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், நாகபட்டினம்)
37. திருக்கண்ணங்குடி (அருள்மிகு லேகநாதப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, திருவாரூர்)
38. திருக்கண்ண மங்கை (அருள்மிகு பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை, திருவாரூர்)
39. திருச்சேறை (அருள்மிகு சாரநாதன் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர்)
40. திருநறையூர் (அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர்)
41. திருவெள்ளியங்குடி (அருள்மிகு கோலவல்வில்லி ராமன் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்)
42. நந்திபுர விண்ணகரம் (அருள்மிகு ஜகந்நாதன் திருக்கோயில், நந்திபுர விண்ணகரம், நாதன் கோயில், தஞ்சாவூர்)
43. ஆதனூர் (அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர், தஞ்சாவூர்)
44. திருப்புள்ளபூதங்குடி (அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில், திருப்புள்ளபூதங்குடி, தஞ்சாவூர்)
45. திருக்கூடலூர் (அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர், தஞ்சாவூர்)
46. திருக்கோழி (அருள்மிகு அளகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி.
திருமங்கை ஆழ்வார் அருளியவை :
1. | பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்) |
2. | திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்) |
3. | திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்) |
4. | திரு எழு கூற்றிருக்கை ( 47 பாசுரம்) |
5. | சிறிய திருமடல் (155 பாசுரங்கள்) |
6. | பெரிய திருமடல் (297 பாசுரங்கள்). |
எனும் ஆறு திவ்வியப் பிரபந்தங்களில் 1351 பாசுரங்கள் அருளியுள்ளார். இவற்றுள் பல யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தி உள்ளார்.
திருமங்கை ஆழ்வாரின் தனிச்சிறப்புகள்
♦ பல்வேறு யாப்பு வடிவங்களைப் பக்தி இலக்கியத்திற்குப்
பயன்படுத்திக் கொண்டார்.
♦ நாட்டுப்புறப்பாடல் வகைகளைப் பின்பற்றி, பக்தி
நெறியைப் புலப்படுத்தினார்.
♦ சித்திரகவி படைத்துப் பக்தி உலகுக்கு வளம் சேர்த்தார்.
♦ தாண்டகங்கள் அருளி அவற்றுள்ளும் நாயகநாயகி
பாவத்தை அருளினார்.
♦ அகப்பொருள் துறையைப் பயன்படுத்திக் கொண்ட
ஆழ்வார் நாயகி நிலையில் இருந்து பாடியிருப்பவை
பக்தியின் முதிர்கனிகள் ஆகும்.
♦ மடல் துறைவழி என்னும் ஓர் புதிய இலக்கிய வகையைப் படைத்த
பெருமைக்கு உரியவர்.
♦ பக்தி இலக்கியத்தை, பக்தி இயக்க இலக்கியம் ஆக்கி,
தமிழ் வளத்துக்கும் இலக்கிய வகைப் பெருக்கத்திற்கும்
வித்திட்டவர்.
♦ இறைவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் தோற்றத்தில்
(அர்ச்சாவதாரம்) ஈடுபாடு கொண்டு ஏராளமான
பாசுரங்களைப் பக்திச் சுவை ததும்பப் பாடிய பெருமைக்கு உரியவர்.தொகுப்பு
வா ஸ்ரீராம்
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)
பெரம்பலூர் மாவட்டம்
செல் : 9786795104
No comments:
Post a Comment