Friday, June 14, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 11 !!!

 அருள்மிகு ஶ்ரீ விஜயராகவ பெருமாள் கோவில் திருபூட்குழி, காஞ்சிபுரம் 

திருப்புட்குழி  ஶ்ரீ விஜயராகவ பெருமாள் கோயில்  108 வைணவத் திவ்ய திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை - வேலூர் சாலையில் அமைந்துள்ளது.
நான்கு தோள்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருக்கும் திருக்கோலத்தில் இறைவன் விஜயராகவப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி மரகதவல்லி. இத்தலத் தீர்த்தம் ஜடாயு தீர்த்தம். விமானம் விஜயகோடி விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது.
இராமாயணத்தில் சடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி ( பறவை + குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது.

ஜடாயுவுக்கு மோட்சமளித்த இராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு சடங்குகள் செய்யும் பாவனையில் அமர்ந்துள்ளார். வலப்பக்கத்தே இருக்க வேண்டிய இறைவி இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே. இறைவன் திருவீது உலா செல்லும் போதெல்லாம் ஜடாயுவுக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி பெண்கள் இரவில் மடியில் வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாகும். எனவே இந்த இறைவி 'வறுத்த பயறு முளைவிக்கும் மரகதவல்லித் தாயார்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர் அத்வைத பாடங்களைப் பயின்றார். இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. இக்கோவிலில் அதிக அளவிற்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பாண்டிய மன்னர்களும் விஜயநகரப் பேரரசும் இத்தலத்திற்கு ஆற்றிய தொண்டினைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இக்கோவிலைப் ‘போரேற்றுப் பெருமாள் கோவில்’ என்றும் ‘சித்தன்னவேலி திருப்புட்குழி நாயனார் கோவில்’ என்றும் பலவாறு குறிப்பிடுகின்றன. இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதைச் செய்த தச்சன் இதுமாதிரி இனி யாருக்கும் செய்துகொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் துறந்தானாம். இவனது உறுதியையும் பக்தியையும் போற்றும் வகையில் பெருமாள் 8ஆம் உற்சவத்தன்று அத்தச்சனது வீதிக்கு எழுந்தருளுகிறார்.







No comments:

Post a Comment