Monday, April 29, 2024

IFHRMS செய்துள்ள Income Tax பிடித்தம் சாதனையா? வேதனையா?

நன்றி ✍🏼திரு செல்வ.ரஞ்சித் குமார் அவர்கள் 

தமிழ்நாடு அரசின் நிதித்துறை மூலம் நேரடிப் பயனடையும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் & அரசு சார் அலுவலகங்கள் என அனைத்திற்குமான நிதியளிப்பினை தனிப்பட்ட இணைய வழியில் மேற்கொள்ளும் பொருட்டு 10.01.2019 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதே IFHRMS (Integrated Financial and Human Resource Management System) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு.

மேலுமிது அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் பணியிட நிர்ணயம் மற்றும் பணிப்பதிவேடு உள்ளிட்டவற்றையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் SR அடிப்படையில் ஊதியப் பரிமாற்றம் செய்யும் அமைப்பு.

கருவூலத்தின் வழியே செயல்படும் இதற்கான மென்பொருளை WIPRO நிறுவனம் தயாரித்தளித்து பராமரித்து வருகிறது. இது தற்போது IFHRMS 2.0 எனும் அடுத்த கட்ட வளர்ச்சியடைந்து களஞ்சியம்-ஆக பெயர் மாற்றமடைந்துள்ளது.


`IFHRMSன் வேலை என்ன?`


அரசு ஊதியம் பெறும் ஊழியரின் பணிப்பதிவேட்டை இணைய வழியில் பராமரிப்பதும் அதனடிப்படையில் அவருக்குண்டான பணப்பலன்களை விடுவிப்பதுமே இதன் பணி.


இனி SR BOOK இருக்காதா?


இருக்கும். ஆனால் IFHRMSன் e-SR தான் அடிப்படையானது. ஓய்வுபெறும் ஊழியரது மொத்தப்பணிக்காலத் தணிக்கை இனி e-SR படியே நடைபெறும். 2022ற்குப் பிறகு SR BOOKல் உள்ளவை அனைத்துமே e-SRஆகவும் பதியப்பட வேண்டும். ஒருமுறை அரசின் ஊதியம் பெற்றபின் அரசின் எந்தத்துறைக்கு மாறுதலில் சென்றாலும் இந்த ஒரே e-SR தான் அந்தத் துறைக்கு மாற்றப்படும். ஒருமுறை பெற்ற IFHRMS ID எண்தான் ஓய்வு பெறும்வரை.



சரி. . . . IFHRMS 2.0?`


இதுவரை அலுவலகம் சார்ந்ததாக மட்டுமே இருந்தது, தற்போது ஊழியர்களின் நேரடிப் பங்களிப்புடையதாக மாற்றமடைந்துள்ளது. இனி Transfer ஆணை பெற்று மாறுதலில் செல்லும் போதும், EL, UEL, Loss of Pay உள்ளிட்ட பணிப்பதிவேடு சார்ந்த விடுப்புகள் என அனைத்து நடவடிக்கைகளுக்கும் சம்பந்தப்பட்ட ஊழியரே களஞ்சியம் APP வழியாகப் பதிவேற்றிட / விண்ணப்பித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. (அதன்பின் இவற்றிற்கு DDO ஒப்புதல் அளிப்பார்.)


ஆக, களஞ்சியம் Appனா இவ்ளோதானா?

அதான் இல்ல. அதுக்கும் மேல! வருமானவரி செலுத்தும் முறையை எளிமையாக்கி பைசா செலவில்லாமல் FORM16னை ஊழியரே வேண்டும்போது தரவிறக்கிக் கொள்ளும் வசதியும் வரும் ஆண்டுகளில் வரவுள்ளது. இது முழுமையடையும் போது, Income Tax தொடர்பான தேவையற்ற கூடுதல் செலவினங்களும், Noticeகளும் முற்றாகக் குறையக்கூடும்.

*"எது கொடும குறையுதா. ..? ஏப்ரல் மாசமே ஏகத்துக்கும் வரி போட்டுட்டாய்ங்களேனு கடுப்புல இருக்கோம். . . நீ வேற!"* என்பதே உங்க மைன்ட் வாய்ஸ்னா மிச்சத்தையும் வாசிச்சிடுங்க.


Income Tax in IFHRMS :

தற்போதைய வருமானவரி சட்டப்படி மாத ஊதியம் பெறுவோர் 3 மாதங்களுக்கு ஒருமுறை (Quarter) வரித்தாக்கல் செய்ய வேண்டும். செய்யாவிடில் ஊதியம் அனுமதிக்கும் அலுவலருக்குத் தண்டத்தொகை விதிக்கப்படும். அதே போன்று ஊதியப்பிடித்தமின்றி தனியாக செலான் போட்டு வரி கட்டக் கூடாது. ஆனால், இக்கூத்து ஆண்டுதோறும் ஜனவரி & பிப்ரவரியில் நடைபெற்று வருகிறது. சட்டப்படி இதற்கும் தண்டத்தொகை உண்டு.

இதனைத் தவிர்க்க, மாதாமாதம் ஊதியத்தில் பிடித்தால் தான் இறுதி மாதத்தில் தனியாகக் கட்ட வேண்டிய தேவையிருக்காது.

மாதாமாதம் பிடிக்கனும்னா ஊழியருக்கு ஓராண்டிற்கு எவ்வளவு வரி வரும்னு 99%  முன்பே தெரிய வேண்டும்.

வரி வருமா? வராதா? வந்தால் எவ்வளவு வரி வரும்? என்று முன்னரே தெரியனும்னா தனக்குப் பயனளிக்கக் கூடியது எந்த வரி விதிப்பு முறைனு (Old / New Regime) ஊழியர் முன்பே முடிவு செய்தாக வேண்டும் அல்லவா..  .?

அதற்காகத்தான் களஞ்சியம் Appல் ஊழியர்கள் தாங்களே Login செய்து தமக்கான வரி விதிப்பு முறையைத் தெரிவு செய்ய வேண்டுமென மார்ச் மாதத்திலேயே கருவூலத்துறை அறிவுறுத்தியிருந்தது. பல இடங்களில் இந்த அறிவுறுத்துதல் பொருட்படுத்தப்படாததால், ஏப்ரல் 12 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

New Regime தான் வருமான வரித்துறையின் Default முறை என்பதால் அதற்கு மாற்றாக Old Regimeஐ விரும்புவோர் மட்டும் இந்தக் காலகட்டத்தில் கட்டாயம் தங்களுக்கான வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.

Old Regime முறையைத் தேர்வு செய்யும் வசதியை அளித்த களஞ்சியம் Appஆனது Sec.10(14) தொடங்கி Sec.80U வரையிலான Old regime தொடர்பான சேமிப்புகள் / கழிவுகளை உள்ளீடு செய்யும் வசதியை முழுமையாக வழங்கவில்லை என்பதாலும், எதையெதையெல்லாம் உள்ளீடு செய்ய வேண்டுமென முறையாகத் தெரிவிக்காததாலும் ஏப்ரல் மாத ஊதியத்தில் வருமானவரி தொடர்பான குழப்பங்கள் பூதாகரமாகித் தற்போது பேசுபொருளாகியுள்ளது.


சரி தற்போதுவரை என்னதான் நடந்துள்ளது?`


ஊழியரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் அவர் தேர்வு செய்த வரி விதிப்பு முறைப்படி வரி கணக்கிடப்பட்டு அத்தொகை 11ஆல் வகுக்கப்பட்டு (Tax÷11) ஏப்ரல் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.


New Regimeஐப் பொறுத்தவரை எந்தவிதக் கழிவும் இல்லை என்பதால் அதிலுள்ளோருக்கு எவ்விதச் சிக்கலும் இல்லை.


Old Regime தேர்வு செய்தும் அதற்கான கழிவுகள் / சேமிப்புகளை உள்ளீடு செய்யாத நபர்களுக்கு மட்டும் ஏப்ரல் 26ல் வருமானவரி Delete செய்யப்பட்டுள்ளது. ஆனால், மே மாதத்தில் மீண்டும் வரி கணக்கிடப்பட்டு 10ஆல் வகுக்கப்பட்டு வரிப்பிடித்தம் (Tax÷10) தொடங்கும்.


இத்தேதிக்கு முன்னரே அலுவலகத்தில் Bill Generate செய்திருப்பின் அத்தகையோருக்கு வருமானவரி பிடித்தம் செய்யப்பட்டே ஊதியம் ஏறும். ஒருவேளை சேமிப்புகளை முறையாக உள்ளீடு செய்திருந்தால் அவருக்கு Old Regimeல் வரியே வராது என்றால் தற்போது பிடிக்கப்பட்ட தொகையை IT Return மூலமே பெற இயலும்.


இப்ப முடிவா என்னதான் செய்யனும்?

Old Regime தேர்வு செய்துள்ளோர் வீட்டு வாடகை தொடங்கி 80U வரையிலான சேமிப்புகள் / கழிவுகளில் தங்களுக்குரியவை எவைகளோ அதற்குரிய தோராயமான தொகையையாவது 01.05.2024 - 12.05.2024ற்குள் களஞ்சியம் App. / www.karuvoolam.tn.gov.in வழியாகவோ / அலுவலகம் மூலமாகவோ உள்ளீடு செய்ய வேண்டும்.


எதையெல்லாம் உள்ளிடத் தேவையில்லை?

ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் GPF, CPS, AISPF, NPS, FBF, FSF, SPF, NHIS, PLI, Professional Tax. & 80 G Donation உள்ளிட்டவை தானாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் இவற்றைத் தனியாக உள்ளிடத் தேவையில்லை.

அதேநேரம் LIC ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டாலும் அது Non Salary Deduction என்பதால் அதனை நாம் தனியே உள்ளீடு செய்தாக வேண்டும்.

சரியான தொகையை எப்போது கொடுக்கனும்?

தற்போதைய தகவல்படி டிசம்பர் மாதம் நாம் உள்ளிடும் தொகை சார்ந்த Original Billகளை தரவேற்ற வேண்டும் என்பதால், 01.12.2024 முதல் 12.12.2024ற்குள் சரியான தொகையை உள்ளிட வேண்டும்.


டிசம்பர்ல தொகையத் திருத்தலாம்னா இப்ப முடியாதா?

முடியும். ஒவ்வொரு மாதமும் 12ஆம் தேதிக்குள் நமது கழிவுகள் / சேமிப்புகளைத் தேவைப்படின் திருத்திக் கொள்ளலாம். அவ்வாறு திருத்தி உள்ளிடப்படும் தொகைக்கு ஏற்ப வரி கணக்கீடு செய்யப்படும்.


அப்ப மாசாமாசம் இதே வேலையா இருக்கனுமா?

தேவையில்லை. மாற்றம் செய்ய வேண்டுமென்றால் மட்டும் திருத்திக் கொள்ளலாம். இல்லையேல் முதல் முறை நாம் இந்நிதியாண்டிற்கான நமது மொத்த சேமிப்பாக / கழிவாக எவ்வளவு தொகை கொடுத்தோமோ அதை வைத்தே வரி கணக்கிடப்பட்டு பிடித்தம் செய்யப்படும்.


மாதந்தோறும் ஒரே வரிதான் பிடித்தம் செய்யப்படுமா?


பெறும் ஊதியத்தில் மாற்றம் நிகழாதவரை மாதாந்திர வரிப்பிடித்தத்திலும் மாற்றம் வராது.


இனி வரி விதிப்பு முறையை Old / New என மாற்ற முடியுமா?

ஒரு நிதியாண்டில் ஒருமுறை ஒரு வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்துவிட்டால் மற்றதிற்கு மாற முன்னர் (ஏப்ரல் 12 வரை) வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அந்த நடைமுறை இல்லை. இனி அவ்வாறு வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. (எனினும் மாற்ற வாய்ப்பு வந்தாலும் வரலாம்)


டிசம்பர்லயே Bill கொடுக்கனும்னா அடுத்தடுத்த மாசம் கட்டுறதுக்கு எப்படி Bill கொடுப்பது?


சரியான கேள்வி. பிப்ரவரி வரை நாம் LIC உள்ளிட்ட சேமிப்புகளைச் செலுத்துவோம். ஆனால், டிசம்பரிலேயே Original Bill Upload செய்ய வேண்டும் என்பதால் சிக்கல்தான். சங்கங்கள் சரியான இடத்தில் முறையான கேள்விகளை உரிய காலத்திற்குள் முன்வைக்கும் போது இது குறித்த தெளிவு உறுதியாகக் கிடைக்கும்.


சங்கங்கள் தான் இம்முறையே வேண்டாம் என்கிறதே! இம்முறை திரும்பப்பெறப்படுமா?


99.9% இந்நடைமுறை திரும்பப் பெறப்பட வாய்ப்பில்லை. Old Regime உள்ளீடு செய்வதில் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் தற்போது எழுந்துள்ள குழப்பங்களே சங்கங்கள் இவ்வாறு முறையிட வழிவகுத்துள்ளது.


நாம் முன்கூட்டியே சரியான வரிவிதிப்பு முறையை முடிவு செய்துவிட்டால், நமக்கான சரியான வருமானவரி தவணை முறையில் பிடித்தம் செய்யப்படப் போகிறது. அவ்வளவுதான். முதல் ஓரிரு மாதங்களுக்குக் கடினமானதாகத் தோன்றினாலும் அதன்பின் வழக்கமாகிவிடும். தவிர நாம் கட்ட வேண்டியதைத்தான் பிடித்தம்

செய்யப்போகிறது.


இந்நடைமுறை வேறு எங்காவது உள்ளதா? த.நா அரசு ஊழியர்கள் மட்டும்தான் கொடுமைப்படுத்தப்படுகின்றனரா?

மாதாந்திர ஊதியம் வழங்கும் நிலையான நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகள் என்று பல்வேறு இடங்களில் இவ்வாறு முன்கூட்டியே ஓராண்டிற்கான வரியைக் கணக்கிட்டு மாதாமாதம் பிடித்தம் செய்யும் நடைமுறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்துவிட்டன. தமிழ்நாடு அரசு தற்போதுதான் இம்முறையை நடைமுறைக்குக் கொண்டு வருகிறது. மற்ற மாதச் சம்பளக்காரர்களுக்கு இது கொடுமையாக இல்லாத போது நிரந்தர நேரடி வரி வருவாயாக தமது ஒரு மாத ஊதியத்தை முழுமையாக ஆண்டு தோறும் வழங்கி வரும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் இது கொடுமையான விடயமாக இருக்காது. தற்போது குழப்பங்களிருக்கலாம். விரைவில் அவையும் சீராகும்.


அப்டீனா. . . IFHRMSன் வரிப்பிடித்தம் சாதனையா? வேதனையா?


Old Regimeல் முறையாகத் தமது சேமிப்பு / கழிவுகளை முன்கூட்டிய திட்டமிட்டு உள்ளீடு செய்வோருக்கும், New Regimeல் உள்ளோருக்கும் இது சோதனை (Experiment) முயற்சிதான். இந்த ஆண்டு சோதனை முயற்சியானது திறம்பட நிறைவானால், அதன்பின் சாதனைதான் என்பது என்னுடைய கணிப்பு.

No comments:

Post a Comment