தென்னகத்தின் முக்திநாத் என்று அழைக்கப்படும்
ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோயில் புன்னைநல்லூர் தஞ்சாவூர்
புன்னைநல்லூர் ஶ்ரீ கோதண்டராமர் கோயில், நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
கி.பி.1739-1763 இல் இக்கோயில் கட்டப்பட்டது. நேபாள மன்னர் ஒருவரால் தஞ்சாவூர் மன்னருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட சாளக்கிராமக் கல்லினால் ஆன சிலைகள் கருவறையை அலங்கரிக்கின்றன. கோதண்டராமர், சீதா, லட்சுமணர், சுக்ரீவனரரோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
ராஜகோபுரம், பலி பீடம், கொடி மரம், திருச்சுற்று, முன்மண்டபம், கருவறை, விமானம் போன்ற அமைப்புகளுடன் அமைந்துள்ளது. திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி, ஆழ்வார் சன்னதி, தல மரமான புன்னை மரம், ஜயவீர ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவை உள்ளன.இக்கோயிலின் பிரகார சுற்றுச்சுவரில் இராமாயணக் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.
இத்தல கோதண்டராமரை துளசி மாலை சூட்டி வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்கிறார்கள். பித்ரு தோஷம் நிவர்த்தியாகும், குடும்ப பிரச்சினைகள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நவக்கிரக ரீதியான கஷ்டங்கள் தீரும் என்றும் சொல்லப்படுகிறது. தஞ்சாவூர் மாநகரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே
இராமவென்றிரண்டெழுத்தினால்”
(கம்பராமாயணம் – சிறப்புப் பாயிரம் 14)
No comments:
Post a Comment