Saturday, April 13, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி - 2 !!!

 நம்பியவர்களை வாழவைக்கும் திருமலைநம்பி கோவில்

திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி மற்றும் குறுங்குடிவல்லி நாச்சியார் கோவில்

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம்

 செய்யப்பட்டதாகும். இத்தலத்தினைப் பற்றி திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் என்றும் தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார்.

இங்கு நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார்.

மூலவர் நம்பிராயரின் வலது புறத்தில் அருகில் நின்றான் என்ற பெயரில் சிவபெருமான் சன்னதி அமைந்திருப்பது இத்தலத்தின் மிகச்சிறப்பம்சமாகும். 

வராக அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது அச்சந்தரும் வராக உருவத்தை குறுகச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி ஆனது.

நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பணகுடியிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் வள்ளியூரிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

நம்பாடுவான்’ என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தலத்துறையும் இறைவனை தரிசிக்க வருகிறார். வழியிலே பசியோடு இருந்த பிரம்ம இராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறுகிறான். நம்பாடுவான் நம்பியை தரிசித்து விட்டு வந்து பிரம்ம இராட்சசனுக்கு இறையாவதாக சொல்லி அவரிடமிருந்து விடை பெற்று வந்து, கோயிலின் வாயிலில் நின்று, நம்பியை தரிசிக்க முயலுகிற போது கோயிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்ட. நம்பியும் நம்பாடுவானுக்கு மறைக்காமல் இருக்க கொடிமரத்தை நகரச் சொல்லுகிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வகை செய்தது. இதனால் மெய் புளகித்த நம்பாடுவான்,.

நம்பியைத் தரிசித்த நம்பாடுவான், மகிழ்ச்சியாக பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அ;ப்போது வயதான பிராமணர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, அந்தக் காட்டில் ஒரு பிரம்ம இராட்சசன் வாழ்வதாகவும், அவன் அவ்வழியே செல்வோரை தின்று விடுவதாகவும் கூறினார். நம்பாடுவான் அந்த பிராமணரிடம் முன்பு பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் கூறி அதை நிறைவேற்றவே தான் அந்தக் காட்டுக்குள் செல்வதாகக் கூறினார். வயதான பிராமணரின் வாதங்கள் எடுபடாமல் போயிற்று.

இராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் இராட்சசனைக் கண்டு “ தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம்” என்றும் கூறினார். ஆனால் பிரம்ம இராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம இராட்சசனுக்குக் கொடுக்க, அதை உண்ட பிரம்ம இராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம இராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்றுத், தன் முற்பிறவு வடிவமான பிராமண வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

தனிச்சிறப்புகள் :

இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது..

திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்றுபரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்).

ஸ்ரீ பாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டுஉபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்

ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..

இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.






No comments:

Post a Comment