Wednesday, December 20, 2023

ஆன்மிகம் - திருநறையூர் கல் கருட சேவை !!!

பெரும்பாலான வைணவ ஆலயங்களில் மார்கழி மாதத்தில், முப்பது நாளும் திருப்பாவை உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். 


திரு அத்யயன உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கூடாரவல்லி போன்ற உற்சவங்கள் மார்கழி மாதத்தின் சிறப்பான உற்சவங்கள். 

ஆனால், சோழநாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருநறையூரில் மார்கழி பிரம்மோற்சவம் விசேஷமானது. 

அதில் நடைபெறும் நான்காம் நாள் கல் கருட சேவையும் அற்புதமானது.

திருநறையூர் சோழநாட்டு திவ்ய தேசங்களில் ஒன்று. 

ஆனால், இப்பொழுது திருநறையூர் என்றால் யாருக்கும் புரியாது. 

நாச்சியார்கோவில் என்றால் தான் புரியும். கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் போகும் பாதையில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. 

நிறைய பேருந்து வசதிகள் உண்டு . 

இந்த பகுதி கிருஷ்ணாரண்யம்  

என்று அழைக்கப்படுகிறது. 

அதன் துவக்கம் தான் திருநறையூர் நாச்சியார் கோவில்.

மூலவரர திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாச பெருமாள், வியூக வாசுதேவன் என்ற பல திருநாமங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். 

பெருமாளுக்கு வியூக நிலையில் ஐந்து திருநாமங்கள் உண்டு. 


சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் என இந்த ஐந்து உருவங்களிலும் தாயார் பெருமாளை மணந்து கொள்வது இங்கே சிறப்பு.

பெருமாள் தாயாரை திருமணம் செய்துகொள்ளும் நிலையில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்களுக்கு பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாகவும் இது இருக்கிறது. 

தினசரி திருமணக்கோலத்தில் உள்ள இந்தப் பெருமாளை பிரம்மா பூஜிக்கிறார். 

முக்தி தரும் 12 தலங்களில் இத்தலம் உயர்வானது.

தாயாருக்கு வஞ்சுளவல்லி என்று பெயர். 

அழகான தமிழில் நம்பிக்கை நாச்சியார் என்று அழைப்பார்கள். 

பெருமாள் அருள் கிடைக்க சற்றுத் தாமதித்தாலும் பக்தர்களின் நம்பிக்கைக்கு இந்த நாச்சியார் தான் துணை என்பதால் இவருக்கு நம்பிக்கை நாச்சியார் என்று பெயர்.

பெருமாள் எங்கே வரம் தராமல் போய் விடுவாரோ என்று பெருமாள் பக்கத்திலேயே திருமணக் கோலத்தில் நிற்கிறார்.

இங்கு ஐந்து தீர்த்தங்கள் உண்டு. 

கோயிலுக்குப் பக்கத்திலேயே மணிமுத்தாறு புஷ்கரணி என்று ஒரு அழகான தீர்த்தம் உண்டு. 

இது தவிர சங்கர்ஷண தீர்த்தம், பிரத்யும்ன தீர்த்தம், அநிருத்த தீர்த்தம், சாம்ப தீர்த்தம் என்ற தீர்த்தங்களும் உள்ளன. 

நாச்சியார் கோயில் என்ற பிரசித்தி பெற்றது என்றால் வைணவ மரபில் பெருமாளுக்கு முன்னொட்டாக தாயார்தான் இருப்பாள். 

தாயாரை முன்னிட்டே பெருமாளை நாம் வணங்க வேண்டும். 

திருமால் என்கின்ற பெருமாள் பெயரிலேயே திரு என்கிற மகாலட்சுமி பெயர் முன்னொட்டு இருக்கிறதல்லவா.


தாயாரின் அதுவும் நீளா தேவியின் பிரதான்யம் உள்ள கோயில். 

நாச்சியாருக்கு பிரதானம் கொடுத்த சில கோயில்களில் திருநறையூர் என்ற நாச்சியார் கோயில் ஒன்று. 

மற்றொன்று உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். அதையும் நாச்சியார் கோயில் என்று தான் அழைப்பார்கள். 

மூன்றாவதாக திருச்சிக்கு அருகே திருவெள்ளறை. அங்கேயும் நாச்சியாருக்கு சிறப்பு. 

எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு பிரதானம். 

அதனை நாச்சியார் திருமாளிகை என்று அழைப்பார்கள். 

திரு நறையூர்க் கோயிலில் தாயாருக்குதான் முதலில் அபிஷேகம், நைவேத்தியம், 

புறப்பாடு எல்லாம்.

பிறகுதான் பெருமாளுக்கே! 

இந்த நாச்சியார் கோயிலில் மேதாவி முனிவரின் வளர்ப்பு மகளாகப் பிறந்தவள் மகாலட்சுமி. 

மேதாவி முனிவர்  திருமகளே தனக்கு மகளாக வாய்க்க வேண்டும் என்று மணிமுத்தாறு நதிக்கரையில் தவமிருந்தார். 

இவர் தவத்தை மெச்சிய மகாலட்சுமி தாயார் பங்குனி மாதம் வெள்ளிக்கிழமை 

உத்திர நாளில் இந்த ஆற்றங்கரையின் இருந்த வஞ்சுள மரத்திற்கு அருகில் குழந்தையாக அவதரித்தாள்.  

அந்தக் குழந்தையை தம்முடைய குடிலுக்கு எடுத்துச் சென்று மேதாவி முனிவர் வஞ்சுளவல்லி என்று பெயரிட்டு வளர்த்தார்.

இந்த பெருமாள், திருமங்கை ஆழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த ஆச்சாரியர் என்று கருதப்படுகிறார். 

அதனால்தான் திருமங்கையாழ்வார் 

மற்ற எந்த திவ்ய தேசங்களுக்கும் இல்லாமல் திருநறையூர் என்கின்ற நாச்சியார் கோவிலுக்கு 110 பாசுரங்களை அருளிச் செய்திருக்கிறார். 

தை அமாவாசை கருட சேவை உற்சவத்தின் பொழுது முதன் முதலில் இவர் திருநறையூர் நம்பி மங்களாசாசனம் என்று இந்த பெருமாளுக்கு தான் மங்களாசாசனம் செய்வார்.

இந்தப் பெருமாளைப் போல அழகான திருமேனியை வேறு எந்த திவ்ய தேசத்திலும் சேவிக்க முடியாது. 

இந்த அழகு திருமேனியில் தான் மங்கை மன்னன் ஆழங்கால் பட்டு இவரிடம் தனக்கு ஆச்சாரியராக இருக்கும்படி பிரார்த்தித்தார். 

அந்த பிரார்த்தனையும் நிறைவேறியது. 

இத்தலத்தின் மீது பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் நம்பி மேகவிடு தூது என்னும் நூலும், வித்வான் நரசிம்மாச்சாரியார் திருநறையூர் இரட்டை மணி மாலை என்னும் தமிழ் நூலும்  செய்திருக்கிறார்கள்.


சோழநாட்டு திவ்ய தேசங்களில் பெரும்பாலும் சைவ வைணவத் தலங்கள் மாடக்கோயில் அமைப்பில் இருக்கும். 

இத்தலமும் மாடக் கோயில் அமைப்பில் அமைந்துள்ளது. 

அதனால் ஒரு சிறு குன்றின் மீது பெருமாள் கருவறை இருப்பது போல காட்சி தருவார். 

வீதியில் இருந்து பார்த்தால் மிக உயரத்தில் பெருமாள் காட்சி தருவார். 

இத்தலத்தில் சிறிதும் பெரியதுமான 16 கோபுரங்கள் உண்டு. 

ராஜகோபுரம் ஐந்து அடுக்குகளில் எழுபத்தி ஆறு ஆடி உயரம் கொண்டது. 

பெரும்பாலான கருவறை விமானங்கள் வட்டவடிவில் கூம்பு போல் இருக்கும்.

ஆனால் இத்திருக்கோயிலின் கருவறை மேல் உள்ள விமானம் சிறு கோபுரம் போலவே காட்சி தரும். 

இது ஹேம விமானம், 

சீனிவாச விமானம் என்று போற்றப்படுகிறது. 

இதேபோல கருவறை விமான அமைப்பு உள்ள வேறொரு தலம் திருவல்லிக்கேணி.

சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை கட்டிய கோச்செங்கட் சோழ மன்னன் பெருமாளிடம் மிகுந்த அன்பு கொண்டு இத்திருக்கோயிலை கட்டினான். 

அறுபத்தி மூன்று நாயன்மார்களில் சோழ நாயனார் என்னும் பெயருடைய கொச்செங்கணான் தன்னுடைய பகையை அழிப்பதற்காக மணிமுத்தாறு நதியில் நீராடி பெருமாளை வணங்கி வாளைப் பெற்றான். 

அவன் இக்கோயிலுக்குச்  செய்த திருப்பணிகள் அதிகம். 

பெருமாளுக்கு தங்கத்தால் விமானம் அமைத்துக் கொடுத்தான்.

செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

 என்றும் தெய்வ வாள் வளம் கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

என்றும் திருமங்கை ஆழ்வார், இந்நிகழ்வுகளைப் பாடி இருக்கிறார்.

திருமங்கை ஆழ்வார் 

பல திருப்பணிகளைச் செய்தார். 

திருவரங்கத்திற்கு கற்களால் மதில் கட்டிய திருமங்கையாழ்வார், இப்பெருமான் மீது சொற்களால் மடல் கட்டினார் .

சிறிய திருமடல் இப்பெருமான் மீது இயற்றப்பட்டது. 

பெருமாள் பெயர்களிலேயே நம்பி என்ற  சிறப்பு திருநாம இணைப்போடு அமைந்த பெருமாள் இரண்டு மூன்று திவ்யதேசங்களில் உள்ளனர். 

அதில் இவருக்கு திருநறையூர் நம்பி என்று பெயர்.  

நம்பி என்றால் பூரணமான குணங்களை உடையவன். நற்குணங்களால் நிறைந்து இருப்பவன் என்று பொருள். 

நம்பி என்ற சொல்லில் திருமங்கை ஆழ்வாருக்கு ஈடுபாடு அதிகம்.

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை

இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்

கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால்

நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே

- என்று திரும்பத் திரும்ப “நம்பி’ என்ற சொல்லை பயன்படுத்திய பாசுரம் இது. 

அவரை முழுதுமாக நம்பியவரல்லவா...

நம்மையும் அவரை நம்பிக்கையோடு தரிசனம் செய்யச் சொல்கிறார்.

நம்பி நாமத்தை மேவிச்   சொல்ல

வல்லார் பாவம் நில்லா வீயுமே

என்று வழி காட்டுகின்றார்.

திருநறையூர் என்றால் கருடசேவை மிகவும் விசேஷம். 

மற்ற திவ்யதேசங்களில் கருடசேவை விசேஷம் இல்லையா? என்று கேட்கலாம். 

ஆனால், கருடனுக்கு பிரதானம் கொடுத்து அவரையே ஒரு வரம் தரும் வள்ளலாக நம்பி  பக்தர்கள் எல்லாரும் வந்து சேவித்து பலன் பெரும் சிறப்புத்தலம் இது. 

இந்த திவ்ய தேசத்தில் மார்கழி,பங்குனி என இரண்டு முறை கல்கருட சேவை புறப்பாடு உண்டு.

முதலில் கருடன் புறப்பட்டு தரிசனம் தருவார். 

அதற்குப் பிறகு அதன் மேல் பெருமாள் ஆரோகணித்து வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 

இப்படிப்பட்ட கருட சேவையை தான் திருநாறையூரில் கண்டேன் என்பதை மிக அற்புதமாக பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.

தூவாய புள்ளூர்ந்துவந்து துறை வேழம்

மூவாமை நல்கிமுதலை துணித்தானை

தேவாதி தேவனைச்செங்கமலக் கண்ணானை

நாவாய் உளானைநறையூரில் கண்டேனே

- என்பது அவர் கண்ட கல் கருட சேவை பாசுரம்.

ஒருகாலத்தில் கஜேந்திரன் என்ற யானை முதலையிடம்  அகப்பட்டுக் கொண்டு கதறியது கண்டு,தன்னுடைய பக்தன் கதறுகிறான் என்று நொடியும் தாமதிக்காது, மிக வேகமாக கருடன் மீது வந்து காட்சி தந்தாயே, தேவாதி தேவனே, அதே காட்சியை இப்பொழுது (கல் கருட சேவையில்) நான் திருநறையூரில் கண்டேன் என்று உணர்ச்சி வெள்ளமிடப் பாடுகின்றார் திருமங்கை ஆழ்வார்.

பட்சிராஜன் என்ற பெயரோடு இத்தலத்தில் உள்ள   கல்கருடன் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒன்பது நாமங்களுடன் காட்சி கொடுக்கிறார். 

இவர் பெரிய வரப்ரசாதி. ஏழு வாரங்கள் தொடர்ந்து இவரை வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் நினைத்த காரியம் நடக்கும். 

கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது.

இந்த கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகு சட்டம், முதலியவற்றை வாழைச்சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றி இவருக்கு பூஜை செய்தால் நாகதோஷம் நீங்கும். 

திருமணத்தடை விலகும். நல்வாழ்வு கிடைக்கும். 

வியாழக்கிழமை தோறும்  பயத்தம் பருப்புடன் வெல்லம், ஏலக்காய் கலந்து செய்யப்படும் அமுதக் கலசம் என்ற பிரத்யேக நைவேத்யம் செய்யப்படுகிறது.

கல்கருடன் சந்நதியிலிருந்து கருடனை 4 பேர் பாதம் தாங்கி தூக்கி வருவார்கள். 

படிக்கட்டுகளிலிருந்து தூக்கி வரப்படும் கருடாழ்வாரை நீண்ட உருட்டு மரங்களில் கம்பி வளையத்திற்குள் செருகப்பட்டு பதினாறுபேர் சுமந்து வருவார்கள். 

இப்படி 32, பிறகு 64 பேர் கருடனைச் சுமந்து வருவார்கள். 

கோயிலுக்குத் திரும்பும் பொழுது இதே வரிசையில் சுமப்பவர்கள் குறைந்து கடைசியாக நான்குபேர் சுமந்து சந்நதியை அடைவார்கள்.

இக்கோவில் நந்தவனத்தில் இரண்டு கருடப்  பறவைகள்  வசித்து வந்தன. 

தினமும் கோவில் பூஜை நேரத்தில் இக்கருடன்கள்  வந்து விடும். 

பெருமாள், தாயார், கருடன் பூஜை முடியும் வரை கோவிலிலேயே பிராகாரத்தின் சுவர்கள் மீது அமர்ந்திருக்கும். 

பூஜை முடிந்தவுடன் சென்றுவிடும். 

1999 ஜனவரி 18ஆம் தேதி காலை பூஜைக்கு இவ்விரு பட்சிகள் வரவில்லை.

அர்ச்சகர்கள் பக்தர்கள் கருட பட்சிகளை தேடிச் சென்ற பொழுது கோவில் தல விருட்சமான மகிழ மரத்திற்கு கீழே இவ்விரு கருட பட்சிகளும் ஒன்றை ஒன்று அணைத்தவாறு பகவானுக்கு உகந்த தினமான சிரவண தினத்தன்று மோட்சம் அடைந்தன. 

இதனைச் சிறப்பிக்க தனி சந்நதி வைத்து வழிபட்டு வருகின்றனர். 




No comments:

Post a Comment