இராவணன் தொடர் 72
அனுமனின் கவலை!
🐒 அனுமன், நிச்சயம் இராவணன் சீதையை இங்கே தான் வைத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு மண்டோதரியின் மாளிகையை எட்டி பார்த்தான். அங்கு பெண்கள் மலரடி வருட, பெண்கள் மெல்லிய காற்று வீச, இன்னிசை ஒலிய, அழகிய பெண் தூங்கி கொண்டிருந்தாள். இப்படி சகல வசதிகளுடன் உறங்குவது யார்? என நினைத்தான், அனுமன். இவள் தான் சீதையோ என நினைத்து அப்பெண்ணை உற்று நோக்கினான். இவளை பார்த்தால் மானுட பெண்ணாக தெரியவில்லை. இவளின் முகத்தில் இராமரை பிரிந்த சோகம் தெரியவில்லை. அப்படியென்றால் நிச்சயம் இவள் சீதையாக இருக்க முடியாது என உறுதி செய்து கொண்டான்.
🐒 பிறகு அங்கிருந்து சீதையை தேடிச் சென்றான். அனுமன், இராவணனுடைய மாளிகையை அடைந்தான். அனுமன் இராவணனின் மாளிகையில் அடியெடுத்து வைத்ததும் இலங்கை நகரமே நடுங்கியது. அனுமன் இராவணனுடைய அறைக்குள் புகுந்து அவனை உற்று நோக்கினான். அவனுக்கு பத்து தலைகள், இருபது தோள்கள், இருபது கைகளும் இருப்பதை பார்த்து இவன் தான் இராவணன் என்பதை உறுதி செய்து கொண்டான். கும்பகர்ணனை இராவணன் என்று நினைத்து, அவன் மீது கோபங்கொண்ட அனுமன், இராவணனை பார்த்தவுடன், இவனால் இந்நகரம் அழிய போகிறது என்பதை நினைத்து வருந்தினான்.
🐒 பிறகு அனுமன் இவனை இப்படியே கொன்றுவிட்டால் என்ன? என நினைத்தான். இவனை நான் கொன்றுவிட்டால், நான் இராமனின் அடியேன் என்ற பெருமை அழிந்துவிடும். பிறகு அனுமன், நான் இங்கு சீதையை தேடி வந்துள்ளேன். சீதையை கண்டுபிடிக்காமல் இவனை கொல்வது நியாயமல்ல என தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டான். கோபம் தணிந்த அனுமன், இவனுடன் பெண்கள் எவரும் இல்லை. இவன் தனிமையில் உள்ளான். அப்படியென்றால் இவன் சீதையை எங்கே வைத்து இருப்பான். இவன் தனிமையில் இருக்கிறான் என்றால் சீதை நல்ல நிலையில் இருக்கிறாள் என்பது தெரிகிறது என நினைத்துக் கொண்டான்.
🐒 பிறகு அனுமன், சீதையை அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு இராவணனின் மாளிகையை விட்டு வெளியே வந்தான். நான் அனைத்து இடத்திலும் சீதையை தேடிவிட்டேன். இன்னும் என்னால் சீதையை கண்டுபிடிக்க முடியவில்லை என வருந்தினான். சீதையை நான் இனி எங்கு சென்று தேடுவேன். ஒருவேளை இராவணன் சீதையை, கொன்றுவிட்டானோ இல்லை வேறு எங்கயாவது சிறை வைத்திருப்பானோ என எண்ணினான். நான் நிச்சயம் சீதையை கண்டுபிடித்துவிட்டு வருவேன் என இராமரும், சுக்ரீவனும், அங்கதனும், ஜாம்பவானும், நளனும் மற்றும் மற்ற வானர வீரர்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
🐒 சுக்ரீவன் கொடுத்த ஒரு மாத காலமும் முடிந்துவிட்டது. நான் இன்னும் சீதையை கண்டுபிடிக்கவில்லை. நான் எவ்வாறு இராமரின் முகத்தில் விழிப்பேன். சீதையை தேடி கண்டுபிடிக்க முடியாமல் மகேந்திர மலையில் உயிரை மாய்த்துக் கொள்ள இருந்த வானர வீரர்களை, அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு சீதையை தேடி வந்தேனே. நான் தேடி வந்த காரியம் முடியவில்லையே என வருந்தினான். இனிமேல் நான் உயிருடன் இருந்து என்ன பயன்? நான் இராவணனையும் மற்ற அரக்கர்களையும் கொன்றுவிட்டு நானும் இங்கேயே என் உயிரை மாய்த்து கொள்கிறேன் என வருந்தினான்.
தேடல் தொடரும்...
No comments:
Post a Comment