Thursday, September 21, 2023

RAMAYANAM PART 68

 இராமாயணம் தொடர் 68

அனுமன் இலங்கையை நோக்கி செல்லுதல்!

🔆 ஜாம்பவான் அனுமனை பார்த்து, மாருதி என்ற பெயர் கொண்ட அனுமனே! பல சாஸ்திரங்கள் கற்றவனே, மிக்க வலிமையுடையவனே, கடமை தவறாத மாவீரனே, பணிவுமிக்கவனே, செயலை ஆராய்ந்து செய்யும் ஆற்றல் உடையவனே, நீதி நெறியில் நிலைத்து இருப்பவனே, வாய்மை தவறாதவனே, பெண்ணாசை இல்லாத பிரம்மச்சாரியே, தன்னை எதிர்ப்பவரை வீழ்த்தும் ஆற்றல் உடையவனே, தக்க சமயத்தில் உருவத்தை மாற்றும் ஆற்றல் உடையவனே, இராமர் மீது மிக்க அன்பு உடையவனே, கடலை தாண்டி சீதையை கண்டுபிடிக்கும் ஆற்றல் உன்னிடத்தில் உண்டு என்று கூறினான். இப்படி ஜாம்பவான் அனுமனின் பெருமையை கூறும்போது, அனுமன் தன் தலையை குனிந்து புன்னகைத்தான். பிறகு அனுமன், இராமரின் அருளும், தங்களின் ஆசியும் இருந்தால் ஓர் பறவை போல் கடலை கடந்து செல்வேன் என்றான். நான் இலங்கை சென்று சீதையை கண்டு மீண்டும் திரும்பி வரும்வரை இங்கேயே தங்கி இருங்கள் என்றான்.

🔆 அனுமன் அனைவரிடமும் விடைபெற்று மகேந்திர மலை உச்சிக்கு சென்றான். அங்கு அனுமன் தன் விஸ்வரூபத்தை எடுத்தான். பிறகு அனுமன் இலங்கை எங்கு உள்ளது என்று அங்கிருந்து கண்டுபிடித்து கொண்டான். அனுமன் தன் இரண்டு கால்களை மலையில் ஊன்றி இராமா என்று உச்சரித்தப்படி வானில் பறந்தான். அனுமன் மலையில் ஊன்றி பறந்த போது அம்மலை பூமிக்கு அடியில் போகும் படியான அதிர்வு ஏற்பட்டது. அனுமனுக்கு தேவர்களும், முனிவர்களும் பூக்களை தூவி, வீரத்தில் வலிமை உடையவனே! சென்று, வென்று வா! என வாழ்த்தி அனுப்பினர். அனுமன் வானத்தில் மிக வேகமாக பறந்தான். அனுமன் கடலை தாண்டி பறக்கும் போது சமுத்திரராஜன் அனுமனை பார்த்து, இவன் ராஜ குலத்தில் பிறந்த இராமனிற்காக வேகமாக பறந்து சென்று கொண்டு இருப்பதை அறிந்த சமுத்திரராஜன், அனுமனை உபசரித்து அனுப்புவது தான் எனது கடமை என நினைத்தான்.

🔆 அதனால் அவன் தன்னுள் அடங்கி இருந்த மைந்நாகம் என்னும் மலையை எழும்பி அனுமனை தடுத்து தன்னில் தங்கி விட்டு போகும்படி சொல்லி அனுப்பினான். பிறகு மைந்நாகம் வானளவிற்கு எழும்பி அனுமனை தடுத்தது. இந்த மலை தன் வழியில் குறுக்கே வருவதை அறிந்த அனுமன் அம்மலையினும் மேலே பறந்தான். உடனே மைந்நாகம் அனுமனிடம், தன் இடத்தில் சற்று தங்கிவிட்டு செல்லுமாறு வேண்டியது. இதை சமுத்திர ராஜாவின் வேண்டுகோளின் படி கேட்பதாகவும் கூறியது. அதற்கு அனுமன் தங்களின் வேண்டுகோள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் நான் இராமனின் காரியத்திற்கு விரைந்து செல்ல வேண்டும். தங்கள் அன்புக்கு மிக்க நன்றி என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக பறந்து சென்றான். பிறகு தேவர்களும், முனிவர்களும் பாம்புகளுக்கு தாயாகிய சுரசையை பார்த்து, நாம் அனுமனின் பலத்தை அறிய வேண்டும்.

🔆 ஆதலால் நீ அனுமனுக்கு தடையாக சென்று இடையூறு செய். அவன் உன்னை எப்படி வெல்ல போகிறான் என்பதை பார்ப்போம் என்றனர். சுரசை தேவர்களின் வேண்டுகோளின்படி அரக்கி உருவம் எடுத்து அனுமன் முன் தோன்றினாள். சுரசை அனுமனை பார்த்து, வானரமே, இன்று என் பசிக்கு நீ உணவாகப் போகிறாய் என்றாள். அனுமன் அவளை வணங்கி, அம்மா! நான் இராமனின் காரியத்திற்காக விரைந்து செல்ல வேண்டும். இப்பொழுது தாங்கள் தடை செய்யலாமா? பெண்ணாகிய நீங்கள் பசியில் வேதனைபடுவதை கண்டால் என் மனம் துன்பப்படுகிறது. நான் இராமனின் காரியத்தை முடித்துவிட்டு வருகிறேன். அப்பொழுது தாங்கள் என்னை தாராளமாக உண்டு கொள்ளலாம் என்றான்.

தேடல் தொடரும்...

No comments:

Post a Comment