Tuesday, September 19, 2023

RAMAYANAM PART 66

 இராமாயணம் தொடர் 66

சம்பாதியின் சோகம்!...

💠 அங்கதன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த ஜாம்பவான், வானர இளவரசனே! வீரனே! உன் கருத்துக்கள் சிறப்பானது. நீ உன் உயிரை மாய்த்துக் கொண்ட பின் நாங்கள் மட்டும் உயிரோடு இருப்போமா என்ன? இல்லை, கிஷ்கிந்தைக்கு சென்று நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி இராமனின் திருவடியிலும், சுக்ரீவனின் திருவடியிலும் வீழ்ந்து உயிர் வாழ்வோம் என நினைத்தாயா? நாங்கள் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன பயன்? ஆதலால் நாங்களும் எங்கள் உயிரை மாய்த்து கொள்வோம். ஆனால் நீ எங்களுக்கு ஓர் சத்தியம் செய்ய வேண்டும். நாங்கள் இறந்த பின் நீ உயிர் வாழ வேண்டும். இது எங்களின் விருப்பம் ஆகும் என்றான்.

💠 அதற்கு அங்கதன், நீங்கள் எல்லோரும் மாண்டு போன பின் நான் உயிருடன் நாடு திரும்புவது நன்றல்ல. அதனால் நாம் அனைவரும் உயிரை துறப்போம் என்றான். இதைக்கேட்ட ஜாம்பவான், அங்கதனே! நீ அரச பதவிக்கு உரியவன். ஆதலால் தான் உன்னை உயிருடன் நாடு திரும்ப சொன்னேன் என்று கூறினான். இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த அனுமன், நாம் அனைத்து உலங்களிலும் இன்னும் சீதையை தேடி முடிக்கவில்லை. சீதையை தேடி கண்டுபிடித்து இராமரிடம் ஒப்படைப்பதுதான் நம் கடமையும், வீரமும் ஆகும். நாம் சுக்ரீவன் குறித்த காலத்திற்குள் சீதையை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. குறித்த காலத்திற்குள் வராததால் நாம் இன்னும் சீதையை தேடி கண்டுபிடிக்கவில்லை என்பதை சுக்ரீவன் புரிந்து கொண்டிருப்பான். ஆதலால் நாம் சீதையை தேடிச் செல்வது தான் சிறந்தது.

💠 சீதையை இராவணன் கவர்ந்து சென்றபோது, ஜடாயு இராவணனிடம் போரிட்டு உயிர் துறந்தார். அதுபோல நாம் சீதையை தேடும்போது உயிர் துறக்க நேரிட்டால் அது தான் சிறப்பு. அதை விட்டுவிட்டு சீதையை கண்டுபிடிக்கவில்லை என்று உயிரை மாய்த்து கொள்வது தான் ஓர் வீரனின் சிறப்பா? என்றான். இப்படி அனுமன் பேசிக் கொண்டிருக்கும் போது, சற்று தொலைவில் ஓர் மலையில் அமர்ந்திருந்த சம்பாதி என்ற கழுகின் அரசன், தம் தம்பி ஜடாயு இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான். ஜடாயுவை நினைத்து புலம்பி அழுதான்.

💠 சம்பாதியும் ஜடாயுவும், சிறு வயதில் தாம் பெற்ற அபார சக்தியை அனுபவித்துக் கொண்டு இருந்தனர். அப்படி ஒரு நாள் இருவரும் ஆகாயத்தில் போட்டி போட்டுக் கொண்டு உயரப் பறந்து சென்று கொண்டு இருந்தனர். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்து கொண்டு இருந்தது. ஜடாயுவை வெப்பம் கொளுத்தி விடும் போல் இருந்தது. அப்போது சம்பாதி தன் சிறகுகளை விரித்து ஜடாயுவைக் காப்பற்றினான். ஆனால் சம்பாதியின் சிறகு எரிந்து போனது. சம்பாதி பறக்க முடியாமல் கீழே மலை மேல் விழுந்தான். அன்றிலிருந்து சம்பாதி பறக்க முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான்.

💠 பிறகு சம்பாதி, வானர வீரர்களை நோக்கி வந்தான். அவர்களிடம் சம்பாதி கண்ணீர் மல்க, என் தம்பி ஜடாயு இறந்து விட்டானா? எப்படி இறந்தான்? என்று கேட்டான். அப்போது அங்கு இருந்த வானர வீரர்கள், சம்பாதியை பார்த்து பயந்து ஓடினர். ஆனால் அனுமன் சம்பாதியை எதிர்கொண்டு, நீ யார்? வஞ்சகம் செய்யும் அரக்கனா? உயிர் மேல் ஆசை இருந்தால் இங்கிருந்து தப்பித்து ஓடி விடு என்றான். ஆனால் சம்பாதி, அனுமனின் சொற்களை கேட்டு கோபப்படாமல் ஜடாயு இறந்த சோகத்தால் அழுது கொண்டிருந்தான். மறுபடியும் சம்பாதி, ஜடாயு எப்படி இறந்தான்? ஜடாயுவை கொன்றவர் யார் எனக் கேட்டான். அதற்கு அனுமன், முதலில் நீ யார் என்பதை சொன்னால் தான் நான் ஜடாயுவைக் கொன்றவர் யார் எனச் சொல்வேன் என்றான். சம்பாதி, ஜடாயு என் உடன் பிறந்த சகோதரன். அவனது பிரிவால் நான் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறேன் என்றான்.

தேடல் தொடரும்...

No comments:

Post a Comment