இராமாயணம் தொடர் 60
இலட்சுமணன் கிஷ்கிந்தை நோக்கி வருதல்!
💐 இராமரின் கட்டளைப்படி இலட்சுமணர் கிஷ்கிந்தை நோக்கி புறப்பட்டார். மிகுந்த கோபத்துடன், ஒரு சிங்கம் போல் இலட்சுமணர் வருவதைக் கண்ட வானரங்கள், உடனே சென்று அங்கதனிடம் இலட்சுமணர் மிகுந்த கோபத்துடன் வருவதைக் கூறினர். செய்தியை அறிந்த அங்கதன், சுக்ரீவனை காண மாளிகைக்கு சென்றான். அங்கு மாளிகையில் சுக்ரீவன், மதுக்கு மயங்கி, அவனை சுற்றி பெண்கள் புடைசூழ மயங்கி இருந்தான். அங்கதன், தந்தையே! தங்களை தேடி இலட்சுமணர் மிகுந்த கோபத்துடன் வந்துக் கொண்டு இருக்கிறார். தாங்கள் மயக்கத்தை கலைத்து எழுங்கள் எனக் சுக்ரீவனை பார்த்து கூறினான். அங்கதனின் வார்த்தைகள் சுக்ரீவனின் காதில் விழவில்லை. தன் நிலைமை மோசமாகி கொண்டு இருப்பதை கூட அறியாமல் சுக்ரீவன் மயங்கி இருந்தான்.
💐 பிறகு அங்கதன், இனி சித்தப்பாவிடம் பேசி ஒரு பயனும் இல்லை. அனுமனிடம் சென்று கூறுவோம் என நினைத்து அனுமனிடம் சென்றான். அனுமனிடம், இலட்சுமணன் மிகுந்த கோபத்துடன் வந்துக் கொண்டு இருக்கிறார். சித்தப்பாவிடம் கூறலாம் என சென்றால் அங்கு அவர் மகளிரின் அழகிலும், மது போதையிலும் மயங்கி உள்ளார். நமக்கு அழிவு காலம் வந்துவிட்டது. இதிலிருந்து விடுபட ஏதேனும் வழி உள்ளதா என யோசனைக் கேட்டான். ஆனால் அனுமன், கோபத்தில் வந்து கொண்டிருக்கும் இலட்சுமணனை யாராலும் சமாதானப்படுத்த முடியாது என தன் மதி நுட்பத்தால் அறிந்துக் கொண்டான். அனுமன் அங்கதனிடம், அங்கதா! இதற்கு ஒரே வழி உன் தாய் தாரையிடம் சென்று உதவி கேட்பது தான் என்றான்.
💐 பிறகு இருவரும் சென்று கூறி தாரையின் காலில் விழுந்து வணங்கினர். அங்கதன், அம்மா! இலட்சுமணர் பெரும் கோபமாக வந்துக் கொண்டு இருக்கிறார். சித்தப்பா மதுவில் மயங்கி உள்ளார். இந்நிலைமையில் தாங்கள் தான் உதவி செய்து அனைவரையும் காப்பாற்ற வேண்டும். தாங்கள் தான் இலட்சுமணனின் கோபத்தைக் குறைக்க வேண்டும் எனக் கூறினான். கிஷ்கிந்தையின் வாயிலை வானரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அடைந்து விட்டனர். வானரங்கள் தன்னை தடுப்பதற்காக வாயிலை அடைத்திருப்பத்தை கண்ட இலட்சுமணன் மிகுந்த கோபம் கொண்டு தன் செந்தாமரை போன்ற காலால் வாயிலை உதைத்தார். இலட்சுமணின் பாதம் பட்டவுடன், மதில்சுவரும், வாயிலுக்கு காவலாக இருந்த கதவும் உடைந்து விட்டன. இதனைப் பார்த்த வானரங்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தலைதெறிக்க ஓடின.
💐 பிறகு இலட்சுமணர் கிஷ்கிந்தைக்குள் நுழைந்து அரண்மனையை நோக்கி சென்றார். இலட்சுமணர் அரண்மனை நோக்கி வருவதை பார்த்து எல்லோரும் பயந்து நடுங்கினர். பிறகு தாரை அனைவரையும் அங்கிருந்து போக சொல்லிவிட்டாள். இலட்சுமணர் அரண்மனை வாயிலை அடைந்தான். தாரை பெண்கள் புடைசூழ இலட்சுமணனை எதிர்நோக்கி நின்றாள். இலட்சுமணர் தாரையை பார்த்தவுடன், தன் தலையை கீழே குனிந்து கொண்டார். தாரை இலட்சுமணனை பார்த்து, ஐயனே! நாங்கள் செய்த தவத்தின் பயனாக தாங்கள் இன்று இங்கு வந்துள்ளீர்கள். தங்கள் வரவு எங்களுக்கு புண்ணியமே என்று கூறினாள். பிறகு இலட்சுமணர் கோபம் குறைந்து தாரையை நிமிர்ந்து பார்த்தான். தாரையை பார்த்தவுடன் தன் தாயின் நினைவு வந்துவிட்டது. அவர்களும் தாரையை போல தான், மங்கல நாண் அணியாமல், அணிகலன்கள் அணியாமல், மணம் வீசும் மலர்களை சூடாமல், குங்குமம் இடாமல் மேலாடையால் உடலை மறைந்துக் கொண்டு இருப்பார்கள் என நினைத்து வருந்தினான்.
தொடரும்...
No comments:
Post a Comment