இராமாயணம் தொடர் 56
வாலியின் கோபம்!...
😌 வாலி கூறியதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த இராமர் வாலியிடம், வாலி! தவறு செய்யாத உன் தம்பி சுக்ரீவனை நீ தண்டிப்பது நியாயமா? சுக்ரீவன் என்ன நடந்தது என்று சொல்ல வந்தும்கூட அதை நீ செவிக் கொடுத்து கேட்கவில்லை. அது மட்டுமின்றி சுக்ரீவன் எல்லோரின் நன்மைக்காக தான் குகையை மூடிவிட்டு வந்தானே தவிர உன்னை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. அதை சுக்ரீவன் உன்னிடம் சொல்ல வந்தும் நீ கேட்கவில்லை. இது உன் தவறு தானே என்றார். உனக்கு துணையாக இருக்கும் உன் தம்பியை விரட்டி விரட்டி அடிப்பது அண்ணனின் செயலா? எனக் கேட்டார் இராமர். அது மட்டுமல்லாமல் பெண்களை தாயை போல நினைக்க வேண்டும். ஆனால் நீ தம்பியின் மனைவி என்று தெரிந்தும் அவரை கவர்ந்து சென்று சிறை வைத்துள்ளாய்.
😌 வாலி, இராமா! நீ சொல்வதை சரி என்று ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் விலங்குகளும் மனிதர்களும் வேறுவேறு தானே. ஒரு விலங்காகிய என்னை துன்புறுத்துவது தவறு தானா? இதற்கு நீ என்ன சொல்ல போகிறாய் என்றார். வாலி! விலங்குகளுக்கு எது சரி, எது தவறு என்று தெரியாது. ஆனால் நீ இந்திரனின் அருளால் தோன்றியவன். எல்லா கலையும் நன்கு கற்றவன். தரும நெறிகளை நன்கு அறிந்தவன். மனிதன், விலங்கு என்ற பாகுபாடு உருவினால் அல்ல. அவர்களின் அறிவின் திறமையைக் கொண்டு உள்ளது. நீ உருவத்தில் வேண்டுமானால் விலங்காய் இருக்கலாம், உன் அறிவும், திறமையும் மனிதனுக்கு சமமாகும். ஆதலால் தான் உன்னை நான் தண்டித்தேன். பிறப்பால் நீ விலங்கு என்று உன் தவறுகளை நியாயப்படுத்துவது சரியல்ல. பிறகு நீ எல்லோருக்கும் தீங்கை விளைவிக்கும் இராவணனிடம் நட்பு கொண்டுள்ளது சரியானதா? எனக் கேட்டார்.
😌 இதனைக் கேட்ட வாலி, சரி ராமா! நேருக்கு நேர் போர் புரிவது தான் ஒரு வீரனுக்கு அழகு. நீ வேடனை போல் மறைந்திருந்து என் மேல் அம்பு எய்தியது நியாயமா? எனக் கேட்டார். இதற்கு இலட்சுமணர், வாலி! நீ உன் தம்பி சுக்ரீவனை தண்டித்து கிஷ்கிந்தையை விட்டு விரட்டி விட்டாய். ஆனால் சுக்ரீவன் உன்னிடம் இருந்து தன்னை காப்பாற்று என்று அண்ணன் இராமரிடம் சரணடைந்து விட்டான். இராமரும் உன்னை காப்பாற்றி வாலியை கொல்வேன் என்று சுக்ரீவனிடம் வாக்களித்துவிட்டார். இராமர் நீதியையும், தர்மத்தையும் நிலைநாட்டுபவர் என்பது உனக்கு தெரியும். தன்னிடம் அடைக்கலம் வேண்டி வருபவரை காப்பதே இராமரின் தலையாய கடமையாகும். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் இராம் அண்ணா உன்னிடம் நேருக்குநேர் போர் புரிந்தால் நீயும் அண்ணாவிடம் சரணடைந்துவிடுவாய். பிறகு அண்ணாவால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போய்விடும். அதனால் தான் உன் மீது மறைந்திருந்து அம்பு எய்தினார் என்றார்.
😌 தான் கொடுத்த வாக்குறுதியை நிலைநாட்டவே இராமர் இவ்வாறு செய்தார் என்பதை புரிந்து கொண்ட வாலி, அமைதி அடைந்தான். இராமர் என்றும் அதர்மத்திற்கு துணை போகமாட்டார் என்பதை வாலி புரிந்து கொண்டான். தன் உயிர் போகும் நிலையிலும் இராமரை வணங்க முற்பட்டான். தான் செய்த தவறான செயல்களால் தான், இராமர் தன்னை தண்டித்தார் என்பதை புரிந்து கொண்டான் வாலி. பிறகு வாலி இராமரிடம், எம்பெருமானே! நான் தங்களை கடிந்து பேசிய சொற்களை மறந்து என்னை மன்னித்து அருள வேண்டும். உயிர் போகும் தருவாயில் பகைமையை அகற்றி எனக்கு நல்லறிவு அருளுனீர்கள். தாங்கள் எனக்கு ஒரு வரத்தை அருள வேண்டும். என் தம்பி சுக்ரீவன் ஏதாவது தவறு செய்தால் அவன் மீது கோபத்தை காட்டாமல் அவனை மன்னித்து அருள வேண்டும் என வேண்டிக் கொண்டான்.
தொடரும்.....
No comments:
Post a Comment