Tuesday, September 5, 2023

RAMAYANAM PART 52

 இராமாயணம் தொடர் 52

இராமர் சீதையின் அணிகலன்களை பார்த்தல்!...

✬ இராமர், இலட்சுமணர், சுக்ரீவன், அனுமன் மற்றும் ஏனைய வானரங்களும் ஒரு சோலையில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது சுக்ரீவன் இராமரை வணங்கி, பெருமானே! நாங்கள் ஒரு சமயம் மலையின் உச்சியில் இருந்தபோது வான வழியாக இராவணன் ஒரு பெண்மணியை கவர்ந்து செல்வதை கண்டோம். அந்தப் பெண் அழுது கொண்டு இருந்தாள். அப்பெண் தங்களின் தேவியாக தான் இருக்க வேண்டும் என்றான் சுக்ரீவன். இராவணன் அப்பெண்ணுடன் இம்மலையை கடக்கும் போது, அப்பெண் தான் அணிதிருந்த அணிகலன்களை கழற்றி ஓர் துணியில் சுற்றி எங்களை நோக்கி எறிந்தாள். அந்த அணிகலன்களை நாங்கள் பத்திரமாக எடுத்து வைத்துள்ளோம். தாங்கள் அந்த அணிகலன்களை பார்த்து அது தேவியின் அணிகலன் தானா என்று சொல்லுங்கள் என்றான் சுக்ரீவன்.

✬ பிறகு சுக்ரீவன் அணிகலன்களை இராமரிடம் காண்பித்தான். இராமர், துணியால் சுற்றப்பட்டிருந்த அணிகலன்களை அவிழ்த்து பார்த்தார். அனைத்தும் சீதையுடைய அணிகலன்கள். இவை அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயை சீதைக்கு கொடுத்த அணிகலன்கள் என்று கூறி உணர்ச்சி வசப்பட்டு சீதையின் நினைவால் மிகவும் வருந்தினார். பிறகு இலட்சுமணரிடம், இந்த அணிகலன்களை காட்டி இது சீதையின் அணிகலன்கள் தானா என மறுபடியும் கேட்டார்.

✬ தம்பி! இலட்சுமணா! தலையில் அணியும் இந்த நவரத்ன மாலை உன் அன்னையின் அணிகலன் தானே எனக் கேட்டார். இலட்சுமணர்! அண்ணா! இது அன்னையின் அணிகலன் தானா என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

✬ தம்பி! இலட்சுமணா! காதில் அணியும் இந்த காதணி உன் அன்னையின் அணிகலன் தானே எனக் கேட்டார். இலட்சுமணர்! அண்ணா! இது அன்னையின் அணிகலன் தானா என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

✬ தம்பி! இலட்சுமணா! இந்த கழுத்தணி உன் அன்னையின் அணிகலன் தானே எனக் கேட்டார். இலட்சுமணர்! அண்ணா! இது அன்னையின் அணிகலன் தானா என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

✬ தம்பி! இலட்சுமணா! இந்த வளையல்கள் உன் அன்னையின் அணிகலன் தானே எனக் கேட்டார். இலட்சுமணர்! அண்ணா! இது அன்னையின் அணிகலன் தானா என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

✬ தம்பி! இலட்சுமணா! இந்த ஒட்டியாணம் உன் அன்னையின் அணிகலன் தானே எனக் கேட்டார். இலட்சுமணர்! அண்ணா! இது அன்னையின் அணிகலன் தானா என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

✬ தம்பி! இலட்சுமணா! இந்த மெட்டி(காலாழி) உன் அன்னையின் அணிகலன் தானே எனக் கேட்டார்.

✬ இலட்சுமணர்! அண்ணா! ஆம் அன்னையின் அணிகலன் தான் என்றார். உடனே இராமர் இலட்சுமணரிடம் இத்தனை அணிகலன்கள் காண்பித்தும் இவை உன் அன்னையின் அணிகலன்களா என்று உனக்கு தெரியவில்லை. இந்த மெட்டி(காலாழி) மட்டும் எப்படி அடையாளம் தெரிந்தது என்று கேட்டார். இலட்சுமணர் இராமரிடம், அண்ணா! இந்த பதினான்கு ஆண்டுகளில் என் அன்னை சீதைக்கு பாத பூஜை செய்யும் போது அவர்களின் பாதங்களை மட்டும் தான் நான் பார்த்துள்ளேனே தவிர அவர்களின் திருமேனியை நான் பார்த்ததில்லை என்றார். அதனால் தான் எனக்கு மெட்டி(காலாழி) மட்டும் தான் அடையாளம் தெரிந்தது. மற்ற அணிகலன்கள் அடையாளம் தெரியவில்லை என்றார்.

✬ இந்த கேட்டுக் கொண்டிருந்த சுக்ரீவன், அனுமன் மற்றும் ஏனைய வானரங்கள், தம்பி என்றால் இவரை போல் அல்லவா இருக்க வேண்டும். நற்குணத்தின் நாயகன், ஒழுக்கத்தின் சிறந்தவன் என்று இலட்சுமணரை பாராட்டினார்கள். 

தொடரும்.....

No comments:

Post a Comment