இராமாயணம் பகுதி 5
இராம அவதாரம் அயோத்தி நகர மகிழ்ச்சி
🌟வசிஷ்ட முனிவர், தசரதரே! உனக்கு சிறந்த மகப்பேறு கிடைக்கும். எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும். அங்க நாட்டில் ரோமபாதன் என்னும் மன்னன் ஆட்சி புரிகிறான். அந்த நாட்டில் பன்னிரெண்டு ஆண்டுகளாக மழையில்லாமல் பஞ்சம் நேர்ந்தது. கலைக்கோட்டு முனிவரை அங்கு அழைத்து வந்ததால் மழை பொழிந்து வளம் பெருகியது. கலைக்கோட்டு முனிவர் அளவற்ற தவம் செய்தவர். அவரை அழைத்துக் கொண்டு வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் உனக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும் என்று கூறினார்.
🌟வசிஷ்ட முனிவரின் அறிவுரைபடி, தசரதச் சக்கரவர்த்தி அங்க நாட்டை அடைந்தார். அங்க நாட்டு மன்னரிடம் கலைக்கோட்டு முனிவரை அயோத்திக்கு அனுப்புமாறு வேண்டிக் கொண்டார், தசரதச் சக்கரவர்த்தி. தசரதச் சக்கரவர்த்தியின் வேண்டுகோளுக்கிணங்க கலைக்கோட்டு முனிவர் என்கின்ற ரிஷ்யசிருங்கர் தன் மனைவி சாந்தையுடன் அயோத்தி மாநகருக்கு எழுந்தருளினார். ஓராண்டு காலம் தசரதர் கலைக்கோட்டு முனிவருக்கு வந்தனை வழிபாடு செய்தார். தசரதர், ஒருநாள் ரிஷ்யசிருங்கரை வணங்கி முனிவரே! அடியேன்! அறுபதினாயிரம் ஆண்டு இவ்வுலகை ஆண்டேன். எனக்குப் பின் இந்த உலகத்தை அறநெறியில் ஆட்சி புரிய புத்திரன் உண்டாக அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
🌟புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் உனக்குப் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று கலைக்கோட்டு முனிவர் கூறினார். பின்னர் பெரிய யாகசாலை அமைத்து யாகத்துக்குரிய திரவியங்களைக் குவித்து வசிஷ்ட முனிவர் முதலிய தவசீலர்கள் துணைபுரிய வேதமந்திரங்களைக் கூறி சிறந்த வேள்வியைச் செய்தார், கலைக்கோட்டு முனிவர். பூர்ணாகுதி கொடுத்தவுடன் ஒரு தெய்வபூதம் யாகத்தில் தோன்றி யாக பாயசத்தை வழங்கி மறைந்தது.
🌟கலைக்கோட்டு முனிவரின் கட்டளைப்படி யாக பாயசத்தை ஒரு பாதி கௌசலைக்கும், மற்றொரு பாதியை கைகெயிக்கும் மன்னர் வழங்கினார். கௌசலையும், கைகெயியும் மன்னர் வழங்கிய பாயாசத்தில் பாதி, பாதி சுமித்திரைக்கு வழங்கினார்கள். மூன்று தாய்மார்களும் கருவுற்றார்கள். மூவரும் பன்னிரெண்டு மாதங்கள் கரு இருந்தார்கள்.
🌟ஆன்மாக்கள் வானத்திலிருந்து மழை வழியாக மண்ணுலகத்தை அடைகின்றன. அவ்வாறு வந்த உயிர்கள் காய்கனி தானியங்களில் கலந்து தந்தையார் வயிற்றில் 2 மாதங்கள் கரு இருந்த பின், தாய் வயிற்றில் பத்துமாதம் கரு இருந்து மகவாகப் பிறக்கின்றன. ஆகவே, உயிர்கள் கருவில் பன்னிரெண்டு மாதங்கள் இருக்கின்றன. முதலில் நம்மை, கருச்சுமந்தவர் தந்தையார். அதனால் தான் நம்முடைய பெயருக்கு முன்னால் தந்தையார் எழுத்தைப் பேறுகின்றோம். இராமருடைய கரு மன்னவன் பாலின்றி பாயாச வழியாக தாய்வயிற்றை அடைந்ததால் இவர்கள் 12 மாதம் கருச்சுமந்தார்கள்.
🌟சித்திரை மாதம் நவமி திதி புனர்பூச நட்சத்திரம் கடக லக்கினத்தில் இராமபிரான் அவதாரம் செய்தார். மறுநாள் பூச நட்சத்திரத்தில் பரதரும், அதற்கு மறுநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் இலட்சுமணரும், சத்ருக்னரும் அவதாரம் செய்தார்கள். தசரதச் சக்கரவர்த்தி மகப்பேறு உண்டானதால் தான தருமங்கள் செய்தார். அயோத்தி மாநகரம் இன்பவெள்ளத்தில் மூழ்கியது.
🌟வசிஷ்ட முனிவர் இராமன், பரதன், இலட்சுமணன், சத்ருக்னன் என்று பெயர் சூட்டினார்.
No comments:
Post a Comment