இராமாயணம் தொடர் 43
ஜடாயு இராவணனிடம் யுத்தம் செய்தல்!
❇ சீதையை வலுகட்டாயமாக இழுத்து தன் புஷ்பரக விமானத்தில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து பறந்து சென்றான். சீதை, என் பெருமானே! எங்கே உள்ளீர்கள்? இலட்சுமணா! உன்னை தவறாக எண்ணி விட்டேன். பிடிவாதமாய் உன்னை துரத்தினேனே! என்று கதறி அழுதாள். இராவணன் சீதையை பிடித்துக் கொண்டு தேரை வேகமாக செலுத்தினான். அரக்கனே! என் கணவருக்கு பயந்து மாய மானை அனுப்பி என்னை கவர்ந்த நீ, என் கணவரை பார்த்து பயப்படுகிறாய் என்பது தெரிகிறது. கீழே காட்டிலுள்ள செடிகொடி, மரங்கள் மற்றும் மலைகளிடம் இவ்வரக்கன் என்னை கவர்ந்து செல்வதை என் கணவர் இராமனிடம் சொல்லுங்கள் என்று கதறி அழுதாள். கடவுளை நினைத்து தொழுதாள்.
❇ மரத்தின் மேல் அரை தூக்கமாக அமர்ந்திருந்த ஜடாயு, வானத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த ரதத்தை பார்த்தான். சீதையின் குரலைக் கேட்டு யார் என்பதை தெரிந்து கொண்டான். சீதையும் மரத்தின் மேல் அமர்ந்திருந்த ஜடாயுவை கண்டாள். சீதை ஜடாயுவிடம், இந்தக் கொடிய அரக்கன் என்னை கவர்ந்து கொண்டு செல்கிறான். தாங்கள் இவ்வரக்கனை எதிர்த்தால் தங்களையும் இவன் கொன்று விடுவான். தாங்கள் இந்த செய்தியை இராமனிடம் சொல்லுங்கள் என்று அழுதாள். ஜடாயு இராவணனை பார்த்து, தம்பி இராவணா! நான் கழுகுராஜன், ஜடாயு. நானும் உன்னை போல் நீண்ட நாட்களாக அரசு புரிந்தவன். நீ செய்யும் இச்செயல் பெரும் பாவமாகும். மக்களை காக்கும் அரசன் இத்தகைய செயலை செய்யலாமா? நீ இப்பாவச் செயலை செய்வதால் நீ அழிந்து போவது உறுதி.
❇ ஜடாயு பேசியதைக் கேட்ட இராவணன் பெரும் கோபம் கொண்டான். நிறுத்து! இதற்கு மேல் ஒரு வார்த்தையும் பேசாதே. அந்த மனிதர்களை என் முன் வரச்சொல், அவர்களை கொன்றுவிடுகிறேன். உயிர்மேல் ஆசை இருந்தால் ஓடிப்போய் விடு என்றான். அரக்கனே! உடனே அவளை விட்டுவிட்டு இங்கிருந்து செல், இல்லையென்றால் நீ அழிந்து போவாய். இராமனின் தேவியை கவர்ந்து செல்வது உன் அழிவிற்கான பாதை ஆகும். இராமன் இல்லாத நேரத்தில் நீ சீதையை கவர்ந்து செல்வது உன் கோழைதனத்தை காட்டுகிறது. இராமனிடம் யுத்தம் செய்ய துணிவில்லாமல் இப்படி கோழைதனமாய் சீதையை கவர்ந்து செல்கிறாயா! நான் இருக்கும் வரையில் சீதையை இங்கிருந்து கவர்ந்து செல்லவிடமாட்டேன். நீ வீரன் என்றால் என்னுடன் வந்து போரிடு என்று சொல்லி ஜடாயு மேலே பறந்தான். ஜடாயு பறந்த வேகத்தில் மரங்களும், மலைகளும் ஒன்றொன்று மோதிக் கொண்டன.
❇ இராவணன் பெரும் கோபங்கொண்டு ஜடாயுவைத் தாக்கினான். இராவணனை அங்கிருந்து செல்லாமல் தடுத்து நிறுத்தினான், ஜடாயு. தன் சிறகுகளாலும், மூக்காலும் போர் புரிந்தான் ஜடாயு. ஜடாயு தன் மூக்கால் இராவணனை உடல் முழுவதும் கீறினான். இராவணனின் உடலில் இரத்தம் சிந்தியது. வலி தாங்க முடியாமல் இராவணன் சீதையை தன் கையில் பிடித்துக் கொண்டு ஜடாயுவை விரட்டினான். இராவணன் ஒரு சூலாயுதத்தை எடுத்து ஜடாயு மீது வீசினான். அந்த சூலாயுதம் செயலற்றுப் போய் கீழே விழுந்தது. பிறகு இராவணன் தன் தண்டாயுதத்தை எடுத்து ஜடாயு மீது வீசினான். தண்டாயுதத்தால் ஜடாயு அடிபட்டுக் கீழே விழுந்தான். ஜடாயு கீழே விழுந்த நேரம் பார்த்து இராவணன் தேரை வானத்தில் வேகமாக செலுத்தினான். சீதை மிகுந்த துன்பத்தால் அழுதாள்.
❇ இதைக் கண்ட ஜடாயு சீதைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே மேலெழுந்து இராவணனை தாக்கினான். இந்தக் கோர யுத்தம் நீண்ட நேரம் நடந்தது. மிகுந்த கோபம் கொண்ட இராவணன் தன்னிடம் இருந்த உடைவாளை உறுவி ஜடாயுவின் சிறகுகளையும், கால்களையும் வெட்டி வீழ்த்தினான். அந்த வாள் சிவபெருமான் இராவணனுக்குக் கொடுத்த வாள். தன் சிறகுகளையும் கால்களையும் இழந்த ஜடாயு இராமரை நினைத்து இராம் இராம் என சொல்லிக் கொண்டு தரையில் விழுந்து இறந்தான். இதனைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் பெரும் துயரம் அடைந்தனர்.
No comments:
Post a Comment