Saturday, August 26, 2023

RAMAYANAM PART 38

 இராமாயணம் தொடர் 38

இராமர் அரக்கர்களை அழித்தல்!

🐎 தேவர்களும், ரிஷிகளும் ஆகாயத்திலிருந்து யுத்தத்தை பார்க்க வந்தனர். ஆனால் அவர்கள் இராமர் தனியாக யுத்தத்தில் எப்படி பங்கு கொள்ள போகிறார் எனக் கவலை கொண்டார்கள்.

🐎 சேனைகள் பெரும் ஓசையை எழுப்பிக் கொண்டு பர்ணசாலையை வந்தடைந்தது. அரக்கர்கள் எழுப்பிய ஓசையினால் விலங்குகள் எல்லாம் பயந்து ஓடின. இராமர் வில்லை ஏந்தி கொண்டு யுத்ததிற்கு ஆயத்தமாக நின்று கொண்டு இருந்தார். ராட்ஷச சேனைகள் இராமரை சூழ்ந்து கொண்டன. யுத்தம் மிக கோரமாக ஆரம்பித்தது. அரக்கர்களால் இராமரின் உடல் மிகவும் அடிபட்டும் அவர் தளராமல் எதிர்த்து யுத்தம் புரிந்தார். அச்சமயத்தில் இராமர் நாணை பூட்டுவதோ, நாணில் இருந்து அம்பு வெளிவருவதோ கண்ணுக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு வேகமாக யுத்தம் புரிந்தார். இராமரின் பாணங்களுக்கு ஆயிரக்கணக்கான அரக்கர்கள், யானைகள், குதிரைகள் இரையாயின. அரக்கர்களின் சேனைகள் நிர்முலமாகின.

🐎 இதைக்கண்ட தூஷணன் ஒரு பெரும் படையை கூட்டி கொண்டு இராமனின் மீது பாய்ந்தான். சிறிது நேரம்தான் தூஷணம் அட்டகாசங்கள் நடந்தது. பிறகு இராமரின் பாணங்களுக்கு தூஷணனின் படைகள், தேர்கள், குதிரைகள், யானைகள் என அனைத்தும் இரையாயின. பெரும் கோபங்கொண்டு தூஷணன் தன் தண்டாயுதத்தை கொண்டு இராமன் மீது பாய்ந்தான். இராமனின் ஒரே பாணத்திலேயே அவன் தரையில் விழுந்து இறந்தான். தூஷணன் இறந்ததை பார்த்த மற்ற அரக்கர்கள் இராமர் மீது பாய்ந்தனர். இராமர் எல்லா அரக்கர்களையும் தன் பாணங்களை கொண்டு கொன்றார். இவ்வாறு கரனுடன் வந்த எல்லா சேனைகளும் இராமரின் கோதண்டத்துக்கு இரையாயின. அரக்கர்களில் மீதம் இருந்தவர்கள் கரன் மற்றும் திரிசரஸ் தான். கோபங்கொண்ட கரன் இராமருடன் சண்டையிட முன் சென்றார். அப்போது திரிசரஸ் கரனை தடுத்து நிறுத்தி, இராமனை கொன்று நான் வெற்றி பெறுவேன், இல்லையென்றால் நான் இறந்த பின் நீ ராமனை எதிர்த்து நின்று சண்டையிடு என கூறி திரிசரஸ் முன் சென்றான். அவன் இராமனை தாக்க எவ்வளவோ முயற்சித்தான். முடிவில் இராமர் அவன் மேல் ஒரு பாணத்தை எய்தினார். அவன் அவ்விடத்திலேயே இறந்தான்.

🐎 இதனைப் பார்த்த கரன், கோபங்கொண்டு தேரில் ஏறி இராமரை நோக்கி பாணத்தை எய்தினான். அப்பாணத்தால் இராமரின் கவசம் அறுந்து கீழே விழுந்தது. பிறகு இராமர் வில்லை எடுத்து, கரனுடைய வில், தேர் என அனைத்தையும் அழித்தார். கரன் தன் தேர், வில் என அனைத்தும் இழந்து நின்றான். கடைசியில் அவன் தன் கதாயுதத்தை கையில் எடுத்தான். இராமர் கரனை பார்த்து, அரக்கனே! வனத்தில் தவம் இருக்கும் முனிவர்களை பல தீய செயல்கள் செய்து இம்சித்து வந்தாய். உலகில் எவன் ஒருவன் தீய செயல்கள் செய்து பலரின் வெறுப்பை பெறுகிறானோ அவன் ஒரு நாள் அழிவது உறுதி. அதேபோல் இன்று நீ அழிவது நிச்சயம். உன் பசிக்காக பல முனிவர்களை கொன்று தின்றாய்? ஆனால் இன்று என் பாணத்தால் உனக்கு அழிவு நிச்சயம் என்றார்.

🐎 கரன் உடனே, அற்ப மனிதனே! யாரும் தன்னைதானே புகழ்ந்து கொண்டு பேச மாட்டார்கள். நீ பேசும் பேச்செல்லாம் அற்பத்தனமான பேச்சு. முடிந்தால் நீ என்னை வென்று காட்டு. இன்று உனக்கு எமனாக நான் இருக்கிறேன். உன்னை கொல்வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன் என்று கூறி அவன் தன் கையில் வைத்து இருந்த கதாயுதத்தை சுழற்றி இராமர் மீது வீசினான். இராமரும் கதாயுதத்தை பார்த்து பாணத்தை எய்தினார். கதாயுதம் துண்டு துண்டாக நொறுங்கி தரையில் விழுந்தது. பிறகு கரன் பக்கத்தில் இருந்த மரத்தை பிடுங்கி, இராமர் மீது வீசினான். இராமர் தன் வில்லை கொண்டு தன்னை நோக்கி வந்த மரத்தை தடுத்தார். உடனே இராமர் தன் கையில் வைத்திருந்த திவ்விய பாணத்தை கரன் மீது எய்தினார். கரன் அவ்விடத்திலே தன் உயிரை மாய்த்தான். இந்த யுத்தத்தை பார்த்து கொண்டு இருந்த தேவர்களும். ரிஷிகளும் மலர்மாரி பொழிந்தார்கள்.

No comments:

Post a Comment