இராமாயணம் தொடர் 21
கைகேயின் இரண்டு வரங்கள்
✌ இராமன் ஆட்சிக்கு வந்தால் ஒரு போதும் எனக்கு துயரம் வராது. கூனி! இனிமேல் நீ இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். இதற்குமேல் நீ பேசினால் உனக்கு தண்டனை தான் கிடைக்கும் என்றாள், கைகேயி. கைகேயி! நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது கூட உனக்கு புரியவில்லை. எத்தகைய மனிதனும் பதவியில் அமர்ந்தவுடன் மாறிவிடுவான். அதேபோல் இராமனும் மாறிவிடுவான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கூனி கைகேயி மனதை மாற்ற ஆரம்பித்தாள். இராமன் அரசன் ஆனால் ஏற்படும் தீமைகளை கூறி கைகேயி-ன் மனதை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள். பட்டாபிஷேகம் நிறுத்த, தான் என்ன செய்ய வேண்டும் என்று கூனியிடம் கேட்டாள், கைகேயி.
✌ சம்பாசூரனுடன் ஏற்பட்ட யுத்தத்தின் போது தசரதர் உனக்கு இரண்டு வரங்களை அளித்தார். ஆனால் அன்று தசரதர் கொடுத்த வரங்களை நீ ஏற்று கொள்ளவில்லை. அந்த இரண்டு வரத்தை இன்று தசரதனிடம் கேட்கும் படி சொன்னாள், கூனி. முதல் வரத்தை, அயோத்திக்கு பரதன் மன்னனாக வேண்டும் என்றும் மற்றொரு வரத்தை, இராமன் பதினான்கு வருடம் வனவாசம் செல்ல வேண்டும் என்றும் கேட்க சொன்னாள். கைகேயியும் அதை ஏற்றுக் கொண்டாள்.
✌ தசரதன் தன் மாளிகைக்கு வந்தால் அந்த வரத்தை கேட்பதற்காக கைகேயி காத்திருந்தாள். தசரதன் கௌசலை, சுமித்திரைக்கு இராமனின் பட்டாபிஷேக விழாவை சொல்லிவிட்டு கடைசியாக கைகேயின் மாளிகைக்கு சென்றான். தசரதருக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது தெரியாது. கைகேயி தன் அறையில் தலையை விரித்துக் கொண்டு விம்மி விம்மி அழுது கொண்டு இருந்தாள். உடனே, தசரதர் அருகில் சென்று அன்புடன் அவளது கண்ணீரை துடைத்து விட்டார். என் அன்புக்குரிய கைகேயி! நீ எதற்காக அழுகிறாய்? நீ அழுவதற்கான காரணம் என்ன? என்று கேட்டார்.
✌ கைகேயி, தாங்கள் முன்பு சம்பாசூரனுடன் ஏற்பட்ட யுத்தத்தின் போது எனக்கு இரண்டு வரங்களை அளித்தீர்கள் அல்லவா? அதை நான் இப்போது கேட்கிறேன் என்றாள். தசரதர் இதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டமா? வறியவர்களுக்கெல்லாம் வாரி வாரி வழங்குகின்ற நான் என் உயிரினும் மேலான உனக்கு இல்லை என்று சொல்வேனா? நீ தாராளமாக அந்த வரத்தை கேட்கலாம் என்றார்.
✌ கைகேயி, தசரதரிடம் கேட்ட முதல் வரம், என் மகன் பரதன் அரியணையில் அமர்ந்து அயோத்தியை ஆள வேண்டும். இரண்டாவது வரம், இராமன் பதினான்கு ஆண்டு வனவாசம் செல்ல வேண்டும் என கேட்டாள். இவ்வரத்தை கேட்டவுடன் தசரதருக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. ஒரு நிமிடம் தான் காண்பது கனவு என்று நினைத்து விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். தசரதரின் கண்ணில் கண்ணீர் ஆறு போல் பெருகி வழிந்தது.
✌ தசரதர், கைகேயிடன் மண்டியிட்டு, என்னை பார்த்து அனைவரும் பணிகின்றனர். நான் உன்னிடன் பணிந்து கேட்கிறேன். உன் மனதை மாற்றியவர்கள் யார்? நீ கேட்கும் வரத்தின் படி நான் பரதனை அரசனாக்கினாலும் பரதன் அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டான். நாளை இராமனுக்கு நான் முடிசூட்டிவேன். பிறகு இராமன் வந்து என்னை வணங்குவான். அப்போது நான் இராமனிடம் உன் அரச பதவியை நீ பரதனுக்கு தர வேண்டும் என கேட்பேன். என் சொல்லை மீறாமல் இராமனும் பரதனுக்கு முடிசூட்டுவான். தயவு செய்து நீ பிடிவாதம் செய்யாதே, என்றார்.
No comments:
Post a Comment