இராமாயணம் தொடர் 20
கூனியின் சூழ்ச்சி
💥 மந்தரையின் வடிவில் விதி விளையாட தொடங்கியது. மந்தரை கேகய நாட்டு மன்னருடைய அரண்மனையில் பணிபுரிந்தவள். மந்தரை கைகேயியை வளர்த்தவள். கைகேயி மீது அதிக அன்பு கொண்டவள். கைகேயியுடன் திருமணம் முடிந்து அயோத்திக்கு வந்தாள். இவளுக்கு கூனி என்று மற்றொரு பெயரும் உண்டு. சிறு வயதில் இராமர் விளையாட்டாக கூனியின் முதுகில் உள்ள கூனை நிமிர்த்த மண் உருண்டைகளை எய்தினார். ஆனால் அவளோ கீழே விழுந்துவிட்டாள். அங்குள்ள பெண்கள் அவளை கைதட்டி சிரித்தார்கள். இதனால் கோபம் கொண்ட கூனி இராமர் மீது கோபம் கொண்டாள். இந்த சிறிய சம்பவத்தை நினைவில் கொண்டு என்றாவது இராமனுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தாள்.
💥 கைகேயியை தூங்குவதற்காக பஞ்சணையை தயார் செய்து அவளை தூங்க வைத்து விட்டு கீழே சென்றாள் கூனி. அங்கு இருந்த பெண்களிடம், நகரமே விழாக் கோலம் போல் அழகாய் அலங்கரிக்கப்பட்டுள்ளது, இன்று என்ன விழா? என்று கேட்டாள். நாளை இராமனுடைய பட்டாபிஷேக விழா என்று கூறினார்கள். இதைக்கேட்ட கூனிக்கு மிகுந்த கோபம் வந்தது. இராமனுக்கு பட்டாபிஷேகமா? இதனை ஒருபோதும் நான் நடக்க விட மாட்டேன். நான் இதை தடுத்து நிறுத்துவேன் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
💥 உடனே தூங்கி கொண்டிருக்கும் கைகேயிடம், கைகேயி உனக்கு தீங்கு வந்துவிட்டது. இந்த நேரத்தில் இப்படி அயர்ந்து தூங்குகிறாய் என்று கைகேயியை எழுப்பினாள். நாளை பட்டாபிஷேகம் நடைபெறும் இராமனால் உனக்கு தீங்கு வரவிருக்கிறது என்றாள். கூனி. இராமனால் ஒருபோதும் எனக்கு தீங்கு வராது. நீ ஏன் உளறுகின்றாய்? என்றாள் கைகேயி. கைகேயி நீ இன்னும் சிறு பெண்ணாகவே இருக்கிறாய். உன் மகன் பரதனை உன் தந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு தன் கணவனுக்கு மந்திரம் ஓதி உன் மகன் இல்லாத நேரத்தில் இராமனுக்கு பட்டாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். நீ ஒன்றும் தெரியாமல் உறங்கிக் கொண்டு இருக்கிறாய் என்றாள் கூனி.
💥 இதை கேட்டதும் கைகேயி அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். அவளது முகம் பிரகாசமானது. அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவள் அடைந்த ஆனந்தத்தில் தன் கழுத்தில் போட்டு இருந்த இரத்தின மணிமாலையை கூனியின் கழுத்தில் பரிசாக போட்டாள். கைகேயிக்கு இராமன் மீது அளவுக்கடந்த அன்பு இருந்தது. கோபத்தில் கூனி தன் கழுத்தில் போட்ட இரத்தின மாலையை தூக்கி எறிந்தாள். கைகேயி நீ உன் மதியை இழந்து விட்டாயா என்ன? என்று கேட்டாள், கூனி.
💥 கைகேயி, மதிநுட்பத்தால் கௌசலை தன் மகன் இராமனுக்கு நாளை முடிசூட போகிறாள். சீதையும் இராமனும் சிம்மாசனத்தில் அமர போகின்றார்கள். ஆனால் உன் மகன் அவர்களுக்கு கை கட்டி வாய் மூடி பணிவிடை செய்ய வேண்டும். இந்நாட்டை ஆள போகும் இளவரசரின் அம்மாவாகிய கௌசலைக்கு நீ பணிவிடை செய்ய வேண்டும். இப்படி ஒரு நிலை உனக்கு வந்து விட்டதே கைகேயி. நீயோ இதை எல்லாம் அறியாமல் முட்டாள்த்தனமாக எனக்கு நவரத்தின மாலையை பரிசாக தருகின்றாய்.
💥 கைகேயி, உன்னிடம் வறுமை என்று வருபவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பாயே. இராமன் அரசனாக வந்தால் நீ எப்படி தான தர்மம் செய்வாய் மகளே!. தானம் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று எப்படி உன்னால் சொல்ல முடியும். இதையெல்லாம் நினைத்து பார்த்தாயா நீ. இதையெல்லாம் கேட்ட கைகேயி புன்னகைத்தாள். கூனி, நீ ஒன்றும் புரியாமல் பேசுகிறாய். இராமனோ என் அன்புக்கினிய புதல்வன் ஆவான். ஆதித்தன் குலத்தில் முடிசூடும் உரிமை மூத்த மகனுக்கே உண்டு. இதை அறியாமல் நீ பேசுகிறாய். இத்தகைய காலங்காலமாய் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபை அழிக்கலாமா?. இராமன் சீதை கல்யாணம் முடிந்து அயோத்திக்கு வரும் வழியில் சினம் கொண்டு எதிர்த்த பரசுராமனை யார் வென்றார். இராமன் தானே வென்றான். அது மட்டுமில்லாமல் கல்யாணமண்டபத்தில் சீதைக்கு மங்கல நாண் கட்டியவுடன் அச்சபையில் இராமன் எனக்கு தானே முதல் மரியாதை செய்தான்.
No comments:
Post a Comment