இராமாயணம் பகுதி 10
சீதை பிறப்பு
👸 பத்மாட்சன் பரத கண்டத்தை ஆட்சி புரிந்து வந்தான். அவன் மகப்பெறு வேண்டி தவம் புரிந்தான். பத்மாட்சன் தவத்தின் பலனாக திருமால் அவன் முன் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இப்பூவுலகத்தின் நாராயணா! எனக்கு திருமகள் மகளாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டான். திருமால் ஒரு மாதுளங்கனியை பத்மாட்சனுக்கு கொடுத்தார். அவன் மாதுளங்கனியை பிளந்தபோது அதில் ஒரு பாதி செழும்பிதையும், மற்றொரு பாதியில் இலட்சுமியும் இருப்பதை கண்டு பத்மாட்சன் மகிழ்ந்தான்.
👸 அம்மங்கைக்கு பத்மாட்சி என்று பெயர் சூட்டினான். பத்மாட்சி திருமாலை வேண்டித் தவம் செய்தாள். பத்மாட்சன் மகளுக்கு சுயம்வரம் வைத்தான். சுயம்வரத்துக்கு 56 சிற்றரசர்ககள் வந்தார்கள். பத்மாட்சன் சுயம்வர மண்டபத்தில் இருந்த மன்னர்களைப் பார்த்து, வேந்தர்களே! விண்ணில் உள்ள நீலநிறத்தை யார் தன் உடம்பில் பூசிக்கொள்கிறானோ! அவர் தான் என் மகளுக்கு மாலை போட வேண்டும் என்றார். இது என் மகளின் விருப்பமாகும் என்றான். இது முடியாத காரியம் என்பதால் அரசர்கள் பத்மாட்சன் மீது போர் தொடுத்தார்கள். போரில் அனைவரையும் பத்மாட்சன் வெற்றி பெற்றான். பத்மாட்சி தவம் செய்து கொண்டிருந்தாள். வானவீதியிலே சென்று கொண்டிருந்த இராவணன் பத்மாட்சியை பார்த்து காதல் கொண்டான். பத்மாட்சியை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டான். பத்மாட்சன், வானத்தில் தெரிகின்ற நீல நிறத்தை உடம்பில் பூசிக்கொண்டால் என் மகள் உனக்கு மாலை போடுவாள் என்றான். இதனால் கோபமுற்ற இராவணன் பத்மாட்சனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றுவிட்டான். இராவணன் பத்மாட்சியைப் பற்றுவதற்கு முயன்றான். அவள் மறைந்துவிட்டாள். சினங்கொண்ட இராவணன் அந்த நகரத்துக்கு தீ வைத்தான். இந்த செயல் இலங்கை எரிவதற்குக் காரணமாயிற்று.
👸 ஒரு நாள் இராவணன் வான்வழியே செல்லும்போது பத்மாட்சி தவம் செய்து கொண்டு இருப்பதை கண்டான். உடனே இராவணன் பத்மாட்சியைப் பற்ற முயன்றான். பத்மாட்சி எரிகிற தீயில் விழுந்துவிட்டாள். இராவணன் தண்ணீரை விட்டு தீயை அணைத்து பார்த்தான். அதில் ஒரு பெரிய மாணிக்கத்தை கண்டு எடுத்தான். அதனை மண்டோதரிக்கு தரலாம் என்று பெட்டியில் வைத்துக் கொண்டான். மண்டோதரி! உனக்கு ஒரு மாணிக்க மணியை கொண்டு வந்துள்ளேன் என்று கூறி பெட்டியை திறந்தான். அப்பெட்டியில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இதனை கண்ட இராவணன் அதிர்ச்சி அடைந்தான். இவள் மாயக்கன்னி! பல வகையான வடிவம் எடுக்கிறாள் என்று கூறி, அவளை வெட்டுவதற்காக வாளை ஓங்கினான். மண்டோதரி கணவனின் கரத்தைப் பற்றி தடுத்தாள். இந்த குழந்தையை வெட்ட வேண்டாம். பல வடிவங்கள் எடுத்த இவள் பத்ரகாளியாகயும் மாறி தங்களை கொன்றுவிடுவாள். இக்குழந்தையை பெட்டியில் வைத்து மூடி எங்காவது புதைத்துவிடுங்கள் என்று கூறினாள். இராவணன் அந்தக் குழந்தையை சிவபெருமான் வீற்றிருக்கும் இமயத்திலேயே விட்டுவிடத் தீர்மானித்து கங்கையின் உற்பத்தி ஸ்தானத்தில் பனிபடர்ந்த ஒரு பகுதியில் பனிப்பாறைகளுக்கு நடுவில் வைத்துவிட்டால் அக்குழந்தை பனியில் உறைந்து இறந்துவிடும் என நினைத்தான். ஆனால் அதற்கு மாறாக பனி உருகி கங்கையின் பிரவாகத்தில் இழுத்துச் சொல்லப்பட்டது.
👸 மிதிலாபுரியை அரசு புரிகின்றவர், சீரத்துவஜ ஜனகர். இவருடைய தம்பி குசத்துவஜர் என்பவர். சாங்காஸ்யம் என்ற நகரத்தை ஆட்சி புரிந்து வந்தார். ஜனகரிடம் கௌதமரின் புதல்வராகிய சதானந்தர் புரோகிதராக இருந்து வந்தார். ஜனகர் வேதாந்த வித்தகர். மகப்பேறு வேண்டிப் பொற்கொழுவால் வேதமந்திரம் சொல்லி உழுகின்றபொழுது இராவணனால் புதைக்கப்பட்ட பெட்டி கிடைத்தது. அப்பெட்டியில் மகாலட்சுமியே குழந்தையாக இருந்தாள். ஜனகர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து சீதை என்று பெயர் சூட்டினார்.
No comments:
Post a Comment