Saturday, December 18, 2021

ஆன்மீக அறிவியல் பதிவு

 தேசிய ஆசிரியர் சங்க ஆன்மீக அறிவியல் பதிவு

திருவாதிரைத் திருநாள்  


சைவர்களின் சிறப்பு மிக்க திருநாட்களில் ஒன்று திருவாதிரைத் திருநாள். ஆதிரையன் என்று சிவபெருமானைக் குறிப்பர். ஆதிரை என்பது ஒரு விண்மீனைக் குறிப்பதாக உள்ளது. கதிரவனை விட பல மடங்கு பெரியதாக உள்ள விண்மீன்களில் ஆதிரை விண்மீனும் ஒன்று. ஆதிரை விண்மீன் கதிரவனைக் காட்டிலும் இரண்டரைக் கோடி மடங்கு பெரியது என்றும், ஆதிரையின் நடுவில் பூமியை வைத்தால் அது ஊசி நுனியினும் சிறியதாகத் தோன்றும் என்றும் வானநூல் ஆராய்ச்சியுடையோர் குறிப்பிடுகின்றனர்.


செந்நிறமும், மிகப்பெரிய உருவும், பெருவெப்பமும், பேரொளியும், சோதிப் பிழம்பாயும், மிக்க விசையுடன் வானிடை இடையறாது இயங்கிக் கொண்டிருப்பதனாலும் இவ்விண்மீன் பெயரைச் சிவப்பரம்பொருளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர் நம் முன்னோர். பேரண்டங்களை எல்லாம் கடந்த பெரியோனாகவும், பேராற்றல், பெருங்கருணை, பேரொலி, எங்கும் நிறைந்த பரம்பொருளாயும் விளங்கும் சிவப்பரம்பொருளை இவ்விண்மீனோடு ஒப்பிட்டு மகிழ்ந்தனர். இதனாலேயே சிவப்பரம்பொருளுக்கு ஆதிரையான் என்ற பெயர் வந்தது.[ திருவாதிரை நட்சத்திரம் ---பீட்டல்கியூஸ் (Betelgeuse) பற்றிய குறிப்பு இறுதியில் -படத்துடன் ]

மார்கழித் திங்களில் திருவாதிரை விண்மீன் கூடிய நிறைமதி திங்களில் பாவையர் நோற்கும் திருவெம்பாவை நோன்பு, மார்கழித் திங்களில் திருவாதிரைக்குப் பத்து நாட்களுக்கு முன் தொடங்கித் திருவாதிரைத் திருநாளுடன் முடிவுபெறும். ஆருத்ரா தரிசனம் என்று வடமொழியில் அழைக்கப் பெறும் இத்திருநாள் தில்லைச் சிதம்பரம், திருவுத்தரகோசமங்கை, திருவாரூர் போன்ற தலங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது.

திருவாதிரைத் திருநாளை, “மதியாணி புனிதன் நன்னாள்” என்கிறார் சேக்கிழார் பெருமான்.

திருவாதிரை திருநாள் அன்று, திருவாரூரிலுள்ள வீதிவிடங்கப் பெருமான் என்று அழைக்கப்படும் ஆடல் அரசுப் பெருமானின் திருவுலாவில், தேவர், முனிவர் ஆகியோரின் முன்னே நின்று சேவித்து மகிழ்ந்தார் அப்பர் பெருமான் என்று சேக்கிழார் குறிப்பிடுவார். சேந்தனார் தம் திருப்பல்லாண்டில், தில்லைச் சிதம்பரத்திலுள்ள ஆடல் அரசின் திருவாதிரைத் தேர் உலாவில், தேவர் குழாம், நாராயணன், நான்முகன், தீக்கடவுள், காலன், இந்திரன் போன்றோர் திசை அனைத்தும் நிறையவும், நிலவுலகத்தோர் பெருமானின் பழம்பெரும் புகழைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வந்தனர் என்று பாடுகின்றார்.


வீதிகள் தோறும் வெண்கொடிகளாலும், முத்துச் சரங்களாலும் அலங்கரிக்கப் பெற்று, விலையுயர்ந்த மணிகள் பொதிக்கப்பட்ட பொற்கவரி கொண்டு வீசப்பெற்று, முறையாக பத்தர்களும், பாவையர்களும் சூழ, ஞான வடிவாய் வெண்மையான மண்டையோடுகளை மாலையாக அணிந்த சாதுக்களும் சூழ வருமாறு அமைந்த ஆதிரைப் பெருநாள் என்று திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாதிரைப் பெருநாளைச் சிறப்பித்துப் பாடுகின்றார்.


திருமயிலையில் சாம்பலாய்க் குடத்திலிருந்த பூம்பாவையை உயிர் பெற்று எழச்செய்த அருள்நிகழ்ச்சியின் போது, “கபாலீச்சுரத்தில் அமர்ந்த இறைவனின் ஆதிரைநாள் சிறப்பினைக் காணாது போவாயோ பூம்பாவாய்?” என்று திருவாதிரை திருநாளின் சிறப்பினைக் குறிப்பிடுகின்றார். திருவாதிரைத் திருநாளன்று பல அரிய அருள்நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு மார்கழித் திங்கள் திருவாதிரையன்றே புலிக்கால் முனிவர் எனப்படும் வியாக்கிரபாதர் என்பவருக்கும், பதஞ்சலி என்கின்ற பாம்புக்கால் முனிவருக்கும் கூத்தப் பெருமான் தம்முடைய திருக்கூத்துக் காட்சியினை நல்கினார் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.


மார்கழித் திருவாதிரையன்றே திருஞானசம்பந்தர் தோன்றிய நாளாகவும், அவருக்கு உமையம்மை சிவஞானப்பால் ஊட்டிய நாளாகவும் குறிக்கப் பெறுகிறது. தவிர திருப்பெருந்துறையில் மாணிக்கவாசக சுவாமிகள் தோன்றிய நாளாகவும் இந்நாள் கொண்டாடப் பெறுகிறது. திருப்பல்லாண்டு அருளிய சேந்தனாரின் வாழ்க்கை வரலாறோடு தொடர்புடைய சிறப்பு நாளாகவும் திருவாதிரைத் திருநாள் திகழ்கின்றது.


ஒரு மார்கழித் திருவாதிரைத் திருநாளுக்கு முதல் நாள் பெருமான் அடியவர் வேடத்தில் சேந்தனார் இல்லம் செல்லவும், சேந்தனார் அவருக்கு அன்று கிடைத்த பிட்டையும் களியையும் உணவாகக் கொடுக்க, மறுநாள் விடியலில் ஆடல் அரசு பெருமான் சிற்சபையில் பிட்டும் களியும் சிந்திக் கிடக்குமாறு இறைவன் செய்தருளினார்.


அன்றைய தினம் திருவாதிரைத் திருவுலா தேர் நகராமல் நிற்கவும், சேந்தனார் வந்து திருப்பால்லாண்டு பாட எமது தேர் நகரும் என்று இறைவன் உணர்த்தியருளினார். சேந்தனாரை உலகிற்குக் காட்டித் தன் தேரை நகரச் செய்து, திருப்பல்லாண்டினைச் சைவர்களுக்குக் கூத்தப்பெருமான் கொடுத்தருளிய உயரிய நாள் இத்திருவாதிரைத் திருநாள்.


இத்தகைய சிறப்பு மிக்க திருநாளில் நாமும் உண்மையோடு வழிபட்டால் நமக்கும் இறைவனின் திருவருள் கிட்டும் என்ற எதிர்ப்பார்ப்புடனேயே திருவாதிரைப் பெருநாள் கொண்டாடப் பெறுகிறது.


தில்லைச் சிதம்பரம் போன்ற பெரிய கோயில்களில் திருவாதிரைக்கு முன் பத்து நாட்களுக்குப் பெருமானைப் பல்வேறு ஊர்திகளில் வைத்து உலா வருவிப்பதும், ஒவ்வொரு நாளும் மாணிக்கவாசக சுவாமிகளை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை ஓதுவிக்கின்ற நிகழ்வினைச் செய்வதும், ஒன்பதாவது நாள் இரவு பெருமானும் பெருமாட்டியும், திருநடனக் காட்சி அளிக்கும் நிகழ்வினை நடத்துவிப்பதும் போன்ற நிகழ்வுகள் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்துப் பல்வேறு வகையான திருமஞ்சனங்களை (அபிசேகம்) நிகழ்த்துகின்றனர்.


திருமஞ்சனங்கள் முடிவுற்ற பின்பு பெருமானுக்கு அரச அலங்காரம் என்ற சிறப்பு ஒப்பனை செய்யப்பெற்று அரச அருட்காட்சி (இராஜ தரிசனம்) நல்குவார்.


இவ்வருட்காட்சியினைக் காண்பதே திருவாதிரை தினத்தின் முத்தாய்ப்பு வழிபாடாகத் திகழ்கின்றது.


ஆடல் அரசுப் பெருமான் நிகழ்த்துகின்ற ஐந்தொழிலில் மறைத்தல் தொழிலை நினைப்பிப்பதாக இத்திருவாதிரைத் திருநாள் நிகழ்த்தப் பெறுகிறது என்றும் கூறுவர். ‘ஆ’ என்றால் ஆன்மா அல்லது உயிரைக் குறிக்கின்றது. ‘திரை’ என்பது மறைத்தைலைக் குறிக்கின்றது. எனவே “ஆதிரை” உயிருக்கு இறைவன் செய்கின்ற மறைத்தல் தொழிலை உணர்த்துவது என்பர்.


உயிர்கள் உலகில் பக்குவம் பெறுகின்ற வரையிலும் உலக முகமான, பொன், பொருள், உறவு முறைகள், என்ற உணர்வுகளை மேலோங்கச் செய்து தன்னைக் காட்டாது மறைத்துக் கொள்கிறான் இறைவன்.


இக்காலத்தில் இறையுணர்வான மெய்யுணர்வு மறைந்தே நிற்கின்றது. பின்பு உயிர்கள் பக்குவமுற்ற காலத்து உலக முகமான உணர்வுகளைக் குறைத்து இறையுணர்வு முகமான உணர்வினையும், அறிவினையும் மேலோங்கச் செய்து தன்னைக் காட்டுகின்றான் இறைவன். இதுவே இறைவன் உயிர்களுக்குச் செய்யும் மறைத்தல் தொழில் எனப்படுகிறது.


இறைவனின் திருவருள் பெருங்கருணையினால் நிகழும் இச்செயலினை நினைவு கூறுவதே திருவாதிரைப் பெருநாள் என்கின்றனர்.


எனவே திருவாதிரைத் திருநாள் இறைவன் நிகழ்த்திய அரிய அருள் நிகழ்ச்சிகளை எண்ணுவதற்கும், பெருமான் அவன் அடியார்களுக்கு அவனது திருநடனக் காட்சியை அளித்து அருளியதை நினைப்பதற்கும், உயிர்களுக்காக பெருமான் நிகழ்த்தும் அருட்செயலான மறைத்தல் தொழிலை உணர்வதற்கும் வழிவகுக்கின்றது.


திருவாதிரை விரதம்:


மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நன்நாளில் அனுட்டிப்பது திருவாதிரை விரதம். இந்த விரதம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது. இதனையொட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும், ஆதிரையான் என்றும் கூறுவர்.


மார்கழித் திங்கள் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புக்கள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகுந்த சிறப்புடையது. இவ்விரதம் சிதம்பரத்தில்லிருந்து அனுட்டிப்பது உத்தமோத்தமம். அங்கு ஆருத்திரா தரிசனம் செய்வதற்காக அநேகர் செல்வர். ஆருத்திரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இவ் விரதத்தில் உபவாசம் இருத்தல் மேலாம்.


சங்கரசங்கிதை என்னும் வடமொழி நூலின் உபதேச காண்டத்தில் இவ்விரதமகிமை கூறப்பட்டுள்ளது. கச்சியப்பசிவாசாரியருடைய மாணாக்கராகிய கோனேரியப்ப முதலியார் தமிழில் இதனை மொழி பெயர்த்துள்ளார்.


இவற்றை எண்ணித் திருவாதிரைத் திருநாளை திரு வந்தடைய திருவுளம் கொண்டு கொண்டாடுவோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!


திருவாதிரை (நட்சத்திரம்)- :


தற்கால வானியல் படி இது ஓரியன் என்ற விண்மீன் குழுவில் கணக்கிடப்படுகிறது. இதனுடைய அறிவியற்பெயர் {\displaystyle \alpha Orionis} {\displaystyle \alpha Orionis}. மேற்கத்திய உலகத்தில் வழக்கிலிருக்கும் பெயர் பீட்டல்கியூஸ் (Betelgeuse) ஆகும். இந்திய வானியலின் பழைய மரபுப்படியும் ஜோதிடமரபுப்படியும் இது மிதுனராசியில் கணக்கிடப்படுகிறது.


மூதிரை, செங்கை, யாழ், ஈசர் தினம், அரணாள், யாதிரை ஆகிய தமிழ்ப்பெயர்களை திவாகர, பிங்கல நிகண்டுகள் சுட்டியுள்ளன.


ஓரியன் விண்மீன் குழுவே வானில் ஒரு தவிர்க்கமுடியாத நேர்த்தியுடன் விளங்கும் குழு. மையத்தில் ஓரியன் கச்சை. வடகிழக்கில் ராட்சத நட்சத்திரமான திருவாதிரை. தென்மேற்கில் இன்னொரு பேருரு நட்சத்திரமான Rigel. இன்னும் இந்தக் குழுவில் அற்புதமான காட்சிகள் அனேகம். திருவாதிரை வானிலேயே மிகப்பிரகாசமான ௨௦ நட்சத்திரங்களில் ௧௦ ஆம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தைப் பிடித்திருக்கும் மிருகவியாதர் (Sirius)நட்சத்திரமும் இதே நேரத்தில் சற்று தென்கிழக்கில் தெரியும். ஓரியன் கச்சையை தென்கிழக்கில் நீட்டிக்கொண்டுபோனால் முதலில் தென்படும் மிகப்பிரகாசமான நட்சத்திரம் தான் மிருகவியாதர். திருவாதிரை ௩௧௦ ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.


படத்தினைப் பார்க்கவும் --திருவாதிரை நட்சத்திரம் பீட்டல்கியூஸ் (Betelgeuse) எவ்வளவு பெரியதென்று ;சூரியன் புள்ளிபோல தெரிகிறது .


[ ஒளியாண்டு --ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் தூரம்; ஒளியின் வேகம் நொடிக்கு சுமார் 1,86,282 மைல்கள் ]

No comments:

Post a Comment