Showing posts with label RAMAYANAM. Show all posts
Showing posts with label RAMAYANAM. Show all posts

Wednesday, November 8, 2023

RAMAYANAM PART 112

 இராமாயணம் தொடர் 112

முதல் போர் முடிவு!...

🎐 இராமர் மற்றும் இராவணனின் யுத்தத்தைக் காண்பதற்கு பிரம்மன் முதலான தேவர்கள் வானத்தில் வந்து இராமர் வெற்றி பெற வாழ்த்தினார்கள். இராமர் இராவணனுடன் போர் புரிய ஆயத்தமாகி, தன் வலிமையான கோதண்டத்தின் நாணை இழுத்து ஓர் பேரொலி எழுப்பினார். இராவணன் வில்லை வளைத்து கணக்கற்ற அம்புகளை ஒரே நேரத்தில் தொடுத்தான். இராவணன் எய்த அம்புகளை துண்டுகளாக்கி, ஐந்து கொடிய கணைகளை இராமர் விடுத்தார். இந்த கணைகள் பல அரக்கர்களை ஒழித்தது. இராமர், இராவணனுக்கும் இடையில் கடும்போர் நடந்தது. இராமரின் கோதண்டத்தில் இருந்து வந்த அம்புகள் அரக்கர்களின் தலைகளை அறுத்தும் பல்லாயிர அரக்கர்களையும் வீழ்த்தியது. இராமரை சுமந்து கொண்டிருக்கும் அனுமன் தன் கைகளாலும், கால்களாலும் அரக்கர்களை கொன்று வீழ்த்தினான். எந்த திசையைப் பார்த்தாலும் அரக்கர்களின் பிணங்கள் குவிந்த வண்ணமாக கிடந்தன.

🎐 யானைகளும், குதிரைகளும் என அனைத்தும் இராமரின் அம்புகளுக்கு இரையாயின. கடைசியில் இராவணன் மட்டும் தனித்து நின்றான். தன் அரக்கர் படைகள் பிணங்களாக குவிந்து கிடப்பதை பார்த்த இராவணன் கடும்கோபம் கொண்டான். உடனே அவன் இராமரை நோக்கி அம்பு எய்தினான். இராமர் அந்த அம்பை உடைத்து தூள் தூளாக்கிவிட்டு மற்றொரு அம்பை இராவணனை நோக்கி எய்தினார். இந்த அம்பு இராவணனின் வில்லை அறுத்தது. இராமர் மறுபடியும் ஒரு அம்பை ஏவி இராவணனின் தேரை அறுத்து ஒடித்தார். ஆனால் இராவணனுக்கு புதிது புதியதாக தேர்கள் வந்து கொண்டிருந்தன. இராமர் புதியதாக வந்த அனைத்து தேர்களையும் அறுத்து ஒடித்தார். இராமர் மற்றொரு வில்லை ஏவி இராவணனின் தலையில் அலங்கரித்து கொண்டிருக்கும் பத்து மணி மகுடங்களையும் கீழே வீழ்த்தினார். 

🎐 அப்பொழுது இராவணன் சந்திரன் இல்லாத நிலவு போலவும், சூரியன் இல்லாத பகல் போலவும் காட்சியளித்தான். இராவணன் போர்கருவிகள், தன் வில், தேர், அரக்கர் படைகள் எதுவும் இல்லாமல் தன் கால் விரலால் நிலத்தை களைத்துக் கொண்டு, தலை குனிந்து நின்றான். இதனைப் பார்த்து கொண்டிருந்த தேவர்கள், 'தர்மத்தை அழித்த பாவிகளின் நிலைமை இது தான்" என்றனர். இராமர் தன் எதிரில் தலைகுனிந்து நிற்கும் இராவணனை பார்த்து இரக்கம் கொண்டு, இராவணா! இப்பொழுது உன்னிடம் எதுவும் இல்லாமல் வெறும் கையுடன் இருக்கிறாய். இப்பொழுது உன்னை கொல்வது நன்றல்ல. இப்பொழுது தெரிந்துக் கொள்.

🎐 தர்மத்தால் மட்டுமே போர்களில் வெல்ல முடியுமே தவிர, வலிமையால் அல்ல. நான் உன்னை அரக்கர்களை கொன்றதை போல கொன்றிருப்பேன். ஆனால் தனித்து நிற்கும் உன்னை நிலையை பார்த்து உன்னை கொல்லாமல் விட்டுவிடுகிறேன். அரக்கனே! இங்கிருந்து ஓடிபோய் உன் நகரத்திற்குள் ஒளிந்துக் கொள் என்றார். உனக்கு நான் மறுபடியும் ஒரு வாய்ப்பளிக்கிறேன். சீதையை என்னிடம் ஒப்படைத்துவிட்டு, வீபிஷணனை இலங்கையின் அரசனாக முடிசூட்டிவிடு. உன்னை நான் மன்னித்து உயிருடன் விடுகிறேன். அப்படி இல்லையென்றால் என்னை எதிர்த்து போர் புரியும் ஆற்றல் உன்னிடம் இருந்தால் உன் சேனைகளை திரட்டி என்னை எதிர்த்து போரிடு என்றார். இப்பொழுது நீ இங்கிருந்து செல். உன் மனைவி உன்னை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பாள். நாளை உன் படைகளை திரட்டி கொண்டு இங்கு வா என்றார்.

தொடரும்...



RAMAYANAM PART 111

         இராமாயணம் தொடர்..111

இலட்சுமணனின் போர் திறமை!...

🌀 இராவணன் அனுமனிடம், இப்பொழுது நான் உன் மார்பில் குத்துகிறேன். என் குத்தினால் நீ மாண்டு போவாய். அப்படி இல்லாமல் நீ பிழைத்துக் கொண்டால் உனக்கு அழிவில்லை. உன்னால் என்னை கொல்ல முடியவில்லை. என்னால் உன்னை கொல்ல முடியவில்லை என்றால் உனக்கும் எனக்கும் போரில்லை எனக் கூறினான். பிறகு அனுமன் தன் மார்பை காட்டி இராவணன் முன் நின்றான். இராவணன், கண்களில் தீப்பொறி பறக்க, பற்களை கடித்து, விரல்களை பலமாக மடித்து அனுமனின் மார்பில் ஓங்கி குத்தினான். மேரு மலைபோல் நின்ற அனுமன் இராவணனின் பலமான அடியால் சற்று நிலை தடுமாறினான். அனுமன் நிலை தடுமாறியதை பார்த்த தேவர்கள் மிகவும் வருந்தினர். போர் தொடர்ந்து நடந்துக் கொண்டு இருந்தது. வானர படைகள் கற்களையும், மலைகளையும், பாறைகளையும் எடுத்து அரக்கர்கள் மீது வீசினர். இதனைப் பார்த்த இராவணன் அவற்றை தன் அம்புகளுக்கு இரையாக்கினான். இராவணன், வானர வீரர்களை கொன்று குவிந்த வண்ணம் இருந்தான்.

🌀 இராவணனால் வானர வீரர்கள் பலர் மாண்டனர். இராவணனின் அம்பு வானர படைத்தலைவன் நீலனின் உடலில் துளைத்தது. இதனால் நீலன் மயங்கி வீழ்ந்தான். ஜாம்பவானும் இராவணனின் ஆயுதத்தால் அடிப்பட்டு கீழே விழுந்தான். இதைப் பார்த்த இலட்சுமணன் தன் வில்லை எடுத்து இராவணனின் அம்புகளை தகர்த்து எறிந்தான். இலட்சுமணன் ஓர் வில்லினால் இராவணனின் கை வில்லை அறுத்தெறிந்தான். இலட்சுமணனின் வீரத்தையும், போர் திறமையும் கண்டு இராவணன் இலட்சுமணனை புகழ்ந்தான். உன் போர் வலிமை சிறப்பாக உள்ளது. அம்பு தொடுக்கும் உன் கையின் விவேகமும், நீ எதிர்த்து நிற்கும் உன் தைரியமும் மிகச் சிறந்தது. நீ மற்றவர்களை காட்டிலும் ஒப்பற்றவன் என்றான். பிறகு இராவணன், இலட்சுமணா! உன் அண்ணன் இராமனும், இந்திரனை வென்ற இந்திரஜித் மற்றும் என்னை காட்டிலும் உனக்கு நிகர் சிறந்த வீரர் இவ்வுலகில் இல்லை என்றான்.

🌀 பிறகு இலட்சுமணன் இராவணனை பார்த்து அம்புகளை ஏவினான். இராவணன் இவனை வெல்லுதல் என்பது மிக எளிதான விஷயம் அல்ல என நினைத்து, பிரம்மன் கொடுத்த ஒளிமிக்க வேலை எடுத்து இலட்சுமணன் மீது வீசினான். அந்த வேல் இலட்சுமணனின் அம்புகளை தகர்த்தெறிந்து இலட்சுமணன் மேல் பாய்ந்தது. இலட்சுமணன் மயங்கி கீழே விழுந்தான். இலட்சுமணன் மயங்கி விழுந்ததை பார்த்த வானர வீரர்கள் பயந்து ஓடினர். அரக்கர்கள் ஆரவாரம் செய்தனர். இலட்சுமணன் மயங்கி கீழே விழுந்ததை பார்த்த இராவணன் அருகில் சென்று இலட்சுமணனை தூக்க முயன்றான். வெள்ளிமலையை அள்ளி எடுத்த இராவணனால் இலட்சுமணனை தூக்க முடியவில்லை. தன் இருபது கரங்களாலும் தூக்க முயற்சித்தும் இராவணனால் தூக்க முடியவில்லை. இலட்சுமணை சிறிதும் கூட இராவணனால் அசைக்க முடியவில்லை. இலட்சுமணனை தூக்க முடியாமல் இராவணன் பெருமூச்சுவிட்டான்.

🌀 இதனைப் பார்த்த அனுமன் இலட்சுமணனை தூக்கிக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றான். இராவணனால் தூக்க முடியாத இலட்சுமணனை அனுமன் எளிதாக தூக்கிச் சென்றதை பார்த்து அரக்கர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அனுமன் இலட்சுமணனை தூக்கிச் சென்றது, ஒரு தாய் தன் குழந்தையை தூக்கிச் செல்வது போல் இருந்தது. மயக்கம் தெளிந்த இலட்சுமணன் அனுமனை அழைத்துக் கொண்டு இராமர் இருக்கும் இடத்திற்குச் சென்றனர். இராமர், இராவணனுடன் போர் புரிய ஆயத்தமாக நின்று கொண்டிருந்தார். இராவணன் தன் தேரை செலுத்திக் கொண்டு இராமருக்கு எதிரே வந்து நின்றான். போர் புரிய இராவணன் தேரில் வந்து நின்றதும், அனுமன், இராமர் தரையில் நின்று போர் புரிவதா! என நினைத்து வருந்தினான். பிறகு அனுமன் இராமரிடம், பெருமானே! தாங்கள் என் தோளின் மேல் ஏறி போர் புரியுமாறு வேண்டினான். இராமரும் அனுமனின் வேண்டுகோளை ஏற்று போர் புரிய தொடங்கினார்.

தொடரும்...

RAMAYANAM PART 110

 இராமாயணம் தொடர் 110

இராவணன் அனுமனுடன் சண்டையிடுதல்!...

🌟 இராவணனின் அம்புகளுக்கு வானர வீரர்கள் பலர் இரையாயினர். இராவணனது வில் திறமையை கண்ட இலட்சுமணன் இவனை என் அம்புகளுக்கு இரையாக்குவேன் என விரைந்து வந்தான். அங்கு வந்த இலட்சுமணன் தன் வில்லின் நாணை இழுத்து ஒலி எழுப்பினான். அங்கு அனுமனின் உடலில் பல அம்புகள் துளைத்து கீழே வீழ்ந்து கிடைப்பதை கண்டான். உடனே இலட்சுமணன் அம்புகளை ஏவி பல அரக்கர்களை அழித்தான். அரக்கர் படைகளும் இலட்சுமணனை சூழ்ந்து தாக்கத் தொடங்கினர். அரக்கர்கள் இவன் இராவணனை நெருங்கி விடக்கூடாது என்று உறுதி கொண்டு இலட்சுமணனை எதிர்த்து போரிட்டனர். அரக்கர்கள் வீசிய அம்புகளை இலட்சுமணன் தகர்த்து எறிந்தான். கட்டுக்கடங்காத அம்புகள் இலட்சுமணனின் உடலில் நுழைந்தது. இலட்சுமணன் தனித்து நின்று அரக்கர்களை அழிப்பதைக் கண்ட இராவணன் கடுங்கோபம் கொண்டு தேரை செலுத்தி இலட்சுமணனின் அருகில் வந்தான்.

🌟 தன் முன் வந்து நின்ற இராவணனை பார்த்த இலட்சுமணனுக்கு கோபம் அதிகமானது. இலட்சுமணன் இராவணனை பார்த்து, அன்னை சீதையை காவல் புரிந்த என்னை வஞ்சனையால் கவர்ந்துச் சென்ற நீ என்னிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது என்றான். பிறகு இலட்சுமணன் அம்புகளை இராவணன் மீது எய்தினான். இராவணனும் இலட்சுமணன் மீது அம்புகளை எய்தினான். தன் அம்புகளால் இலட்சுமணன், இராவணனை செயல் இழக்கும் படி செய்தான். இராவணன் இலட்சுமணனின் அம்புறாத் துணியை அறுத்தெறிந்தான். அப்பொழுது அனுமன் எழுந்து, இராவணா! இப்பொழுது நாம் முஷ்டி யுத்தம் புரிவோம் என்றான். பிறகு அனுமன் தனது விஸ்வரூபத்தை எடுத்து நின்றான். அனுமன் இராவணனை பார்த்து, இராவணா! வா! என்னை எதிர்த்து சண்டையிடு என்றான். இராவணனும் துணிச்சலோடு சண்டைக்கு எதிர்த்து நின்றான்.

🌟 அனுமன் இராவணனிடம், நான் குத்தும் ஒரு குத்துக்கு உன்னால் தாக்கு பிடிக்க முடியுமா? ஒரு குரங்கின் வலிமையை நீ பார்த்திருக்க மாட்டாய். இன்று நீ காண்பாய் என்றான். பிறகு அனுமன், இராவணா! உன் மார்பில் நான் ஒரு குத்து குத்துவேன். நீ பிழைத்துக் கொண்டால் என் மார்பில் குத்து, நான் பிழைத்துக் கொண்டால் இனி உனக்கும் எனக்கும் போர் புரிய நிலைமையில்லை என்றான். இராவணன் அனுமனின் வீர வசனங்களை கேட்டு, அனுமனே உன் வீரத்திற்கு நிகர் எவரும் இல்லை. நான் உன் முஷ்டி யுத்தத்திற்கு சம்மதிக்கிறேன். அனுமனே ஒரு மாவீரனோடு போரிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இனி நான் போர் புரிய தேவையில்லை. வா! என்னை வந்து குத்து என மார்பைக் காட்டி நின்றான். அனுமன் இராவணனிடம், நான் உன் வீரத்தை பாராட்டுகிறேன் என்றான்.

🌟 பிறகு அனுமன் ஆராவாரம் செய்து தன் கண்களை அகல விரித்து தன் கையின் ஐந்து விரல்களை பலமாக மடக்கி இராவணனின் கவசம் அணிந்த உடல் சிதறும்படி இராவணனின் மார்பில் ஓங்கி குத்தினான். அனுமன் குத்தினால் மலைகள் பெயர்ந்து விழுந்தன. இதனைப் பார்த்த அரக்கர்கள் மூர்ச்சித்து கீழே விழுந்தார்கள். மலைகள், பாறைகள், மரங்கள் எல்லாம் நிலைகுழைந்து போயின. இதைப்பார்த்த தேவர்கள் நடுங்கி போனார்கள். வானர வீரர்களும் நிலைகுழைந்து போனார்கள். அனுமனின் குத்தினால் இராவணனுக்கு உயிர் போய் உயிர் வந்தது. அவனது கண்களிலிருந்து தீ வெளிப்பட்டது. நிலை தடுமாறினான். பிறகு தன் உணர்வை பெற்ற இராவணன் அனுமனிடம், உனக்கு நிகர் எவரும் இல்லை. இதுவரை நான் அடையாத துன்பத்தை எனக்கு காட்டி விட்டாய். எனக்கு நிகரான வலிமை உன்னிடம் இருக்கிறது. நீ சிறந்த வீரன் என்பதையும் அறிந்துக் கொண்டேன். இப்பொழுது நான் உன் மார்பில் குத்துகிறேன் என்றான்.

தொடரும்...

RAMAYANAM PART 109

 இராமாயணம் தொடர் 109

இராவணன் போருக்கு செல்லுதல்!...

தூதர்கள் சொன்ன செய்தியைக் கேட்டு, இராவணனின் முகம் தீ போல் சிவந்தது. இராவணன், பிரஹஸ்தனைக் கொன்றவன் யார்? என கோபத்துடன் கேட்டான். அதற்கு தூதர்கள் பிரஹஸ்தனை கொன்றது, வானர படைத்தலைவன் நீலன் என்றார்கள். இந்திரனையும் வென்ற பிரஹஸ்தன் மிகுந்த பலம் கொண்டவன். இவ்வளவு பலம் கொண்ட பிரஹஸ்தனை, கேவலம் ஒரு குரங்கு கொன்றுவிட்டதா! என மனதில் நினைத்து புலம்பினான். கோபம் இராவணனின் தலைக்கேறியது. உடனே அவன் போருக்கு தயாராகி, ஆயிரம் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறினான். இத்தேர், இந்திரன் போரில் தோற்றபோது இராவணனுக்குக் கொடுத்த தேர். அதிரும்படி ஒலி எழுப்பும் தேர். இத்தேர் விண்ணுலகுக்கும் சென்று வரும் வலிமை பெற்றது. இராவணன் தான் வணங்கும் ருத்ரனை மனதால் வணங்கி, தன் வில்லை கையில் எடுத்து அதில் நாணைப் பூட்டி ஒலி எழுப்பினான்.

பிறகு அவன் தன்மார்பில் கவசத்தை அணிந்துக் கொண்டு தும்பைப்பூவை மாலையாக கழுத்தில் அணிந்துக் கொண்டான். இராவணன் போருக்கு தேவையான ஆயுதங்களை எடுத்துக் கொண்டான். ஏவலர்கள் இராவணனின் தலைக்குமேல் வெண்கொற்ற குடையை பிடித்துக் கொண்டனர். முரசுகள் முழங்கின. இதனைப் பார்த்து தேவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். இராவணனின் தேரில் வீணைக்கொடி பறந்தது. இராவணன் முதல் நாள் போருக்கு புறப்பட்டான். இராவணனின் கண்களில் தீப்பொறி பறக்க அவன் போர்க்களத்திற்கு வந்துச் சேர்ந்தான். இராவணன், கோபத்தோடும், படைகளோடும் போருக்குப் வந்தச் செய்தியை ஒற்றர்கள் இராமனிடம் ஓடிச் சென்று தெரிவித்தனர். இராமர், போர்க்கோலம் பூண்டு, தன் கோதண்டத்தையும், வில்லையும், அம்புறாத் துணியையும் கட்டிக் கொண்டு, தும்பை மாலை சூடிக் கொண்டு புறப்பட்டார். இலட்சுமணனும், இராமனோடு போர்க்கோலம் பூண்டு இராவணனை போரில் சந்திக்க புறப்பட்டான்.

எதிரெதிராக அரக்கர் சேனையும், வானர சேனையும் போருக்குத் தயாராக நின்றனர். போர் தொடங்கியது. அரக்கர் சேனையும், வானர சேனையும் மிகக் கடுமையான போரில் ஈடுபட்டனர். இதற்கு காரணம் வானர படைகளுக்கு இராமர் தலைமை வகித்துப் போரிடுவதும், அரக்கர் படைக்கு இராவணன் தலைமை வகித்துப் போரிடுவது தான் இந்த கடுமையான போருக்கு காரணம். போரில் வானர வீரர்கள் மிகக் கடுமையாகப் போர் புரிந்தனர். ஒரு புறம் வானர படை வீரர்கள் மற்றொரு புறம் அரக்க படை வீரர்கள் கடுமையாக போர் புரிந்தனர். போரில் மாண்டவர்கள் பலர். இதனால் அந்த இடம் இரத்த பூமியாக தென்பட்டது. காணும் இடமெல்லாம் பிணங்களாக தெரிந்தன. இராவணன் தன் வில்லில் நாணை பூட்டி அம்புகளை எய்த தொடங்கினான். அப்போது சுக்ரீவன் அங்கு வந்து இராவணனை தடுத்து நிறுத்தி போர் புரிய தொடங்கினான். இருவருக்கும் இடையில் மிகக் கடுமையாக போர் நடந்தது. இராவணனின் பலமான தாக்குதலை தாக்கு பிடிக்காமல் சுக்ரீவன் மயங்கி கீழே விழுந்தான்.

இதைப் பார்த்த அனுமன் அங்கு வந்தான். இராவணா! பலம் இருந்தால் என்னிடம் வந்து போரிடு என்றான். பிறகு அனுமன் தன் பக்கத்தில் இருந்த பெரிய மரம் ஒன்றை பிடுங்கி இராவணன் மீது வீசினான். இராவணன் அம்மரத்தின் மீது ஓர் அம்பை ஏவி அதை தூள் தூளாக்கினான். அனுமன் மறுபடியும் ஒரு மலையை பிடுங்கி இராவணனை நோக்கி எறிந்தான். ஆனால் இராவணன் அதை தடுக்கும் முன்பு மரம் அவனது தோளை தாக்கியது. இதனால் பெருங்கோபம் அடைந்த இராவணன் அம்புகளை அனுமன் மீது எய்தினான். இராவணன் எய்திய அம்புகள் அனுமனின் உடலை துளைத்தது. ஆனால் அனுமன் அதை பொருட்படுத்தாமல் போர் புரிந்தான். அனுமன் மறுபடியும் ஒரு மரத்தை பிடுங்கி இராவணனை நோக்கி எறிந்தான். ஆனால் அந்த மரம் இராவணனின் தேரோட்டியின்மேல் விழுந்து பல அரக்கர்களை கொன்றது. உடனே வேறோரு தேரோட்டி தேரில் ஏறி தேரைச் செலுத்தினான். இராவணன் ஆயிரமாயிரம் அம்புகளை வானர படைகள் மீது எய்தினான். இதனால் பல வானரங்கள் மாண்டனர்.

தொடரும்...

RAMAYANAM PART 108

 இராமாயணம் தொடர் 108

வானர படைகளும், அரக்க படைகளும்!...

✼ யானைப் படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை எழுந்தபோது புழுதிப் படலம் வானுயர எழுந்தது. அரக்கர் படைகளின் பெரும் பலத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வானர சேனைகள் பயந்து ஓடின. இதைப் பார்த்த சுக்ரீவன் கடும் கோபமடைந்தான். உடனே சுக்ரீவன் தன் பக்கத்தில் இருந்த ஓர் பெரிய கடம்ப மரத்தை வேரோடு பிடுங்கி போர் செய்தான். மரத்தால் அரக்கர்களின் படைகளை சம்ஹாரம் செய்தான். அரக்கர்கள் தோல்வி முகத்தில் இருப்பதைப் பார்த்த வச்சிரமுட்டி என்னும் கொடிய அரக்கன், கண்களில் தீப்பொறி பறக்க அங்கு வந்துச் சேர்ந்தான். வச்சிரமுட்டி செய்த போரில் வானரங்கள் பலர் மாண்டனர். தன் படை வீரர்கள் மாண்டு போவதை கண்டு கடும் கோபம் கொண்ட சுக்ரீவன் அந்த வச்சிரமுட்டி மீது பாய்ந்தான். அவனது வில்லையும், அம்புறாத் துணியையும் அறுத்து எறிந்து விட்டு ஆலகால விஷம் போல் போரிட்டு வச்சிரமுட்டியையும் கொன்றான்.

✼ வச்சிரமுட்டி இறந்தபின் அரக்கர்களின் படை நிலை கலைந்து ஓடத் தொடங்கியது. இதனை கண்டு வானரர்கள் ஆரவாரம் செய்தனர். இலங்கையில் கிழக்கு வாயிலில், சூலம், வாள், வேல், வாளி முதலான ஆயுதங்களால் வானர வீரர்களைக் கொன்றனர். வானர வீரர்கள் வீசிய குன்றுகளாலும், மரங்களாலும் அரக்கர்கள் பலர் மாண்டனர். அப்போது வானரப் படை தளபதி நீலன் ஓர் பெரிய கடம்ப மரத்தைப் பிடுங்கி அரக்கர் படை மீது வீசினான். அரக்கர்களின் தேர்களும், குதிரைகளும், அரக்க வீரர்களும் இதனால் மாண்டு வீழ்ந்தனர். அப்பொழுது நீலனை எதிர்க்க கும்பானு என்னும் அரக்கன் வந்துச் சேர்ந்தான். மற்றொரு பக்கத்தில் இடும்பன் என்னும் கரடிப்படை வீரன் கும்பானுவை எதிர்த்துத் போரிட வந்தான். இருவருக்கும் இடையே கடும் போர் நடந்தது. நீண்ட நேர போருக்கு பின், அரக்கனை இடும்பன் தன் கைகளால் அடித்தும், வாயால் கடித்தும் அவனைக் கொன்றான்.

✼ சுமாலியின் மகன் பிரஹஸ்தன், அரக்கர் படைகள் தோற்பதைக் கண்டு போர் புரியத் தொடங்கினான். இதனைப் பார்த்த வானரப் படைத்தலைவன் நீலன் ஒரு பெரிய மரத்தை எடுத்து வீசினான். பிரஹஸ்தன் விட்ட அம்புகளால் அம்மரம் பொடிப்பொடியாகி கீழே விழுந்தது. நீலன், மரங்களைப் பிடுங்கி வீசி பிரஹஸ்தனின் தேர், வில், கொடி முதலியனவற்றை அறுத்தெறிந்தான். பிறகு பிரஹஸ்தன் தரையில் இறங்கி நேருக்கு நேர் போர் புரியத் தொடங்கினான். நீலன் பிரஹஸ்தனை தன் பலத்தால் தூக்கி எறிந்தான். பிரஹஸ்தனும் நீலனை பயங்கரமாக அடித்தான். இதனால் நீலன் கீழே விழுந்தான். கோபங்கொண்ட நீலன் பிரஹஸ்தனை மார்பில் பலமாக ஓங்கி அடித்தான். பிறகு நீலன் விடாமல் பிரஹஸ்தனை தோளிலும், மார்பிலும், நெற்றியிலும் மாறி மாறி குத்தினான். வலி தாங்க முடியாமல் பிரஹஸ்தன் அந்த இடத்திலேயே விழுந்து இறந்தான். இதைப் பார்த்த அரக்கர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடி ஒளிந்தனர்.

✼ தெற்கு வாயிலில் அங்கதன், சுபாரிசன் என்னும் அரக்கனுடன் போரிட்டான். அங்கதனுடைய பலமான தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல், சுபாரிசன் போரில் மாண்டு போனான். சுபாரிசன் மாண்டு போனதை அறிந்து அரக்கர் படைகள் அங்கிருந்து ஓடி ஒளிந்தனர். மேற்கு வாயிலில் அனுமன், துன்முகன் என்னும் அரக்கனையும் அவனது இருநூறு வெள்ள சேனைகளையும் எதிர்த்துப் போர் புரிந்துக் கொண்டிருந்தான். அனுமனின் கைகளால் ஏராளமான அரக்கர்கள் மாண்டனர். அனுமன், துன்முகனுடன் கடுமையாக போரிட்டு அவனைக் கொன்றான். இவ்வாறு நான்கு வாயில்களில் போர் நடந்தது. தூதுவர்கள், நான்கு வாயில்களிலும் நடந்த போரைப் பற்றி இராவணனிடம் சென்று செய்தியை கூறினர். அவர்கள், கிழக்கு வாயிலில் பிரஹஸ்தன், தெற்கு திசையில் சுபாரிசன், வடக்கு வாயிலில் வச்சிரமுட்டி, மேற்கு வாயிலில் துன்முகன் மாண்டச் செய்தியை இராவணனிடம் கூறினார்கள்.

தொடரும்...

RAMAYANAM PART 107

 இராமாயணம் தொடர் 107

முதல் நாள் போர்!...

✧ இராமர் என்னிடம், போருக்கு பயந்து அரண்மனையில் பதுங்கி கொண்டிருக்கும் உன்னிடம், அன்னை சீதையை இராமரிடம் ஒப்படைத்து விடு அப்படி இல்லையென்றால் போரில் அழிவது நிச்சயம் என இராமர் உன்னிடம் அன்பு காட்டும் பொருட்டு கூறினார் என்றான். மேலும் அங்கதன், உலகின் எட்டு திசைகளையும் போரில் வென்ற பெரு வீரன் என்ற பெயர் பெற்ற நீ, உன் நகரத்தை மாற்றார் சேனை வளைத்துக் கொண்டபோது போருக்குச் செல்லாமல், பயந்துகொண்டு உன் அரண்மனைக்குள் புகுந்து கொண்டால் உனக்கு பழியைத் தவிர வேறு என்ன கிடைக்கும் என்றான். இராவணனே, பெண்ணாசையால் அழிந்தவர் பலர். ஆசைக்கு அடிமையாகாதே. உன்னால் அரக்கர் குலம் அழிய போகிறது என்பதை மறந்து விடாதே. நீ இந்த இரண்டில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றான். அங்கதன் கூறியதைக் கேட்ட இராவணன், பெரும் கோபங்கொண்டான். கோபத்தால் அவன் கண்கள் சிவந்தன.

✧ உடனே இராவணன், இவனை பிடித்து கொல்லுங்கள் என கட்டளையிட்டான். அங்கதனை கொல்ல அரக்கர்கள் பாய்ந்தனர். அங்கதன் அந்த அரக்கர்களை தூக்கிக் கொண்டு வான் வெளியில் பறந்தான். அங்கதன் வான்வெளியில் போகும்போது அந்த அரக்கர்களை அடித்து கொன்று வீசினான். பிறகு அங்கதன் இலங்கை மக்களிடம், இராமர் போருக்கு வந்து விட்டார் என அறிவித்துவிட்டு அங்கிருந்து இராமர் இருப்பிடத்தை அடைந்தான். அங்கதன் இராமரின் திருவடியில் விழுந்து வணங்கினான். இராமர் அங்கதனிடம், இராவணனைப் பார்த்துப் பேசினாயா? அவன் அதற்கு என்ன சொன்னான் என்று கேட்டார். அங்கதன், அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் இராமரிடம் கூறினான். பிறகு அங்கதன் இராமரிடம், இவ்வளவு நடந்த போதிலும் அவன் தன் ஆசையை விட்டபாடில்லை என்றான். 

✧ அங்கதன் சொன்னதை கேட்ட அனைவரும், இனி நடக்கப் போவது பெரும் போர் தான், சமாதானம் அல்ல என்பதை அறிந்துக் கொண்டனர். முதல் நாள் போர் தொடங்கியது. வானர சேனைகள் போருக்கு புறப்பட்டன. இராமர், இலங்கை நகரைச் சுற்றியுள்ள அகழிகள் (பாதுகாப்புக்காக அரண்மனை அல்லது கோட்டையைச் சுற்றி அமைக்கப்படும், நீர் நிரம்பிய கொடும்பள்ளம்), முன்பு கடலில் அணைக் கட்டியது போல, மரங்களையும், பாறைகளையும் கொண்டு வந்து போட்டு இந்த அகழியை மூடிவிடுங்கள் என்று வானரப் படைக்கு ஆணையிட்டார். இராமரின் ஆணைப்படி வானர வீரர்கள் இலங்கை நகரத்தின் நான்கு புறத்திலுமுள்ள அகழிகளைத் தூர்த்தனர். வானரப் படைகள் அகழியைத் தூர்த்தபின், கோட்டை மதிலின் உச்சிக்கு ஏறிச்சென்று போருக்கு ஆரவாரம் செய்தனர். வானர வீரர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தினால் கோட்டை மதிற்சுவர்கள் தரையில் அழுந்தின. 

✧ அப்பொழுது இலங்கை நகரத்துக்குள் அரக்கர் படையும் போருக்கு எழுந்தன. முரசுகள் முழங்கின. இரு படைகளும் ஒன்றுக்கொன்று நேரெதிராக நின்று மோதத் தொடங்கின. வானரப் படைவீரர்கள் மரங்களையும், கற்களையும், தத்தம் பற்களையும் ஆயுதமாகக் கொண்டு போர் புரிந்தனர். அரக்கர்கள் வில், அம்பு, வேல் கொண்டு போர் செய்தனர். போர் இரண்டு புறத்திலும் மிகக் கடுமையாக நடந்தது. வானர வீரர்கள் வீசிய கற்களையும், மரங்களையும் அரக்கர்கள் தங்கள் ஆயுதங்களை கொண்டு பொடி பொடியாக்கினர். போர் நடந்த இடம் இரத்த வெள்ளமாகக் காட்சி அளித்தது. வானர வீரர்கள் அவர்களது பற்களாலும், கைகளாலும் அடித்து அரக்கர்களைக் கொன்றனர். அரக்கர்கள் வீசிய அம்புகளாலும், வேலாலும், வில்லாலும் பல்லாயிர வானர வீரர்கள் மாண்டு போயினர். இலங்கை நகரத்தின் மதில்கள் இரத்தத்தால் சிவந்து காணப்பட்டன.

தொடரும்...

RAMAYANAM PART 106

 இராமாயணம் தொடர் 106

இராவணனும் அங்கதனும்...!

✼ அங்கதன் இராவணனுடைய மணிமண்டபத்தை அடைந்தான். அங்கதனை பார்த்த அரக்கர்கள் அனுமன் தான் திரும்பி வந்துவிட்டான் என நினைத்து பயந்து ஓடினார்கள். இராவணனை பார்த்த அங்கதன், இவனை நம்மால் வெல்ல முடியுமா? இவனை இராமரை தவிர வேறு எவராலும் கொல்ல முடியாது என நினைத்துக் கொண்டான். பிறகு அங்கதன் இராவணன் முன்பு நின்றான். அங்கதனை பார்த்த இராவணன், மகோதரனிடம், மகோதரா! இந்த வானரம் நம் இலங்கை நகரை அழித்த வானரமா? எனக் கேட்டான். மகோதரன், அரசே! இந்த வானரம் இளம் வானரமாக இருக்கிறது. ஆதலால் இந்த வானரம் நம் இலங்கை நகரை அழித்த வானரம் இல்லை என்றான். பிறகு இராவணன் அங்கதனை பார்த்து, யார் நீ? எதற்காக இங்கு வந்தாய்? உன்னைக் கொன்று தின்பதற்கு முன் உண்மையைச் சொல் என்றான்.

✼ இதைக் கேட்டு அங்கதன் பலமாகச் சிரித்தான். அனைத்திற்கும் தலைவனான, அனைத்துலகையும் வழி நடத்தும் ஸ்ரீஇராமன் அனுப்பிய தூதன் நான். அவர் உன்னிடம் சொல்லச் சொல்லி சில செய்திகளை கூறி அனுப்பிள்ளார். அதை உன்னிடம் சொல்லவே தூதனாக இங்கு வந்தேன் என்றான். இராவணன், வானரமே! உன் தலைவன் என்ன சிவபெருமானா? இல்லை திருமாலா? இல்லை பிரம்ம தேவனா? ஒரு வானரப்படையை கூட்டிக்கொண்டு கடலை தாண்டி வந்த இராமன் தானே உன் தலைவன். இராமன் உலகை ஆள்பவனா? எனக் கூறி கேலியாகச் சிரித்தான். வானரமே! அந்த சிவன் கூட இலங்கைக்குள் தைரியமாக நுழைய முடியாதபோது, கேவலம் ஒரு மனிதனுக்காக நீ தூதுவனாக வந்திருக்கிறாய். முதலில் நீ யார்? உன் பெயர் என்னவென்று கூறு என்று ஆணவத்தோடு கேட்டான்.

✼ அங்கதன், தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அவர்கள் சோர்ந்து போன நிலையில், அவர்களுக்காக ஒருவனாகவே கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்த இந்திரன் மைந்தன் வாலியின் புதல்வன் நான். என் பெயர் அங்கதன் என்றான். வாலியின் பெயரைக் கேட்ட இராவணன், அடே! நீ வாலியின் புதல்வனா? நான் வாலியின் நண்பன் ஆவேன். உன் தந்தையை கொன்ற இராமனின் பின் நீ செல்லலாமா? இது உன் பெருமைக்கு இழிவல்லவா? நீ உற்ற நேரத்தில் தான் இங்கு வந்துள்ளாய். உன்னை நான் மகனாக பெற்றேன். அந்த மானிடர்கள் எப்படியும் ஒழிந்து விடுவார்கள். உன்னை நான் கிஷ்கிந்தைக்கு அரசனாக முடி சூட்டுகிறேன் என்றான். இராவணன் சொன்னதை கேட்ட அங்கதன், அவனைப் பார்த்து கேவலமாகச் சிரித்தான்.

✼ நீ எனக்கு முடிசூட்டுகிறாயா? இங்கு உள்ள அனைவரும் அழிவது நிச்சயம் என்பதை மறந்து விடாதே. உன் தம்பி விபீஷணன், இராமரிடம் சரணடைந்ததை மறந்து விட்டாயா? இராமர், விபீஷணனை இலங்கையின் அரசனாக முடிசூட்டிவிட்டார். நீ வஞ்சனையாக பேசி என்னை உன் பக்கம் சாய்க்கலாம் என நினைக்காதே. அது ஒரு போதும் நடக்காது. தூதுவனாக வந்தவன் அரச பதவி ஏற்றுக் கொள்வது எவ்வளவு பெரிய துரோகம். அத்தகைய துரோகத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் எனக் கூறி நகைத்தான். அங்கதன் கூறியதைக் கேட்டு இராவணன் கடுங்கோபம் கொண்டான். உடனே இராவணன் இவனை கொல்ல முனைந்தான். ஒரு வானரத்தை தன் கையால் கொல்வதா? என நினைத்து கோபத்தை அடக்கிக் கொண்டான். இராவணன் அங்கதனிடம், நீ இங்கு எதற்காக வந்தாய்? என்பதைச் சொல் என்றான்.

தொடரும்...

Thursday, November 2, 2023

RAMAYANAM PART 105

 இராமாயணம் தொடர் 105

அங்கதன் தூது செல்லுதல்...!

💠 அன்றைய பொழுது கழிந்து, சூரியன் தன் ஒளிகளை வீசிக் கொண்டிருந்தது. வடக்கு வாயிலுக்கு வெளியே இராமர் தனது பதினேழு வெள்ளம் படையுடன் போருக்கு ஆயத்தமாக நின்று கொண்டிருந்தார். இராமர், இராவணனுக்காக தன் கோதண்டத்தை ஏந்தி போருக்குத் தயார் நிலையில் இருந்தார். இராவணன் வடக்கு வாயில் வழியாக போருக்கு வருவான் என வெகுநேரம் எதிர்பார்த்து இராமர் காத்து கொண்டிருந்தார். வெகுநேரம் ஆகியும் இராவணன் போருக்கு வருவதுபோல் தெரியவில்லை. இதற்கு மேல் காத்திருப்பதில் ஒரு பயனும் இல்லை என்று நினைத்த இராமர், விபீஷணனை அழைத்து, இதற்கு மேல் நாம் என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை தொடங்கினார். இராமர், சிறை வைத்திருக்கும் சீதையை விடுவிக்குமாறும், அப்படி இல்லையென்றால் போருக்கு வருவமாறும் நாம் ஒரு தூதுவனை அனுப்பலாம் என்றார்.

💠 இராமரின் ஆலோசனையை கேட்ட விபீஷணன், இது தான் சரியான செயல் என்றான். சுக்ரீவன், நாம் மிகவும் வலிமை வாய்ந்த வீரனை அனுப்பவது தான் சிறந்தது என்றான். இதைக் கேட்ட இலட்சுமணன், அண்ணா! இராவணனின் மேல் இரக்கம் காட்டி தூது அனுப்புவது சரிதானா? நாம் இப்பொழுது இராவணனை அழிப்பதை விட்டுவிட்டு அவனுக்கு தூது அனுப்புவதா? அந்த இராவணன், தேவர்கள் முதற்கொண்டு அனைவரையும் துன்புறுத்தியவன். அன்னை சீதையையும் கவர்ந்துச் சென்று சிறையில் வைத்தவன். அவன் நம் தந்தை போன்ற ஜடாயுவை கொன்றவன். இவ்வளவு செய்த இராவணனின் மீது கருணை காட்டி அவனுக்கு தூது அனுப்புவது சரி தானா? எனக் கேட்டான். இராமர் இலட்சுமணனிடம், தம்பி. இலட்சுமணா! நீ சொல்வது முற்றிலும் உண்மை தான். அரக்கர்கள் அழிவது நிச்சயம். ஆனால் நம் தர்ம நெறிப்படி தூது அனுப்புவது தான் பெருந்தன்மையைக் குறிக்கும் என்றார்.

💠 பிறகு இலட்சுமணன் தூது அனுப்புவதற்கு சம்மதித்தான். பிறகு அனைவரிடமும் யாரை தூது அனுப்புவது என ஆலோசித்தார். இராமர், நாம் மறுபடியும் அனுமனை அனுப்பினால் நம்மிடம் சிறந்த வீரர்கள் எவரும் இல்லை என அவன் நினைத்துக் கொள்வான். அனுமனை தவிர சிறந்த வலிமைமிக்க வீரர் உள்ளார்களா? என யோசித்தார். உடனே இராமனின் நினைவுக்கு வந்தது வாலியின் மைந்தன் அங்கதன் தான். இராமர் அனைவரிடமும் நாம் அங்கதனை தூது அனுப்பலாம் என்றார். அனைவரும் இதற்கு சம்மதித்தனர். அங்கதனை வரச் சொல்லி செய்தி அனுப்பினர். அங்கதனும் உடனே அங்கு வந்துச் சேர்ந்தான். அங்கதன் இராமரை நோக்கி பணிந்து வணங்கினான். பிறகு இராமர் அங்கதனிடம், அங்கதா! நீ தூதுவனாக இராவணனிடம் சென்று நான் சொல்லும் இரண்டு விஷயங்களை கூறி அதற்கு அவன் கூறும் பதிலை எனக்கு வந்து சொல்வாயாக என்றார். இராமர் சொன்னதை கேட்ட அங்கதன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான்.

💠 அங்கதன் இராமரிடம், ஐயனே! தாங்கள் என்னை தூதுவனாக தேர்வு செய்ததை நினைத்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நான் இராவணனிடம் என்ன செய்தியை சொல்ல வேண்டும்? என்பதை என்னிடம் கூறுங்கள் என்றான். இராமர், அங்கதா! நீ இராவணனின் இருப்பிடத்திற்குச் சென்று சீதையை என்னிடம் ஒப்படைத்துவிட்டால் நான் அவனை விட்டுவிடுகிறேன். அப்படி இல்லையென்றால் போரில் அவனின் பத்து தலைகளையும் சிதைத்துவிடுவேன். இவற்றில் சரியான வழியை தேர்ந்தெடுக்கும்படி கூறுவாயாக. இதற்கு அவன் கூறும் பதிலை என்னிடம் வந்து கூறுவாயாக எனக் கூறி அங்கதனுக்கு விடை கொடுத்தார். அங்கதன், இராமர் தன்னை தூதுவனாக தேர்ந்தெடுத்ததை நினைத்து மிகவும் பெருமைப்பட்டு அங்கிருந்து விரைந்துச் சென்றான்.

தொடரும்...

RAMAYANAM PART 104

 இராமாயணம் தொடர் 104

இராவணனின் படைகள்!...

🔶 மந்திர ஆலோசனையில் நடந்தவற்றை விபீஷணனின் மனைவி கேட்டுக் கொண்டு சீதையிடம் சென்று கூறினாள். சீதா! இராமனை வெல்ல இவ்வுலகில் எவரும் இல்லை. இராவணன் உன்னிடம் நாடகமாடி உள்ளான். இலங்கை நகரத்தின் போர் முழக்கங்கள் உனக்கு கேட்கிறதா! இல்லையா!. இராமன் போருக்கு ஆயத்தமாக இலங்கை நகரின் வாயிலில் நின்றுக் கொண்டு இருக்கிறான். அதனால் நீ கவலைக் கொள்ள வேண்டாம் எனக் கூறினாள். இராவணன் மந்திர ஆலோசனையில், இராவணனின் மாமனான மாலி எழுந்து, இராவணா! காம உணர்வு துன்பத்தைத்தான் தரும் என்பதை புரிந்துக் கொள்.

🔶 இலங்கைக்குள் புகுந்து நம் அரக்கர்களை அழித்து, நம் நகரை தீ வைத்த அனுமனின் கையில் என்ன ஆயுதம் தான் இருந்தது? சுக்ரீவன் உன்னுடன் போரிட்டு உன் கிரீடத்தில் இருந்த மணிகளைப் பறித்துச் சென்றபோது அவன் கையில் இருந்த ஆயுதம் தான் என்ன? உனக்கு இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி தான் உள்ளது. நீ சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிட்டு அவனிடம் சரணடைவது தான் நல்லது என்றான். மாலி சொன்னதை கேட்டு இராவணன் கடுங்கோபம் கொண்டான். இராவணன் மாலியிடம், என் வலிமை என்ன என்பது தெரியாமல் நீ பேசுகிறாய். நீ எனக்கு நல்ல வழியைக் காட்டவில்லை, பெரும் அழிவைத்தான் காட்டுகிறாய். நீ இதுபோன்ற அறிவுரைகள் கூறுவதாக இருந்தால், நீ பேசாமல் இருப்பது தான் நல்லது என்றான் கோபத்துடன்.

🔶 பிறகு இராவணன் தன் படைபலம் கொண்ட சேனைக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தான். இலங்கையின் கிழக்குதிசை வாயிலுக்கு படைத்தலைவனுடன் இருநூறு வெள்ளம் ஆயுதம் தாங்கிய அரக்கர் படையை அனுப்பி, அங்கு தயார் நிலையில் நிற்கும் வானரப் படை தளபதி நீலனோடு போரிடுவதற்கு அனுப்பி வைத்தான். இராவணன் தனது மகன் மகோதரனை அழைத்து, இருநூறு வெள்ளம் படையுடன் சென்று, தென் திசை வாயிலில் தயாராக இருக்கும் அங்கதனுடன் போரிடத் தயாராகுமாறு அனுப்பினான்.

🔶 பிறகு இராவணன் இந்திரஜித்தை அழைத்து, மகனே! நீ இருநூறு வெள்ளம் சேனையுடன் மேற்கு வாயிலுக்குச் சென்று அங்கு போருக்குத் தயார் நிலையில் நிற்கும், நம் நகருக்கு பேரழிவை செய்த அந்த அனுமனிடம் போர் புரிய தயாராக இரு என்றான். அடுத்து இராவணன் விரூபாட்சா! நீ நம் சேனைகளோடும், அமைச்சர்களோடும், இலங்கை நகரத்தின் காவல் பொறுப்பை ஏற்றுக்கொள் என்றான். நான் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என இருநூறு வெள்ளம் படைகளுடன் வடக்கு வாயிலுக்குச் சென்று அந்த இராமனோடும், இலட்சுமணனோடும் போரிடத் தயாராக இருப்பேன் என்று நகரின் பாதுகாப்பையும், படைகளின் அணிவகுப்பையும் நிர்ணயித்தான்.

நான்கு புறங்களில் நிற்கும் இராம இலட்சுமணர் மற்றும் வானர படைகள், இராவணனின் உத்தரவின்படி நிற்கும் அரக்கர் படைகள் பற்றி சிறு தொகுப்பு :

இராம இலட்சுமணர் வானர படைகள் :

மேற்கு திசை - அனுமன் - பதினேழு வெள்ளம் வானர படை 

கிழக்கு திசை - நீலன் - பதினேழு வெள்ளம் வானர படை

தெற்கு திசை - அங்கதன் - பதினேழு வெள்ளம் வானர படை

வடக்கு திசை - இராம இலட்சுமணர் - பதினேழு வெள்ளம் வானர படை 

  விபீஷணன் - அரக்கர்களை கண்காணிக்கும் பணி 

இராவணனின் படை :

மேற்கு திசை - இந்திரஜித் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை

கிழக்கு திசை - படைத்தலைவன் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை 

தெற்கு திசை - மகோதரன் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை 

வடக்கு திசை - இராவணன் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை 

விரூபாட்சன் - நகர காவல் பொறுப்பு

தொடரும்...

RAMAYANAM PART 103

இராமாயணம் தொடர் 103

வானரங்கள் இலங்கையை சுற்றி வளைத்தல்!!!
🐒 இராமர் சுக்ரீவனிடம், தம்பி சுக்ரீவா! பலம் பொருந்திய இராவணனிடம் நீ தனியாகச் சென்று போரிடலாமா? ஒருவேளை அவனால் உன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருந்தால் நான் என்ன செய்வேன் எனக் கூறி வருந்தினார். பிறகு சுக்ரீவன், எனக்கு எம்பிராட்டி சீதையை கவர்ந்து சென்ற இராவணனை பார்த்தவுடன் அவனின் தலையை கொய்து வரச் சென்றேன். ஆனால் என்னால் இராவணனின் தலையை கொய்துவிட்டு வராமல் அவனின் மகுடத்தில் உள்ள மணிகளை கொண்டு வந்துள்ளேன் என்றான். இதனால் என்னுடைய செயல் சிறப்படையாதாகது எனக் கூறி வருந்தினான். இதைக் கேட்ட விபீஷணன், சுக்ரீவா, நீ வருந்தாதே! நீ செய்த செயல் மிகவும் அரிதானது. இராவணனின் மணிகளை பறிப்பது என்பது எளிதான செயல் அல்ல. நீ அவனின் உயிருக்கு மேலான மணிகளை அல்லவா கொண்டு வந்துள்ளாய். இதைக் காட்டிலும் வீரச் செயல் வேறு எதுவும் இல்லை என்றான். இராமரும் சுக்ரீவனின் செயலை வியந்து பாராட்டினார்.
🐒 அங்கு இலங்கையின் அரண்மனையில், இராவணன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் வருந்திக் கொண்டு இருந்தான். ஒரு குரங்கு தன்னை இவ்வளவு அவமானப்படுத்தியதை நினைத்து மனதில் புழுங்கினான். சுக்ரீவனால் ஏற்பட்ட அவமானம் அவன் மனதில் திரும்ப திரும்ப தோன்றியது. இதனால் தலைக்குனிந்த இராவணன் யாரிடமும் ஒன்றும் பேசாமல் தன் மாளிகைக்குச் சென்று படுத்துக் கொண்டான். அப்போது ஒரு வாயிற்காவலன் வந்து ஒற்றன் சார்த்தூலன் தங்களை காண வந்திருப்பதாகச் சொன்னான். இராவணன் அவனை உள்ளே வரச் சொல்லி அனுப்பினான். ஒற்றன் உள்ளே வந்து இராவணனை வணங்கினான். இராவணன் அவனைப்பார்த்து நீ கொண்டு வந்த செய்தியை கூறு என்றான். மன்னா! வானரப் படைகள் நம் நகரின் எல்லா வாயிலிலும் அணிவகுத்து நிற்கின்றனர்.
🐒 அனுமன் தலைமையில் பதினேழு வெள்ளம் (கோடிக்கணக்கான) சேனைகள், தயார் நிலையில் இலங்கையின் மேற்குப் புற வாயிலில் நிற்கின்றன. இலங்கையின் தெற்கு வாயிலில், வாலியின் மைந்தனான அங்கதன் பதினேழு வெள்ளம் (கோடிக்கணக்கான) வானரப் படையுடன் போருக்குத் தயாராக படைகளை அணிவகுத்து நிற்கிறான். கிழக்கு வாயிலில், நீலன் எனும் படைத்தலைவன் அதே பதினேழு வெள்ளம் (கோடிக்கணக்கான) சேனையிலும், படையோடு தயார் நிலையில் நிற்கிறான். வானரப் படைகளுக்குத் தேவையான உணவுகளை கொண்டு வந்து கொடுப்பதற்கு இரண்டு வெள்ளம் (கோடிக்கணக்கான) சேனையிலும், சேனையை பல திசைகளுக்கும் அனுப்பியுள்ளார்கள். இராமன், தங்கள் தம்பியான விபீஷணனை போரின் தன்மையை அறிய அடிக்கடி இலங்கை நகரின் எல்லா வாயில்களுக்கும் சென்று கண்காணிக்கும்படி நியமித்துள்ளான்.
🐒 இராமனும் அவனின் தம்பி இலட்சுமணனும் இலங்கை நகரின் வடக்கு வாயிலில் போரைத் தொடங்குவதற்கு ஆயத்தமாக நிற்கிறார்கள் என்று அந்த ஒற்றன், இராமனின் போர்முனை ஏற்பாடுகள் பற்றி கூறினான். இதைக் கேட்டு இராவணனின் கண்கள் சிவந்தது. இவர்கள் அனைவரையும் நான் அடியோடு ஒழிக்கிறேன் எனக் கூறினான். பிறகு இராவணன் மந்திர ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்று அங்கு அனைவரையும் வரும்படி கட்டளையிட்டான். அனைவரும் மந்திர ஆலோசனை கூட்டத்திற்கு வந்தனர். இராவணன் அவர்களிடம், நம் நகரத்தின் நான்கு புறங்களிலும் வானர படைகள் ஆயத்தமாக நிற்கின்றன. இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை பற்றி கூறுங்கள் என்றான். அப்பொழுது நிகும்பன் என்னும் அரக்கன் எழுந்து நின்று, நம் நகரை சூழ்ந்துக் கொண்ட கேவலம் இந்த வானரப் படைகளுக்காக நாம் வருந்தலாமா? இவர்களை காட்டிலும் நம்மிடம் ஆயிரம் ஆயிரம் சேனைகள் நம்மிடம் உள்ளது என்றான்.
தொடரும்...

RAMAYANAM PART 102

 இராமாயணம் தொடர் 102
சுக்ரீவன் இராவணன் மீது பாய்ந்து செல்லுதல்!...
💫 அன்றிரவு பொழுது கலைந்து சூரியன் உதித்தது. இராவணன் இராமனுடன் வந்திருக்கும் வானர படைகளின் அளவை கண்டறிய விரும்பினான். ஆதலால் அவன் இரம்பை, ஊர்வசி மற்றும் ஒற்றர்களுடன் கோபுரத்தின் மீது ஏறி நின்று வானர படையை நோக்கினான். வானர படையின் அளவைக் கண்டு போர் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான். தூரத்தில் இராமர் நிற்பதையும் கண்டு மனதில் கோபங்கொண்டான். உடனே அங்கு ஒற்றனாகச் சென்ற சாரனை அழைத்து அதோ அங்கு கரிய நிறத்தில் நிற்பவன் தான் இராமன் என்பது தெரிகிறது. அருகில் நிற்கும் மற்றவர்கள் எல்லாம் யார்? என்பதை எனக்குச் சொல் என்றான். சாரன் இராமனுக்கு அருகில் நிற்கிறானே அவன் தான் இலட்சுமணன். தங்கள் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தவன். இவன் இராமனை இரவும் பகலும் கண் இமைக்காமல் காவல் புரிகிறான். அவன் பக்கத்தில் இருப்பவன் தான் சுக்ரீவன். வாலியின் சகோதரன். போரில் வாலியை தோற்கடித்தவன்.
💫 அவன் அருகில் நிற்பவன் தான் அங்கதன். வாலியின் புதல்வன். வாலியை போலவும் மிகவும் வலிமை படைத்தவன். அங்கு மிகவும் பலசாலியாக இருக்கிறான் அல்லவா? அவன் தான் அனுமன். இலங்கைக்கு வந்து அரக்கர்களை கொன்று, நகரை தீமூட்டியவன். அனுமன் அருகில் நிற்பவன் தான் நீலன். இவன் பிறர் வியக்கும் அளவுக்கு ஆற்றல் மிக்கவன். இவனை காட்டிலும் சிறிது மாறுபட்டு இருப்பவன் தான் நளன். இவன் தான் இராமர் முதலிய வானரங்கள் கடலை கடந்து வருவதற்கு ஐந்து நாட்களில் கடலின் மேல் அணைக்கட்டியவன். அங்கு கரடி போல நிற்கிறான் அல்லவா? அவன் தான் கரடி இனத் தலைவன் ஜாம்பவான். அனைத்தையும் தன் அறிவால் உணரக்கூடிய ஆற்றலைப் பெற்றவன். உலகங்களை அழிக்கும் அளவிற்கு வலிமை உடையவன். இப்படி சாரன் வானர வீரர்களைப் பற்றி இராவணனிடம் கூறினான். பிறகு அவன் இந்த வானர படைகளின் ஆரம்பமும், எல்லையும் தெரியவில்லை என்றான்.
💫 சாரன் கூறியதைக்கேட்ட இராவணன் கோபத்துடன் சிரித்தான். இராவணன் சாரனிடம் பேசிக் கொண்டிருப்பதை தூரத்தில் இருந்த விபீஷணன் பார்த்தான். உடனே விபீஷணன் இராமரிடன் சென்று, பெருமானே! அதோ! அரண்மனையின் மேல் கோபுரத்தில் நின்றுக் கொண்டிருக்கிறான் அல்லவா? அவன் தான் இராவணன் என்றான். அவன் பக்கத்தில் இருப்பவர்கள் தேவலோகத்து பெண்களான இரம்பை, ஊர்வசி என்றான். இராவணனை பார்த்த சுக்ரீவன் இராவணன் மீது கோபங்கொண்டு வானத்தில் பாய்ந்து சென்று கோபுரத்தில் நின்று கொண்டிருந்த இராவணன் மீது பாய்ந்தான். எதிர்ப்பாராமல் இப்படி சுக்ரீவன் இராவணன் மேல் விழுந்ததை பார்த்த தேவலோகத்து பெண்கள் பயந்து அங்கிருந்து ஓடினர். இராவணன் சுக்ரீவனைப் பார்த்து எதற்காக இங்கு வந்தாய்? என்றான். அரக்கனே! உன்னை அழிக்க தான் இங்கு வந்துள்ளேன் என கூறி இராவணன் மீது பாய்ந்தான்.
💫 சுக்ரீவனுக்கும் இராவணனுக்கும் இடையே கடும் போர் நிகழ்ந்தது. சுக்ரீவனால் தாக்கப்பட்ட இராவணன் வலியால் கத்தினான். பொறுமையிழந்த இராவணன் சுக்ரீவனை இரத்தம் சிந்தும் அளவிற்கு தாக்கினான். பலமாக உதைத்தான். இருவரும் கடுமையாக சண்டையிட்டார்கள். அங்கு இராமர், சுக்ரீவன் தனிமையில் நின்று போர் புரிவதை கண்டு மிகவும் வருந்தினார். சுக்ரீவா! நான் உன்னை இழந்து சீதையை மீட்டுச் செல்வது வெற்றியாகாது. பலம் பொருந்திய இராவணனை வெல்வது என்பது எளிதானது அல்ல. ஆதலால் நீ நிதானத்தை கடைப்பிடித்து இங்கு வந்துவிடு என மனதில் நினைத்துக் கொண்டு வருந்தினார். அப்பொழுது சுக்ரீவன், இராவணனின் ஒளி மிகுந்த கிரீடத்திலிருந்து மணிகளை பறித்துக் கொண்டு அங்கு வந்து நின்றான். சுக்ரீவனை கண்ட இராமர் நிம்மதியடைந்தார். பிறகு  சுக்ரீவனை தழுவிக் கொண்டார்.
தொடரும்...

RAMAYANAM PART 101

 இராமாயணம் தொடர் 101

இராவணனின் தந்திர வேலை!...

💥 இராவணன், மஹோதரன் என்பவனை அழைத்து, வேறு நல்ல ஒற்றர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டான். அந்த ஒற்றர்களிடம் இராமனின் திட்டம், எங்கே, எப்போது, எந்த இடத்தில் இருந்து அவர்கள் தாக்கப் போகின்றார்கள்? மற்றும் இராம, இலட்சுமணனின் சாப்பாட்டு முறைகள், அவர்கள் செய்யும் ஆலோசனைகள் அனைத்தையும் அறிந்து வந்து சொல்லுமாறு பணித்தான். இராவணன் கூறியவாறே ஒற்றர்கள் மாறுவேடத்தில் இராமனின் இருப்பிடத்திற்கு சென்றனர். ஆனால் விபீஷணன் இந்த ஒற்றர்களையும் அடையாளம் கண்டு கொண்டான். உடனே விபீஷணன் இவர்களை, இராமர் முன் கொண்டுச் சென்று நிறுத்தினான். ஆனால் இராமர் இவர்களை விடுவிக்குமாறு கட்டளையிட்டார். ஆனால் வானரர்கள் இவர்களை விடாமல் துன்புறுத்தினர்.

💥 ஒருவழியாக இவர்களிடமிருந்து தப்பித்த ஒற்றர்கள் இராவணனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினர். மன்னரே! தாங்கள் சீதையை ஒப்படைத்து விடுங்கள், இல்லையெனில் நிச்சயம் யுத்தம் நடைபெறும் என்றார்கள். இதைக் கேட்ட இராவணன், சீதையை அவர்களிடம் அனுப்புவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றான். பிறகு அரண்மனைக்குள் சென்று மந்திர, தந்திரங்களில் தேர்ந்தவன் ஆன வித்யுத்ஜிஹ்வா என்பவனை அழைத்தான். அவனிடம் இராமனின் தலையைப் போல் ஒரு தலையை உருவாக்கிக் கொண்டு வர பணித்தான். அதனுடன் சிறந்த வில்லும், அம்புகளும் கூடவே கொண்டுவர பணித்தான். இராவணனின் கட்டளைப்படி வித்யுத்ஜிஹ்வா அவற்றை உருவாக்கி கொடுத்தான். இராவணன், வித்யுத்ஜிஹ்வா தன் கட்டளைப்படி செய்த இராமனின் தலை, வில் மற்றும் அம்புகளுக்காக பரிசளித்தான்.

💥 பிறகு இராவணன் அவற்றை எடுத்துக் கொண்டு சீதை இருக்கும் அசோகவனத்தை நோக்கிச் சென்றான். தந்திரத்தால் சீதையின் மனதைக் கவரவேண்டும் என நினைத்து இராவணன் சீதையிடம் சென்று, ஏ, சீதா! நான் எவ்வளவோ சொல்லியும், இராமனின் நினைவாகவே இருந்த உனக்கு ஒரு துக்கச் செய்தியை சொல்கிறேன் கேள் என்றான். இராமனை நான் கொன்று விட்டேன். எந்த இராமனை நம்பி, நீ என்னை நிராகரித்தாயோ அந்த இராமன் யுத்தத்தில் கொல்லப் பட்டான். இனியாவது நீ என்னை ஏற்றுக் கொள். இதை தவிர உனக்கு வேறு வழி எதுவும் இல்லை என்றான். பிறகு இராவணன் இந்த யுத்தத்தை நேரில் பார்த்த வித்யுத்ஜிஹ்வாவை இங்கே வரச் சொல். போரில் கொல்லப்பட்ட இராமனின் குருதி வாய்ந்த தலையையும் கொண்டுவரச் சொல் என பணித்தான். வித்யுத்ஜிஹ்வா, இராவணன் சொன்னதை போல் கையில் வில், அம்புகளுடனும், அவனால் செய்யப்பட்ட போலி இராமர் தலையுடனும் அங்கே வந்து சேர்ந்தான்.

💥 இராவணன், சீதையிடம், சீதா! வில்லைப் பார்த்தாயா? இது இராமனின் வில். மற்றும் இந்த தலையை பார்த்து தெரிந்துக் கொள் இராமன் இறந்து விட்டான். இனி நீ என் ஆசைக்கு இணங்குவதே நன்று எனக் கூறி விட்டு அங்கிருந்து சென்றான். சீதை, இராவணன் சொன்ன வார்த்தைகளை நம்பி, துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதாள். என் கணவர் இல்லாத உலகத்தில் நானும் இருக்க மாட்டேன். என்னையும் கொன்று விடுங்கள் என கதறி அழுதாள். அப்பொழுது விபீஷணனின் மனைவி அங்கு, சீதா இதெல்லாம் இராவணனின் மாய செயல். இதை நீ நம்பாதே. நான் இராவணனின் மந்திர ஆலோசனை கூட்டத்திற்கு சென்று அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்துவிட்டு வருகிறேன். அதுவரை நீ தைரியமாக இரு எனக் கூறிவிட்டுச் சென்றாள்.

தொடரும்...

Thursday, October 26, 2023

RAMAYANAM PART 100

 இராமாயணம் தொடர் 100

இராவணனின் மந்திர ஆலோசனை!...

💢 இராமர் ஒற்றர்களை பார்த்து, ஒற்றர்களே! நான் சொல்வதை இராவணனிடம் சென்று சொல்லுங்கள். நான் இலங்கை நகர ஆட்சி பொறுப்பையும், வற்றாத செல்வத்தையும் விபீஷணனுக்கு வழங்கிவிட்டேன். அது மட்டுமின்றி கடல் நடுவில் இருக்கும் இலங்கைக்கு பாலம் கட்டிதான் நாங்கள் வந்துள்ளோம் என்பதையும், என்னுடன் ஒப்பற்ற வலிமை வாய்ந்த வீரர்களும் உடன் வந்துள்ளதாகவும் சென்று கூறுவாயாக. எங்களின் கடல் போன்ற வானர படை வீரர்கள் பற்றியும் சொல்வாயாக என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்வதற்கு வழிவகுத்து கொடுத்தார். அங்கு இராவணனின் அரண்மனையில் மந்திர ஆலோசனை கூடியது. அங்கு இராவணனின் பாட்டன் மாலியவான், இராவணனுக்கு அறிவுரை கூறினார். மாலியவான், இராமன் வீரத்தில் சிறந்தவன். இப்பொழுது அவர்கள் கடலில் அணைக்கட்டி இங்கு போர் புரிய வந்துவிட்டார்கள். ஆதலால் சீதையை கவர்ந்து வந்த நீ இராமனிடம் சென்று ஒப்படைத்து விடு. அது தான் உனக்கு நலம் என்றான்.

💢 இதைக் கேட்ட இராவணன் பாட்டன் மீது கோபங்கொண்டு, தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. தங்களுக்கு இவ்வளவு பயம் இருந்தால் விபீஷணனுடன் சென்று சேர்ந்துக் கொள்ளுங்கள். என் கோபத்திற்கு ஆளாகாதீர்கள் என்றான். இதற்கு மாலியவான், உனக்கு நன்மை சொல்வதில் ஒரு பயனும் இல்லை. நல்ல விஷயங்கள் சில நேரத்தில் கசக்கத் தான் செய்யும் என்றான். ஆலோசனை கூட்டத்தில் இருந்தவர்களும் இராவணனின் பாட்டன் சொல்லிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அப்பொழுது இராவணன் அனுப்பிய ஒற்றர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இராவணனை பார்த்து வணங்கினார்கள். இராவணன் ஒற்றர்களிடம், ஒற்றர்களே! நீங்கள் அங்கு சென்று இராம இலட்சுமணரின் திறமை, வானர வீரர்களின் படை வலிமையும் திறமையும், அங்கு விபீஷணன் இருக்கும் நிலையை பற்றியும் நீங்கள் கண்டதை கூறுங்கள் என்றான்.

💢 பிறகு ஒற்றர்கள், அரசே! இராமன் கடலின் மேல் அணைக்கட்டி இங்கு வந்து சேர்ந்துவிட்டான். வானரங்களின் படைகளின் அளவை எங்களால் காண இயலவில்லை. பிறகு நாங்கள் வானரங்கள் உருவம் மாறி சென்றதை விபீஷணன் கண்டுபிடித்து விட்டான். பிறகு அவன் எங்களை இராமன் முன் நிறுத்தினான். இராமன் முன் நாங்கள் ஒற்றர்கள் இல்லை என கூறினோம். ஆனால் விபீஷணன் நாங்கள் தங்களின் ஒற்றர்கள் தான் என்பதை நிரூபித்து விட்டான். இதை அறிந்த இராமர் தங்களிடம் சொல்லச் சொல்லி ஒரு செய்தியை அனுப்பியுள்ளான். இராமன், விபீஷணனை இலங்கையின் அரசனாக முடிசூட்டிவிட்டதாகவும், தன்னிடம் வலிமை வாய்ந்த வீரர்கள் உள்ளதாகவும் கூறினான். ஒற்றர்கள் கூறியதை கேட்ட இராவணன், ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்தான். இனி நாம் என்ன செய்யலாம் என அவையில் இருந்தவர்களிடம் ஆலோசனை கேட்டான்.

💢 அப்போது படைத்தலைவன் எழுந்து, அரசே! இப்பொழுது நாம் சீதையை அவர்களிடம் ஒப்படைத்தால் நாம் அவர்களை கண்டு பயப்படுகிறோம் என எண்ணுவார்கள். மிகுந்த பலம் கொண்ட நம் படைகளை அழிக்க பல வருடங்கள் ஆகும் அவர்களுக்கு. அவர்களிடம் சமாதானம் பேச சென்றால் விபீஷணன் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டான். ஆனால் நாம் விரைவில் படையெடுத்து அவர்களிடம் போர் புரிய சென்றால், நம் படைகளைக் கண்டு வானரங்கள் பயந்து ஓடி விடுவார்கள் என்றான். படைத்தலைவனின் யோசனையைக் கேட்ட இராவணன், சீதையின் காரணமாகத்தான் அவர்கள் என்னுடன் போர் புரிய வருகிறார்கள் என்றால், அதற்காக நான் சிறிதும் பின்வாங்க மாட்டேன். என் கையிலுள்ள அம்புகள் உலகம் அனைத்தையும் வென்ற புகழுடையவை. போர் என்றதும் எதிரியின் மார்பில் புகுந்து செல்லும் வலிமையுடையது. இந்த குரங்குகளிடம் நான் தோற்றுபோவேனா? என்றான் ஆவேசத்துடன்.

தொடரும்...

Wednesday, October 25, 2023

RAMAYANAM PART 99

 இராமாயணம் தொடர் 99

இராமர் இலங்கை அடைதல்!...

💠 ஜபம் செய்யும் பொழுது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். அதனால் முனிவர் குரங்குக்கு சாபம் கொடுக்காமல், இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழ்காமல் மிதக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் ஜபம் செய்ய தொடங்கினார். நளன் என்னும் குரங்கு தான் எறியும் கற்கள் மூழ்காமல் மிதப்பதினால் விளையாட்டில் ஆர்வம் இல்லாமல், அங்கிருந்து சென்று விட்டது. அந்த சாபத்தின் நன்மையால் தான், நளன் இடுகிற கற்கள் தண்ணீரில் மூழ்காமல் மிதக்கின்றன என்றார் ராமர். இவ்வாறு வானரங்கள் இரவு பகலாக வேலை செய்து ஐந்து நாட்களில் அணையைக் கட்டி முடித்தனர். அணை கட்டி முடிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் இராமர் அவர்களை கட்டி தழுவி பாராட்டினார். கட்டி முடித்த அணையின் அழகைக் கண்டு இராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

💠 அதற்கு பரிசாக நளனை கௌரவிக்கும் விதமாக வருண பகவான் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார். பிறகு அனைவரும் அங்கிருந்து இலங்கை நோக்கி செல்ல ஆயத்தமாகினர். வானரங்கள் பயணத்திற்கு தேவையான உணவு பொருட்களை சேகரித்து கொண்டனர். வானர சேனைகள் அணிவகுத்து புறப்பட்டன. சுக்ரீவனின் விருப்பப்படி அனுமன் இராமரையும், அங்கதன் இலட்சுமணரையும் தூக்கிக் கொண்டு சென்றான். இராமரும், வானர வீரர்களும் இலங்கை தீவை அடைந்தார்கள். அங்கு அவர்கள் ஒரு குன்றின் அடிவாரத்தில் தங்கினார்கள். சுக்ரீவனின் கட்டளைப்படி நளனும், நீலனும் தங்குவதற்கான பர்ணசாலையை அமைத்தனர். அன்றிரவு இராமர் சீதையை நினைத்து மிகவும் வருந்திக் கொண்டு இருந்தார்.

💠 அப்பொழுது இராவணனால் ஏவப்பட்ட ஒற்றர்கள் சுகன், சாரணன் என்னும் இரண்டு அரக்கர்கள் இவர்களை அறிந்து கொள்ளும் வகையில் வானர உருவம் கொண்டு அங்கு வந்தனர். இவர்களை அடையாளம் கண்டுகொண்ட விபீஷணன், இவர்களை அடித்து, உதைத்து கயிற்றால் கட்டிக்கொண்டு இராமர் முன் நிறுத்தினான். இராமர், இவர்கள் வானரங்கள் என நினைத்து விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! இவர்கள் என்ன தவறு செய்தார்கள்? இவர்களை ஏன் கயிற்றால் கட்டிக்கொண்டு வந்துள்ளாய்? என வினவினார். விபீஷணன், பெருமானே! இவர்கள் வானரங்கள் இல்லை. இராவணனால் ஏவப்பட்ட அரக்கர் குலத்தைச் சார்ந்த ஒற்றர்கள். இவர்கள் பெயர் சுகன், சாரணன். இவர்கள் நம்மை ஆராய்ந்து பார்க்க வந்துள்ளார்கள். உடனே அந்த ஒற்றர்கள், பெருமானே! நாங்கள் ஒன்றும் அரக்கர் குலத்தைச் சார்ந்த ஒற்றர்கள் இல்லை.

💠 தங்கள் முன் நிற்கும் இந்த விபீஷணன் கபட நாடகமாடி தங்களை போரில் தோற்கடிக்க திட்டமிட்டுள்ளான். நாங்கள் உண்மையில் வானர வீரர்கள் என்று நாடகமாடினார்கள். விபீஷணன், இவர்களின் இந்த நாடகத்தை நிறுத்த ஒரு மந்திரத்தை உச்சரித்தான். பிறகு அவர்கள் சுய உருவத்தில் (அரக்க) தோன்றினார்கள். இவர்கள் இராவணனின் ஒற்றர்கள் என்பது உறுதியாகிவிட்டது என்றான் விபீஷணன். தன் சுய உருவத்தை பெற்ற அரக்கர்கள் இராமரை பார்த்து நடுங்கினார்கள். இராமர் அவர்களிடம், என்னை பார்த்து நீங்கள் அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கு வருவதற்கான காரணம் என்ன என்று சொல்லுங்கள் என்றார். ஒற்றர்கள் இராமரை பார்த்து, வீரனே! சீதையை யாரும் இல்லாத நேரத்தில் கவர்ந்து வந்த இராவணனுக்கு அழிவு வந்துவிட்டது என்பதை உணராமல் தங்களை பற்றி வஞ்சனை செய்து ஒற்று பார்க்க அனுப்பினான் என்றார்கள்.

தொடரும்...

Tuesday, October 24, 2023

RAMAYANAM PART 98

 இராமாயணம் தொடர் 98

இலங்கை செல்ல அணை கட்டுதல்!...

🏵 வருணன், பெருமானே! தாங்கள் கடல் தாண்டிச் செல்ல, கடலை வற்றச் செய்வதற்கு நான் காரணமாக இருக்கக் கூடாது. தாங்கள் செல்வதற்கு கடல் நீரை திடம் ஆக்கினாலும் கடலில் உள்ள உயிரினங்கள் துன்பப்படும். இதற்கு வேறொரு வழியும் உண்டு. என் மீது அணைக்கட்டினால் தாங்கள் அனைவரும் கடல் தாண்டிச் செல்லலாம். அணையில் தாங்கள் இடும் குன்றுகளையும், பாறைகளையும், மலைகளையும் மூழ்கிவிடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இராமர், வருணனை பார்த்து, நல்லதொரு யோசனை சொன்னாய் என்று வருணனை பாராட்டினார். பிறகு வானர சேனைகளை அழைத்து, குன்றுகளை கொண்டு வந்து கடலில் மேல் அணைக் கட்டுங்கள் என பணித்தார். இராமர், சுக்ரீவனிடமும், விபீஷணனிடமும், அணைக் கட்டுவதற்கான வேலையை முன்னின்று யாரை செய்யச் சொல்வது என ஆலோசனை நடத்தினார்.

🏵 அவர்கள் நளன் தான் அணைக்கட்ட தகுதியானவன் என தீர்மானித்து நளனை அழைத்து வரச் சொன்னார்கள். நளன் அங்கு வந்து சேர்த்தான். இராமர், நளனிடம் நீ அணையை திறம்பட கட்டி முடிக்க வேண்டும் என்றார். நளன் இராமரிடம், நான் அணையை திறம்பட கட்டி முடிக்கிறேன் எனக் கூறினான். அணையைக் கட்ட வானரங்கள் மலைகளும், குன்றுகளும் கொண்டு வர ஆரம்பித்தனர். சில வாரங்கள் மலைகளையும், பாறைகளையும் கால்களில் உருட்டிக் கொண்டும், சில வானரங்கள் கைகளால் சுமந்து கொண்டும் வந்தனர். அனுமன் ஒரே நேரத்தில் பல மலைகளும், குன்றுகளும், பாறைகளும் கொண்டு வந்து சேர்த்தான். வானரங்கள் மலைகளும், குன்றுகளும், பாறைகளும் கொண்டு வந்து கொடுக்க நளன் அதை தன் இடக்கையால் வாங்கி அணைக் கட்டினான். அனுமன் கொண்டு வந்து கொடுக்கும் மலைகளையும், குன்றுகளையும் நளன் தன் இடக்கையால் வாங்கி அணைக் கட்டினான்.

🏵 அமைச்சராக இருக்கும் என்னை மதிக்காமல் இடக்கையால் வாங்கி அணை கட்டுகிறானே என நளன் மீது கோபம் கொண்டான் அனுமன். உடனே அனுமன் தானே அணைக்கட்ட மலைகளை கடலில் சேர்த்தான். ஆனால் அம்மலைகள் கடலில் மூழ்கிவிட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இராமர், அனுமனை பார்த்து தொழிலில் பெரியவர், சிறியவர் என்று பார்க்கக் கூடாது. அதனால் நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்ப்பாயாக என்றார். இதை பார்த்து கொண்டிருந்த இலட்சுமணர் இராமரிடம், அண்ணா! நளன் கையால் சேர்க்கின்ற மலைகளும் குன்றுகளும் நீரில் மூழ்காமல் மிதக்கின்றன. ஆனால் அனுமன் சேர்த்த பாறைகள் நீரில் மூழ்கிவிட்டன. அதற்கான காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு இராமர் தம்பி இலட்சுமணா, சூர்ய கிரகணம் நடக்கும் கிரகண காலத்தில் தெய்வத்தினை, குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரம் மடங்கு பலன் உண்டாகும். 

🏵 அதைவிட தண்ணீரில் மூழ்கி மந்திர ஜபம் செய்தால் ஒன்றுக்கு லட்சமாக, மடங்கு பலன் அதிகமாகும். ஒருமுறை மாதவேந்திரர் என்ற மகரிஷி, கானகத்தில் சூர்ய கிரகணம் அன்று நீரில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது நளன் குட்டி வானரமாக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை செய்வது என்பது பிடித்தமான ஒன்று. அப்படி குரங்குகள், நீரில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரை பார்த்தனர். உடனே வானரங்கள் முனிவர் மீது கற்களை எறிந்து விளையாடிக் கொண்டிருந்தது. முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் மூழ்கி தவம் செய்தார். முனிவர் பலமுறை நளன் என்ற அந்த குட்டிக் குரங்கை விரட்டியும், குட்டிக் குரங்கு கல்லை எறிந்து கொண்டே தான் இருந்தது. 

தொடரும்...

Monday, October 23, 2023

RAMAYANAM PART 97

 இராமாயணம் தொடர் 97

இராமரின் கோபம்!...

🌟 விபீஷணன், அனுமனின் வீரச் செயல்களையும், வலிமையையும் கண்டு நான் அடைக்கலம் புகவேண்டியது தங்களிடம்தான் என்பதை உணர்ந்து இங்கு வந்தேன் என்றான். இதைக் கேட்ட இராமர், அனுமனை கருணையோடும், அன்போடும் பார்த்து, வலிமைமிக்க வீரனே! விபீஷணன் சொல்வதிலிருந்து நீ பாதி இலங்கை நகரை அழித்துவிட்டு வந்துள்ளாய் என்பது தெரிகிறது. நீ இலங்கை நகரை தீயிக்கு இரையாக்கிவிட்டு வந்துள்ளாய். என் வில்லின் திறமையை உலகம் அறிய வேண்டும் என்று தான் சீதை அங்கேயே விட்டு வந்துள்ளாய். இதற்கு பரிசாக உனக்கு நான் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை? பிரம்மதேவரின் ஆட்சி காலம் முடிந்தபின் பிரம்மராக ஆட்சி புரிவாய் என்று பிரம்மபதத்தை பரிசாக வழங்கினார். இராமர் கூறியதைக் கேட்ட அனுமன், இராமரின் திருவடியில் விழுந்து வணங்கி, புகழின் நாணத்தால் ஒன்றும் பேசாமல் தலைகுனிந்து நின்றான். இதைப் பார்த்த சுக்ரீவன் மற்றும் மற்ற வானர வீரர்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர்.

🌟 பிறகு இராமர், இப்பெருங்கடலை வானரங்களுடன் கடந்து இலங்கை செல்வதற்கு ஏதேனும் வழி உள்ளதா? என யோசித்துக் கொண்டு கடலுக்கு அருகில் வந்து நின்றார். இராமர் விபீஷணனை பார்த்து இக்கடலை கடப்பதற்கு ஏதேனும் வழி உள்ளதா எனக் கேட்டார். விபீஷணன், பெருமானே! வருணனை வேண்டிக் கேட்டால் நிச்சயம் ஏதாவது வழி கிடைக்கும் என்றான். பிறகு இராமர், கடலுக்கு அருகில் சென்று, தர்ப்பைப் புற்களை அடுக்கி அதன்மேல் நின்று கொண்டு, ஏழு நாட்கள் வருண ஜபம் செய்தார். ஏழு நாட்கள் வருண ஜபம் செய்தும் வருணன் வந்து தோன்றவில்லை. இதனால் இராமர் பெருங்கோபம் கொண்டார். உடனே இராமர் தன் கோதண்டத்தை வளைத்து நாணை பூட்டிய அம்பில் தீயை மூட்டி கடலை நோக்கி எய்தினார். இந்த தீயினால் கடலில் இருந்த மீன்கள் முதலிய விலங்குகள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாயின. இதைப் பார்த்துக் கொண்டிருந்த இலட்சுமணன் முதலிய வானர வீரர்கள் இனி என்ன நடக்குமோ என அச்சத்தில் இருந்தனர்.

🌟 அப்போதும் வருணன் அங்கு வந்து தோன்றவில்லை. இதனால் இராமரின் கோபம் இன்னும் அதிகமானது. இராமர் பிரம்மாஸ்திரத்தை நாணில் மூட்டி கடலை நோக்கி எய்த ஆயத்தமானார். இதனைப் பார்த்து உலகமே நடுங்கியது. தேவர்கள் முதலானோர் மிகவும் வருந்தினர். அப்போது வருணன் கடல் வழியே வந்து இராமரின் திருவடியில் விழுந்து வணங்கி, அடியேன்! செய்த பிழையை மன்னித்தருள வேண்டும் என வேண்டினார். இராமர் கோபம் தணிந்து, நான் இவ்வளவு நேரம் பணிந்து வேண்டியும் வராததற்கு காரணம் என்ன? என்று கேட்டார். வருணம், பெருமானே! கடலில் மீன்களுக்கிடையே போர் நடந்து கொண்டிருந்தது. நான் அவர்களை சமாதானம் செய்து கொண்டிருந்தேன். அதனால் தான் தங்களின் அழைப்பை நான் கவனிக்க மறந்துவிட்டேன். ஆதலால் பெருமானே! இந்த சிறியேன் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும் என வேண்டினார்.

🌟 இராமர் இதனைக் கேட்டு, வருணனே நான் உன்னை மன்னித்து விடுகிறேன். நான் இப்பொழுது நாணில் பூட்டிய பிரம்மாஸ்திரத்தை ஏதாவது இலக்கில் செலுத்த வேண்டும். எதன் மீது பிரம்மாஸ்திரத்தை செலுத்தலாம் எனக் கூறு என்றார். வருணன், பெருமானே! மருகாந்தாரம் என்னும் தீவில் வாழும் நூறு கோடி அரக்கர்கள் உலக மக்களுக்கு அழிவு செய்து வருகிறார்கள். ஆதலால் இந்த பிரம்மாஸ்திரத்தை மருகாந்தாரம் தீவில் ஏவி அங்கு வாழும் அரக்கர்களை வதம் செய்யுங்கள் என்றார். உடனே இராமர், மருகாந்தாரம் தீவை பார்த்து பிரம்மாஸ்திரத்தை எய்தினார். அத்தீவு கணப்பொழுதில் அழிந்துவிட்டது. பிறகு இராமர் வருணனை பார்த்து, நாங்கள் அனைவரும் கடலை கடந்துச் செல்ல வழி உண்டாக்கி தர வேண்டும் எனக் கேட்டார்.

தொடரும்...



RAMAYANAM PART 96

 இராமாயணம் தொடர் 96

விபீஷணன் இராவணனைப் பற்றி கூறுதல்!

🌀 விபீஷணன், இராவணனின் படைகளின் எண்ணிக்கை ஆயிரம். இராவணனுடன் இருக்கும் அரக்கர்கள் பலம் பொருந்தியவர்கள். அங்கிருக்கும் மிகவும் பலம் பொருந்திய வீரர்களை பற்றி கூறுகிறேன். முதலில் இராவணன் மற்றும் அவனின் சகோதரர்களை பற்றி கூறுகிறேன் என்றான்.

🌀 இராவணன், பிரம்மனும், சிவனும் இவனுக்கு அரிய பெரிய வரங்களை அளித்திருக்கின்றனர். குபேரனை தோற்கடித்து அவனுடைய நகரத்தைக் கைப்பற்றியவன். வருணனை வென்றவன். இவன் மலைகள் போல வலிமையை உடையவன். கும்பகர்ணன் இராவணனின் தம்பி. இவன் தேவர்களை ஓட ஓட விரட்டிய பெரும் வீரன் ஆவான். இவன் இந்திரனின் ஐராவதத்தின் கொம்புகளையே தன் ஆயுதமாகக் கொண்டு தேவர்களை அழித்தவன். இவன் தன் வாழ்நாளில் பெரும்பகுதி தூக்கத்தில் ஆழ்ந்திருப்பவன். மற்ற நாட்களில் இவன் உண்ணும் உணவும் மலையளவு இருக்கும். இந்திரஜித், இராவணனின் மூத்த மகன். இவன் சூரிய சந்திரரை சிறையில் அடைத்தவன். இந்திரனை தோற்கடித்து போரில் வென்றவன். அதிகாயன் இராவணனின் இரண்டாவது மகன். இவன் பிரம்மன் கொடுத்த வில்லை உடையவன். இவன் இந்திரஜித்துக்குத் தம்பி. இவர்கள் இராவணனுடைய பெருமை மிக்கப் புதல்வர்கள்.

🌀 கும்பன் ஆயிரம் யானைகளுக்கும், குதிரைகளுக்கும் இணையான வலிமையும், வீரமும் உடையவன். சூரியனின் வெப்பத்தைக் காட்டிலும் மிகவும் கொடிய வீரன் ஆவான். அடுத்தது அகம்பன் இவன் தவமிருந்து போர் புரிபவன். இவன் நரசிம்ம மூர்த்தியைப் போன்றவன். நிகும்பன் மலைகளைக் காட்டிலும் வலிமை உடையவன். மகோதரன் என்பவன் வஞ்சனையும் மற்றும் மாயையும் செய்து போர் புரிபவன். பகைஞன் என்பவன் மலைவாழ் வீரன் ஆவான். இவன் பெரும்படைக்குத் தலைவன். இவன் தேவர்களை பலமுறை போரில் தோற்கடித்தவன். சூரியன் பகைஞன் என்னும் மற்றொருவன் அனைவரையும் வெல்லக்கூடிய வலிமையுடையவன். பெரும்பக்கன் என்பவனை முனிவர்களும் நேராக பார்க்க பயப்படுவார்கள். வச்சிரதந்தன் என்பவன் எட்டு கோடி சேனைக்கு அதிபதி ஆவான். பலரும் இவனிடம் போரிட அஞ்சுவார்கள்.

🌀 பிசாசன் என்பவன் பகைவரைக் கண்டு அஞ்சாதவன். இவன் பத்து கோடி சேனைகளுக்கு தலைவன் ஆவான். துன்முகன் என்பவன் பதினான்கு கோடி காலாட்படைக்குத் தளபதி. பூமியையும் தகர்த்து எறியும் ஆற்றல் உடையவன். விரூபாட்கன் என்பவன் வாட்போரில் வல்லவன். தூமாட்சன் என்பவன் மாண்ட வீரர்களின் உடலைத் திண்பவன். தேவர்களையும் தோற்கடிக்கும் வல்லமை உடையவன். போர்மத்தன், வயமத்தன் ஆகிய இவ்விருவரும் மிகவும் வலிமை படைத்தவர்கள். கடல் போன்று இருக்கும் படைகளுக்கு இவர்கள் அதிபர்கள். பிரகஸ்தன் என்பவன் இராவணனுக்கு போர்த்தொழிலில் துணை புரிபவன். இந்த பிரகஸ்தன் இராவணனின் படைத்தளபதி ஆவான். இந்திரனின் ஐராவதம் என்னும் யானை உள்ளிட்ட அனைத்துப் படைகளையும் அஞ்சி ஓடச் செய்யும் வல்லமை உடையவன். இவ்வளவு பெரும்படை உடைய இராவணனை தங்களை தவிர வேறு எவராலும் அழிக்க முடியாது என்றான்.

🌀 பிறகு விபீஷணன், இராமா! அனுமன் இலங்கைக்கு வந்த போது ஆற்றிய வீர தீரச் செயல்களை பற்றி கூறுகிறேன் என்றான். அசோகவனத்தில் ஏராளமான அரக்கர்கள் அனுமன் கையால் மாண்டனர். அனுமன் இட்ட தீயினால் இலங்கை மாநகரமே எரிந்து சாம்பலானது. கிங்கரர் எனும் அரக்க போர் வீரர்களை அனுமன் தனித்து நின்று கொன்று குவித்தான். ஜம்புமாலி எனும் வலிமை வாய்ந்த அரக்கனும் அவனுடைய படைகளையும் மாபெரும் வீரர்களான பஞ்ச சேனாதிபதிகளைக் கொன்றான். இராவணனின் இளைய மகனான அக்ஷயகுமாரனை கொன்றான். இராவணனை தடுமாற வைத்தது அக்ஷயகுமாரனின் மரணம் தான். அனுமனால் தாக்கப்பட்டு இலங்கையில் இறந்த அரக்கர்கள் எண்ணில் அடங்காதவை. இப்பொழுது எரிந்து போன இலங்கை நகரை இராவணன் புதுப்பித்து விட்டான் என்றான். 

தொடரும்...

RAMAYANAM PART 95

 இராமாயணம் தொடர் 95

விபீஷணன் முடிசூட்டுதல்!...

♕ இராமர், விபீஷணனுக்கு ஏன் அடைக்கலம் தர வேண்டும் என்பதற்கு உங்களுக்கு போதுமான விளக்கம் தந்துவிட்டேன் என்றார். பிறகு இராமர் சுக்ரீவனை அழைத்து, சுக்ரீவா! நீ சென்று வீபிஷணனை என்னிடம் அழைத்து வா என்றார். சுக்ரீவன் விபீஷணன் இருக்கும் இடத்திற்கு சென்றான். சுக்ரீவன் விபீஷணனை கட்டித் தழுவிக் கொண்டான். பிறகு சுக்ரீவன் மகிழ்ச்சியோடு இராமர் உன்னை அழைத்து வர என்னை பணித்துள்ளார் எனக் கூறினான். இதைக் கேட்ட விபீஷணன், இராமர் இருக்கும் இடத்தைப் பார்த்து தொழுதான். பிறகு விபீஷணன், சீதையை கவர்ந்து சென்ற இராவணனின் தம்பி என தெரிந்தும் எனக்கு அடைக்கலம் கொடுக்க சம்மதித்தாரா? சிவபெருமான் நஞ்சை உண்டு நீலகண்டனாக மாறி பெருமை அடைந்தார். அதேபோல் இன்று இராமர் என் மீது காட்டிய கருணையால் பெருமை அடைந்தேன் என்றான்.

♕ பிறகு சுக்ரீவன் விபீஷணனை அழைத்துக் கொண்டு இராமர் இருக்கும் இருப்பிடத்திற்கு சென்றான். அங்கு விபீஷணன் இராமரை பார்த்து பரவசமடைந்து இராமரின் காலில் விழுந்து வணங்கினான். இராமர் விபீஷணனை இருக்கையில் அமரக் கூறினார். விபீஷணன், இராவணன் என்னை வெறுத்து ஒதுக்கியதும் நன்மை தான். அதனால் தேவர்கள் எவருக்கும் கிடைக்காத தங்களின் திருவடி எனக்கு கிடைத்தது என்றான். பிறகு இராமர் விபீஷணனிடம், விபீஷணா! இன்று முதல் நீ எனக்கு தம்பி ஆவாய். தசரத சக்ரவர்த்திக்கு நான்கு புதல்வர்கள். குகனுடன் ஐந்து புதல்வரானார்கள். சுக்ரீவனுடன் ஆறு புதல்வரானார்கள். இன்று உன்னுடன் ஏழு புதல்வர்கள். இன்று முதல் எனக்கு ஏழு சசோதரர்கள். எனது பெயர் இவ்வுலகில் வாழும் நீ கடல் சூழ்ந்த இலங்கை நகரை ஆட்சி புரிவாயாக எனக் கூறி அருளினார்.

♕ இராமர் கூறியதைக் கேட்ட விபீஷணன், இராமரை போற்றி வணங்கினான். பிறகு இராமர் தன் தம்பி இலட்சுமணரை அழைத்து, இலங்கையின் அரசனாக விபீஷணனுக்கு முடிசூட்ட பணித்தார். விபீஷணன் இராமரிடம், இராவணனின் தம்பியாகிய என் பாவங்கள் நீங்க, தங்களின் பாதுகைகளால் எனக்கு முடிசூட்டுவாயாக எனக் கேட்டான். விபீஷணன் கேட்டுக் கொண்டபடி, இராமனின் பாதுகைகளால் விபீஷணனுக்கு முடிசூட்டப்பட்டது. பிறகு விபீஷணன் பாதுகைகளை தலையில் வைத்துக் கொண்டு இராமரை மகிழ்ச்சியோடு வலம் வந்தான். இதைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். பிறகு இலட்சுமணன் விபீஷணனை அழைத்துக் கொண்டு தன் படைகள் தங்கியிருக்கும் இடங்களை காண்பிக்கச் சென்றான்.

♕ அன்றிரவு வந்தது. இராமர் சீதையை நினைத்து மிகவும் வருந்திக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த சுக்ரீவன் இராமரிடம், நாம் செய்ய வேண்டிய செயல்கள் நிறைய இருக்க தாங்கள் ஏன் வருந்திக் கொண்டிருக்கிறீர்கள் என்றான். பிறகு இராமர் விபீஷணனை அழைத்து வரச் சொன்னார். இராமர் விபீஷணனை அமர வைத்து, இலங்கை நகரின் அரக்கர்கள், அதன் காவல்கள் பற்றி சொல்லுமாறு கேட்டார். விபீஷணன், ஆதிஷேஷனுடன் நடந்த பல பரீட்சையின் போது மேருகிரி மலையில் இருந்து சிதறடித்த மலை நகரமே இலங்கை நகரமாகும். இலங்கை நகரின் நான்கு வாயில்களிலும் கோடிக்கணக்கான அரக்கர்கள் காவல் புரிகின்றனர். மதிலின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் ஆயிரம் கோடி பேர் உறக்கமின்றி காவல் புரிந்து வருகின்றனர். இலங்கை அரண்மனையின் வாயிலை கண் இமைக்காமல் அரக்கர்கள் அறுபத்திநான்கு கோடி பேர் காவல் புரிகின்றனர் என்றான்.

தொடரும்...

Friday, October 20, 2023

RAMAYANAM PART 94

 இராமாயணம் தொடர் 94

இராமர் கூறும் வரலாற்று கதைகள்...!

💫 இராமர், உங்களுக்கு நான் மற்றொரு வரலாற்றையும் கூறுகிறேன். ஒரு வேடன் காட்டில் வேட்டையாடச் சென்றான். அக்காட்டில் ஆண் புறாவும், பெண் புறாவும் அன்புடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. ஒரு நாள் ஆண் புறாவுக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனது. ஆதலால் பெண் புறா நான் தனியாக சென்று இரைக் கொண்டு வருகிறேன் என்றது. ஆண் புறா, நீ இரையை தேடி வெகு தூரம் செல்லாமல் சீக்கரம் வந்து விடு என்று கூறி அனுப்பியது. வேடன் மரத்தடியில் பொரிகளை போட்டு வலையை விரித்து வைத்திருந்தான். இதை அறியாத பெண் புறா இரையை எடுக்கப் போய் வலையில் மாட்டிக் கொண்டது. பிறகு அவ்வேடன் பெண் புறாவை தன் கூட்டில் அடைத்துக் கொண்டு, விலங்குகளை வேட்டையாடச் சென்றான். இரவு சூழ்ந்தது. இடியும், மின்னலுமாக மழை பெய்ய தொடங்கியது. வேடன் குளிரும், பசியும் தாங்க முடியாமல் ஆண் புறா இருக்கும் மரத்தடிக்கு வந்தான். பசியால் வேடன் அயர்ந்து தூங்கிவிட்டான்.

💫 ஆண் புறா வெகு நேரம் ஆகியும் பெண் புறாவை காணாததால் மிகவும் வருத்தத்தில் இருந்தது. ஆண்புறா மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டு வேடனின் கூண்டில் அடைபட்டிருந்த பெண் புறாவைக் பார்த்து ஒலி எழுப்பியது. அதற்குப் பெண் புறா நான் இங்கு சிறைப்பட்டு விட்டேன். இவ்வேடன் என்னை ஏமாற்றி வலை வைத்து என்னை பிடித்துக் கொண்டான். நம் வீட்டை நோக்கி வந்து விட்ட இந்த வேடன் குளிரால் நடுங்குகிறான். இவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வாயாக என்று கூறியது. பிறகு ஆண்புறா, உன்னை இப்பிறப்பில் காண முடியாமல் போய் விடுமோ? என எண்ணினேன். ஆனால் கடவுளின் கருணையால் உன்னை பார்த்து விட்டேன் என்றது. பிறகு ஆண் புறா, வேடனின் குளிரைப் போக்க, உலர்ந்த சுள்ளிகளைப் போட்டு தீமூட்டியது. பின் வேடன் பசியால் மிகவும் தவித்தான்.

💫 உடனே ஆண் புறா, வேடனைப் பார்த்து, வேடனே இந்த ஆலமரமும் நானும், உன் கூண்டில் அகப்பட்டிருக்கும் என் மனைவியும் வாழும் இடமாகும். எங்கள் இல்லம் தேடி வந்த நீ பசியோடு இருக்கக் கூடாது. ஆதலால் உன் பசி தணிய நீ என்னையே உண்டுக்கொள் என்று தீயில் விழுந்து மாண்டுபோனது. இதைப்பார்த்த வேடன், புறாவின் அன்பைக் கண்டு மெய்சிலிர்த்தான். இந்த புறாவுக்கு இருக்கும் நற்குணம் நமக்கு இல்லையே என நினைத்து மிகவும் வருந்தினான். இனிமேல் நான் வேட்டையாட மாட்டேன் எனக் கூறிவிட்டு கூண்டில் இருக்கும் புறாவை விடுவித்தான். பெண் புறா, வேடனை பார்த்து, என் கணவனை இழந்து ஒரு போதும் என்னால் உயிர் வாழ முடியாது. உன் பசியை நீங்கிக் கொள்ள என்னையும் உண்டுக் கொள் என கூறி தீயில் விழுந்தது. வேடன் இப்புறாக்களின் அன்பைக் கண்டு அதிசயித்தான்.

💫 பிறகு இராமர், தேவர்கள் பாற்கடலை கடைந்தப் போது அதில் ஆல கால விஷம் தோன்றியது. ஆலகால விஷத்தின் கடுமை தாங்க முடியாமல் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட சிவனும் அந்த விஷத்தை அப்படியே எடுத்து உண்டார். விஷம் முழுமையாக இறைவனின் வயிற்றில் இறங்கினால் எங்கே இறைவனிற்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ என அஞ்சிய அன்னை பார்வதிதேவி இறைவனின் கண்டத்தை அழுத்த விஷமானது கழுத்திலேயே தங்கி விட்டது. அன்று முதல் இறைவனும் திருநீலகண்டர் என்று அழைக்கப்பட்டார். இதை நாம் மறக்கலாமா? அது மட்டுமின்றி இராவணன் சீதையை கவர்ந்து சென்றபோது, சீதையின் அலறலைக் கேட்டு ஜடாயு இராவணனிடம் போரிட்டு, சிவன் வாளினால் தன் உயிரை மாய்த்தார். அத்தகைய ஜடாயுவின் கருணை திறத்தை நாம் மறக்கலாமா? விபீஷணனுக்கு அடைக்கலம் தருவதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் எதுவாக இருந்தாலும் அவனை நாம் ஏற்றுக் கொள்வது தான் நம் கடமை என்றார் இராமர்.

தொடரும்...