Wednesday, November 8, 2023

RAMAYANAM PART 112

 இராமாயணம் தொடர் 112

முதல் போர் முடிவு!...

🎐 இராமர் மற்றும் இராவணனின் யுத்தத்தைக் காண்பதற்கு பிரம்மன் முதலான தேவர்கள் வானத்தில் வந்து இராமர் வெற்றி பெற வாழ்த்தினார்கள். இராமர் இராவணனுடன் போர் புரிய ஆயத்தமாகி, தன் வலிமையான கோதண்டத்தின் நாணை இழுத்து ஓர் பேரொலி எழுப்பினார். இராவணன் வில்லை வளைத்து கணக்கற்ற அம்புகளை ஒரே நேரத்தில் தொடுத்தான். இராவணன் எய்த அம்புகளை துண்டுகளாக்கி, ஐந்து கொடிய கணைகளை இராமர் விடுத்தார். இந்த கணைகள் பல அரக்கர்களை ஒழித்தது. இராமர், இராவணனுக்கும் இடையில் கடும்போர் நடந்தது. இராமரின் கோதண்டத்தில் இருந்து வந்த அம்புகள் அரக்கர்களின் தலைகளை அறுத்தும் பல்லாயிர அரக்கர்களையும் வீழ்த்தியது. இராமரை சுமந்து கொண்டிருக்கும் அனுமன் தன் கைகளாலும், கால்களாலும் அரக்கர்களை கொன்று வீழ்த்தினான். எந்த திசையைப் பார்த்தாலும் அரக்கர்களின் பிணங்கள் குவிந்த வண்ணமாக கிடந்தன.

🎐 யானைகளும், குதிரைகளும் என அனைத்தும் இராமரின் அம்புகளுக்கு இரையாயின. கடைசியில் இராவணன் மட்டும் தனித்து நின்றான். தன் அரக்கர் படைகள் பிணங்களாக குவிந்து கிடப்பதை பார்த்த இராவணன் கடும்கோபம் கொண்டான். உடனே அவன் இராமரை நோக்கி அம்பு எய்தினான். இராமர் அந்த அம்பை உடைத்து தூள் தூளாக்கிவிட்டு மற்றொரு அம்பை இராவணனை நோக்கி எய்தினார். இந்த அம்பு இராவணனின் வில்லை அறுத்தது. இராமர் மறுபடியும் ஒரு அம்பை ஏவி இராவணனின் தேரை அறுத்து ஒடித்தார். ஆனால் இராவணனுக்கு புதிது புதியதாக தேர்கள் வந்து கொண்டிருந்தன. இராமர் புதியதாக வந்த அனைத்து தேர்களையும் அறுத்து ஒடித்தார். இராமர் மற்றொரு வில்லை ஏவி இராவணனின் தலையில் அலங்கரித்து கொண்டிருக்கும் பத்து மணி மகுடங்களையும் கீழே வீழ்த்தினார். 

🎐 அப்பொழுது இராவணன் சந்திரன் இல்லாத நிலவு போலவும், சூரியன் இல்லாத பகல் போலவும் காட்சியளித்தான். இராவணன் போர்கருவிகள், தன் வில், தேர், அரக்கர் படைகள் எதுவும் இல்லாமல் தன் கால் விரலால் நிலத்தை களைத்துக் கொண்டு, தலை குனிந்து நின்றான். இதனைப் பார்த்து கொண்டிருந்த தேவர்கள், 'தர்மத்தை அழித்த பாவிகளின் நிலைமை இது தான்" என்றனர். இராமர் தன் எதிரில் தலைகுனிந்து நிற்கும் இராவணனை பார்த்து இரக்கம் கொண்டு, இராவணா! இப்பொழுது உன்னிடம் எதுவும் இல்லாமல் வெறும் கையுடன் இருக்கிறாய். இப்பொழுது உன்னை கொல்வது நன்றல்ல. இப்பொழுது தெரிந்துக் கொள்.

🎐 தர்மத்தால் மட்டுமே போர்களில் வெல்ல முடியுமே தவிர, வலிமையால் அல்ல. நான் உன்னை அரக்கர்களை கொன்றதை போல கொன்றிருப்பேன். ஆனால் தனித்து நிற்கும் உன்னை நிலையை பார்த்து உன்னை கொல்லாமல் விட்டுவிடுகிறேன். அரக்கனே! இங்கிருந்து ஓடிபோய் உன் நகரத்திற்குள் ஒளிந்துக் கொள் என்றார். உனக்கு நான் மறுபடியும் ஒரு வாய்ப்பளிக்கிறேன். சீதையை என்னிடம் ஒப்படைத்துவிட்டு, வீபிஷணனை இலங்கையின் அரசனாக முடிசூட்டிவிடு. உன்னை நான் மன்னித்து உயிருடன் விடுகிறேன். அப்படி இல்லையென்றால் என்னை எதிர்த்து போர் புரியும் ஆற்றல் உன்னிடம் இருந்தால் உன் சேனைகளை திரட்டி என்னை எதிர்த்து போரிடு என்றார். இப்பொழுது நீ இங்கிருந்து செல். உன் மனைவி உன்னை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பாள். நாளை உன் படைகளை திரட்டி கொண்டு இங்கு வா என்றார்.

தொடரும்...



No comments:

Post a Comment