Tuesday, October 24, 2023

RAMAYANAM PART 98

 இராமாயணம் தொடர் 98

இலங்கை செல்ல அணை கட்டுதல்!...

🏵 வருணன், பெருமானே! தாங்கள் கடல் தாண்டிச் செல்ல, கடலை வற்றச் செய்வதற்கு நான் காரணமாக இருக்கக் கூடாது. தாங்கள் செல்வதற்கு கடல் நீரை திடம் ஆக்கினாலும் கடலில் உள்ள உயிரினங்கள் துன்பப்படும். இதற்கு வேறொரு வழியும் உண்டு. என் மீது அணைக்கட்டினால் தாங்கள் அனைவரும் கடல் தாண்டிச் செல்லலாம். அணையில் தாங்கள் இடும் குன்றுகளையும், பாறைகளையும், மலைகளையும் மூழ்கிவிடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இராமர், வருணனை பார்த்து, நல்லதொரு யோசனை சொன்னாய் என்று வருணனை பாராட்டினார். பிறகு வானர சேனைகளை அழைத்து, குன்றுகளை கொண்டு வந்து கடலில் மேல் அணைக் கட்டுங்கள் என பணித்தார். இராமர், சுக்ரீவனிடமும், விபீஷணனிடமும், அணைக் கட்டுவதற்கான வேலையை முன்னின்று யாரை செய்யச் சொல்வது என ஆலோசனை நடத்தினார்.

🏵 அவர்கள் நளன் தான் அணைக்கட்ட தகுதியானவன் என தீர்மானித்து நளனை அழைத்து வரச் சொன்னார்கள். நளன் அங்கு வந்து சேர்த்தான். இராமர், நளனிடம் நீ அணையை திறம்பட கட்டி முடிக்க வேண்டும் என்றார். நளன் இராமரிடம், நான் அணையை திறம்பட கட்டி முடிக்கிறேன் எனக் கூறினான். அணையைக் கட்ட வானரங்கள் மலைகளும், குன்றுகளும் கொண்டு வர ஆரம்பித்தனர். சில வாரங்கள் மலைகளையும், பாறைகளையும் கால்களில் உருட்டிக் கொண்டும், சில வானரங்கள் கைகளால் சுமந்து கொண்டும் வந்தனர். அனுமன் ஒரே நேரத்தில் பல மலைகளும், குன்றுகளும், பாறைகளும் கொண்டு வந்து சேர்த்தான். வானரங்கள் மலைகளும், குன்றுகளும், பாறைகளும் கொண்டு வந்து கொடுக்க நளன் அதை தன் இடக்கையால் வாங்கி அணைக் கட்டினான். அனுமன் கொண்டு வந்து கொடுக்கும் மலைகளையும், குன்றுகளையும் நளன் தன் இடக்கையால் வாங்கி அணைக் கட்டினான்.

🏵 அமைச்சராக இருக்கும் என்னை மதிக்காமல் இடக்கையால் வாங்கி அணை கட்டுகிறானே என நளன் மீது கோபம் கொண்டான் அனுமன். உடனே அனுமன் தானே அணைக்கட்ட மலைகளை கடலில் சேர்த்தான். ஆனால் அம்மலைகள் கடலில் மூழ்கிவிட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இராமர், அனுமனை பார்த்து தொழிலில் பெரியவர், சிறியவர் என்று பார்க்கக் கூடாது. அதனால் நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்ப்பாயாக என்றார். இதை பார்த்து கொண்டிருந்த இலட்சுமணர் இராமரிடம், அண்ணா! நளன் கையால் சேர்க்கின்ற மலைகளும் குன்றுகளும் நீரில் மூழ்காமல் மிதக்கின்றன. ஆனால் அனுமன் சேர்த்த பாறைகள் நீரில் மூழ்கிவிட்டன. அதற்கான காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு இராமர் தம்பி இலட்சுமணா, சூர்ய கிரகணம் நடக்கும் கிரகண காலத்தில் தெய்வத்தினை, குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரம் மடங்கு பலன் உண்டாகும். 

🏵 அதைவிட தண்ணீரில் மூழ்கி மந்திர ஜபம் செய்தால் ஒன்றுக்கு லட்சமாக, மடங்கு பலன் அதிகமாகும். ஒருமுறை மாதவேந்திரர் என்ற மகரிஷி, கானகத்தில் சூர்ய கிரகணம் அன்று நீரில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது நளன் குட்டி வானரமாக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை செய்வது என்பது பிடித்தமான ஒன்று. அப்படி குரங்குகள், நீரில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரை பார்த்தனர். உடனே வானரங்கள் முனிவர் மீது கற்களை எறிந்து விளையாடிக் கொண்டிருந்தது. முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் மூழ்கி தவம் செய்தார். முனிவர் பலமுறை நளன் என்ற அந்த குட்டிக் குரங்கை விரட்டியும், குட்டிக் குரங்கு கல்லை எறிந்து கொண்டே தான் இருந்தது. 

தொடரும்...

No comments:

Post a Comment