Sunday, July 2, 2023

குரு வந்தனம்

 ஆனி பவுர்ணமியில் குருவுக்கு நன்றி சொல்லுங்கள்... நல்லறிவு கிடைக்கும்


குருவிற்கு நன்றி செலுத்தும் வகையில் சிஷ்யன் அவர் பாதம் வணங்கி, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து அவரை வணங்கி துதிப்பதற்காக ஏற்பட்டதே குரு பூர்ணிமா. ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. நமது மனதில் இருந்த இருளை நீக்கி ஒளி கொடுத்த கடவுளான குருவை வணங்குவதற்காகவே குரு பூர்ணிமா கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்த ஆண்டு ஜூலை 2ஆம் தேதி குரு_பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.


மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். பிறப்பை கொடுத்த தாய், வளர்த்தெடுக்கும் தந்தை, அறிவை கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தை பார்க்கலாம் என்பதற்காக தெய்வத்திற்கு முன் குருவை வைத்து இப்படி வரிசைப் படுத்தினார்கள். அப்பேற்பட்ட குருவை வணங்கும் விதமாக "குரு பூர்ணிமா" கொண்டாடப்படுகிறது. இப்படி குருவுக்கெல்லாம் குருவாக இருக்கும் வியாசர், தட்சிணாமூர்த்தி, முருகப்பெருமான் என குருக்களை வழிபடுவது வழக்கம்.


குரு_பூர்ணிமா: சம்ஸ்கிருதத்தில் 'கு' என்றால் இருட்டு எனப் பொருள்.'ரு' என்றால் விரட்டுதல் எனப் பொருள். அறியாமையாகிய இருட்டை விலக்கி ஞான ஒளியினை ஏற்படுத்துபவரே குருவாவார். ஒரு சிஷ்யனின் வாழ்க்கை பாதையை சீர் செய்து அவனுக்கு ஞான ஒளி ஏற்படுத்தி அவனை மோட்சம் பெரும் அளவிற்கு கொண்டு செல்பவர் குரு. வியாச பூர்ணிமா கொண்டாடப்படும் இந்நாளில் சன்னியாச ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள்.


வியாச_பூர்ணிமா: 'வேத வியாசர்' எனப் போற்றப்பட்ட, ஸ்ரீ வியாச மஹரிஷி, பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர். வேதங்களை நான்காகப் பிரித்து, வகைப்படுத்தித் தொகுத்ததால், இவர் 'வேத வியாசர்' என்றழைக்க‌ப்பட்டார். வேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரம்மசூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாசமஹரிஷி தம் திருவாக்கினால் அருள, விநாயகப் பெருமான் அதை எழுதியருளினார்.


ஆனி_பவுர்ணமி: குரு பூர்ணிமா எனப்படும் வியாச பூர்ணிமாவானது சூரியன் ஆனி மாதத்தில் புதனின் மிதுனராசியிலும், சந்திரன் குருவின் தனுர் ராசியிலும் இருந்து சமசப்தமமாக பார்க்கும் காலமாகும். குருவிற்க்கும் வித்யாகாரகன் புதனுக்கும் சூரிய சந்திரர்கள் ஏற்படுத்தும் தொடர்பே குருபூர்ணிமாவாகும். இந்த நாளில் குருவிற்கு நன்றி செலுத்தும் வகையில் சிஷ்யன் அவர் பாதம் வணங்கி, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து அவரை வணங்கி துதிப்பதற்காக ஏற்பட்டதே குரு பூர்ணிமா.


நல்ல_அறிவு_கிடைக்கும்: வேத வியாசரை அறியாதவர் இல்லை. நான்கு வேதங்களை தொகுத்தவர். மகாபாரதத்தை எழுதியவர். அதில் ஒரு கதாபாத்திரமாக விளங்குபவர். ஸ்ரீமத் பாகவதம் உட்பட்ட 18 புராணங்களை எழுதியவர். பிரம்ம சூத்திரம் புனைந்தவர். இந்தகைய பெரியோனின் பிறந்த தினமே குரு பூர்ணிமா. இந்த நாளில் வேத வியாசருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. குரு பூர்ணிமா அன்றே வியாசர் பிரம்ம சூத்திரத்தை எழுதி முடித்தார். இந்த நாளில் பிரம்ம சூத்திரத்தை பாராயணம் செய்து வியாசரை வேண்டினால் இம்மையில் நல்லறிவு உண்டாகும்.


வேத_வியாசர்_ஆலயம்: சிறப்பு மிக்க வேதவியாசருக்கு சென்னை வியாசர்பாடியில் சூரிய ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ரவீஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி அமைந்துள்ளது. ஞாயிறுக்கிழமையான இன்றைய தினம் சூரியனின் நாளில் வியாச பூர்ணிமா அமைந்துள்ள நிலையில் அருள்மிகு ரவீஸ்வரரையும் வேதவியாசரையும் வணங்க நலம் பல கிடைக்கும்.

குரு பூர்ணிமா தினத்தில் நமக்கு பாடம் கற்றுக் கொடுத்த குருவை நாம் மனதார நினைத்தலும், கோயிலுக்கு சென்று வணங்குவதும் நல்லது. தற்போது நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் தினம் போலவே குரு பகவானையும் வணங்குவது நல்லது.



No comments:

Post a Comment